"தமிழகத்திற்கு 31 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்' என காவிரி மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. ஆனாலும், காவிரித் தண்ணீரை தமிழகத்திற்கு வழங்குவது குறித்த விவகாரத்தில் கர்நாடகத்தில் பலத்த எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.

""காவிரி விவகாரத்தில் மத்தியில் ஆளும் மோடி அரசு, கர்நாடகத்திற்கு மிகப்பெரிய துரோகத்தைச் செய்துள்ளது. மத்திய அரசு அமைத்துள்ள காவிரி மேலாண்மை ஆணையமும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் காவிரித் தண்ணீரை வறட்சியான காலகட்டத்தில் எப்படிப் பயன்படுத்துவது என்பதைத் தீர்மானிக்கும் என்பது மிகவும் அபத்தமானது. சுப்ரீம்கோர்ட்டே தீர்ப்பளித்தாலும் கர்நாடகத்தின் அணைகளையும் அதில் வரும் நீரையும் மற்ற மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க ஓர் ஆணையத்தையும் ஒழுங்காற்றுக் குழுவையும் ஓர் அரசாணை மூலம் மத்திய அரசு உருவாக்க முன்வந்தது மாபெரும் தவறு. ஆணையம் அமைக்க வேண்டுமென்கிற உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்பு மத்திய அரசு யாரைக் கேட்டது? நாடாளுமன்றத்தில் இந்த அரசாணையை விவாதப்பொருளாக்கி, இரு அவைகளிலும் வாக்கெடுப்புக்கு உட்படுத்தியிருக்க வேண்டாமா? ஒருவேளை நாடாளுமன்றத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கு கர்நாடக எம்.பி.க்கள், கட்சி வித்தியாசமில்லாமல் தெரிவிக்கும் எதிர்ப்பு தோற்றுப்போனாலும் பரவாயில்லை... ஆணையத்தை அமைக்கும் அவசர ஆணையை நாடாளுமன்றத்தில் வைத்துப் பேசாதது மத்திய அரசு செய்த மிகப்பெரிய தவறு'' என காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகத்தில் நடந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் கர்நாடகத் தலைவர்கள் கட்சி பேதமின்றி பேசியுள்ளனர்.

இந்தக் கூட்டம் முடிந்ததும் கர்நாடகம் சார்பில் காவிரி பிரச்சினைக்காக தொடர்ந்து வாதிட்டுவரும் வழக்கறிஞர் ஃபாலி நரிமனுடன் ஆலோசனை செய்தார் முதல்வர் குமாரசாமி. காவிரி மேலாண்மை வாரியம் அமைவதற்குக் காரணமான உச்சநீதிமன்றத் தீர்ப்பில் கர்நாடகத்தின் உரிமை பாதிக்கப்படுகிறது என விளக்கம் கூறி, அதற்கு தீர்வு கேட்டு ஒரு வழக்கு போடுவதற்கான காரண காரியங்களை ஆராய ஃபாலி நரிமன் தலைமையில் ஒரு சட்ட கமிட்டி அமைக்கப்படுகிறது என கர்நாடக அரசு அறிவித்தது. ஜூலை 16-ஆம் தேதி கூடும் நாடாளுமன்றத்தில் கர்நாடகா சார்பாக அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் தர்ணாவில் ஈடுபட்டு காவிரி விவகாரத்தில் கர்நாடகாவின் நலன்கள் புறக்கணிக்கப்படுகிறது என ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

"காவிரி தொடர்பாக சுப்ரீம்கோர்ட் அளித்த இறுதித் தீர்ப்பை பதினைந்து வருடங்களுக்கு மாற்றமாட்டோம்' என சுப்ரீம்கோர்ட் அறிவித்துள்ள நிலையில்... கர்நாடகா வழக்குப் போட்டால் அதை சுப்ரீம் கோர்ட் அனுமதிக்குமா? என சீனியர் வழக்கறிஞர்களைக் கேட்டோம்...

