(156) சட்டசபையில் ஜெ. அணி நடத்திய வெறியாட்டம்!
அது மட்டுமல்ல... தமிழ்நாட்டிலேயே ஏன்... இந்தியாவிலேயே இப்படி ஒரு பெரிய காரியத்தை நிகழ்த்திக் காட்டியது நக்கீரன் மட்டும்தான். அதுக்கு துணை நின்ன எங்க அட்வகேட் டீமுக்கு ஒரு ராயல் சல்யூட். முக்கியமா இந்த வழக்குல சட்டமன்ற உரிமை மீறல் பிரச்சினைக்கு பாதிக் கப்பட்டவங்க வழக்கறிஞர் வைத்துக்கொள்ள லாம்னு ஆர்டர் போட்ட நீதியரசர் சந்துரு அவர்களுக்கும் ஒரு ராயல் சல்யூட்.
ஒருவழியா... பாத்தீங்கன்னா ஜெயலலிதா எடுக்குற எல்லா அட்டெம்ட்லயும் இருந்து எல்லார் துணையோடயும் தப்புச்சுத் தப்புச்சு வந்துட் டோம்.
இவ்வளவு இருக்குறத... போன 3, 4 இதழா ஜெயலலிதா தூண்டுதல்ல போட்ட உரிமை மீறல் பத்திதான் பார்த்தோம்.
1989, மார்ச் 25ஆம் தேதி...
அப்ப சட்டமன்ற சபாநாயகர் தமிழ்க் குடிமகன், முதல்வர் கலைஞர், எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா. காங்கிரஸ் குமரிஅனந்தன் ஜெயலலிதாவுக்கு சப்போர்ட்.
கொஞ்ச நாளைக்கு முன்னாடி நம்ம போர்க்களத்துல ஜெயலலிதாவோட ராஜினாமா கடிதத்த நம்ம நட்டு திருடி வீட்டுல வச்சத, கலைஞர் போலீசு கண்டுபுடிச்சு பத்திரிகைக்கு குடுத்துருச்சு. அதுல கொஞ்சம் அவசரப்பட்டுட் டாங்க. ஐயய்யோ... அந்த ஆத்தா குய்யோ முறையோன்னு குதி... குதி...ன்னு குதிச்சு சட்ட மன்றத்த இரண்டாக்கிருச்சு. அந்தக் கடிதம் வெளியிட்டதுக்குத்தான் கலைஞர் மேலயும், அப்ப இருந்த போலீஸ் கமிஷனர் துரை மேலயும் உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வந்துச்சு ஜெயலலிதா. இப்ப ஜெயலலிதாவே அந்த பிஞ்சுபோன வாயால பேசுறதக் கேளுங்க மக்களே...!
ஜெயலலிதா: தனிப்பட்ட வகையிலும், எம்.எல்.ஏ. என்ற வகையிலும், எதிர்க்கட்சித் தலை வர் என்ற வகையிலும் என்னுடைய உரிமைகள் மீறப்பட்டிருக்கின்றன. முதலமைச்சரின் தூண்டுத லின் பேரில் போலீஸார் அத்துமீறி செயல்பட்டி ருக்கிறார்கள். அவர்கள் அதிகாரத்தை துஷ்பிரயோ கம் செய்து, என்னைத் துன்புறுத்தியிருக்கிறார்கள். காவல்துறை பொறுப்பை வகிக்கும் முதல்வரே இதற்குப் பொறுப்பானவர். அவரது தூண்டுதலின் பேரில்தான் என்னுடைய ராஜினாமா கடிதத்தை போலீஸார் பிரித்து சபாநாயகரிடம் கொடுத்திருக் கிறார்கள். இது அப்பட்டமான உரிமை மீறல். எனவே அதற்காக முதலமைச்சர் மீதும், நகர போலீஸ் கமிஷனர் மீதும் உரிமை மீறல் பிரச்சினை கொடுத்திருக்கிறேன். எனது தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது. இத்தகைய கிரிமினல் சட்டத் துக்கு உட்பட்ட குற்றத்திற்கு ஆளான முதல்வர் பதவி விலக வேண்டும். இந்த தவறுகளுக்கு கூட்டுப் பொறுப்பேற்று அமைச்சரவையும் பதவி விலக வேண்டும். உடனே பி.எச்.பாண்டியன் எழுந்து... (அப்ப அவர் ஜானகி அணியில இருந்தார்) இவர் அளவுக்கு ஜெயலலிதாவ மோசமா பேசுனவங்கள நான் பாக்கல. அந்த நேரம் நமக்கும் அவர்தான் வக்கீல்.
