"அசுரத்தனமாக பெட்ரோல் விலை ஏற்றம் கண்டிருப்பது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியரசின் தோல்விக்கான மிகப்பெரிய உதாரணம். இது குஜராத்திற்கு பலநூறு கோடிகளுக்கு இழப்பை ஏற்படுத்தும்'' - 2012-ல் குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது நரேந்திர மோடி முன்வைத்த குற்றச்சாட்டு இது.
2014-ம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்ற போது சென்னையில் பெட்ரோல் விலை ரூ.75. "எரி பொருட்களின் விலையை நிலையாக நிறுத்துவோம்' என்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்குறுதிக் குப் பிறகான நான்காண்டுகளில், சென்னையில் பெட்ரோல் விலை ரூ.84-ஐ தொட்டிருக்கிறது; டீசல் விலை ரூ.77 என அதோடு போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் பெட்ரோல்/டீசல் விலை உயர்த்தப்படும் நடைமுறை வந்தபிறகு கடைசி ஒருமாதத்தில் மட்டும் ரூ.3 வரை விலை ஏறியிருக்கிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பாதியாகக் குறைந்தும், பெட்ரோல் விலை ஏறுமுகத்திலேயே இருக்கிறது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்திருக்கிறது. இன்னொருபுறம், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு இதற்குக் காரணமாக சொல்லப்படுகிறது. இதைக் கண்டித்து காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் செப்டம்பர் 10-ல் நாடு தழுவிய முழுஅடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. இதற்கு தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தன. தே.ஜ.கூ.-வில் இருந்து விலகிய தெலுங்கு தேசம் கட்சியும் ஆதரவளித்திருந்தது.
தமிழகத்தைப் பொறுத்தவரை முழுஅடைப்புப் போராட்டத்தால் மிகப்பெரிய தாக்கம் ஏற்படவில்லை. லாரிகள், வேன்கள், ஆட்டோக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக இயங்காது என முன்கூட்டியே சொல்லப்பட்டிருந்தது. பல்வேறு தொழிற்சங்கங்களும் இதற்கு ஆதரவளித்திருந்தாலும், "அரசுப்பேருந்துகள் எப்போதும்போல் இயங்கும், பள்ளிகள் நடைபெறும்' என தமிழக அரசு அறிவித்ததால், அதில் எந்தவித பாதிப்புமில்லை. பெட்ரோல்/டீசல் விலையேற்றத்தைக் கண்டித்து போராட்டம் என்றாலும், தமிழகம் முழுவதும் வழக்கம்போல் பெட்ரோல் பங்க்-கள் இயங்கின.
முழுஅடைப்புப் போராட்டம் குறித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, “""மோடி பெட்ரோல்/டீசல் விலையேற்றம்பற்றி வாயே திறக்கமாட்டார். அவர் எல்லா விஷயத்திலும் மவுனமாகவே இருப்பார். நாங்கள் முழுஅடைப்பிற்காக இன்று ஒன்றுகூடியிருக்கிறோம். பா.ஜ.க.வை அகற்ற ஒன்றாக இணைந்து செயல்படுவோம்'' என தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செப்டம்பர் 8, 9 தேதிகளில் நடைபெற்ற பா.ஜ.க. தேசிய செயற்குழுக் கூட்டத்தில், ""எதிர்க்கட்சிகளுக்கு தலைமையும் இல்லை, கொள்கையும் இல்லை. அவர்களது மெகா கூட்டணி கேலிக்கூத்தானது'' என பிரதமர் மோடி பேசியிருந்தார். அதற்கு மறுநாளே நடைபெற்றுள்ள நாடு தழுவிய முழுஅடைப்புப் போராட்டம், மோடியின் கூற்றுக்கு பதிலடியாக அமைந்திருக்கிறது.
-ச.ப.மதிவாணன்