Advertisment

""இதே வாசகங்களுடன்தான் கடந்த பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. ஆனாலும் கர்நாடக சட்டமன்றத் தேர்தலின் காரணமாக நான்கு மாதங்கள் மேலாண்மை ஆணையத்தை அமைப்பதில் மத்திய அரசு தயக்கம் காட்டியது. அதற்காக சுப்ரீம்கோர்ட் வழங்கிய தீர்ப்பில் இடம்பெற்ற "ஸ்கீம்' என்பதன் அர்த்தம் என்னவென ஒரு வழக்கை மத்திய அரசு தாக்கல் செய்தது ஸ்கீம் பற்றிய விளக்கத்திற்கு அவகாசம் தந்த நிலையில், இதன் பிறகும் தீர்ப்பை நடைமுறைக்கு கொண்டுவரவில்லை என்றால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என சுப்ரீம் கோர்ட் எச்சரித்த பிறகுதான் அவசர அவசரமாகக் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு.

பிப்ரவரியில் வந்த தீர்ப்பை கர்நாடகாவின் தேர்தல் முடிவு வரும்வரை 4 மாத காலம் தாழ்த்த மத்திய அரசு விளக்கம் கேட்டு தொடர்ந்த வழக்கை அனுமதித்த அதே சுப்ரீம் கோர்ட், நரிமன் போன்ற சீனியர் வழக்கறிஞர்கள் கர்நாடகாவின் நலன்கள் பாதிக்கப்படுகிறது என வழக்குத் தொடர்ந்தால் ஏன் அனுமதிக்காது?'' என எதிர்கேள்வி கேட்கிறார்கள் சுப்ரீம்கோர்ட் வழக்கறிஞர்கள்.

அதேபோல் ஜூலை 2-ஆம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கலந்துகொண்ட கர்நாடகாவின் பிரதிநிதியான ராகேஷ் சிங், "தமிழகத்திற்கு கொடுக்கும் அளவிற்கு போதுமான தண்ணீர் கர்நாடகாவில் இல்லை' என பொத்தாம் பொதுவாக வாதிட்டார். அத்துடன் "கர்நாடகாவில் தண்ணீர் இல்லாத சூழ்நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் தருமாறு உத்தரவிட ஆணையத்திற்கு அதிகாரமில்லை' எனவும் வாதிட்டார். இந்த வாதத்தை தமிழகப் பிரதிநிதியான எஸ்.கே.பிரபாகரும், புதுவை பிரதிநிதியும் எதிர்த்தனர். உடனே, "சமீபத்தில் கர்நாடகாவில் பெய்த பருவமழையின்போது நிறைய தண்ணீர் தமிழகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது' என்றார் கர்நாடக பிரதிநிதியான ராகேஷ்.

Advertisment

இதனை ஏற்க மறுத்த ஆணையத்தின் தலைவரான மகத் ஹுசைன், ""இது சுப்ரீம் கோர்ட் உத்தரவு அடிப்படையில் காவிரி நீரை மாநிலங்கள் பகிர்ந்துகொள்ள அமைக்கப்பட்ட ஆணையம். எங்கள் வேலை தண்ணீரைப் பகிர்ந்தளிப்பதுதான்'' என்றதோடு... கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பு விவரங்களையும் கேட்டார். அந்த விவரங்களோடு ஏற்கெனவே வழங்கப்பட்ட நீரையும் கணக்கில் எடுத்துக்கொண்டு "ஜூலை மாதம் 31 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திற்கு தரவேண்டும், இந்த உத்தரவை வருகிற 5-ஆம் தேதி பெங்களூருவில் கூடும் காவிரி ஒழுங்காற்றுக் குழு நிறைவேற்றும்' என உத்தரவிட்டார்.

"5-ஆம் தேதிக்குள் இந்த உத்தரவுக்கு தடைபெறும் முயற்சியில் கர்நாடகா இறங்கியுள்ளது' என்கிறார்கள் பெங்களூரைச் சேர்ந்தவர்கள்.

தடை தாண்டி தமிழகம் வருமா காவிரி?

-தாமோதரன் பிரகாஷ்