ff

(231) "கருத்துரிமை மீதான கொடுந்தாக்குதல்' - "தி இந்து'

வ்வொரு கோணத்திலும் நாம் விசாரித்து எழுத எழுத, சி.பி.சி.ஐ.டி. போலீசாரே நக்கீரன் இதழில் என்ன சொல்லியிருக்கிறார்கள்? என்பதைப் படித்து, அதில் நூல் பிடித்து விசாரணையைத் தொடர் வதும், "அடுத்து என்ன எழுதப் போறீங்க?'’என்று நம்மிடம் கேட் பதும் அப்போது நடந்தது.

நிர்மலாதேவி விவகாரத்தில் கவர்னர் பெயர் பெரிதாக அடிபட்டவுடன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அவசரகதியில் சி.சி.டி.வி. ஃபுட்டேஜ்களை அழித்தது. நிர்மலாதேவி வழக்கில் கைதான பேராசிரியர் முருகனின் மனைவி சுஜா, காமராஜர் பல்கலைக்கழகத்தில் அப்போது என்னென்ன நடந்தது என்பதை, அவருக்குத் தெரிந்தவர்கள் மூலம் அறிந்திருந்தார். சுஜா, நக்கீரனிடம் "சரி, என்னோட ஹஸ்பென்ட் (முருகன்) நிர்மலாதேவிக்கு ரூம் அலாட் பண்ணி யுனிவர்சிடி கெஸ்ட்ஹவுஸ்ல தங்கவச்சாருன்னு சொல்றாங்கள்ல. அப்படின்னா, கெஸ்ட்ஹவுஸ்ல நிர்மலாதேவி தங்கியிருந்தப்ப, அங்கே என்ன நடந்துச்சுன்னு சி.சி.டி.வி.ல பதிவாகியிருக்கும்ல. அந்த வீடியோ பதிவெல்லாம் எங்கே போச்சு? நிர்மலாதேவியை மட்டும் மெயின் கெஸ்ட்ஹவுஸுக்கு கூட்டிட்டு போனாங்கள்ல. கூட்டிட்டுப் போனது யாரு? நிர்மலாதேவியை ஏ.ஸி. ரூம்ல தங்க வச்சிட்டு, ஒருத்தர் போவதும் வருவதுமா இருந்திருக்காரு. அவர் யாரு? அந்த நேரத்துல நிர்மலாதேவி தங்கிய கெஸ்ட்ஹவுஸுக்குள் ஒருத்தர் போய் வந்தாருன்னா... அவருதான ஏற்பாட்டாளரா இருக்க முடியும்? அப்படின்னா யாருக்காக அந்த ஏற்பாடு? கெஸ்ட் ஹவுஸ்ல தங்கியிருந்த வி.வி.ஐ.பி. யாரு?''’என்று கேள்விகள் எழுப்பினார்.

Advertisment

சுஜாவின் தங்கை சுவீதாவும், "சாதாரண ஆளுங்க யாரும் கவர்னர் சர்டிபிகேட் தர்ற ஸ்டேஜ்ல முன்னால போயி நிற்க முடியாது. ஆனா, நிர்மலாதேவி போயி நின்னுருக்காங்க. அவரை நிற்க வைத்தது யாரு? எங்களுக்குத் தெரியும். அவரு, காமராஜர் பல்கலைக்கழக மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குநர் கலைச்செல்வன்தான். நியாயமா பார்த்தால், அவரைத்தான் கைது பண்ணிருக்கணும். ஏன் பண்ணல? கலைச் செல்வனை கைதுபண்ணி விசாரித்திருந்தால், மேலிட விவகாரங்கள் வெளிவந்திருக்கும். அதனாலேயே, இந்த வழக்கில் அவரை வேண்டு மென்றே தப்பவிட்டார்கள்.

poorkalam

நீதி, நேர்மை, கடமைன்னு பார்த்தால், கடந்த 10 வருடங்களில் நிர்மலாதேவி என்னென்ன தப்பு பண்ணுனாருன்னு விசாரிக்கணும் இல்லியா? ஏன் பண்ணல? கல்யாணி மேடம் துணைவேந்தரா இருந்தப்பவே, நிர்மலாதேவி யுனிவர்சிட்டிக்கு அடிக்கடி வந்து போயிருக்காங்க. இதை யுனிவர்சிட்டில வேலை பார்க்கிறவங்களே சொல்லுறாங்க. புத்தாக்க பயிற்சியின்போது நிர்மலா எம்புட்டு அதிகாரம் பண்ணிருக்காங்க தெரியுமா? அப்ப முருகன்கிட்ட, இந்த நிர்மலாதேவி ரொம்ப செல்வாக்கானவங்க. பார்த்து ஜாக்கிரதையா நடந்துக்கங்க. நிர்மலாதேவி சொல்லுறத கேளுங்கன்னு அட்வைஸ் பண்ணிருக்காங்க. அப்ப கலைச்செல்வன்தான் விழுந்து விழுந்து நிர்மலாதேவியை கவனிச்சிருக்காரு. காரெல்லாம் கொடுத்திருக்காரு''’என்று அவரும் சந்தேகங்களை எழுப்பினார்.

