விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரபாண்டி, தண்டரை, அருணாபுரம், ஒட்டம்பட்டு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், மணம்பூண்டியிலுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மிகப்பெரிய கண்டன போராட்டம் நடத்தினர். 

Advertisment

அவர்களது கோரிக்கைகள் என்ன? தங்கள் கிராமங்களில் சாலை, குடிநீர், பள்ளிக்கு மதில்சுவர்,  கழிப்பிட வளாகம், சுடுகாடு ஆக்கிரமிப்பு, சாலை அகலப்படுத்தல், 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை, இப்படி பல்வேறு கோரிக்கைகள். இதேபோன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றியத்திலுள்ள கொரட்டூர் கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்முருகனிடம் கொரட்டூர் கிராம இளைஞர்கள் மனு அளித்தனர். தமிழகம் முழுவதும் இத்தகைய கோரிக்கைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிடாத நாட்கள் இல்லை.

Advertisment

village1

சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் கிராமங்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படவில்லையா? எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் கிராம வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்கிறது. அதேபோல் தி.மு.க. அரசு 2025 - 2026-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஊரக உள்ளாட்சித் துறை வளர்ச்சி செலவினங்களுக்காக ரூ.29,465 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது அரசு. இப்படி ஒதுக்கீடு செய்யப்படும் நிதி முறையாகச் செலவிடப்படுகிறதா? திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறதா? என்ற கேள்வி எழுகிறது.

போராட்டத்தில் கலந்துகொண்ட வீரபாண்டி முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவி உமாமகேஸ்வரியிடம் கேட்   டோம்.

Advertisment

"கிராமங்களின் அடிப்படைத் தேவைகளை ஓரளவு நிறைவேற்றிவரு    கிறது அரசு. ஆனால் மக்கள் கிராமசபை கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கருத்துக் களை பெரும்பான்மையான ஊராட்சி களில் அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக்கொள்வதில்லை. கிராமசபை         யில் நிறைவேற்றப்படும் தீர்மானத்         தின்படி பணிகளைத் தேர்வுசெய்து நிறைவேற்றுவதில்லை. எங்கள் வீரபாண்டி கிராமத்தில் தெருக்களில் சாக்கடை கால்வாய் முறையாகக் கட்டப்படவில்லை. அப்படி கட்டப்பட்ட கால்வாயிலும் கழிவுநீர் தேங்கிநிற்கிறது. கிராமத்தைவிட்டு கழிவுநீரை வெளியே கொண்டுசெல்வதற்கு வழிசெய்யவில்லை. கடந்த காலங்களில் தெருக்களில் போடப்பட்ட சிமெண்ட் சாலைகள் சிதிலமடைந்து நடக்க லாயக்கற்ற நிலையில் கிடக்கின்றன. அவைகளைச் சீர்படுத்துவதில்லை. கிராம இணைப்புச் சாலைகள் போடப்படுகின்றன. 

ஆனால் அவை தரமாக இல்லை. ஒப்பந்தக்காரர்களிடம் கேட்டால், அதிகாரி களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அதிகளவில் கமிஷன் கொடுப்பதால் தரமான சாலைகள் அமைக்கமுடியவில்லை என்று வெளிப்படையாகவே கூறுகிறார்கள். இதனால் கிராமப்புறங்களில் நிறைவேற்றப்படும் அடிப்படைத் தேவை, பணிகள் தரமில்லாத காரணத்தினால் சில ஆண்டு களிலேயே சிதைந்துபோகின்றன.

அடுக்கம்- தண்டரை கிராமங் களுக்கு இடையே இணைப்புச் சாலை போடப்பட்டது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வனத்துறைக்குச் சொந்தமான இடம் உள்ளது. அதில் சாலை போட வனத்துறையிடம் அனுமதி வாங்கவேண்டும். இரண்டு ஆண்டுகளாக அனுமதி வாங்க முடியாததால் சாலைப் பணிகள் கிடப்பில் உள்ளது. எங்கள் பகுதி கிராமத்திற்கு தென்பெண்ணை ஆற்றிலிருந்து கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வருகிறது. ஆனால் ஆங்காங்கே உடைப்பு காரணமாக முறையாக தண்ணீர் தினசரி வழங்குவதில்லை. நூறுநாள் வேலை திட்டத்தில் சில இடங்களில் 6 அல்லது 12 நாட்கள் மட்டுமே வேலை வழங்குகிறார்கள். இதனால் கிராம மக்களின் பொருளாதார வளர்ச்சி தடைபடுகிறது. இது யார் தவறு?''’என்று கேள்வியெழுப்புகிறார்.

போராட்டத்தில் கலந்துகொண்ட கண்டாச்சிபுரம் சி.பி.எம். ஒன்றியச் செயலாளர் கணபதி, “"கிராமங்களின் அடிப்படைத் தேவைகளை இன்னும் நிறைவேற்றமுடியாமல் இருப்பதற்கு காரணம் அதிகாரிகளே. அவர்கள் கிராம மக்களிடம், கிராமத்தின் அடிப்படைத் தேவைகள் என்னென்ன என்று கேட்டு அவற்றை நிறைவேற்றவேண்டும். மாறாக, அறையில் அமர்ந்துகொண்டே கிராமங்களின் திட்டப் பணிகளை முடிவுசெய்கிறார்கள். இந்த போக்கு மாறவேண்டும். கிராம ஊராட்சிகளுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட வேண்டும். ஒதுக்கப்படும் நிதியையும் அத்தியாவசியப் பணிகளை நிறைவேற்றாமல் வேறு பணிகளுக்கு மடைமாற்றம் செய்கிறார்கள்''’என காரணங்களை அடுக்கினார்.

நமக்குத் தெரிந்த ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவரிடம் இதுகுறித்து கேட்டோம். பெயர், பதவி குறிப்பிட வேண்டாம் என்றவர், "கிராமங்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக் கோரி எங்களிடம் வரும் மனுக்களில் பெரும்பாலானவை கிராமங்களில் புதிதாக வீட்டு மனைகள் வாங்கி வீடு கட்டி குடியேறியவர்கள் தருபவை. அப்படிப்பட்ட குடியிருப்புப் பகுதிகளை ஊராட்சியில் முறைப்படி இணைத்திருக்கவேண்டும். ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர்கள் அதைச் செய்திருக்கமாட்டார்கள். ஊராட்சிகளுடன் இணைத்திருந் தால்தான் அவர்களுக்கான சாலை, தெருவிளக்கு, சாக்கடை போன்ற அடிப்படைத் தேவைகளை நிறை வேற்றித் தரமுடியும். இது ஒருபக்கம், அடுத்து அரசு புறம்போக்கு. ஏரி, குளம் போன்ற பகுதிகளை ஆக்கிரமித்து வீடுகட்டிக் குடியிருப்பவர்களுக்கு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தர முடியவில்லை. 

நீதிமன்றம், நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டுள்ளது. மற்றபடி தமிழக கிராமங்களின் அடிப்படைத் தேவைகள் 70% முதல் 90% நிறைவேற்றப்பட்டுள்ளன. அதிலும் மற்ற மாநிலங்களைவிட தமிழக அரசு ஊரக வளர்ச்சித் துறைமூலம் மிகச்சிறப்பான முறையில் கிராமங்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றிவருகிறது''’என்கிறார்.