(163) திகில் பொங்கல்!
"பூனை இருக்குற இடத்துல எலி குட்டிகள நெறைய பெத்துப் போட்டுச்சாம்...' -அது மாதிரி நம்ம ஆபீஸ், எதிர ரோடு, தெரு எல்லாம் போலீஸ். இந்த நேரத்துல நாம வீட்டுல பொங்கல் கொண் டாட வந்துருக்கோம். "அடேய், அடேய் கோவாலு ஒனக்கு ஏத்தம் சாஸ்திடா'ன்னு வடிவேலு கணக்கா விரல மூஞ்சிக்கு நேர காட்டி சொல்லிக்குவேன். இதுல ஒரு கிக்கும் இருக்கு, யோசிச்சுப் பாத்தோம்னா பக்குன்னும் இருக்கு.
ஒருபக்கம் எங்க பெருசு, நம்ம டிரைவர் மோகன் எல்லாரும் "அண்ணன் வீணா அட்டமத்துச் சனிய விலைக்கு வாங்கிட்டுத் திரியுறாரு''ன்னு நெனைச்சாங்க.
மரணத்தப் பாத்து பயப்படாதவங்களால எவ்வளவு பெரிய வலியையும் பொறுத்துக்க முடியும். இது எங்க நக்கீரன் குடும்பத்துக்குப் பொருந் தும். படிச்சுக்கிட்டே வந்தீங்கன்னா தெரியும். நாம எத்தன கிக்கான சமாச்சாரங்கள செஞ்சு, சொடக்கு போட்டுத் தப்பிச்சுருக்கோம். இத நம்ம பெருசும், மோகனும் பாத்துருக்காங்க. இந்த இடத்துல அவங்க பயப்படக் காரணம்... போலீஸ் வெறிநாயா அலையுது. என்னக் கண்ட இடத்துல கவ்வி சதைய பிச்சுப்புட நாக்க தொங்கப்போட்டு அலையோ அலையுன்னு கிடக்கானுவோ.
"நீ அழுது ஊரு பாத்துருக்கு... அதே ஊரு ஜெயிச்சுப் பாக்கணும்ல'ன்னு ஒரு படத்துல வசனம் வரும். எப்படியும் இந்த அடிபாதாள கஷ்டத்துல இருந்து வெளிய வருவோம்ங்கிற நம்பிக்கையில தான் இத்தன போலீஸ் படை இருந்தும், நமக்கு ஒண்ணும் ஆகாதுன்னு போலீசுக்கு ஊடாலயே வண்டிய வுட்டு, கண் சிமிட்டுறதுக்குள்ள வீட்டுக்கு உள்ள போயிட்டேன். எதுத்தாப்புல இருக்குற வீடு, பக்கத்துல இருக்குற மண்டபம், சைடுல இருக்கிற ஹால்...னு சுத்தி தீவிரவாதிய கண்காணிக்கிற மாதிரி ஃபைனாகுலர் சகிதமா ஸ்காட்லாந்து போலீஸ்.
"ஜோரா கை தட்டுங்க'ன்னு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டேன். எதுக்கு.... எதுக்குங்கிறீங்களா? இந்தப் போலீஸ் கொம்பனுகட்ட இருந்து தப்பிச்சு இப்ப வரைக்கும் பொழைச்சுக் கிடக்கோம்ல...!
வீட்டுல மேல இருக்கிற மாடித் தோட்டத் துல பொங்கல் வச்சுட்டாங்க. பொதுவா பொங் கல்னா எங்க வீட்டுல எல்லாருக்கும் துணிமணி எடுப்போம். அத படைச்சி, எங்க அப்பா கையால புது துணிமணிய வரிசையா நின்னு வாங்கி... அந்தத் துணியக் கட்டிட்டு அப்பாட்ட ஆசிர்வாதம் வாங் கணும். ஆசிர்வாதம் வாங்கும்போது அப்பா ஒவ் வொருத்தருக்கும் 50 ரூபா தருவாங்க. அத வாங்கிட்டு அப்பா முன்னாடி எல்லாரும் சம்மணம் போட்டு தரையில உக்காந்து பொங்கல சாப்பிடு வோம். அப்புறமா நாலஞ்சு கரும்ப ஒரு வெளு வெளுத்துட்டு... டி.வி.யில ஏதாவது இத்துப்போன படம் போடுவாய்ங்க, அதப் பாத்துட்டு கதை பேசுவோம்... இதுதான் நடைமுறை.