பி.எச்.பாண்டியன்: இங்கு 234 பேரும் உறுப்பினர்கள்தான். அனை வரும் சமமானவர்களே. அதனால் உறுப்பினர் எந்த வகையிலும் மேலானவர் அல்ல. சாதாரண மானவர்தான். இன்னும் சொல்லப் போனால் அவர் இங்கு இருப்பதற்குக் கூட தகுதியற்றவர். (உடனே அ.தி.மு.க. ஜெ. அணி உறுப்பினர்கள் பலர் எழுந்து நின்று கூச்சலிட்டார்கள்.)
செங்கோட்டையன், மாரப்பன், வி.என்.சுப்பிரமணியம், அண்ணா நம்பி, சந்திரசேகரன் போன்ற வர்களிடமிருந்து "உட்காரடா கைக்கூலி, துரோகி' என்ற கூக்குரல்கள் எழுந்தன. "அவனை செருப்பாலடி', அந்த பைத்தியக்காரனை அடித்து விரட்டு'ன்னு கூகூன்னு கூக்குரல் கேட்டுச்சு.
பதிலுக்கு பி.எச்.பாண்டியனும் எழுந்து நின்று கத்தினார். உடனே அமைச்சர்கள் வரிசையிலிருந்து வீரபாண்டி ஆறுமுகம் கிளர்ந்தெழுந்தார். "டேய் பாண்டியனைப் பேச விடுங்கடா'' என்று கூறியபடி ஆவேசமாகப் பாய்ந்தார். அமைச்சர்கள் ராமகிருஷ்ணன், நேரு, பொன்முடி போன்றவர்கள் வீரபாண்டியாரை சமாதானப்படுத்தி உட்கார வச்சாங்க.
சபாநாயகர்: ஒரு உறுப்பினர் பேசும்போது அனைவரும் எழுந்து பேசக்கூடாது, உட்காருங் கள். சபாநாயகர் நிற்கும்போது அனைவரும் அமரவேண்டும். ஜெயலலிதா, குமரிஅனந்தன் ஆகியோர் உரிமை மீறல், ஒத்திவைப்பு பிரச்சினை கொடுத்திருக்கிறார்கள். அதனை ஆய்வு செய்து அறிவிக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. வரவுலிசெலவு திட்டம்தான் இன்றைய நிகழ்ச்சி. இது ஆளுநரால் அறிவிக்கப்பட்டு, நாள் குறிப் பிடப்பட்ட நிகழ்ச்சி. இன்று வேறு பிரச்சினை கள் எதையும் எடுத்துக்கொள்வது மரபல்ல. உங்கள் பிரச்சினைகளை ஆய்வு செய்து திங் கட்கிழமை அறிவிக்கிறேன். இப்போது முதல்வர் வரவு-செலவு திட்டத்தை தாக்கல் செய்வார்.
உடனே முதல்வர் கலைஞர் எழுந்து பட்ஜெட்டை வாசிக்க ஆரம்பித்தார். கூடவே ஜெயலலிதா ரொம்ப கோபாவேசமா எழுந்தாரு...
ஜெயலலிதா: எனது ஒத்திவைப்பு தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு இப்போதே விவாதிக்க வேண்டும். ஒரு கிரிமினல் குற்றவாளி பட்ஜெட் தாக்கல் செய்ய விடமாட்டோம். அவர் ராஜினாமா செய்ய வேண்டும்-னு ஒரே கத்து...
