ff

(174) வீரப்பன் போட்ட 25 கோடி ஃபைன்!

"ஏங்க எத்தன வாட்டிங்க வீரப்பன்... வீரப்பன்னு உள்ள போவீங்க. விஷயத்துக்கு வந்து படார்னு முடிப்பீங்களா?'ன்னு கேக்கத் தோணுதுல. தோண்டத் தோண்ட நெறைய வந்துக்கிட்டே இருக்கும். அதெல்லாம் எங்களோட புதைஞ்சுப் போயிறக்கூடாதுல்ல. பதிவு பண்ணுனாத்தான, நாளைக்கு வரலாறு என்னங்கிறது எதிர்காலச் சந்ததிக்கும் தெரியும், எவ்வளவு குருதிய சிந்தி இந்த மண்ணுக்காக நக்கீரன் பாடுபட்டதுன்னும் தெரியும்.

அந்தக் காட்டுக்குள்ள வீரதீரமா போனதா சொல்லுவாய்ங்க. வீரம், ஈரம், வெங்காயம்... ஒருபக்கம்னாலும், உள்ள போய்... தோத்துப்போய் கெஞ்சிக் கூத்தாடி இரு மாநிலமும் நமக்குக் குடுத்த வேலைய முடிக்க நாங்க பட்டபாடு இருக்கே அப்பப்பா...!

Advertisment

இப்போ சோசியல் மீடியாக்களுக்குள்ள நெறைய தெருநாய் கள் வந்திருச்சு. அது, அது இஷ்டத்துக்கு வரலாறே தெரியாம குலைக்குது. அப்போ என்கூட தம்பிகள் கொஞ்சம்பேரு இருந்தாங்க. அதுல நம்மள விட்டுப் போனவங்களும் இருக்காங்க. முத்தூர் பாலுன்னு ஒரு அற்புதமான தம்பி... கடின உழைப்பாளி. அவன் இறந்துபோயிட்டான். அதுவுமில்லாம கல்லு, முள்ளு, கரடுமுரடான மலை...ன்னு நம்மகூடவே ஏறி வந்தவங்கள்ல கொஞ்சம் இன்னும் நம்ம கூடவே இருக்காங்க. விலகிப் போனவங்க... அவங்களே, அவங்களுக்கான குழியத் தோண்டிக்கிட்டும் இருக்காங்க. சரி, அதப்பத்தி இப்ப உள்ள போகல. ஆனா அந்த நேர சாதனைங்கிறது... நாங்க எல்லாரும் சேர்ந்து பண்ணுனதுதான். வெளிய போனவங்களும் சரி... நம்மோட கூட இருக்கிறவங்களும் சரி... எல்லாருமா சேர்ந்து பண்ணுன பெரிய சாதனை, அந்த 9 பேர நாம காப்பாத்தி கூட்டி வந்தது... அத யாராலயும் மறுக்க முடியாது!

இதுல எங்களுக்குப் பக்கபலமா இருந்தது நக்கீரன் குடும்பம். அதவிட ரொம்ப பக்கபலமா இருந்தது கலைஞர்.

போன இதழ்ல நான் முடிச்சிருப்பேன் 25 கோடி...ன்னு! திடீர்னு 25 கோடி டிமாண்ட் வைக்கிறாரு.

Advertisment

அந்த கோரிக்கைக்கு வீரப்பன் வச்ச காரணம்...?

dd

அப்போ கர்நாடகா முதலமைச்சரா இருந்த பாட்டீல், அவசரப்பட்டு ஒரு பேட்டிய ரேடியோவுல கொடுத்துத் தொலைக்க... அந்த பேட்டிதான் எங்களுக்கும், உள்ள இருந்த 9 பேருக்கும் எமனா போச்சு. கிட்டத்தட்ட 25 வருஷங்களுக்குப் பிறகு... இப்பதான் நான் இந்த விஷயத்த வெளியவே சொல்றேன்.

பாட்டீல் பண்ணுன அந்த கூத்து இருக்கு பாருங்க... கொடும! கர்நாடகாவுல அரசியல் பண்றதுக்காக எங்கள பலி கெடாவா ஆக்கிட்டாரு. ஆனா உள்ள இருக்கிற 9 பேரு, அவங்கள காப்பாத் தப் போன நாங்க... எங்களுக்கு என்ன எழவு நடக்கும், என்ன பிரச்சினைங்கிறத கொஞ்சம் கூட யோசிச்சுப் பார்க்கல அந்த மனுஷன். ஆனா கலைஞர் மாத்திரம் பாத்தீங்கன்னா, இந்த எபிஸோடு... 9 பேர காப்பாத்துறதா இருக்கட்டும், ராஜ்குமார் பிரச்சினையா இருக்கட்டும், எப்பவுமே வார்த்தைகள ரொம்ப அளந்து பேசுவாங்க. நீங்கள்லாம் கனவுல கூட நெனைச்சுப் பார்க்க முடியாது, இப்படி ஒரு அரசியல் தலைவர!