பொங்கல் அன்னிக்கு 9-10:30ன்னு வீட்டுல ப்ளான் பண்ணியிருந்தாங்க. திடீர்னு வீட்டுக்கு கெஸ்ட் வந்துட்டாங்க. தம்பி பிரான்சிஸ், அவ ரோட துணைவியார் ரெண்டுபேரும், "அண்ணன் இல்ல... அதனால வீட்டுக்குப் போய் நல்ல நாளும் அதுவுமா அவங்களுக்கு ஆறுதல் சொல்லணும்'ங் கிற நல்லெண்ணத்தோட வந்துட்டாங்க . அடுத்தது எதிர்பாராம இன்னொரு ஃபேமிலி ஒண்ணு வந்தது. அது என்னோட க்ளோஸ் பிரண்ட் சௌந்தர பாண்டியன். கல்லூரியில நாங்க எல்லாரும் ஒண்ணா படிச்சவங்க. அவரு இப்ப ஏலக்காய் மொத்த வியா பாரி. தேவாரத்துல இருக்காரு. அவரு குடும்பத் தோட பிரான்சிஸ் துணைவியார் வந்துட்டுப் போன கொஞ்ச நேரத்துல வந்துட்டாரு.
பிரான்சிஸ் துணைவியார் வந்தவங்க, என் துணைவியாருக்கு ஆறுதலச் சொல்றாங்க. "அக்கா... அதெல்லாம் ஒண்ணும் கவலப்படாதீங்கக்கா. அண்ணன் இந்தப் பிரச்சினையில இருந்து வந்துரு வாங்க. வேணும்னா பாருங்க, எந்த நேரமா இருந் தாலும் டாண்...னு வந்து நிப்பாங்கக்கா.. (நான் மேல இருக்கேன். அவங்க கீழ பேசுறது எனக்கு கேக்குது.) நீங்க ஏன் கவலைப்படுறீங்க... அண்ணன யாராலயும் ஒண்ணும் செய்யமுடியாது, தைரியமா இருங்க. பொங்கல்லாம் வைங்க...''ன்னு சொல்றாங்க.
பொங்கல் வச்சாச்சு. இப்ப சாமிக்கு வச்சுப் படைக்கணும். நான் இப்ப கீழ இறங்கணும். எங்க அப்பா ரெடியாயிட்டாங்க. நான் கீழ இறங்குற நேரத்துலதான்... பிரான்சிஸ் துணைவியாரோட வந்துட்டாரு. "பொங்கல்லாம் ரெடியா இருக்கா? அப்ப வச்சுப் படைச்சிருங்க... நாங்கள்லாம் இருக் கோம்ல''ன்னு அவங்க ஒரு ஆர்டரே போடுறாங்க. அதாவது அன்பான ஆர்டர். "கவலைப்படாம நீங்க சாமி கும்புடுங்கக்கா... நாங்கள்லாம் இருக் கோம்ல''ன்னு உரிமையில சொல்றது இருக்குல்ல, அப்படிச் சொன்னவுடன, எங்க வீட்ல என் தங்கச்சி, அக்கா எல்லாரும் என் துணைவியார்ட்ட, "இரு விஜி இவங்க போனதும் கோவாலு கீழ வந்துருவாப்ல... அப்ப கும்புடலாம்''னு சைகைல சொல்ல...என் துணைவியார், மெரிலா (பிரான்சிஸ் துணைவியார் பேரு) உருவத்துல சாமி வந்து சொன்ன மாதிரி நெனைச்சு "பொங்கல படைப்போம்'னு படைச்சு... வந்த தம்பிக்கும், அவரோட மனைவிக்கும் பொங்கல் குடுத்து பரிமாறினாங்க. அப்புறமா அவங்க கிளம்பிட்டாங்க.
அதுக்கப்புறமா பூனை போல நான் கீழ வர்றேன். கெத்தா திரியுறவன் இப்ப பம்மி... பம்மி... எவனும் பாத்துருவானோன்னு நெனைச்சுப் பதுங்கி... பதுங்கி தம்பி பையன்க ரெண்டு பேர்ட்டயும் ஹால்ல இருக்கிற ஜன்னல் கதவுகள துணி போட்டு மறைக்கச் சொன்னேன். வீட்டுக்கு இடதுபக்க மண்ட பத்துல மேல எடுவட்டப் பயலுக பைனாகுலரோட வூட்டுக்குள்ள பாத்துக்கிட்டே இருக்கானுவளே. அதனால நாமளும் சூதானமா இருக்கணும்ல.