கலைஞர்: என்னை ராஜினாமா செய்யச் சொல்ல உனக்கு என்ன யோக்யதை...
ஜெயலலிதா: நீர் என்ன யோக்யமா?
கலைஞர்: உன்னுடைய யோக்யதை சோபன்பாபுவுக்குத்தான் தெரியும்.
உடனே திருநாவுக்கரசர், தன் கையிலிருந்த அறிக்கையை சுக்குநூறாக கிழிச்சு எறிஞ்சாரு. அதேநேரத்துல சபையில் தி.மு.க., ஜெ. அணி உறுப்பினர்கள் கடுமையாக ஒருவரை ஒருவர் ரொம்பக் கேவலமா திட்டிக்கிட்டாங்க.
பின்னாடி வரிசையில இருந்த ஜெ. அணி எம்.எல்.ஏ. செங்கோட்டையன் முன்வரிசைக்குப் பாய்ஞ்சு வந்தார். அதேசமயத்தில் செங்க்ஸை பாத்து "குத்துடா அவனை'ன்னு ஜெயலலிதா ஆவேசமா சொன்னார். பிறகு அமைச்சர்களும் சூழ்ந்துக் கிட்டாங்க. யாரும் எதிர்பாராதவிதமா கலைஞர் கையிலிருந்த பட்ஜெட் அறிக்கையைப் பிடுங்கிக் கிழித்தெறிந்தார் செங்கோட்டையன். அப்போது கலைஞரின் மூக்குக்கண்ணாடி கீழே விழுந்தது.
"டேய்... அந்த .......ராஜினாமா பண்ணச் சொல்றா, எல்லோரும் பாத்துக்கிட்டேயிருக்கீங்களே' என்று ஆவேசக் குரலெழுப்பியபடி ஓடி வந்தார் அமைச் சர் வீரபாண்டி ஆறுமுகம். தொடர்ந்து தி.மு.க. மந்திரிகளும், எம்.எல்.ஏ.க்களும் ஜெயலலிதாவை சூழ்ந்துகொண்டார்கள். அமைச்சர்கள் சிலர் புடை சூழ அவையை விட்டு வெளியேறினார் கலைஞர்.
தொடர்ந்து அன்பழகன், சாதிக்பாட்சா, கே.பி.கந்தசாமி, நாஞ்சில் மனோகரன் போன்ற சீனியர் அமைச்சர்களும் வெளியேறினாங்க.
அதேவேளையில எம்.எல்.ஏ.க்கள் பெரும்பாலோர் மைக்குகளைப் பிடுங்கிக்கிட்டு ஜெயலலிதா பக்கமா பாய்ஞ்சாங்க. பட்ஜெட் பிரதிகளான புத்தகக் கட்டுகள ஜெயலலிதா மீது குறிவச்சு வீசுனாங்க.
சாத்தூர் ராமச்சந்திரன், திருநாவுக்கரசர் ஆகிய இருவரையும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சரமாரியாகத் தாக்க ஆரம்பிச்சாங்க. "ஐயோ... அம்மா' என்ற அலறலுடன் தலையைப் பிடிச்சுக்கிட்ட ஜெயலலிதாவை திருநாவுக்கரசர், அண்ணாநம்பி போன்றவர்கள் சுத்தி நின்னு தடுத்தாங்க.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வட்டாரத்திலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பீட்டர் அல்போன்ஸ், பி.வி.ராஜேந்திரன், டேனியல்ராஜ் போன்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை நோக்கிப் பாய்ந்தார்கள். ஆனால் மூப்பனார் அமைதிப்படுத்தினார். மைக்குகள், பேப்பர் கட்டுக, மந்திரி கொண்டு வந்தி ருந்த முக்கிய ஃபைல்க எல்லாம் தூக்கி எறியப்பட்டன.