25 கோடி ஃபைன். "பாட்டீல் பேசுனாருல்லா ரேடியோவுல... அதுக்கு நான் போட்ட ஃபைன்னு சொல்லு''ன்னாரு. வீரப்பனுக்கு "கலைஞர்'னு சொல்ல வராது. "நீ இந்த 25 கோடிய கலைநர்ட்ட வாங்காத. கலைநர்ட்ட, பாட்டீல்ட்ட நான் வாங்கிட்டு வரச்சொன்னேன்னு சொல்லு. நேரே கர்நாடகாவுக்குப் போ... அங்க பாட்டீல பாரு. நீங்க ரேடியோவுல பேசுனதுக்கு வீரப்பன் ஃபைன் போட்டுட்டாரு. நீங்க குடுத்தாதான் அவங்க அங்க இருந்து வெளில வருவாங்கன்னு சொல்லு. அதுக்கப்புறமாத்தான் நான் உங்கிட்ட பேசுவேன்... நீ கௌம்பு''ன்னு பட்டுன்னு சொல்லிப்புட்டாரு.

நீங்க யோசிச்சுப் பாருங்க...! எத்தனவாட்டிங்க செத்துச் செத்துப் பொழைக்கிறது? உண்மையி லேயே அதக்கேட்டு செத்தே போயிட்டேன். நான், என்கூட வந்த தம்பிங்க எல்லாரும் உள்ள தான் இருந்தோம். அப்ப நாங்க ஒருத்தருக் கொருத்தர் மூஞ்ச பாத்துக்கிறோம். "வேதாளம் மறுபடியும் குண்டக்க மண்டக்க மேல ஏறிடிச்சே'ன்னு. எப்பயும் ஏறுறது வேற, இது... படுவேகமா எங்கேயோ போய் நிக்குதே... எப்படி நாம திரும்பப் போறாம்?னு. அதுதான் நான் சொன்னேன்ல... எனக்கு வயித்தக் கலக்கிருச்சு. "ஐயய்யோ... இதென்னடா மொரட்டுக் குத்தாவுல இருக்கு?'' நீங்க என் இடத்துல இருந்து பாத்தீங்கன்னா தெரியும்... இன்னிக்கு வரைக்கும் அத மறக்கவே முடியாது.

ff

வேற வழியே இல்ல.... என்ன பண்றது? வீரப்பன் கால்ல படார்ன்னு விழுந்தேன். "எனக்கு நீங்க ஒரு பெரிய உதவி பண்ண ணும்ணே. உங்க கோரிக்கைய குடுங்க. நீங்க சொன்னது மாதிரியே நான் கர்நாடகாவுக்குப் போறேன். ஆனா அந்த ஒரு பணயக்கைதி ராஜுவ மாத்திரம் குடுங்க. பாவம்ங்க... அவன் செத்துருவாங்க. முதல்ல குடுக்குறேன்னு ஒத்துக்கிட்டீங்கள்ல. அவனும் முதல்ல ஒத்துக்கல. இப்பதான் வழிக்கு வர்றான். அவன் பாவம். நீங்க மறுபடியும் இல்லல்ல... முடியாதுன்னு சொன்னா என்னண்ணே அர்த்தம்? ப்ளீஸ்ணே... அவன விட்டுருங்கண்ணே. சொன்னது மாதிரியே நான் கர்நாடாகவுக்குப் போய் பேசுறேன், கலைஞர்ட்டயும் பேசுறேன்... நீங்க கொஞ்சம் தயவு பண்ணணும்''னு சொல்லி கெஞ்சுறேன்.

இப்படிப் பேசிப்பேசி வீரப்பன் சரிபண்ணி கொண்டு வந்தா... கூட இருக்கிற சேத்துக்குளி கோவிந்தன் இப்ப சரிப்பட்டு வரமாட்டேங்கிறாரு, ஒருநாள் ஆச்சு, ரெண்டு நாள் ஆச்சு... இந்த இடை வெளியிலதான் வீரப்பன், "நான் எப்படி யானைக் கிட்ட மாட்டுனேன், காட்டெருமைக்கிட்ட மாட்டுனேன், எப்படி தப்பிச்சேன்'னு எங்களுக்கு சுட்டுக் காமிப்பாப்டி. நீங்க வீடியோவுல கூட பாத்திருப்பீங்க. நான் சிவப்புக் கலர் சட்ட போட்டுக்குகிட்டு ஓரமா நின்னுக்கிட்டிருப்பேன். வீரப்பன் துப்பாக்கிய வச்சுக்கிட்டு ஆடி... ஓடி வரு வாரு. முன்னாடி நடந்த சம்பவங்கள் எல்லாத்தை யும் அப்படியே எனக்கு நடிச்சுக் காமிப்பாரு.

