(217) "கைது!' - பதறிய பத்திரிகை ஜாம்பவான்கள்!
கவர்னர் நம்ம மேல புகார் குடுத்து, அதுக்குத்தான் இந்த அரெஸ்ட்னு கோர்ட்ல சொன்ன பிறகுதான், நான் "ஓஹோ... கவர்னர் கம்ப்ளைண்ட்டா, சரி... சரி...' அப்படின்னு மூச்சுவிட்டு ராம் சார்ட்ட ஒரு கும்புடு போட்டு நின்னா... அவரு "எஸ். கோபால், நான் கவர்னர் மாளிகையில இருந்துதான் நேரா இங்க வர்றேன்'னு கூலா சொல்றாரு.
ஒரு சின்ன... இல்ல... இல்ல... பெரிய ஷாக்கா யிட்டேன்.
அப்படியே "ஷாட்'ட கட் பண்ணி கவர்னர் மாளிகைக்குப் போயிருவோம்.
ராம் சார் சொன்னது கொஞ்சம் அதிர்ச்சியாவும் இருந்துச்சு அதேநேரம், பிரித்தாளுறத கவர்னரும், அவரோடு கூட இருக்கிற ஜால்ராக்களும் பண்ணியிருக் காங்க அப்படிங்கிறத... நீங்க புரிஞ்சுக்குவீங்க.
என்ன அரெஸ்ட் பண்ணுன அன்னிக்கு காலையில 8 மணிக்கு சில பெரிய, பெரிய பத்திரிகை நிறுவனர்களையும், பத்திரிகை ஆசிரியர்களையும் அவரோட சேர்ந்து பிரேக்பாஸ்ட் சாப்பிடறதுக்கு அழைச்சிருக்காரு. அந்த வகையில "இந்து' என்.ராம், "இந்தியன் எக்ஸ்பிரஸ்' சந்தாலியா, "தினத்தந்தி' ஆசிரியர் பாலசுப்பிரமணியம் இன்னும் ரெண்டு பத்திரிகை ஜாம்பவான்கள அழைச்சு எல்லாரும் பிரேக்பாஸ்ட் சாப்பிட்டிருக்காங்க. சாப்பிட்டு முடியவும், கவர்னர் வாசலுக்கு வந்து அவங்கள வழி அனுப்புறாரு.
கவர்னரோட இருக்கும்போது புரோட்டாகால் என்னன்னா, போன் யூஸ் பண்ணக்கூடாதாம். சைலண்ட் மோடுலயோ அல்லது ஆஃப் பண்ணியோ வச்சிருக்கணுமாம். அது ஒரு மரபுதான், கவர்னர்கூட இருக்கும்போது போன்ல பேசக்கூடாதுங்கிறது. அதனால "இந்து' ராம் சார், "தினத்தந்தி' பாலு சார், "எக்ஸ்பிரஸ்' சந்தாலியா எல்லாருமே போன ஆஃப் பண்ணிட்டு உக்காந்திருக்காங்க.
வெளிய வரும்போது போன் எடுத்து ஆன் பண்ணியிருக்காரு "தந்தி' பாலு சார். ஆன்பண்ணுன உடனே வாட்ஸ்-ஆப்ல வந்த செய்தி என்னுடைய அரெஸ்ட் பத்துனது தான். பரபரப்பா இந்தியா பூரா எல்லா டி.வி.லயும் வந்துச்சு. அப்படித்தான் போன்ல யும் பரபரப்பா வாட்ஸ்-ஆப்ல வந்திருக்கு.
உடனே பாலு சார், ராம் சார்ட்ட "சார்... நக்கீரன் கோபால் அரெஸ்ட் டாமே?'' அப்படின்ன வுடனே, ராம் சார் பதறி யிருக்காரு.
"அரெஸ்ட்டா... அய்யய்யோ...! நாம கவர்னரோட இருந்ததுனால போன ஆன்பண்ணாம இருந்துட் டோம்''னு அவரும் உடனே போன ஆன்பண்ணி பாத்திருக்காரு. அப்போ கவர்னர் சார்பா இவங்கள வழியனுப்ப வந்திருந்த ராஜகோபால் ஐ.ஏ.எஸ்.ஸும் நிக்கிறாரு. ராம் சார் உடனே அவர்ட்ட கேட்டிருக்காரு, "என்னங்க இது? இவ்வளவு நேரம் நாம உள்ள பேசிக்கிட்டி ருந்தோம்... சாப்பிட்டுக்கிட்டிருந்தோம். ஆனா நக்கீரன் கோபால் அரெஸ்ட்ங்கிறத நீங்க சொல்லவே இல்லியே?''ன்னு ப்ராங்கா கேட்டிருக் காரு என்.ராம் சார். அவரு எப்பவுமே போல்டா பேசுறவரு.