ஜெயலலிதாவை அடிப்பதற்காகப் பிடுங்கிய மைக்குடன் ஓடிவந்த பாளையங்கோட்டை எம்.எல்.ஏ. குருநாதனை பீட்டர் அல்போன்ஸ் கையைப் பிடித்து தடுத்து எச்சரித்தார். அப்போது தீவிர தாக்குதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த துரைமுருகன் பாய்ந்தோடி வந்தார். அப்போது பக்கத்திலிருந்த மூப்பனார், துரை முருகனின் கையைப் பிடிச்சுக்கிட்டு சத்தம்போட... எங்கிருந்தோ வந்த கட்டையொண்ணு மூப்பனார் கையைப் பதம் பார்த்துச்சு. விடாம, சரமாரியாக அவர்மீது செருப்புகள் வீசப்பட்டன. அதே நேரத்தில், சப்போர்ட்டா?ன்னு ஆவேசமாகக் கத்தினார் ஒரு தஞ்சை மாவட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.
குமரிஅனந்தன், ஆண்டி அம்பலம் போன்றவங்க மூப்பனாரின் தலைக்கு மேலாக அட்டைப் பேடை பிடித்துக்கொண்டு, அடியில் இருந்து காப்பாற்றினார்கள். "வெளியில் போயிடலாம் வாருங்கள்'' என்று கூறிய சுந்தரதாஸிடம் "வேண்டாம் இருங்கள், போகலாம்'' என்று கூறிவிட்டார் மூப்பனார்.
இந்த நிலையில் எழுந்து வெளியே போக முயன்ற ஜெயலலிதாவுக்கு நடக்க முடியாத நிலை ஏற்பட்டு, மீண்டும் அப்படியே உட்கார்ந்து விட்டார். இதற்கிடையில சபாநாயகர், சபையை ஒத்திவைப்பதாகக் கூறிவிட்டுப் போய்விட்டார். ஆனாலும் அமளி ஓயவில்லை. ஜெயலலிதாவின் டேபிளின் மீது ஏறி நின்னுக்கிட்டு சில தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குனிந்திருந்த ஜெயலலிதாவ தாக்கப் பாத்தாங்க. வீரபாண்டி ஆறுமுகம், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் போன்ற மந்திரி கள் கையில் கிடைத்ததையெல்லாம் எடுத்து அ.தி.மு.க. ஜெ.அணி மேல விளாசிக்கொண் டிருந்தாங்க. இந்த நிலையில்... தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் திருநாவுக்கரசரை குறிவைத்து மைக்கை வீச... அது வீரபாண்டியாரின் தலையைப் பதம் பார்த்தது. ரத்தம் சொட்டச் சொட்ட நின்ற வீரபாண்டியாருக்கு, துரைமுருகனின் சட்டை பேண்டேஜ் ஆனது. ஜெயலலிதாவும் அவரது எம்.எல்.ஏ.க்களும் வெளியேறும்வரை நடந்த இந்த மோதல் மிகவும் கொடூரமானதாகக் காணப்பட்டது.
"அவளை விடாதே... அமுக்கு... விடாதே... இங்கேயே ரெண்டுல ஒண்ணு பாரு'ன்னு' கீழ்த் தரமான வார்த்தைகள் அதிக அளவில் பிரயோ கிக்கப்பட்டன. சுமார் 15 நிமிட நேரம் நடந்த இந்த அமளிதுமளியில் கலந்துகொள்ளாத தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் மு.க.ஸ்டாலின், வரகூர் அண்ணாதுரை, பரிதி இளம்வழுதி, தங்கவேலு போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். மேலும் பல புதிய எம்.எல்.ஏ.க்கள் சமாதானம் செய்யப் போய், அடி வாங்கிய பிறகு சண்டைக்காரர் களானாங்க. இந்த உச்சகட்ட காட்சிகள் அரங் கேறி முடிந்த பிறகு பெரும்பாலான எம்.எல்.ஏ.க் கள் வேஷ்டிகளை இழந்திருந்தார்கள்.
சட்டசபையை விட்டு வெளியேறிய ஜெயலலிதாவும் அவரது எம்.எல்.ஏ.க்களும்...?
(புழுதி பறக்கும்)