கவர்னர் இருந்த மேடையில் நிர்மலாதேவியும் இருந்ததற்கான வீடியோ ஆதாரத்தை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் திட்டமிட்டு அழித்தது. அந்த கல்லூரி மாணவிகளிடம், தனது செல்போனில் கவர்னர் அருகில்தான் இருந்த காட்சியை நிர்மலாதேவியே பெருமையாகக் காட்டியிருக் கிறார். அந்த ஆதாரத்தையும் முழுமையாக அழித்துவிட்டார்கள்.

எந்த விதத்திலும் கவர்னர் பெயர் கெட்டுவிடக்கூடாது என்று மேலிடத்திலிருந்து யாரோ உத்தரவிட, சி.சி.டி.வி. மற்றும் வீடியோ ஆதாரங் களை அழிப்பதில் மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் பதற்றத்துடனும் பதைபதைப்புடனும் முனைப்புடன் செயல்பட்டது. இதையெல்லாம் கண்டும் காணாமல் கடந்து போய்விடும் பத்திரிகை அல்ல நக்கீரன். அதனாலேயே, தொடர்ந்து புலனாய்வு செய்து மறைக்கப்பட்ட உண்மைகள் அனைத் தையும் வெளியிட்டது.

எங்கப்பன் குதிருக்குள் இல்லைன்னு கிராமங்கள்ல சொல்லுற பழமொழி கணக்காத்தான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் நடந்துச்சு. இத்தனை தில்லாலங்கடி வேலை பண்ணும்போது, யாருக்காக இதெல் லாம் நடக்குதுங்கிற கேள்வி எழத்தானே செய்யும்?

கவர்னராக இருக்கட்டும், எவ்வளவு பெரிய வி.வி.ஐ.பி.யாக இருக்கட்டும். நக்கீரன் கற்பனையாகவோ, புனைந்தோ யார் மீதும் எந்தக் குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. வி.வி.ஐ.பி.க்களுக்காக கல்லூரி மாணவிகளுக்கு வலை விரித்தது நிர்மலாதேவி செய்த குற்றம். அந்த குற்றத்தின் பின்னணியை விசாரித்து, சந்தேகப்படும்படியாக யார் யார் இருக் கிறார்களோ, அவர்களை சமரசம் இல்லாமல் துணிந்து தோலுரித்து, உலகத்துக்கு அடை யாளம் காட்டுவதுதானே பத்திரிகை தர்மம். அதைத்தான் நக்கீரன் செய்தது.

"நீங்களே சொல்லுங்கண்ணே... இதுல எங்கே மஞ்சள் பத்திரிகை, பச்சைப் பத்திரிகை, சிவப்புப் பத்திரிகைன்னு அப்பட்டமான பொய் கட்டுரை வெளிவந்துச்சு..?

Advertisment

ff

இதுல உள்ள உண்மைய எல்லாம் உணர்ந்து, நம்புனதுனாலதான என்.ராம் சார் மாதிரியான சீனியர்லாம், இவிய்ங்க போட்ட மிரட்டல் சுவத்த உடைச்சு வெளிய வந்து நக்கீரனுக்காக நின்னாங்க.

வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்குப் போனதும், ஆடிப்போயிட்டாய்ங்க.

ஆங்... இப்ப 2018, அக்.11-ல நக்கீரனுக்கு நடந்த பாராட்டுக் கூட்டத்துல ஆசிரியர், தளபதி, என்.ராம் சார் -இவங்க பேசுனதைப் பாத்தோம்.

இப்ப அதே கூட்டத்துல பேசுன தோழர் முத்தரசன் பேச்சு! சும்மா சுவாரஸ்யமா பேசி, வாழைப் பழத்துல ஊசி ஏத்துன மாதிரி, பின்னு... பின்னு...ன்னு பின்னியிருப்பார், நீங்களே கேளுங்க...''

"என்ன நடைபெற்றது என்கிற விவரங்களையெல் லாம் இங்கே முன்பு பேசிய அத்தனைபேரும் குறிப்பிட்டுச் சொன்னார்கள். இன்றைக்கு இந்த நிகழ்வையொட்டி "முரசொலி' நாளேடு தலை யங்கம் தீட்டியிருக்கிறது. "ஆளுநரே ஆனாலும் குற்றம் குற்றமே' என்ற தலைப் பில் கடிதம் எழுதியிருக் கிறது. அந்த தலையங் கத்தில், "தமிழ்நாட்டிற்கு இது இருண்ட காலம் மட்டுமல்ல... இழிவான காலம்' என்று கடைசியாக முடித் திருக்கிறது.

அதேபோல "நக்கீரன் கோபால் கைது, கருத்துரிமை மீதான கொடுந் தாக்குதல்' என் கிற தலைப்பில் "தமிழ் இந்து' நாளேடு தலையங்கம் தீட்டி யிருக்கிறது.

