(180) ஜெயலலிதா, முகமது அலி, நாகராஜ்....
சாகும் தருவாயில் அம்மா சொன்ன வார்த்தை...!
"போர்க்களம்'. எட்டு கோடி தமிழர்களின் தலைவர், எழுச்சி நாயகன், மிகப்பெரிய இதழியலாளர் தினமும் காலை யில் அனைத்துப் பத்திரிகை களையும் தானே படித்து களம் கண்டவர். உலகத் தலைவர் களின் ஒப்பற்ற தலைவர், நக்கீரன் என்ற இதழும் இதழாசிரியரும் அவர்தம் குழுவும் நசுக்கப்படுவதை அறிந்து தடுக்கும் முகத்தான் "முரசொலி' பதிலில் பொன்னெ ழுத்துக்களால் பொறிக்கப்பட்ட வரலாற்றை எழுதியிருக்கிறார். நக்கீரன்கோபால் மீது கொண்ட பாசமும், இதழியல் பிழைக்க வேண்டும் என்ற சிந்தனையில் சிறப்பாக செதுக்கியிருக்கிறார்.
நீங்க எழுதிய, "சாதாரண பியூன் மகன்... ஒரு கிளார்க் ஆகலாம்' என்ற வரிகள் என்னை மிகவும் பாதித்துவிட்டது உலகப் புகழ்பெற்ற ஓர் இதழாசிரியர் இவ்வளவு எளிமையாக எண்ணுவது, எழுதுவது போற்றுதலுக்குரியது. கைகூப்புகிறேன். என் தந்தையார் எளிமையைப் போற்றுவார்கள், ஏழ்மையை எண்ணி கண்ணீர் சிந்துவார்கள். 1940-களில் ரேசன் அரிசி வாங்கி உண்டதைச் சொல்வார்கள். தங்களின் எழுத்து என்னை மிகவும் பாதித்துவிட்டது
-மன்னார்குடி கருப்பையா
"பரோல்... எதிர்ப்பு... மறுப்பு'ன்னு எல்லாம் முடிஞ்சு கிட்டத்தட்ட 3 மாசம் கழிச்சுதான் எனக்கு பெயில் கிடைச்சிது. அதுவும் இது 2-வது பெயில்.
சார்... பெயில் கிடைச்சது 2003 டிசம்பர் 20-ஆம் தேதி. வெளிய வந்ததும் பில்ராத் மருத்துவமனையில இருந்த அம்மாவத்தான் பாக்கப் போனேன். (நல்லா புரிஞ்சுக்குங்க... நான் சொல்றது எங்க அம்மாவ) ஒரே சந்தோஷம் அம்மாவுக்கு, எங்க அப்பாவுக்கும் மகிழ்ச்சி.
இதுக்கு இடையில கலைஞர் அம்மாவ பார்க்க வந்தாங்க. 2 முறை மருத்துவமனைக்கு வந்து பாத்தாங்க.
அம்மா, அவர்ட்ட சொன்னது, "ஐயா... அவள விட்டுறாதீங்கய்யா''ன்னு கலைஞர்ட்டயே நேரா சொன்னாங்க. அம்மா சொன்னதக் கேட்டதும், கலைஞர் முகத்துல சின்ன புன்முறுவல். வேற எந்தப் பதிலும் சொல்லல... பக்கத்துல இருந்த அவருடைய தளபதிகளப் பாத்தும் புன்முறுவலா சிரிச்சாரு.
கொஞ்சநாள் ஆச்சு. அம்மா உடம்பு முன்னவிட ரொம்ப மோசமாயிருச்சு. நாங்க எல்லாரும் பில்ராத் மருத்துவமனையிலயே கிடந்தோம். அந்த நிலையிலயும், என் கையப் புடிச்சு... "எம்புள்ளைய பாடாப்படுத்துன சண்டாளி வௌங்கவே மாட்டா... நாசமா போறவ. நம்ம குலதெய்வம் நம்மள கைவிடாதுப்பா. இனி ஒனக்கு எந்த தும்பமும் வராது... நீ நல்லா இருப்பே''ன்னு சந்தோஷ முகத்தோட படபடன்னு சொன்னாங்க.
பில்ராத் ஆஸ்பத்திரி சி.சி.யு.வில அட்மிட்டாகி... இறக்குற தருவாய். மே 15, அதிகாலை 3 மணிக்கு அம்மாவ நான் போய்ப் பார்க்கிறேன். முதல்நாள் காலை என்ன செய்தின்னா... "தமிழ்நாட்டில் 40-க்கு 40 எம்.பி.க் கள் தொகுதியையும் (பாண்டிச்சேரி உட்பட) தி.மு.க. தலைமையிலான எதிர்க்கட்சி கூட் டணிகள் ஜெயிச்சது'. அந்த செய்திய முதல்நாள் மாலை அம்மாகிட்ட சொல்றேன். அதக்கேட்டு அவங்க ரொம்ப சந்தோஷப் பட்டாங்க.
