gg

(129) ஜெயலலிதா ஸ்டைல்...! எம்.எல்.ஏ. பட்டபாடு!

"தனிநபர பழிவாங்கல... தனிநபர பழிவாங்கல... தனிநபர பழிவாங்கல...'ன்னு கோர்ட்ல மூணு தடவ சொல்லுவாங்களே, அப்படி ஏ.ஜி. நவநீதகிருஷ்ணன் சார் சத்தியம் பண்ணாத குறையா சொன்னாருல்ல... அது எவ்வளவு பெரிய பொய்யிங்கிறதுக்குத்தான் அடுத்த மேட்டருக்கு வர்றேன்.

Advertisment

அவங்க ஆட்சி! அதான் மேடம்...ம்...ம்... ஜெயலலிதா ஆட்சி.

1992-ஆம் வருஷம் மார்ச் மாசம், ஒரு சுபயோக தினத்துல மரியாதைக்குரிய அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் சொக்கலிங்கத்துக்கு நடந்தது...

மதுராந்தகம் எம்.எல்.ஏ. சொக்கலிங்கம், பழைய எம்.எல்.ஏ. விடுதியில தங்கியிருந்தாரு. 12-3-92. அன்னிக்குத்தான் அவருக்காக பழைய ஹாஸ்டலுக்கு பக்கத்துல உள்ள அனெக்ஸ் 5-ஆம் நம்பர் வீடு ஒதுக்கப்பட்டுருந்துச்சு.

Advertisment

கொடுமையப் பாருங்க... புது வீட்டுல குடியேறுன எம்.எல்.ஏ., மறுநாளே தன்மேல இப்படி ஒரு பயங்கரமான தாக்குதல் நடக்கும்னு கனவுல கூட நெனைச்சுப் பாக்கல.

13-3-92 வெள்ளிக்கிழமை ராத்திரி 11:30 மணி அளவுலதான் அந்தக் கும்பல், எம்.எல்.ஏ. வீட்டுக் கதவ தட்டியிருக்கு. எம்.எல்.ஏ.வோட மனைவி மல்லிகா, இந்நேரம் எதுக்குன்னு, கணவரை எவ்வளவோ தடுத்தும் விதி விடல.

"தொகுதியில இருந்து வர்றோம். ஒரு முக்கியமான காரியம்... எங்களுக்கு உதவுங்க''ன்னு அபயக் குரல் எழுப்புன அந்த கொலைகாரக் கும்பலோட பேச்சை நம்பி, கதவத் தொறந்ததும்... சொக்கலிங்கத்த கத்தி முனையில மிரட்டி, காருல தூக்கிப்போட்டுட்டு பறந்துச்சு அந்தக் கும்பல்.

நகரத்தோட மூலை முடுக்கெல்லாம் போன கார, கடைசியா கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் அம்மன் அபார்ட்மெண்ட் கட்டிடத்துக்குப் பக்கத்துல கொண்டுபோய் நிறுத்துனாய்ங்க.

ஜெ. சீட் கொடுத்து, மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட மக்கள் பிரதிநிதி சொக்கலிங்கத்த ரவுடிக் கும்பல் துவம்சம் செஞ்சு ரத்தமயமான நிலையில, அந்த ராத்திரி நேரம்... நடுரோட்டுல அனாதையா தூக்கிப் போட்டுட்டுப் போச்சு.

கையிலயும், கால்லயும் அடிச்சதுல எலும்பு முறிஞ்சு பலத்த காயத்தோட கட்டுப்போட்டு ஆஸ்பத்திரியில கிடந்தாரு.

ff

கொடுமை என்னன்னா... அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ரமேஷ் அண்ணன் அடிபட்டு எப்படி கேட்பாரற் றுக் கிடந்தாரோ... அதேபோலத்தான் எம்.எல்.ஏ. சொக்கலிங்கத்தையும் சென்னையில, அதுவும் புது வீட்டுல குடிபுகுந்த மய்க்கா நாளே, அதுவும் அவரோட வீட்டுக்காரம்மா கண்ணு முன்னாலேயே குண்டுக்கட்டாத் தூக்கிப் போட்டுக் கொண்டுபோய், சிட்டியில இருக்கிற முக்கியமான இடமான கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் பக்கத்துல வச்சு அடிச்சு... கை, காலுல்லாம் ஒடைச்சு நடுராத்திரியில நடுரோட்டுலயே போட்டுட்டுப் போயிருக்காய்ங்கன்னா... யோசிச்சுப் பாருங்க! ஒண்ணு... தன் தலைவியே ஆள் வச்சு அடிச் சுருக்கணும், இல்ல அடிச்சவய்ங்களுக்கு ரொம்ப பெரிய... பெரிய இடத்து சப்போர்ட் இருந்தாத்தான் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வையே நடுரோட்டுல வச்சு சாத்து... சாத்துன்னு சாத்த தைரியம் வரும்.

அடி வாங்குன எம்.எல்.ஏ. சொக்கலிங்கம் பாவம்! வந்தவய்ங்க யாரு? ஏன் அடிக்கிறாய்ங்கன் னும் தெரியாம, ஏண்டா நம்மள அடிச்சாய்ங்கன் னும் புரியாம குழம்பிப் போய் இருந்துருக்காரு.

எம்.எல்.ஏ. சொக்கலிங்கத்தப் பொறுத்த வரைக்கும் அவங்க கட்சி, எதிர்க்கட்சின்னு எந்தப் பாகுபாடும் இல்லாம அன்பா பழகுறவரு. ஆஸ்பத்திரியில அட்மிட்டாகியிருந்த அவர போய் பார்த்து, அப்ப நம்மட்ட வேலை பாத்த எங்க சீனியர் ரிப்போர்ட்டர் கதிரை துரை அண்ணன் "எதிர்க்கட்சிக்காரங்க சதியா இருக்குமோ?'ன்னு கேக்க...

