ஆறு மாவட்ட கலெக்டர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அதிகாரிகள் பலரையும் மாற்றுவதற்கான பட்டியலை சிலவாரங்களுக்கு முன்பாக தயாரித்திருந்தார் எடப்பாடி. ஆனால், அதிலுள்ள அதிகாரிகள் சிலரை மாற்றுவதற்கு தலைமைச்செயலாளர் கிரிஜா ஒப்புக்கொள்ளாததால், பட்டியல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. மூத்த அமைச்சர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில், பட்டியலுக்கு ஓ.கே. சொல்லியிருக்கிறார் கிரிஜா.
பள்ளிக் கல்வித்துறையின் பாடத்திட்ட செயலாளராக இருந்த உதயசந்திரன், தொல்லியல் துறை ஆணையராக மாற்றப்பட்டிருப்பது அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன் பள்ளிக் கல்வித்துறை செயலாளராக உதயசந்திரன் நியமிக்கப்பட்டபோது அவருக்கு அமைச்சர் செங்கோட்டையன் ஒத்துழைப்பு தந்து, சுதந்திரம் கொடுத்தார். ஆனால், துறையின் ஊழல்களைக் கண்டறிந்து உதயசந்திரன் நடவடிக்கை எடுத்தபோது... ஆட்சியாளர்கள் டென்ஷனாகி, அவரை இடமாற்றம் செய்தனர். கோர்ட்வரை சென்ற விவகாரத்தால், பாடத்திட்ட செயலாளராக்கப்பட்டார் உதயசந்திரன். பள்ளிக் கல்வித்துறையில் அவருக்கு மேலே முதன்மைச் செயலாளர் அந்தஸ்தில் பிரதீப் யாதவை நியமித்தது எடப்பாடி அரசு. இப்போது பாடத்திட்டத்தையும் பறித்துவிட்டு தொல்லியல் துறைக்கு அனுப்பிவிட்டது.
இதுகுறித்து நாம் விசாரித்தபோது, ""அகில இந்திய அளவிலான போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் வெற்றிபெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார் உதயசந்திரன். அதற்கேப் உருவாக்கப்பட்ட புதிய பாடத் திட்டத்தின் புத்தகங்களின் அடிப்படையில் நோட்ஸ் தயாரிக்க, அதுசார்ந்த பதிப்பாளர்கள் அவசரம் காட்டினர். புத்தகங்கள் வெளியாகும் முன்பே, தன் காப்பியை உயரதிகாரிகள் மூலம் பெற்று நோட்ஸ் ரெடி பண்ணிவிட்டனர். அதற்கு "25 எல்' அன்பளிப்பு தந்துள்ளனர். இதனை உதயசந்திரன் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவிருந்த நிலையில்தான், கோர்ட் உத்தரவையும் மீறி உதயசந்திரன் மாற்றப்பட்டுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையின் விதிமீறல்களுக்கு எதிராக சாட்டையைச் சுழற்றி, ஆலையை மூடும்படி உத்தரவு பிறப்பித்தவர் சுற்றுப்புறச்சூழல் மற்றும் வனத்துறையின் முதன்மைச்செயலாளரும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவருமான நஜிமுதின். ஆலையை மீண்டும் திறக்க நினைக்கும் ஸ்டெர்லைட் நிர்வாகத்தினர் பசுமைத் தீர்ப்பாயம், உச்சநீதிமன்றம் உள்ளிட்டவற்றில் சில சாதகமான தீர்ப்புகளையும் பெற்றுவருகின்றனர். அதேசமயம், ஆலையில் விதிமீறல்கள் இருக்கிறதா என ஆராய அமைக்கப்பட்டிருக்கும் குழுவின் விசாரணை அடுத்த மாதம் வரவிருக்கிறது. அப்போது, ஏற்கனவே நஜிமுதின் போட்டுள்ள உத்தரவுகள் முட்டுக்கட்டையாக இருப்பதுடன், அவர் சமர்ப்பிக்கப்போகும் ஆதாரங்களால் மிரண்டது ஸ்டெர்லைட். இந்த நிலையில், நஜிமுதின் மாற்றப்பட்டு, ஸ்டெர்லைட்டுக்கு சாதகமான மூவ் நடந்துள்ளது'' என்கிறார்கள் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பணியாளர்கள்.