என்னப் பாத்ததும்... ரொம்ப சந்தோஷமா எங்க வீட்டம்மா சொன்னாங்க. "பிரான்சிஸ் வீட்டுக்காரம்மா வந்தாங்க. நீங்க பொங்கல் வைங்க... அண்ணன் பிரச்சினையில இருந்து வந்துருவாங் கன்னு நம்பிக்கையா சொல்லிச்சு. பொங்கல் வச்சு சாமி கும்புடுங்கக்கான்னு சொல்லி, எங்களுக்கும் குடுங்கன்னு கேட்டு சாப்புட்டுட்டுப் போனாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு''ன்னு வாய் நிறைய சொன்னாங்க. அந்த நேரத்துல என் துணைவியார் ரொம்ப ஆனந்தமா இருந்தத அவங்க முகத்துல நான் பார்த்தேன். எங்களுக்குத் திருமணம் ஆன பொறவு, அவங்க பட்ட கஷ்டத் துக்கும்... தியாகத்துக்கும் அகிலம் முழுக்க அதுக்கு நிகரேதும் இல்ல.
நீங்க யோசிச்சுப் பாருங்களேன்...! எந்த நேரத்துல வீட்டுக்குள்ள போலீஸ் வரும், அ.தி. மு.க.காரன் வருவான், எப்போ ரெய்டு வரும்... -இந்த பயத்துலயே ஒருத்தங்க வாழ்ந்துட்டிருக் காங்க. அவங்களுக்கு கிடைச்ச ஒரு சின்ன மகிழ்ச்சிய... அன்னிக்கு ரொம்ப பெரிய மகிழ்ச்சியா அதச் சொன்னாங்க. சொல்லிக்கிட்டிருக்கும்போது, டக்...னு மேல பெல் அடிக்குது. அது எனக்குக் கேக் குது. என் தம்பி பையன் பெரியவர்கிட்ட, வேகமா கீழ போய் என்னன்னு பாத்துட்டு வரச் சொல்றேன்
"தேவாரத்திலிருந்து என் பிரண்ட் சௌந்தர பாண்டியன் பேமிலியோட வர்றாரு'ன்னு இன்டர் காம்ல சொன்னாங்க. தம்பி பையனும், "ஆமாம்ப்பா... அவங்கதான் வர்றாங்க'ன்னு பாத்துட்டு வந்து சொன்னாரு. டகால்னு நான் மேல ஓடிட்டேன். ஏன்னா வெளியில இருந்து பிரண்ட் வர்றான். அவன் யார்ட்ட பேசுவான்னு தெரியாது. வீட்டுலதான் இருக்கான்னு என்னப் பத்தி சொல்லிட்டா... போச்சே. அவரு மேல நம்பிக்கை இல்லாம இல்ல, அதேநேரம் அவரு பேசுற ஆளு யாராவது ஒருத்தன் ஏ.டி. எம்.கே.காரன், "அவன் வீட்டுலதான இருக்கா னாமே' அப்படின்னு செய்தி போயிடுச்சுன்னு வச்சுக்கங்களேன்... அப்புறம் கத கந்தல்தான! அதனாலதான் மறுபடியும் மேல போயிட்டேன்.
அப்ப என்ன கூத்து நடந்துச்சுன்னா...? தேவாரம் சௌந்தர், கூடவே அவரோட துணைவியார். மேக்கொண்டு சௌந்தரோட அண்ணன் பையன் இங்க இருக்காரு. அவரு ஒரு விளையாட்டு டீச்சர். அவரோட துணைவியாரும் விளையாட்டு டீச்சர். அவங்க, அவங்களோட பிள்ளைங்க எல்லாருமா வந்திருக்காங்க. நான் இல்லைன்னு தெரிஞ்சு, எங்க வீட்டுல உள்ளவங் களுக்கு ஆறுதல் சொல்றதுக்குத்தான் வந்துருக்காரு. "சீக்கிரமா வந்துருவான், கவலைப்படாதீங்க... பொங்கல் வச்சீங்களா? சாப்புட்டீங்களா?'ன்னு கேட்டுருக்காங்க. டீச்சர் பையன் இருக்கான்ல அவன் தோட்டத்தப் பாக்கணும்னு ஓடி வர்றான். தோட்டத்துக்கு என் ரூம் வழியாத்தான் மேல வரணும். நான் மேல இருக்கேன். அவன போகவுடாம தடுத்தது யார் தெரியுமா, எங்க அத்தை... என் துணைவியாரோட தாயார். அவங்க வந்து படிக்கட்டுல உக்காந்துட்டாங்க. ஏன்னா அவன் மேல என்னப் பாத்து, "நான் மேலதான் இருக்கேன்'னு கீழ போய் சொல்லிட்டா... அது கொஞ்சம் அசிங்கம்தான!