அதுக்கு அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜ கோபால் "அப்படியா, எங்களுக்குத் தெரி யாதே...'ன்னு சமாளிக்கப் பாத்திருக்காரு. அவரு பயங்கரமான ஆளு!
ராம் சார் டக்குன்னு "என்ன கம்ப்ளைண்ட்... எதுக்கு அரெஸ்ட்'னு ஐகோர்ட் பார்க்கிறவங்க மூலமா கேட்டு எல்லாத்தையும் கிளாரிஃபை பண்ணிட்டு... ராஜகோபால் ஐ.ஏ.எஸ்.ட்ட "இல்லியே... கவர்னர் சைடுல இருந்துதான் கம்ப்ளைண்ட்னு சொல்றாங்களே...''ன்னு கேட்டவுடனே...
"ஓ... இருக்கலாம், அதாவது நாங்க முன்னாடி குடுத்த ஒரு கம்ப்ளைண்ட். அத ஒருவேளை அவங்க இப்ப எடுத்திருக்கலாம்'' அப்படின்னு சொல்லி ராஜகோபால் மழுப்பியிருக்காரு.
"என்னங்க இப்படிச் சொல்றீங்க? செங்கோட்டையன்கிற, உங்க கவர்னரோட செகரட்டரிதான கம்ப்ளைண்ட் குடுத்து ருக்காரு...''ன்னு அந்த டீடெய்லயும் சொல்றாரு.
சொன்னவுடனே, "இன் கேஸ் இருக்கலாம்'னு சொல்லி மறுபடியும் மழுப்பலாவே பேசியிருக்காரு.
உடனே அங்கயிருந்து வேகமா கிளம்புன ராம் சார், என்ன எங்க வச்சிருப்பாங்க அப்படிங்கிறதப் பத்தி கிளாரிஃபை பண்ணி... நடந்த ஹிஸ்டரி எல்லாத்தையும் கேட்டிருக்காரு. ஏர்போர்ட்ல இருந்து எங்க கொண்டு போனாங்க? சிந்தாதிரிப்பேட்டை. அங்க போகச்சொல்லி கிளம்பியிருக்காரு. கிட்டக்க வந்ததும், நான் அங்க இல்ல, ஹெல்த் செக்-அப் முடிஞ்சு அல்லிக்குளம் கோர்ட் அப்படின்னு தெரிஞ்சவுடனே நேரே, இதுக்கான லா பாயிண்ட் எல்லாத்தையும் கையோட எடுத்துட்டு வந்துட்டாரு.
எப்படின்னா...? என்ன அரெஸ்ட் பண்ணுன உடனே டி.கே.பாசு ஜட்ஜ்மெண்ட்ட (உச்சநீதி மன்றம் குடுத்த ஒரு ஜட்ஜ்மெண்ட் இருக்கு. டி.கே.பாசு ஜட்ஜ்மெண்ட்னு பேரு. அந்த ஜட்ஜ் மெண்ட்ல ஒருத்தர அரெஸ்ட் பண்ணுனா என்னென்ன விதியெல்லாம் கடைபிடிக்கணும்னு இருக்கு.) படிச்சுட்டு, அதன் காப்பியோட வந்துதான் சிந்தாதிரிப்பேட்டையில போலீஸ் காரய்ங்கள வைகோ அண்ணன் சவுண்டு வுட்டாரு. அவங்க திணறிப்போனதுக்கு அதுதான் காரணம். அதனாலதான் இவர இங்க வச்சிருக்கக்கூடாது, என்னையும் அங்க வச்சிருக்கக்கூடாதுன்னு, அவர அரெஸ்ட்பண்ணி எங்கேயோ ஒரு கல்யாண மண்டபத்துல கொண்டுபோய் வச்சாய்ங்க. என்னையத் தூக்கிட்டுப் போய் கோர்ட்டுல நிறுத்தி வச்சுட்டாய்ங்க.
வைகோ அண்ணன் போட்ட போடுதான் இதுக்கெல்லாம் காரணம். அதே மாதிரி... ராம் சாரும் லீகல் விஷயங்கள எல்லாம் எடுத்துட்டு, நேரே எங்க என்ன வச்சிருக்காங்கங்கிறத தெரிஞ்சு "டாண்'ணு இங்க வந்துட்டாரு.
சரி, இப்ப நம்ம மேல போட்ட வழக்குக்கு உள்ள போவோம்.
"என்ன வழக்கு? என்னென்ன செக்ஷன்'ங்கிறத நம்ம சீனியர் அட்வகேட் பி.டி.பெருமாள் சாரே சொல்றாரு கேளுங்க...
