இந்தியா 1947ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றபோது, பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்றது. ஆனால் பாகிஸ்தான் ஒரே நாடாக இல்லாமல், கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான் என இரு பிரிவுகளாக இருந்தது. கிழக்கு பாகிஸ்தானுக்கு மேற்கு பாகிஸ்தான் போதிய நிதியுதவி அளிக்கவில்லை யென்றும், உட்கட்டமைப்பை வலுப் படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை யென்றும், முக்கியமாக, வங்காள மொழியை ஆட்சி மொழியாக்கவில்லை யென்றும், கிழக்கு பாகிஸ்தான் மக்கள் தனி நாடாக விரும்பியதால், எழுந்த மக்கள் போராட்டத்துக்கு இந்தியா வும் ஆதரவு தெரிவிக்க, 1971ஆம் ஆண்டில், வங்க தேசம் தனி நாடாக சுதந்திரம் பெற்றது. இந்த வங்கதேச சுதந்திரப்போரில் பல லட்சக்கணக்கான மக்கள் உயிர்த்தியாகம் செய்தனர்.
வங்க தேசத்தில் புதிய அரசு ஆட்சிக்கு வந்ததும், 1972ஆம் ஆண்டில், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசாங்க வேலை வாய்ப்புகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க முடிவெடுக்கப்பட்டது. அதே போல், பின்தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு 40 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. மேலும், பெண்களுக்கென 10 சதவீதம், ஆக மொத்தம் 80% அளவுக்கு இட ஒதுக்கீடாகவும், 20% மட்டும் பொதுப் பிரிவினருக்குமாக வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.
1976ஆம் ஆண்டில் பின்தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கான இட ஒதுக்கீடு 20 சதவீதமாகக் குறைக்கப்பட்டு, 1985-ல் அது 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. அதேவேளை, சிறுபான்மை யினருக்கு 5% இட ஒதுக்கீடு வழங்கப்பட, பொதுப்பிரிவினருக்கான வாய்ப்பு 45 சதவீதமாக உயர்ந்தது. இந்நிலையில், இட ஒதுக்கீட்டுக்கு எதிரான குரல்கள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வந்தன. எனவே, 2018ஆம் ஆண்டில், ஒட்டுமொத்தமான இட ஒதுக்கீட்டையும் வங்கதேச அரசு ரத்து செய்தது. இந்த முடிவை எதிர்த்து அதுநாள்வரை இட ஒதுக்கீட்டைப் பெற்றுவந்தவர்கள் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினார்கள். வழக்கு விசாரணையின் முடிவில், ஏற்கெனவே இருந்த இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டுமென கடந்த ஜூன் 5ஆம் தேதி தீர்ப்புவர, வங்க தேசம் பற்றியெரியத் தொடங் கியது.
ஏற்கெனவே, அவாமி லீக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ஷேக் ஹசீனா, எதிர்க்கட்சிகளை முற்றிலுமாக ஒடுக்கியதால், ஆட்சியாளர்கள் மீது வெறுப்பு மனநிலையில் மக்கள் இருந்தனர். இந்த இட ஒதுக்கீடு விவகாரமும் சேர, அரசுக்கு எதிரான போராட்டம் நாடெங்கும் பற்றிக்கொண்டது.
இந்த இட ஒதுக்கீட்டை அவாமி லீக் கட்சியினர் தான் முறைகேடாகப் பயன் படுத்துவார்கள் எனக்கூறி, தனியார் பல்கலைக் கழக மாணவர்கள் ஆயிரக்கணக்கில் போராட்டத்தில் குதிக்க, நாடு முழுக்க மாணவர்களின் போராட்டம் வலுத்தது. இதற்கு எதிராக, ஆளும் அவாமி லீக் கட்சியினரும், காவல்துறையினரும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை ஒடுக்க முற்பட்டனர். இதில் இருதரப்புக்குமிடையே கல்வீச்சு, தீவைப்பு, சூறையாடல், துப்பாக்கிச்சூடு என வன்முறை கொழுந்துவிட்டு எரிந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் களைப் பார்த்து, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, "போராட்டக்காரர்கள் பொதுச்சொத்துக்களைச் சேதப்படுத்தினாலோ, காவல்துறையினரைத் தாக்கினாலோ பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். சட்டம் தன் கடமையை செய்யும்!" எனக் கடும் மிரட்டலாக அறிவித்தது போராட் டக்காரர்களின் கோபத்தை மேலும் தூண்டுவதாக இருந்தது. போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக ஜூலை 19ஆம் தேதி முதல் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவை வங்கதேச அரசு அறிவித்தது. அதோடு இராணுவத்தை களமிறக்கி, போராட்டக்காரர் களைக் கண்டதும் சுடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போராட்டம் பரவுவதைத் தடுக்க நாடு முழுக்க இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன.
பள்ளி, கல்லூரிகள் காலவரையறையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுவரை அங்கு நடந்த வன்முறை மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 140க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
வங்கதேசத்தில் உயர்கல்வி பயில்வதற்காக சுமார் 8,500 இந்திய மாணவ, மாணவிகள் அங்கு சென்றுள்ளனர். அங்கே வன்முறை வெடித்ததையடுத்து, மாணவர்களை பத்திரமாக மீட்டுவரும் நடவடிக்கையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. போராட்டம் காரணமாக இந்திய -வங்கதேச எல்லையில் இந்திய மாணவர்களை கல்லூரி நிர்வாகத்தினர் இறக்கிவிட்டனர். அவர்களில் ஊர் திரும்ப முடியாமல் தவித்த தமிழக மாணவர்களைப் பாதுகாப்பாக அழைத்துவர தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியபடி, வங்க தேசத்திலிருந்து தமிழ்நாடு திரும்பும் மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துவரும் நடவடிக்கையில் அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஈடுபட்டுள்ளார். அதன்படி, விமானங்களின் மூலமாக தமிழக மாணவர்கள் சென்னைக்கு அழைத்துவரப்பட்டு, அங்கிருந்து அவரவர் இல்லங்களுக்கு பாது காப்பாக அனுப்பிவைக்கப்பட்டு வருகிறார்கள். வங்க தேசத்திலிருந்து சென்னைக்கு வந்துசேர்ந்த மாணவர்கள் கூறும்போது, "வங்கதேச எல்லையிலிருந்து கொல்கத்தா சென்று, அங்கிருந்து சென்னைக்கு வர வேண்டும். விமானக் கட்டணத்துக்கும் வழியின்றி தவித்த நிலையில், தமிழ்நாடு அரசின் உதவியால் எந்த பிரச்சனையும் இல்லாமல் தமிழகம் வந்து சேர்ந்தோம்'' என்று நெகிழ்ச்சியுடன் கூறினர்.
இந்நிலையில்... இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்ததையடுத்து, வங்கதேச மாணவர்களின் போராட்டம் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது!