பாகூர் ஏரிக்கரையோரம் இருளன்சந்தை யைச் சேர்ந்த சுவேதன் (17) என்ற வாலிபரை 10.05.2017 அன்று கொலை செய்த கும்பல், கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி காவல்நிலையம் முன்பாக துண்டிக்கப்பட்ட தலையை வாசலில் உருட்டிவிட்டு தப்பிச்சென்றது. புதுச்சேரியின் இந்த அதிர்ச்சியான சம்பவத்தின் காட்சி சமூகவலைத் தளங்களில் வேகமாகப் பரவி அதிர்வலையை ஏற்படுத்தியது.

அதற்கும் ஒரு மாதம் முன்பாக 03-04-2017-ல் கடலூர் எல்லையான ரெட்டிச்சாவடியில் புதுச் சேரி அமைச்சர் கந்தசாமியின் உறவினரான காங்கிரஸ் பிரமுகர் பிள்ளையார்குப்பம் வீரப்பன் படுகொலை செய்யப்பட்டார். 17-04-2017-ல் ஊசுடு என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் மாயவன், 19-04-2017-ல் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் வேலழகன் ஆகியோர் நாட்டு வெடி குண்டு வீசி கொல்லப்பட்டனர். 07-05-2017 அன்று வில்லியனூர் தொகுதி பா.ஜ.க இளைஞரணி தலைவர் குருமாம்பேட்டை ரவுடி ஜெகன் (எ) ஜெகதீஷ் (33), தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது பின்தொடர்ந்த கூலிப்படை அவரை ஓடஓட விரட்டிக் கொன்றது. கொல்லப்பட்ட ஜெகனும், கொலை செய்த இளவரசனும் கூட்டாளிகள். யார் பெரிய ரவுடி எனும் போட்டி பகையாகி ஒருவரை யொருவர் போட்டுத்தள்ள சமயம் பார்த்து வந்த நிலையில் இளவரசன் முந்திக்கொண்டார்.

murder

Advertisment

அடுத்தடுத்த ஓரிரு மாதங்களில் 10-க்கும் மேற்பட்ட கொலைகள் தொடர்ந்து நடந்தன.

இந்தத் தொடர்கொலைகள் பற்றி நக்கீரன் 2017 மே 14-16 இதழில் "புதுச்சேரி இளசுகளின் கொலை விளையாட்டு' எனும் தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

அதற்குப்பிறகு நான்கைந்து மாதங்கள் கொலை கள் ஏதுமின்றி புதுச்சேரியில் அமைதி நிலவிய சூழலில், 2017 தீபாவளி அன்று வைத்த வேட்டு மக்களை நிலைகுலைய செய்தது. 19-10-2017 அன்று மேட்டுப்பாளையத்தில் ரவுடிகளுக்கு இடையே நடந்த மோதலில் ஜெரால்டு, சதீஷ், ஞானசேகர் ஆகிய 3 ரவுடிகள் வெட்டியும், வெடிகுண்டு வீசியும் கொல்லப்பட்டனர். ரவுடி பொறையூர் சுரேஷ் கொலையில் தொடர்புடைய இவர்கள், பழிக்குப்பழி வாங்கும் நோக்கில் கொல்லப்பட்டதாக கூறப் பட்டது.

Advertisment

22-10-2017-ஆம் தேதி புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியிடம் ரவுடியிசம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஒரு மாதம் கெடு வைத்து "2017 நவம்பர் 18-க்குள் சட்டம் -ஒழுங்கு விவகாரத்தில் அதிரடியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்றார்.

ஆனால் ஓராண்டாகப் போகிறது எந்த அதிரடி நடவடிக்கையும் இல்லை. கொலைகளும் குறைந்தபாடில்லை. அவர் சொல்லிய அடுத்தநாள் 23-10-2017 முதலியார்பேட்டை -உடையார்தோட்டத் தைச் சேர்ந்தவர் ரவுடி செல்வம் (32). இவர் தன் வீட்டின் முன்பு நின்றுகொண்டிருந்தபோது, மர்ம கும்பல் அரிவாளால் தலையில் வெட்டி யதில் உயிரிழந்தார். இந்த செல்வம் தமிழ் நாட்டின் சீர்காழி பா.ம.க. பிரமுகர் மூர்த்தி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி.

murder

முதலமைச்சர் நாராயணசாமி கெடு விதித்த நவம்பர் 18-க்கு மூன்றுநாள் முன்பாகவே 15-11-2017 அன்று புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டம், பொம்மையார்பாளையம் சுனாமி குடியிருப்பில் வெடிகுண்டு தயாரித்தபோது, புதுவை வாழைக்குளத்தை சேர்ந்த எலி (எ) எலிகார்த்தி (29) என்கிற ரவுடியின் கைகள் துண்டானது.