"அண்ணே அந்த கவர்னர் கேஸ்ல உங்களுக்கு எகெய்ன்ஸ்ட்டா ஃபைனல் ரிப்போர்ட் ஃபைல் பண்றாங்க. அதுல என்ன சொல்றாங்க... "கவர்னரை அஸால்ட் செய்து, அவருடைய பணியை செய்ய விடாமல் தடுத்தீர்கள். அதனால் இந்திய தண்டனைச் சட்டம் 124-ன்படி தண்டனைக்குரியவர்' அப்படிங்கிறாங்க.
அந்த ஃபைனல் ரிப்போர்ட்ல இந்திய தண்டனைச் சட்டம் 124 பிரிவிலுள்ள, தண்டனைக்குரிய குற்றம் புரிந்ததாகவும், இந்தச் செய்தியை வெளியிட்டதால் பொதுமக்கள் மத்தியில் ஒரு பீதியையும் அமைதிக் குலைப்பையும் உருவாக்கிய காரணத்தினால் தண்டனைச் சட்டம் பிரிவு 505 (1-பி) பிரிவின்படி தண்டனை வழங்கவேண்டும் என்றும், மேலும் ஆளுநர் அவர்களை, சம்பந்தப்பட்ட செய்தி வெளியிட்டதால் அருகிலிருந்து பயமுறுத்திய தாக பிரிவு 506, உட்பிரிவு 2-ன்படி தண்டிக்க வேண்டும் என்றும் 3 பிரிவுகளுக்கு இறுதி அறிக்கை தாக்கல் செய்தார்கள்.
ஆங்... இப்ப ஷாட்ட மறுபடியும் கட்பண்ணி என்ன அரெஸ்ட் பண்றதுக்கு முன்னாடி அப்ப முதல்வரா இருந்த எடப்பாடி டு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் டு கவர்னர் மாளிகை...! இந்த மூணு பேருக்குள்ளயும் ஒரு விசயம் நடக்குது. அத அப்படியே அள்ளிப் போட்டுட்டு வந்து பதிவு பண்ணுறாரு தலைமை நிருபர் தம்பி இளையசெல்வன்.
அத அப்படியே தர்றேன், நீங்களே பாருங்க... சுவாரஸ்யம் + உள்குத்து எல்லாம் இருக்கும்.
"தமிழகத்தின் ஊடகங்களை அடிபணிய வைக்க, ராஜ்பவன் அதிகாரிகள் போட்ட திட்டத் தின் முதல் தாக்குதல் நக்கீரன். இந்த தாக்குதலில் ராஜ்பவன் ஜெயித்திருந்தால் ஊடகங்கள் ஒட்டுமொத்தமாக ஒழிக்கப்பட்டிருக்கும்' என்கிறார்கள் கோட்டையிலுள்ள நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.
முதலமைச்சரை சந்திக்க கவர்னர் விரும்புவ தாக தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாத னிடம் (கடந்த 5-ந்தேதி) தெரிவிக்கிறார் கவர்னரின் செயலாளர் ராஜகோபால். இதுபற்றி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கவனத்துக்கு கொண்டு செல்கிறார் கிரிஜா. "எதற்காக அழைக்கிறார்?' என முதல்வர் கேட்ட கேள்விக்கு பதிலேதும் சொல்லவில்லை அவர்.
கனமழை பெய்து வருவதால் அது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி விவாதிக்கவும், டெல்லி செல்லவிருப்பதால் அரசியல்ரீதியாக விவாதிக்கவும் தன்னை அழைத்திருக்கலாம் என நினைத்த எடப்பாடி, அன்றைய தினம் இரவு 7.15 மணிக்கு ராஜ்பவன் விரைந்தார். அவருடன் கிரிஜா வைத்தியநாதனும் செல்ல, கவர்னருடனான எடப்பாடி சந்திப்பு சுமார் 30 நிமிடம் நடந்தது. சந்திப்பு முடிந்து இறுகிய முகத்துடன் வெளியே வந்த எடப்பாடி பத்திரிகையாளர்களை சந்திக்காமலே கிளம்பிச் சென்றார்.
வீட்டிற்கு வந்ததும் எடப்பாடியை தொடர்பு கொண்டு மூத்த அமைச்சர்களும் உயரதிகாரிகளும் எடப்பாடி சொன்னதைக் கேட்டு அதிர்ந்தனர். விவ காரம் ராஜ்பவன் சம்பந்தப்பட்டதால் எதிர்ப்பைக் காட்டாமல் அமைதியாக இருந்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான், சென்னை காவல்துறையை வைத்து 9-ந் தேதி காலை நமது ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைக்கத் துடித்தது ராஜ்பவன்.
ராஜ்பவனில் நடந்தது என்ன? என்பது குறித்து விசாரித்தபோது...
(புழுதி பறக்கும்)