அதேபோல "விடுதலை'யில் நமது மதிப்பிற்குரிய ஆசிரியர் அறிக்கை ஒன்றை மிகத் தெளிவாக வெளி யிட்டிருக்கிறார். "கவர்னர் பதவி விலக வேண்டும். மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்' என்கிற ஒரு நல்ல செய்தியைத் தெரிவித்திருக்கின்றார்கள்.

poorkalam

இதேபோல பத்திரிகையாளர்கள் சார்பில் "இந்து' பத்திரிகை, "தினமலர்' போல பல்வேறு பத்திரிகைகள் சார்பில் இன்றைக்கு விரிவான அறிக்கை ஒன்றும் வெளியிடப் பட்டிருக்கிறது. பல ஏடுகளில் அந்தச் செய்தி களெல்லாம் வந்திருக்கிறது.

அந்த அளவிற்கு இந்தப் பிரச்சினை ஒரு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. நக்கீரன் கோபாலுடைய விடுதலையை பொறுப்பாசிரியர் சொல்கிறபோது, "100 கோடி செலவிட்டாலும் இப்படிப்பட்ட ஒரு விளம்பரத்தை பெற முடியாது' என்று சொன்னார். 1000 கோடி செலவிட்டாலும் பெற முடியாது.

9-ஆம் தேதி திடீரென கைது செய்யப்படுகிறார். ஏன் கைது செய்யப்படுகிறார், எதற்கு என்று எதுவும் தெரியாது. தொலைக்காட்சியைப் பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டிய நிலமை. காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று அங்கே வைத்திருக்கிறார்கள்.

திரு.வைகோ அவர்கள் சென்று "நான் கட்சித் தலைவர் மட்டுமல்ல, வழக்கறிஞர். நான் உள்ளே சென்று அவரை சந்திக்கவேண்டும்' என அனுமதி கேட்டபொழுது, மறுத்த காரணத்தினால் அவர் அங்கேயே மறியல் செய்து கைதானார்.

அடுத்ததாக அவர் மருத்துவமனைக்குச் சென்றபொழுது, நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும், முன்னாள் அமைச்சர்களும் நேரடியாக மருத்துவமனை சென்று, என்ன நடந்தது என்கிற விபரங்களைக் கேட்டறிந்து வந்தார்கள்.

நீதிமன்றத்திற்கு நாங்கள் சென்றோம். அங்கே என்.ராம் அவர் களும் வந்தார்கள். அவங்க வந்தது முக்கியம், நாம போனது முக்கியம் இல்ல. என்.ராம் அவர்கள் அவராகவே வந்தார். அவர், அந்தச் செய்திகளையெல்லாம் இங்கே சொன்னார். அவர் வந்தது எங்களுக்கு வியப்பாக இருந்தது, ஆச்சரியமாக இருந்தது.

அவருக்கு நாற்காலியெல்லாம் கொடுத்து உட்கார வைத்தோம். "நான் உட்காருவதற்கு வரவில்லை. அந்த நீதிபதியின் முகத்தை நான் பார்க்க வேண்டும். அவர் என்னைப் பார்ப்பது போல நான் நிற்கவேண்டும்' என்று சொன்னார்.

ff

பிறகு அங்கிருந்த வழக்கறிஞர்களை விலக்கிவிட்டு, அவரை முன்னால் நிற்கச் செய்தோம். இவர் வாதிடுகிறேன் என்று சொல்லவில்லை. நீதிபதிதான் அவரிடம் கேட்டார். "நீங்கள் எதுவும் சொல்ல விரும்புகிறீர்களா?' என்று கேட்க, அவர் என்ன சொன்னார் என்கிற விவரங்களை யும் எல்லாம் அவரே விரிவாகச் சொல்லியிருக்கிறார். இன்று ஏடுகளிலும் செய்திகள் வந்திருக்கிறது.

இப்படி ஒரு பரபரப்பாக... அதுவும் போடக்கூடாத சட்டத்தின் கீழ் 124-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிற விபரங்களையெல்லாம் மிகத்தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். நான் அந்த விவரங்களுக்கெல்லாம், சட்ட விபரங்களுக்கெல்லாம் செல்ல விரும்பவில்லை.

இப்படி அதிரடியாக கைது செய்வதற்கு என்ன காரணம்?

தமிழக அமைச்சர் ஒருவர் கூறியதாக இன்றைய நாளேட்டில் ஒரு செய்தி வந்திருக்கிறது. "ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்தோம்' என்று. தமிழ்நாடு அமைச்சர்கள் எதைப் பேசுகிறோம், எதைப் பேசக்கூடாது என்பதை மிக நன்றாகத் தெரிந்தவர்கள். நிறைய பாத்திருப்பீங்க... திண்டுக்கல் சீனிவாசன்... இப்படிப் பலபேர் இருக்கிறாங்க.''

தோழரின் சுவாரஸ்யமான பேச்சு தொடரும்...

(புழுதி பறக்கும்)