அலோக் டெக்ஸ்டைல்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ரூ.29,500 கோடி கடனுக்குப் பதிலாக ரூ.5000 கோடி கடனை மட்டும் பெற்றுக்கொண்டு கடன் விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவந்த விவகாரம் தேசிய அளவில் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.
சரி, முதலில் அலோக் டெக்ஸ்டைல்ஸ் இன்டஸ்ட்ரீஸ் யாருடையது என பார்ப்போம். இன்னோ வேட்டிவ் டெக்ஸ் டைல்ஸ் சொல்யூஷன்ஸ் என்ற தாரக மந்திரத் துடன் கிளம்பிய இந்த நிறுவனம் அனில் அம்பானியுடையது. ரிலையன்ஸ் நிறுவனம் என்ற கோதாவில் கிளம்பிய நிறுவனம், ஐ.டி.பி.ஐ., பாங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, தேனா பாங்க் உள்ளிட்ட பதினைந்து வங்கிகளில் நிறுவனத்தின் வளர்ச்சிக் காக கடன் வாங்கியது.
கடன்தான் வளர்ந்தது, கம்பெனி வளரவில்லை. அசலும் வட்டியும் வராத நிலையில், கடன் கொடுத்த வங்கிகள் கம்பெனியை நெருக்கின. கடன் கொடுத்த வங்கிகள் இணைந்து என்.சி.எல்.டி. எனும் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தை அணுகின. என்.சி.எல்.டி. கம்பெனியை திவால் என அறிவித்து, கம்பெனியை ஏலத்தில் விட்டு தேறும் தொகையை வங்கிகளுக்கு பங்குபிரித்துக் கொடுக்க ஆலோசனை கூறியது.
கம்பெனியை ஏலத்தில் விட்டால் வாங்குவதற்கு பெரிதாய் ஆட்கள் வரவில்லை. வந்தவர்களில் பெரிய தலை அனில் அம்பானியின் சகோதரர் முகேஷ் அம்பானிதான். அவர் ஏலம் கேட்ட தொகைக்கும் கடன் தொகைக்கும் பல கிலோமீட்டர் வித்தியாசம். இதனாலேயே இரு முறை ஏலம் விடப்பட்டும் எந்த முடிவும் கிடைக்காமல் போனது. கடைசியாக ஏலம்விட்டபோது முதல்சுற்றில் 5000 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்தார். இப்படி ஏலம் விடும்போது கடன்கொடுத்த வங்கிகள், இந்தக் குறிப்பிட்ட ஏலத்தொகைக்கு சம்மதமோ மறுப்போ தெரிவிக்கலாம்.
ஐ.டி.பி.ஐ. உள்ளிட்ட பல வங்கிகள் எதிர்ப்புத் தெரிவிக்க, இந்த ஏலத் தொகைக்கு 71 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்திருந் தனர். ஏலத்தை ஏற்றுக்கொள்வதற்கு 75 சதவிகிதம் ஆதரவு இருந்தால்தான் ஏலம் முடிவாகும். இதை யடுத்து ஒரு முடிவும் எடுக்கப்படாமலே விவகாரம் முடிவுக்கு வந்தது.
பின்பு நடந்தது தான் ட்விஸ்ட். இடையில் என்ன நடந்ததோ… ஏலத்தில் எடுக்கப்படும் சொத்து தொடர்பாக, வங்கி அதிகாரிகளில் 66 சதவிகிதம் பேர் ஆதரவு இருந்தால் போதும் என்று சட்டத்தில் திடீர் திருத்தம் வந்தது. இந்த திருத்தத்தைச் சுட்டிக்காட்டி அலோக் இன்ட்ஸ்ட்ரீஸை முகேஷ் அம்பானி 5,050 கோடிக்கு வாங்கிவிட்டார்.
நேரடியாகச் சொன்னால் மக்களுக்கு 25,000 கோடி நஷ்டம்! அம்பானிகளுக்கு அமோக லாபம்!
இதையடுத்து இந்திய அரசின் இன்சால்வன்சி போர் டால், முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பிரச்சினைகளில் பா.ஜ.க. அரசு வெள்ளை அறிக்கை தரவேண்டுமென சஞ்சய் நிருபம் குற்றம்சாட்டியுள்ளார்.