இப்படி கொஞ்ச நேரம் ஓடுச்சு. அப்புறமா... "சரி ஆசிரியரே! சகுனம் கொஞ்சம் நல்லா அடிச் சிருக்கு. உன்ன நம்பி விடலாம் நீ போ... அவன கூட்டிட்டுப் போ. கூட்டிட்டுப் போய் என்னன்னு பாத்து, நான் கேட்டத எடுத்துட்டு திரும்ப வரணும்...''னு திரும்பத் திரும்ப சொன்னாப்டி.

"கர்நாடகா முதலமைச்சர் பாட்டீல நான் மன்னிக்கவே மாட்டேன் ஆசிரியரே! நீ அவன்ட்ட சொல்லு. போ... போ... கௌம்பு!'' அப்படின்னாரு. (இத கொஞ்சம் வல்கரா சொன்னாரு. நான் அத நல்ல தமிழ்ல உங்களுக்குச் சொல்றேன்.)

ராஜுவ கூட்டிக்கிட்டு நான், எனக்குப் பின்னாடி சுப்பு, வீரப்பன், சிவா, பாலு எல்லாரும் வரிசையா வந்துக்கிட்டிருக்கோம். கொஞ்சதூரம் நடந்தோம். சுணங்கி, சுணங்கி, கால தாங்கித் தாங்கி நடந்து வந்துக்கிட்டிருந்த ராஜு, உயிர் பிழைச்சுட்டோம்னு தெம்போட இப்ப நல்லா நடந்து வந்துக்கிட்டிருந்தான். ரொம்ப தூரம் நடக்கணும், அவன் நடந்து வரலேன்னா.. நாமதான் தூக்கிட்டுப் போகணும்.

அப்ப... வீரப்பன் ராஜு நடந்து வர்றத பாத்தாப்டி. "இவன்தான் நல்லா நடக்குறானே... இவன ஏன் கூட்டிட்டுப் போற?'ன்னு திடீர்னு கேட்டாப்ல.

ff

ஒரு பர்லாங், ரெண்டு பர்லாங் நடந்துருப் போம். ஐயய்யோ...ன்னுட்டு நான் ராஜு காத கடிக்கிறேன்.... "யோவ் சுணங்கி, சுணங்கி நடந்து வாய்யா'ன்னு சொல்லிட்டு, வீரப்பன்ட்ட, "இல்லண்ணே... அவன் சந்தோஷத்துல அப்படி நடக்குறாண்ணே... நீங்க முன்னாடி போங்கண்ணே... ஒண்ணுமில்லண்ணே...''ன்னேன்.

சிரிச்சுக்கிட்டே... "சரி... நீ ஜெயிச்சுட்ட. ஒரு ஆள இங்க இருந்து கூட்டிட்டுப் போற'ன்னு சொன்னாப்ல. எனக்கு மனசுக்குள்ள ஒரு ஆளை யாவது காப்பாத்திட்டோம்ங்கிற பெரிய நிம்மதி. சரி வந்ததுக்கு இதுவாவது சாத்தியமாச்சேன்னுட்டு நடந்தோம். அதுக்காக எத்தன மலை ஏறுனோம். எத்தன மலை இறங்குனோம்ங்கிறதெல்லாம் பின்னாடி. அதச் சொன்னோம்னா... அதுக்கே இன்னும் 4, 5 எபிஸோடு போகும்.

"டக்'னு ஷாட்ட கட் பண்றேன்.

கலைஞர்ட்ட கூட்டிட்டுப் போய் ஒப்படைக் கிறதுக்காக ராஜுவ அழைச்சுட்டுப் போனேன். கலைஞரப் பாத்தவுடனே டக்னு ராஜு அவர் கால்ல விழுவாப்டி. (படத்த பாத்தீங்கன்னா தெரியும்)

அந்த நேரம் ராஜு ரொம்ப வீக்கா இருந்தான். அதனால கலைஞர் "கோபால், இவர முதல்ல ஆஸ்பத்திரிக்கு அனுப்பிருவோம், அப்புறமா நாம பேசிக்கலாம்''னு சொன்னாங்க. உடனே டி.ஜி.பி. அலெக்ஸாண்டர் அதுக்கான பொறுப்ப எடுத்துக்கிட்டாங்க. அவங்ககூட ஏ.டி.ஜி.பி. ராமானுஜம் இருந்தாங்க. டக்... டக்... டக்...னு அடுத்தகட்ட வேலைகள். பீச் ரோட்டுல ஹார்பர் பக்கத்துல இருக்கிற ஆஸ்பத்திரியில ராஜுஅட்மிட் பண்ணச் சொல்லிட்டாங்க.

ராஜுவோட 2 பொண்டாட்டிங்க, பிள்ளைகளோட நம்ம ஆபீஸ் பக்கத்துலதான் தங்கியிருந்தாங்க. நான் ராஜுகிட்ட... "ஏம்ப்பா உன் குடும்பம் வந்திருக்கு... பாக்குறியா...?

அவன் படார்னு....!

(புழுதி பறக்கும்)