அதேபோல் நாராயணசாமி கெடு குறித்த நவம்பர் 18-க்கு மூன்றாவது நாள் 20-11-2017 அன்று புதுச்சேரி நகரின் மையப்பகுதியான அண்ணா சாலையில் போத்தீஸ் அருகில் சிவகங்கையை சேர்ந்த கொளஞ்சியப்பன் (40) எனும் ரவுடி வந்த டூவீலரின் மீது காரை மோதி, வெட்டிவிட்டு தப்பி ஓடினர். வழியில் பல விபத்துகளை ஏற்படுத்திச் சென்ற கொலையாளிகளின் வாகனத்தை சினிமா பாணியில் துரத்திய போலீஸார் கடலூரில் மடக்கி பிடித்தனர். இந்த கொளஞ்சியப்பன் சிவகங்கை பகுதி கொலை வழக்கில் தொடர்புள்ளவர் என்பதால் புதுச்சேரியில் பதுங்கியிருந்துள்ளார். அடுத்து 03-12-2017 அன்று புதுச்சேரி -வானரப் பேட்டையை சேர்ந்த குணவதியையும், அவரின் 6 மாத குழந்தையையும் கொன்று குணவதியின் உடலை திண்டிவனம் பகுதியிலும், குழந்தையின் உடலை கிளியனூர் பகுதியிலும் புதரில் வீசினான் குணவதியின் காதலன்.

murder2018 பிப்ரவரி 7-ல் புதுச்சேரி அரும்பார்த்த புரத்தில் பிரபுதாஸ் என்பவரின் மனைவி தீபா (35)வின் வீட்டில், எதிர்வீட்டு வாலிபர் கிரிதரன் என்பவர் திருடுவதை தடுத்தபோது தீபா கொல்லப் பட்டார். அதேமாதம் 2-ஆம் தேதி தென்றல் நகரைச் சேர்ந்த ராஜி என்பவரின் மனைவி மேரி எனும் 60 வயது மூதாட்டியை பூமியான்பேட்டை பகுதியை சார்ந்த பிரகாஷ் என்ற வாலிபர் குடிபோதையில் கத்தியால் குத்திக் கொன்று விட்டு கற்பழித்தார்.

13-02-2018-ல் வில்லிய னூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த மாட்டுவண்டி தொழி லாளி ஏழுமலையை (23) உறங்கிக்கொண்டிருந்தபோது மர்மகும்பல் நாட்டு வெடிகுண்டு வீசியும், சரமாரியாக வெட்டியும் படுகொலை செய்தது.

24-03-2018 அன்று காந்திநகர் பகுதியில் பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பு முன்விரோதம் காரணமாக ஜாக்கி என்கிற சரவணன் (25) என் பவரை வெட்டிக் கொலைசெய்த கொலையாளிகள் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனர்.

06-05-2018 அன்று முத்தியால்பேட்டை குருசிக்குப்பம் பாண்டியன் (42) என்ற மீன் வியாபாரி பெரிய மார்க்கெட் செல்லும்போது செட்டித்தெரு சந்திப்பில் வந்த கொலைக்கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலைசெய்தது.

14-07-2018 அன்று புதுச்சேரி உத்திரவாகினி பேட்டையைச் சேர்ந்த இளவரசன் எனும் புதுச் சேரி பல்கலைக்கழக பட்டதாரியை சுல்தான்பேட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது 4 பேர் வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொன்றனர்.

