"ஏனோ தானோன்னு சம்பவத்தை செஞ்சுட்டு போக முடியாது. சூதானமா திட்டம் போட்டு செய்தோம்னா யாராலும் நம்மளை கண்டுபிடிக்க முடியாது. சரின்னா சொல்லுங்க. நாம தயாராகுவோம். அத்தனை பேரும் வாட்ஸ் அப் போனுக்கு மாறுங்க. இனிமேல் தான் நாம பேசிக்கப் போகின்றோம். நான் அனுப்புற லிங்குகளை பாருங்கள். அதில் ஏதாவது சந்தேகம் என்றால் என்னிடம் கேளுங்கள். அதுவும் நேரிலோ, போனிலோ கேட்கக் கூடாது. எதுவாக இருந்தாலும் வாட்ஸ் அப் தான். நல்ல நாளாக பார்த்து அந்த சம்பவத்தை செய்யுறோம். அப்படியே செட்டில் ஆகிடுறோம்." என தாங்கள் மேற்கொள்ளவுள்ள வங்கிக் கொள்ளைக்காக கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் வடக்கு படித்துறையில் உட்கார்ந்து முதற்கட்ட ஆலோசனையை நடத்தியுள்ளது தருவைகுளம் வாஷிங்டன் தலைமையிலான ஆறு நபர்கள் கொண்ட டீம்.
"இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டபம் கிளையில் உதவி மேலாளராகப் பணியாற்றி, வங்கியில் ரூ 98 லட்சத்தை கையாடல் செய்துவிட்டாரென கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணி நீக்கம் செய்யப்பட்டவர் தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தை சேர்ந்த வாஷிங்டன். அதே வங்கியில் கணக்கு வைத்து வரவு செலவு செய்து வந்த பட்டணம் காத்தான் ஆன்டனி சகாயராஜூக்கும், வாஷிங்டனுக்கும் வங்கி உறவினைத் தாண்டி நெருக்கம் இருந்துள்ளது. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த கீழக்கரை குமார், கமுதி சாயக்கார தெரு வெள்ளைச்சாமி ஆகியோர் ஆன்டனி சகாயராஜூடன் பண ரீதியான உறவிலும் இருந்து வந்துள்ளனர்.
ஆன்டனி சகாய ராஜூக்கும் வெள்ளைச்சாமிக்குமான கொடுக்கல் வாங்கலில், " கொரோனாவால் வியாபாரம் படுத்திடிச்சி. டயம் கொடு. பணத்தைத் திருப்பித் தர்றேன். இல்லைன்னா, ஏதாவது பேங்கை காண்பி. கொள்ளை யடிச்சுக் கொடுத்துடுறேன்." என வெள்ளைச்சாமி கோபத்துடன் பேசியதின் மைய நூலான வங்கிக் கொள்ளை என்பதை சீரியஸாக எடுத்துக் கொண்ட ஆன்டனி சகாயராஜ், "இதற்கான ஆள் நம்மகிட்ட இருக்கின்றான். பேங்கின் மேப்பையே மண்டைக் குள் வச்சிருக்கான். இப்பத்தான் சஸ்பெண்ட் ஆகியிருக்கான். அவனைக் கூட்டு சேர்த்துக் கிட்டோம் என்றால் ஈஸியாக கொள்ளையடிக்கலாம்." என கனவுத் திட்டத்தை விவரிக்க, அனைவருக்கும் பொது இடமாக கோவில்பட்டியை தேர்ந்தெடுத்தனர்.
இருவரும் வாஷிங்டனுடன் புதிய கூட்டாளிகளாக, உளவு பார்ப்பதற்காக கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் வெள்ளைப் பாண்டி, ராமநாதபுரம் பாலமுருகன் இணைய, வங்கிக் கொள்ளைக்காக "வாஷிங்டன் லோன்' தலைப்பிடப்பட்ட வாட்ஸ் அப் குழு பிப்ரவரி மாத இறுதியில் துவக்கப்பட்டுள்ளது." என்கின்றனர் சைபர் கிரைம் போலீஸார்.
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய குற்றப் பிரிவுப் போலீஸாரோ, "வங்கியில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட வாஷிங்டனின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை கண்காணிக்க சைபர் கிரைம் போலீஸாரிடம் கோரிக்கையை வைத்திருந்தது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி. அதன்படி சைபர் கிரைம் போலீஸார் அவனைக் கண்காணிக்கையில் வங்கி கொள்ளையான "வாஷிங்டன் லோன்' பற்றிய தகவல் தெரிந்ததும் விசாரணையை முடுக்கினோம்.
உலகப்பிரசித்தி பெற்ற வங்கிக்கொள்ளை பற்றிய தமிழ், ஆங்கில சினிமாக்கள் மற்றும் கொள்ளையடித்து போலீஸா ரிடம் சிக்கிக் கொண்ட செய்திகள் உள்ளிட்டவற்றை யூடியுப்பில் தெரிந்துகொண்டு அதனை செயல்படுத்தும் முயற்சியில் இருந்தனர்.
இதன் ஒரு கட்டமாக, வெள்ளைப்பாண்டிக்கும், பாலமுருகனுக்கும் சேர்த்து ஒரு லட்ச ரூபாயை செலவிற்காக கொடுத்து மாவட்ட எல்லையில், மக்கள் நடமாட்டம் இல்லாத வங்கிகள் எது எது..? எந்த நேரத்தில் செக்யூரிட்டி வருகின்றார்? காவல் நிலையம் எங்கி ருக்கின்றது..? காவல் நிலை யத்திற்கு தகவல் தெரிந்தால் எவ்வளவு நேரத்தில் போலீஸார் அங்கு வரமுடியும்..? தப்பிச் செல்வதற்காக மாற்று வழிகள் என்னென்ன..? என்பது போல் பல கேள்விகளுடன் வங்கிகளை நோட்டமிட தயார் செய்து அனுப்பியுள்ளது அந்த குழு. அத்துடன் சுவரில் துளை போட டிரில்லிங் மிஷின், கயிறு இவற்றையும் வாங்கியுள்ளது.
இதன்படி விருதுநகர் மாவட்டத்திலுள்ள நல்லி எனுமிடத்திலுள்ள பாங்க் ஆப் பரோடா வங்கியையும், கோவில்பட்டியிலுள்ள ஸ்டேட் பேங்க் வங்கியையும் கொள்ளைக்கான இலக்காக நிர்ணயித்துள்ளது இக்கும்பல். கொள்ளை நடந்திருந்தால் காவல்துறையின் மானம் காற்றில் பறந்திருக்கும். நல்லவேளை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயகுமார் எடுத்த தொடர் நடவடிக்கையில் இது தொடர்பாக அனைத்து ஆதாரங் களையும் சேகரித்து கொள்ளைக்கு திட்டம் தீட்டிய ஐவரையும் அடுத்தடுத்து கைது செய்துள்ளோம். இதில் ஒருவன் மட்டும் மிஸ்ஸிங்" என்கின்றனர் அவர்கள்.