(159) ஈ.வி.கே.எஸ்.ஸுக்கு ஸ்கெட்ச் போட்ட ஜெயலலிதா!
அண்ணன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இனி வாயத் திறக்கக்கூடாதுன்னு பொசகெட்ட பயலுக போன்பண்ணி மிரட்டியிருக்கானுவோ. அந்தாள ஏதாவது பண்ணுங்கன்னு உத்தரவுக்கு மேல் உத்தரவு பறக்குது. இளங்கோவன் அந்த காலகட்டத்துல சென்னை மந்தைவெளி பகுதியில குடியிருந்தார். தினமும் காலையில அவரு வாக்கிங் போறது வழக்கம். குறிப்பா நீதிபதிகள், அமைச்சர்கள் வசிக்கிற பங்களா பகுதியான க்ரீன்வேஸ் சாலையில் நடை பயிற்சிக்கு போறத வழக்கமாக வச்சிருந்தாரு.
கலைஞரின் கைதுக்காக ஜெயலலிதாவ இளங்கோவன் கண்டிச்சது, சும்மா ஏனோ தானோன்னுல்லாம் கண்டிக்கல. விட்டு ராவிட்டாரு ராவி. அதுக்கே கடுப்பாயிருக்கும் ஜெயலலிதா.
அது ஒண்ணாச்சா...!…
அடுத்து, டெல்லி பத்திரிகையாளர் சந்திப்புல சோனியாம்மாவ குண்டக்க மண்டக்க ஜெயலலிதா பேசுச்சா...…
அதுக்கும் ஒரு ரிவீட் விட்டாரு. அது கொஞ்சம் ஓவரா இருந்துச்சுன்னு அவங்க கட்சிக்காரங்க புலம்புனாங்க. ஆனா அந்தப் போடு போடலைன்னா இந்த ஹிட்லரம்மா வாய பொத்தியிருக்காது. சரியான போடு போட்டாரு. அதான்… மைசூர் தசராவுல டான்ஸ் ஆடாம போனது, அது போலீஸ் கேஸானது, கைதானதுன்னு பழசையெல்லாம் எடுத்துவிட்டாரா,… அம்புட்டுத்தான். இந்தப் பொம்பளைக்கு மூக்கு மேல வந்துருச்சு கோபம். சும்மா விடுமா…? எதுத்து எழுதுன நம்மளையே பத்து தடவைக்கு மேல கொல்லப் பாத்துச்சு. பல தடவ சாவ பக்கத்துலயே பாத்துட்டு வந்து போன ஆயுள்லதான் ஜீவனம் பண்றோம். ஈ.வி.கே.எஸ். இளங்கோ அண்ணன சும்மா விட்ருமா? அதுவும் உசுரோட…
ஜெயலலிதாவா… கொக்கா? யாருன்னு நினைச்சீங்க.
சோனியா பத்தி பேச்சு,…அப்புறம் பதிலுக்கு இவர் தந்த கோமளவள்ளி சூடு எல்லாம் தணிஞ்சு ஒரு வாரம் இருக்கும்…
வழக்கம்போல விடியக்காலையில வாக்கிங் போயிட்டிருந்த இளங்கோவனப் பாத்து பின்னாடி கூடி மணல் லாரி ஒண்ணு வேகமா வந்துச்சு. அவரத் தட்டித் தூக்குறதுன்னு பெரிய ப்ளான் போடப்பட்டிருந்ததால கண்மூடித்தனமாக வந்துச்சு அந்த லாரி. கண்ணு மண்ணு தெரியாம படு ஸ்பீடா வந்ததால லாரியோட பாடியில வந்த தடதட சத்தம், கேட்டு இளங்கோவனுக்கு ஏதோ மனசுக்குள்ள உறைக்க... சட்டென திரும்பிப் பார்க்க… ரொம்ப பக்கத்துல வந்திருந்தது லாரி. கண் இமைக்குற நேரத்துல சுதாரிச்சுக்கிட்ட இளங்கோவன்… சட்டென விலக, அவரை உரசிக்கிட்டுப் போயிருக்கு லாரி. இளங்கோவனின் ஹார்ட் பீட் ஓவரா சவுண்ட் விட்டு ஓடுற குதிர கணக்கா தடக்... தடக்...ன்னு பின்னி எடுத்து ருக்கு. கொஞ்ச நேரம் நெஞ்சப் புடிச்சு ஆசுவாசப்படுத்திக்கிட்டே வீட்டுக்குத் திரும்பி யிருக்காரு இளங்கோவன்.