இறக்குற அன்னைக்கு அதிகாலைல சைகையால என்ன கிட்டக்க கூப்புட்டாங்க. நான் குனிஞ்சு "என்னம்மா''ன்னேன். அப்போ எங்கிட்ட சொல்றாங்க... "யய்யா... அந்த ஜெயலலிதாவ விட்றாத...!'' இதே வார்த்தைய சொன்னாங்க. "அவள விட்றாத'ன்னு ஒருமைலதான் சொன்னாங்க. அதே மாதிரி, "முகமது அலியையும் விட்றாத, அந்த நாகராஜனையும் விட்றாத''ன்னு சாகிற தருவாயில சொல்லிட்டுத்தான் அம்மா கண்ண மூடுறாங்க.
(இவனுக ரெண்டு பேரும்தான் பொடா அரெஸ்ட் + கஸ்டடி... சித்ரவதை, அதோட கலைஞர், கிருஷ்ணா, ரஜினி மூணுபேருக்கும் எதிரா என்கிட்ட கையெழுத்து வாங்க சித்ரவதை செஞ்சது.)
கையெழுத்து போடாததுக்காக என்ன ஜட்டியோட ஆறுநாள் சிந்தாதிரிப்பேட்ட போலீஸ் லாக்கப்ல பொண நாத்தத்துல வச்சு பாடாபடுத்தினாய்ங்க. எனக்கு நடந்த கொடுமைய நினைச்சு... நினைச்சு அம்மா குமுறி... குமுறி அழுவாங்களாம்...!
கரெக்ட்டா 3:20 அதிகாலை. அம்மா இறக்குறப்ப நான்தான் கூட இருந்தேன்.
இந்த நக்கீரன ஆரம்பிக்க முதல்ல ஊக்கம் கொடுத்தது... அதுக்காக, தான் சிறுகச் சிறுக சேர்த்து வச்ச 120 ரூபாய குடுத்து, "போடா... போய் தைரியமா பத்திரிகை ஆரம்பி''ன்னு ஆணையிடாத குறையா என்ன அருப்புக் கோட்டையில இருந்து சென்னைக்கு அனுப்புனது எங்க அம்மா. நக்கீரன் இன்னைக்கி 35 வருஷம் முடிஞ்சு 36-ஆம் ஆண்டுல அடியெடுத்து வைக்குது.
அவங்க எங்கள விட்டுப் பிரிஞ்சுட்டாங்க. அம்மாவுடைய இறப்புக்கு கலைஞர் முதல் ஆளா வந்தாங்க. கூட அண்ணன் ஸ்டாலின்... அதோட அண்ணன் வைகோ, அப்போ நடந்து முடிஞ்ச எம்.பி. தேர்தல்ல ஜெயிச்ச 25 பாராளுமன்ற உறுப்பினர்களும் சடசடன்னு வந்தாங்க. சின்னகுத்தூசி ஐயா முழுநேரமும் இருந்து வழியனுப்பி வச்சாங்க. பில்ராத் பவுண்டர் மருத்துவர் வி.ஜெகந்நாதன் வந்தார். எங்கம்மாவுக்கு பெரிய மரியாதை கிடைச்சது.
அம்மாவுடைய இறப்பு நாள் இப்பதான் ஒருவாரம் முன்னாடி வந்து போச்சு.
அந்த ஜெயலலிதாவ இன்னிக்கு வரைக்கும் நாம விடல... அது வேற விஷயம். ஆனா, அதுக்கப்புறமா... எங்கம்மா இறந்த பிறகு, ஜெயலலிதா நம்மள படுத்துனபாடுகள... அவங்க இருந்திருந்தா, நெனைச்சி... நெனைச்சி ரொம்ப வருத்தப்பட்டுருப்பாங்க.
கும்பகோணத்துல இருந்து கல்யாண சுந்தரம்னு ஒரு வாசகர் எனக்கு கடிதம் எழுதிருந்தத. போன இதழ்ல பிரசுரம் பண்ணியிருந்தோம்.
அந்தக் கடிதத்துல... "இன்னிக்கு நீங்க இருக்கீங்க, அவரு இல்ல'ன்னு எழுதியிருந்தாரு. அந்தம்மா இல்லாதத நாம பெருமையா சொல்லல. ஆனா நாம பட்ட கஷ்டத்துக்கு, இத்தன வழக்குகள்ல இருந்தும் நம்ம போராட்டத்த சளைக்காம தொடர்ந்துக் கிட்டிருக்கோம் பாருங்க... இதுதான் எங்க நக்கீரன் குடும்பத்தோட வெற்றி!
"சரித்திரம் ஒருமுறை உன் பெயரைச் சொல்லவேண்டும் என்றால் நீ பலமுறை என்னிடம் வரவேண்டும்' -இப்படிக்கு "முயற்சி'
இந்தப் பொன்மொழி, நக்கீரன் துணை ஆசிரியர் தம்பி செந்தில் தேர்ந்தெடுத்து கடந்த இதழ்ல பிரசுரமானது. பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டதுன்னு சொல்லுவாங்கள்ல... அதுமாதிரி. இந்தப் பொன்மொழியோட உட்கூறே... "பலமுறை முயற்சி பண்ணுனாத்தான், சரித்திரத்துல இடம் பிடிக்க முடியும்'ங் கிறதுதான்.
நாம ஒண்ணும் சரித்திரத்துல இடம் புடிக்கல. ஆனா... இதுவரைக்கும் இந்த "போர்க்கள'த்துல தப்பிக்கிற முயற்சிகள அவ்வளவு எடுத்திருக்கோம். தப்பிக்கிற முயற்சியோட நக்கீரன மறுபடியும் எந்த இடத்துலயும் துவண்டு போயிடாம, எந்தப் பள்ளத்துலயும் விழுந்துடாம... அத தொடர்ந்து வாசகர் கைகள்ல கொண்டு சேர்க்கிறதுக்காக நாங்க எடுக்கிற முயற்சியே பெரிய முயற்சி.
இடையில நெறைய துரோகத்த வேற சந்திச்சுட்டோம். நக்கீரன்ல வந்திருந்தது... "உண்மையாகப் பழகும் நண்பனாக இரு; இல்லையேல் நேருக்கு நேர் மோதும் எதிரியாக இரு... ஆனால் முதுகில் குத்தும் துரோகியாக மட்டும் இருக்காதே...'ன்னு. சூப்பர் பொன்மொழி. இந்த இடத்துக்குப் பொருந்தும். சண்டாளய்ங்க அவிய்ங்க கூட்டுற எழவுகளத் தாண்டி இன்னிக்கும் தலை நிமிந்து நிக்கிறோம்னா அதுக்கு நக்கீரன் குடும்பம்தான் முக்கிய காரணம். அந்த வகையில மேல சொன்ன பொன்மொழி எனக்கு ரொம்பவே புடிச்சது.
"மாட்டுக்கறி தின்னும் மாமி' அந்த விஷயத்தையும் வச்சுக்கங்க... அதுக்கு முன்னாடி எத்தனையோ சம்பவங்கள், எத்தனையோ கொடுமைகள், நம்ம மேல திணிக்கப்பட்ட எத்தனையோ அராஜகங்கள்...!
வீரப்பன் விஷயத்தயே எடுத்துக்கங்க... இதேதான். வீரப்பன் விஷயத்துல நாம எடுத்த முயற்சி, முயற்சின்னா... சாதாரண முயற்சி இல்ல! 30 வருஷத்துக்குப் பிறகும் வீரப்பன பார்த்தவுடனே உங்களுக்கு எங்க ஞாபகம் வருதுன்னா... அதுக்குக் காரணம், நாங்க எடுத்துக்கிட்ட பெரும் முயற்சிதான்.
"முயற்சி' நக்கீரன் குடும்பத்துல உள்ள எல்லாருக்கும் இருந்ததுனாலத்தான் நம்மளால இந்த "போர்க்கள'த்துல துணிஞ்சு நிற்க முடிஞ்சது.
நக்கீரன் ஆரம்பிச்சு 36-வது ஆண்டு இப்ப நடக்குது. முதல்ல "சேலஞ்ச்'னு ஒரு களம். அதுக்கப்புறமா "யுத்தம்', அது ஒரு களம். அதுக்கப்புறம்... "போர்க்களம்!'
நீங்க நல்லா பாத்தீங்கன்னா... ஒவ்வொண்ணுலயும் ஒரு வீரியமான களத்த நக்கீரன் சந்திச்சுதான், இன்னிக்கு உங்க முன்னாடி இந்த தொடர எழுதிக்கிட்டிருக்கோம்.
"சேலஞ்ச்', "யுத்தம்', "போர்க்களம்'னு இந்த விஷயங்கள ஏன் நான் குறிப்பிடவேண்டி இருக்குதுன்னா, எல்லாத்துக்கும் பின்னாடி எங்களுடைய முயற்சி இருந்தது. அத போறபோக்குல அப்படியே சொல்ல முடியாது... உண்மையிலேயே பெரிய முயற்சிதான். திரும்பிப் பாத்தா... எல்லாருமே வியந்து பார்க்கிற ஒரு பெரிய முயற்சிதான் அது.
போன புதன்கிழமை, மன்னார்குடி முகவர் தம்பி குமரனுக்கு ரொம்ப வேண்டிய அறிவாலயம் அழகப்பன் நம்ம அலுவலகத்துக்கு வந்தாரு. வந்து உக்காந்ததும் அவரு கேட்ட முதல் கேள்வியே...
"ஏண்ணே... உங்களுக்கு சலிக்கவே இல்லியா...? இந்த "போர்க்கள'த்த நானும் விடாம படிக்கிறேன். எத்தன துயரம்...! நரகத்தவிட கொடுமைகள அனுபவிச் சிருக்கீங்க. ஆமா... நீங்க சரி... உங்க வீட்டுல, உங்ககூட வேலை பாக்குற தம்பிங்க, அவங்கவங்க குடும்பத்துல உள்ளவங்க எல்லாரும் எப்படி இத்தன துயரத்த சந்திச்சும் உங்களோட பயணிக்கிறாங்க''ன்னு ஆச்சரியமா கேட்டாரு...
(புழுதி பறக்கும்)