அந்த சின்னப்பையன் மேல வர்றதுக்கு தாவுறான். எங்க அத்தை, அவன் மேல வராம இருக்க படியில வரிசையா மிளகா வத்தல், வெங்காயம், வெள்ளப்பூடுன்னு காயவச்சு, ரெண்டு படியிலயும் அரிசிய பொடைச்சு கல் எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. "விடுங்க பாட்டி... நான் மேலே போறேங்கறான். எங்க அத்தை அவன விடல. என் துணைவியார், என் புள்ளைங்க எல்லாரோட பார்வையும் அவன் மேல. என் மகள் சாருதான், அவன டைவர்ட் பண்ணி விளையாட அவங்க ரூமுக்கு கூட்டிட்டுப் போயிட்டாங்க.
பிரண்ட் வந்திருக்காரு. நான் மேல ஒளிஞ்சிருக்கிறது... எதுக்காக ஒளிஞ் சிருக்கேன்னு தெரியாதுல்ல. தெரிஞ்சா அது ஒரு தர்மசங்கடமான விஷயமா ஆயிரும். ஆனா மறுபடியும் அவன் விட மாட்டேங்கறான். துறுதுறுன்னு தோட் டத்தப் பாக்கணும்னு கேட்டுக்கிட்டே இருக்கான். அவங்களும்... "தோட்டத்த பாக்கலாம்தான?'ன்னு கேட்டிருக்காங்க. எங்க அத்தைதான் நகராம படிக்கட்டுல உக்காந்துட்டு, பையன் மேல ஏறிப் போகாம பாத்துக்கிட்டாங்க. அதுல என் பிரண்ட்டோட அண்ணன் பையனுக்கு வருத்தம்தான். இப்பவும் என் துணைவியா ரும், என் பிள்ளைகளும் அதச் சொல்லிச் சொல்லி சிரிப்பாங்க. அத நினைச்சு... நினைச்சு எனக்கும் சிரிப்பு வரும். இந்த தொடர் மூலமாத்தான் இந்த விஷயத் தையே பிரான்சிஸ் துணைவியாருக்கும் சொல்றேன், என்னோட தேவாரம் நண் பன் சௌந்தரபாண்டியனுக்கும் சொல் றேன். (இப்பகூட காலேஜ்ல எங்களோட ஒண்ணா படிச்ச 25 பேரோடயும் நாங்க தொடர்புலதான் இருக்கோம்.)
அவரும் வீட்டுக்கு வந்துட்டுப் போயிட்டாரு. நான் மறுபடியும் கீழ இறங்கிட்டேன். எல்லாரும் ஹால்ல உக்காந்திருக்கோம். பிள்ளைங்கள்லாம் கரும்பு சாப்பிட்டுக்கிட்டிருந்தாங்க. சாயங்காலம் 6 மணி இருக்கும். மறுபடியும் பெல் அடிக்குது. யாரா இருக்கும்?னு யோசிச்சிக்கிட்டிருக்கோம்... அப்போதான் தெரியும், கண்ணன் "பெல்'ல மாத்தி அடிச்சிட்டான்னு. போலீஸ் வந்தாத்தான் அந்த "பெல்'ல அடிக்கணும்னு நான் சொல்லியிருந்தேன். அப்புறமா, கெஸ்ட் வந்தா அந்த பெல் அடிக்க வேணாம்னு தம்பியோட ரெண்டாவது பையன் ராம் சார்ட்ட சொல்லி, கீழ போய் சொல்லச் சொன்னேன்.
அன்னிக்கு ராத்திரி 7:00 மணி இருக்கும். புதுசா வச்ச காலிங் பெல்... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....
(புழுதி பறக்கும்)