21-07-2018 அன்று புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டம் குயிலாப்பாளையம் ஹோட்டல் உரிமையாளரும், ரியல் எஸ்டேட் முகவருமான ரிலையன்ஸ் பாபு (எ) கோதண்டபாணி (35) வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் அவரை வழிமறித்து அவர்மீது பெட்ரோல் குண்டு வீசி, அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

murderஇந்தக் கொலைகளின் தொடர்ச்சியாக கடந்த 30-07-2018 அன்று ஆளும் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் காலாப்பட்டு ஜோசப் (எ) ரவி (44) மதியம் தனது இரண்டு சக்கர வாகனத்தில் காலாப்பட்டிலிருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தபோது, தமிழக பகுதியான பெரிய முதலியார் சாவடி பொம்மையார்பாளையம் அருகே ஹெல்மெட் அணிந்தபடி பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் தலையின் பின்பகுதியில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி னர். வெட்டுப்பட்டு கீழேவிழுந்த ஜோசப்பை அங்கிருந்தவர்கள் புதுச்சேரி அரசு பொதுமருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். புதுச்சேரி முதல்வர் நாராயண சாமியும் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்தார். ஆனால் சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி ஜோசப் உயிரிழந்தார்.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரான ஜோசப் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதுடன், காலாப்பட்டு சாசன் மருந்து தொழிற்சாலை யில் காண்ட்ராக்ட் வேலைகளும் செய்துவந்தார்.

சாசன் தொழிற்சாலையில் வேலை செய்த பார்த்திபன், என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் விஸ்வ நாதன், செல்வகுமார் போன்ற ஒவ்வொருவருக் கும் ஜோசப் மீது கோபம் இருந்திருக்கிறது. போலீ சாரும் ஜோசப்பை எச்சரித்துள்ளனர். எதிரிகள் கூலிப்படைக்கு 50 லட்சம் கொடுத்து கொலை செய்ததாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

சந்திரசேகர், பார்த்திபன், செல்வகுமார், ஆனந்த், குமரேசன், மோகன் ஆகிய ஆறு பேரையும் போலீஸ் கைது செய்துள்ளது. முகுந்தராஜ், விஸ்வநாதன் உள்ளிட்ட பலரை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படி குடும்ப விவகாரம், தனிநபர் விரோதம், தொழில் போட்டி, ரவுடிகளுக்குள்ளான பிரச்சினை, அரசியல் முன்பகை, பழிக் குப்பழி என பல வகையான கொலைகள் தொடர்ச்சியாக நடந்து வருவது புதுச்சேரி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மக்கள் உரிமை கூட்டமைப்பு தலைவர் சுகுமாறன் நம்மிடம், ""புதுவையில் தொடர்ந்து அரசியல் கொலைகளும், ரவுடிகளுக்குள் பழிவாங்கும் கொலைகளும் நடந்து வரு கின்றன. ஓர் ஆண்டுக்கு முன்பு கொல்லப்பட்ட என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் வேலழகன் கொலையில் முக்கிய குற்றவாளியை தப்பவிட்ட தெய்வசிகாமணி என்ற எஸ்.பி. பின்னர் சஸ்பெண்ட் செய்யப் பட்டார். இதுவே ரவுடிகளை ஒடுக்குவதில், குற்றங்களை தடுப்பதில் காவல்துறையின் செயல்பாட்டுக்கு எடுத்துக்காட்டு. ரவுடிகளுக்கு அரசியல் பின்புலம் உள்ளது. பல அரசியல்வாதிகள் ரவுடிகளை தங்களுக்கு பாதுகாப்பாக வைத்துள்ளனர். காவல்துறை மற்றும் சில அரசியல்வாதிகள் ஆதரவோடு வலம்வரும் ரவுடிகளின் அட்டூழியங்களால் மக்களின் அன்றாட வாழ்வு நிம்மதியற்று இருக்கிறது'' என்றார்.

மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பஷீர்அகமது கூறுகையில், ""காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்ற இந்த இரண்டு ஆண்டுகளில் 40-க்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்துள்ளன. காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க என முக்கிய கட்சிகளின் நிர்வாகிகளே கொல்லப்பட்டுள்ளனர்.

இப்படி... "காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளையே காங் கிரஸ் ஆட்சியால் காப்பாற்ற முடியவில்லை. அப்படியிருக்க சாமானிய மக்களை எப்படி காப்பாற்றுவார்கள்?' என கேள்வியெழுப்புகிறார்.

"புதுச்சேரியில் ஆளுநருக்கும், முதல்வருக்குமான அதிகார போட்டியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது' என்கின்றனர் புதுச்சேரி மக்கள்.

-சுந்தரபாண்டியன்