அன்னைக்கு தன்னை பார்க்க வீட்டுக்கு வந்திருந்த காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள்ட்ட, விடியக்காலையில் நடந்த சம்பவத்த திகிலோட இளங்கோவன் விவரிக்க... அதிர்ச்சியடைஞ்ச அவங்க...…
"தலைவரே இது வேற ஒண்ணுமில்ல. நீங்க கலைஞர் கைதை கண்டிச்சும், மதுரையில காங்கிரஸோட த.மா.கா.வ இணைச்சப்ப, சோனியாம்மா -ஜெயலலிதா பத்தி பேசுனதுக்கு... பதிலுக்கு ஜெயலலிதா, சோனியாம்மாவ திட்டுச்சுல்ல... அதுக்கும் சேத்து ஜெயலலிதாவ வசமா நாறடிச்சீங்கள்ல…அதோட விளைவுண்ணே இது. உங்கள தீத்துக்கட்ட அந்தம்மா வகையா, ஸ்கெட்ச் போட்டுருச்சு'ன்னு சொல்ல...… அப்போதான் ஜெயலலிதாவோட கோரமுகம் இளங்கோவனுக்கு ஆத்தாடீன்னு நினைவுக்கு வந்து போயிருக்கு. இளங்கோ அண்ணன் அன்னைக்கு மட்டும் மணல் லாரியில தப்பிக்காம சிக்கியிருந்தாருன்னா, இன்னிக்கி அதான்...…ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தல்ல நின்னு கெத்தா 1 லட்சத்துப் பத்தாயிரம் ஓட்ட வாங்கி ஜெயிக்க ஆளே இருந்துருக்கமாட்டாரு. அவருக்கு அப்பவே மாலை போட்டு அனுப்பி வச்சுருக்கும் அன்பான அடங்காத பிடாரி.
இதெல்லாம் கேட்கக் கேட்க, திக்... திக்...னு இருக்குல்ல. இது மாதிரி நிறைய ஐட்டம்... சொல்லிக்கிட்டே போகலாம்.
எதுத்தவய்ங்கள, எதுத்துப் பேசுனவய்ங்கள மண்ணோடு மண்ணாக்கி பழக்கமாகிப்போன ஜெயலலிதாவோட இன்னொரு மூஞ்சிதான் லாரிய விட்டு ஏத்தி சோலிய முடிக்கிறது. ஏன்... அது காங்கிரஸ் காரங்களா இருந்தாலும், தன்ன எதுத் துட்டா அவங்க டவுசர கழட்டிரணும்.… அப்படிக் கழண்டுறாம தப்பிச்சது நம்ம அண்ணன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மட்டும்தான்.
இப்ப மறுபடியும் ஷாட்ட கட் பண்ணி உரிமை மீறல் பிரச்சினைக்குப் போவோம்.
7-1-2012. அன்னைக்கு வந்த நக்கீரன் 9 மற்றும் 10-ஆம் பக்கத்துல வந்த ஒரு கேள்வி பதில்! அதுல...…
கேள்வி: சட்டசபையில் சபாநாயகரின் முடிவை எதிர்க்கிற ஒரே ஒரு காரணத்தினால் தி.மு.க.வின் அவை நடவடிக்கைகள் கூர்மையாக இல்லை. 1977-84-ல் சட்டசபையில் தி.மு.க. செயலாற்றியது பல்வேறு எதிர்க்கட்சிகளுக்கு ஒரு பாடமாகும். தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவராக செயல்படும் நீங்கள் அதுபோன்ற தீவிரமான அவை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமென்று பொதுமக்களும் கட்சியினரும் எதிர்பார்க்கிறார்கள். அது நிறைவேறுமா?
பதில் : சட்டப்பேரவையில் தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்பது, பேரவைத் தலைவர் எந்த அளவுக்கு எதிர்க்கட்சிகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும், ஜனநாயக நெறிமுறைகளைப் போற்றவும், எண்ணிக்கையை மட்டும் பார்க்காமல் -எண்ணத்தையும் சீர் தூக்கிப் பார்க்கவும், பக்குவமாகச் செயலாற்று கிறார் என்பதைப் பொறுத்தே அமைகிறது.
1977-84-ல் சட்டப்பேரவையின் நிலைமையே வேறு. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் முதன் முதலில் முதலமைச்சராகப் பொறுப்பேற் றிருந்த நேரம். தலைவர் கலைஞர் எதிர்க்கட்சித் தலைவர். அந்த காலகட்டத்தில் தி.மு.கழகம் எதிர்க்கட்சிப் பொறுப்பில் இருந்தபோது நடை பெற்ற விவாதங்களையும், நிகழ்ச்சிகளையும் விருப்பு வெறுப்பின்றி எல்லா ஏடுகளுமே பாராட்டி எழுதின என்று "நெஞ்சுக்கு நீதி"யில் தலைவர் கலைஞர் அவர்களே குறிப்பிட்டுள்ளார். அப்போ திருந்த பேரவைத் தலைவர் திரு.க.இராசாராம் திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவர். அவர் நல்ல கண்ணோட்டம் உள்ளவராகவும், பகைமை உணர்வு அற்றவராகவும், எதிர்க்கட்சிகளை மதிக்கத் தெரிந்தவராகவும் இருந்தார்.
அப்போது பேரவையில் நிலவிய சூழ்நிலை களை -இன்றைய சூழ்நிலைகளோடு ஒப்பிட முடியாது. இப்போது முற்றிலும் வேறுபட்ட -வித்தி யாசமான நிலைமை. இப்போது முதலமைச்சரைச் சுற்றியே அவை நடவடிக்கைள் நடைபெறுகின் றன. பேரவைக்குத் தலைவர் என்று ஒருவர் இருந் தாலும், அம்மையாரின்றி ஓர் அணுவும் அசையாது என்ற ரீதியில்தான், அவை நடத்தப்படுகிறது.
பாரபட்சமும், காழ்ப்புணர்ச்சியும் மேலோங்கி இருக்கின்றன. தி.மு.க.வுக்கு ஒரே பகுதியில் இடம் ஒதுக்கிடக்கூட மனம் வரவில்லை. கருத்து வேறுபாட் டுக்குக் கடுகளவும் இடமில்லை. "பாராட்டுப் புராணத் திற்கும், நன்றிக் கலம்பகத்திற்கும்" மட்டுமே நிரம்ப இடமுண்டு. சட்டமன்ற ஜனநாயகம் ஒரு இறுக்க மான கட்டத்தைக் கடந்துகொண்டிருக்கிறது.
இந்த நிலையில், தி.மு.க. தன்னைப் பாது காத்துக்கொண்டு, தீவிரமாகச் செயல்படுவது எப்படி என்பதை நீங்கள்தான் விளக்கவேண்டும்; நாங்களும் அது குறித்துச் சிந்திக்கிறோம்.
"மாட்டுக்கறி தின்னும் மாமி' தலைப்பிட்ட அட்டைப் பட நக்கீரன்தான் 7-1-2012 அன்னக்கி வெளிய வந்தது.
ஆச்சா... அதுல வந்த "அந்த' செய்திக்குத் தான் நம்மள பதம் பாத்து, ராப்பகலா தூங்கவே விடாம விடிய... விடிய தண்ணி ஊத்தி, தண்ணி ஊத்தி அடி... அடிண்டு அடிச்சு, கொலையா கொண்டாய்ங்க பரதேசிப் பசங்களும் பரதேசி நாய்களும்.
அதுக்குத்தான் ஊரு, உலகம் பூரா நம்ம மேல எஃப்.ஐ.ஆர். எண்ணிக்கையில 261 வரும்... அதுக்கு மேலயும் வரும். அத்தோட விட்டானுங்களா? என்ன கொலை பண்ணீரணும்னு வூடு வூடா அலைஞ்சு தொறத்து தொறத்துன்னு தொறத்துனாய்ங்க போலீஸ்காரய்ங்க. எந்த சாமி புண்ணியமோ தப்பிச்சு, கிப்பிச்சு வந்துதான் இப்ப... இந்த "போர்க்களம்' எழுதிக்கிட்டு இருக்கோம்.
"சர்ர்ர்ரி.... அதுக்கென்ன இப்போங் கிறீங்களா?'
அதே நக்கீரன் புக்குல ஒருத்தரு பேட்டி. அதான் கேள்வி பதிலா வந்துச்சு. அதுல வந்த கேள்வி பதில்தான் மேல படிச்சது...
மீண்டும் "சர்ர்ரி.... கேள்வி-பதிலே அச்சடிச்சு போட்டீல... என்ன அதுக் குங்கிறீங்களா?. பில்ட்-அப் பண்ணாம விஷயத்த சொல்லித் தொலைய்யாங் கிறீங்களா...?
சொல்றேன்... சொல் றேன்...
மேல படிச்ச அந்த பதில் நக்கீரன்ல வந்ததுக்கும், அந்தப் பதிலைச் சொன்ன புண்ணியவானுக்கும் உரிமை மீறல் நோட்டீஸ்ஸ்ஸ்....
"போச்சுடா... இன்னமும் சஸ்பென்ஸா...?'ன்னு கேக்குறீங்க...!
அந்தக் கேள்விக்குப் பதிலச் சொன்னவரு யாருன்னா...?
(புழுதி பறக்கும்)