பதறிப்போன சொக்கலிங்கம், "சர்... சர்... அப்படி யாரு மேலயும் அபாண்டமா பழி போடவேண்டாம்'னு கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டாரு. எவ்வளவு மனசாட்சியுள்ள எம்.எல்.ஏ. பாருங்க.

ஒரு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வ வூடு புகுந்து கடத்திட்டுப் போய் தாக்குன சம்பவத்துக்கு, மத்த நேரத்துல சட்டமன்றத்துல ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவருவாய்ங்க. இவரு விஷயத்துல சட்டமன்றம் நடந்துட்டு வேற இருக்கு. ஆனா ஒத்திவைப்புத் தீர்மானம் எதுவுமே கொண்டு வரல. இதே நேரம், ஒரு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வுக்கு இது மாதிரி நடந்திருந்துருச்சுன்னா... சட்டசபையையே செயல் பட விட்டிருக்கமாட் டாய்ங்க. இவரு விஷயத் துல ஆளும்கட்சிக் காரய்ங்களே சேம்சைடு கோல் போட்டதுனால எல்லாருமே, எல்லாத்தையும் மூடிக்கிட்டாய்ங்க.

அண்ணன் சொக்கலிங்கம் ஒரு கிரிமினல் லாயரும் கூட. அவரே ஒரு டீம் போட்டு இதை புலனாய்வு செய்யச் சொல்லியிருக்காரு.

தன் கட்சியிலேயே இருந்த எம்.எல்.ஏ. ஒருத்தர குண்டக்க மண்டக்கன்னு அடிய போட்டு, கை, கால முறிச்சி படுக்கப் போட்டதும் இல்லாம... இவரு மேல பழியையும் எப்படிப் போட்டாய்ங்கன்னா...?

தூத்துக்குடி எம்.எல்.ஏ. ரமேஷ் அண்ணன அடிச்சு, அதுக்கு ஒரு கதை -வசனம் -டைரக்ஷன்னா... மதுராந்தகம் சொக்கலிங்கம் எம்.எல்.ஏ. சாருக்கு என்ன கதை -வசனம்னா...?

ff

"உஷாங்கிற பெண்ணோட இவருக்கு கள்ளத்தொடர்பு இருந்ததாவும், அது தெரிஞ்சு அவரு மனைவி கோபமாகி தன்னோட அண்ணன் ராஜனோட சேர்ந்து சொந்த புருஷனையே தீர்த்துக்கட்ட போட்ட திட்டம்தான் இதுன்னும், மைத்துனர் ராஜன் தலைமறைவாயிட்டாரு'ன் னும் ஒரு புரூடாவ... பத்திரிகைகளுக்கு "ஜெ.' போலீஸ் அவுத்து வுட்டாய்ங்க.

இதுலயும் கொடுமை என்னன்னா... ஆஸ்பத்திரியில நம்ம ரிப்போர்ட்டர் இருந்தப்ப, போலீஸ் விசாரிக்க வந்திருக்கு. எல்லாரையும் வெளியில நிக்கச் சொல்லியிருக்காய்ங்க. அப்ப வெளிய நின்னதுல ஒரு ஆளு, மேப்படி ராஜன்... சொக்கலிங்கத்தோட மைத்துனர்.

ராஜன் நம்ம நிருபர் கதிரைட்ட, "ஆள்வச்சு அடிச்சுட்டு தலைமறைவாகியிருக்கும் எம்.எல்.ஏ.வின் மைத்துனர் ராஜன்'' அப்படின்னு போலீஸ் சொல்ற ஆள் நான்தான். அடிபட்டதுல இருந்து அவரு கூடவேதான் இருக்கேன். தங்கச்சியோட தாலி பாக்கியத்த காப்பாத்தத் தான் எந்த அண்ணனும் நினைப்பான். ஆனா, போலீஸ்ல நானே அடிச்ச தாவும், தலைமறைவாயிட்ட தாவும் சொல்றாங்க. இந்த வழக்கு ஏதோ ஒரு திசைய நோக்கி போய்க்கிட்டிருக்கு. அது அந்த ஆண்டவ னுக்குத்தான் வெளிச்சம்''னு சொல்லி பெருமூச்சுவிட்டி ருக்காரு.

இதுக்கிடையில போலீஸ் உயரதிகாரி, அடிபட்ட எம்.எல்.ஏ. சொக்கலிங்கத்த மறுபடியும் பார்க்க வந்தாரு. வந்தவரு வெளியபோனதும், நம்ம நிருபர் கதிரை எம்.எல்.ஏ.ட்ட ஏதோ கேட்க வாயெடுத்திருக்கார். உடனே, சொக்கலிங்கம் எம்.எல்.ஏ., "சார்... இத்தோட முடிச்சுக்கங்க. வேற எதுவும் கேக்காதீங்க. இனிமே பத்திரிகை யாருக்கும் பேட்டி, கீட்டி குடுக்கக்கூடாதுன்னு போயஸ் கார்டன்ல இருந்து இப்பதான் சொல்லிட்டுப் போறாங்க... ஆள விட்ருங்க''ன்னு சொல்லி கையெடுத்து பெரிய கும்பிடா கும்பிட்டிருக்காரு.

இத என்னன்னு சொல்றது?

மக்களால தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. பட்டபாடப் பாத்தீங்களா... மக்களே! அநியாயமா அடிச்சும்புட்டு... வாயையும் மத்ததையும் பொத்திக்கிட்டு இருக்க கட்டளை போட்டுட்டுப் போறதுதான் ஜெயலலிதா ஸ்...ஸ்டைல்...!

(புழுதி பறக்கும்)