வணிகவரித்துறையின் இணை கமிஷனராக இருந்த மகேஷ்வரிக்கும் கமிஷனர் வி.சோமநாதனுக்கும் ஏழாம்பொருத்தம். மதுபான ஆலை முதலாளிகள் உள்ளிட்ட தொழிலதிபர்கள் செய்யும் வரிஏய்ப்பையும் ரொட்டேசன் ஊழலையும் மகேஷ்வரி கண்டுபிடித்து, நடவடிக்கைக்கு தயாரான நிலையில், "தொழிலதிபர்கள் விஷயத்தில் தலையிடாதீர்கள்' என மகேஷ்வரிக்கு உத்தரவு போட்டார் சோமநாதன். மறுத்தார் மகேஷ்வரி. துறையின் செயலாளர் பாலச்சந்திரன்வரை பஞ்சாயத்து நடக்க... இறுதியில், தலைமைச்செயலாளர் கிரிஜாவிடம் சோமநாதன் முறையிட, முக்கியமில்லாத பதவிக்கு தூக்கியடிக்கப் பட்டிருக்கிறார் மகேஷ்வரி.
தலைமைச்செயலாளர் கிரிஜா மற்றும் முதல்வரின் செயலாளர் விஜயகுமாரின் ஆதரவில் அசைக்கமுடியாதவராக இருந்தார் பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால். சமீபத்தில் வெடித்துள்ள அண்ணா பல்கலைக்கழக மதிப்பெண் மறுமதிப்பீட்டு கோல்மால் உள்ளிட்ட ஊழல் தொடங்கி, பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதி கைது விவகாரம் உள்பட 5 பல்கலைக்கழகத்தில் நடந்திருக்கும் ஊழல்களுக்கான ஆதாரங்களைத் திரட்டியிருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. அனைத்தும் கவர்னர் பன்வாரிலாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், தலைமைச்செயலாளருக்கு ஸ்ட்ரிக்டான உத்தரவை பிறப்பித்துள்ளது ராஜ்பவன். இதனைத் தொடர்ந்தே தொழிலாளர் துறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார் பாலிவால். இவரை மாற்றப் போராடிய, துறையின் அமைச்சர் அன்பழகன் தரப்பில் மகிழ்ச்சி தெரிகிறது. தொழிலாளர் துறையின் முதன்மை செயலாளராக இருந்த மங்கத்ராம் சர்மாவை, சுனிலுக்குப் பதிலாக உயர் கல்வித்துறைக்கு கொண்டுவந்துள்ளது ராஜ்பவன்.
இப்படி ஒவ்வோர் அதிகாரியின் மாற்றலிலும் ஒரு பின்னணி இருக்கும் நிலையில், தங்களுக்கு தோதான கலெக்டர்களை கேட்டுப் பெற்றிருக்கிறார்கள் அமைச்சர்கள் பலர். அதிகாரிகள் மாற்றலில் அமைச்சர்களின் விருப்பத்துக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செவிசாய்ப்பார். ஆனால், எடப்பாடி முதல்வரானதற்குப் பிறகு இதில் சிக்கல் ஏற்பட்டது. அமைச்சர்களின் சிபாரிசுகளை ஏற்று அதிகாரிகளை மாற்ற முதல்வர் எடப்பாடி உத்தரவு போட்டாலும் அதனை ஏற்க மறுத்தே வந்தார் கிரிஜா. முதல்வரும் அவரை எதிர்த்து விவாதம் செய்யவிரும்பாத நிலையில், ஜெயலலிதா போல அதிகாரத்தை பயன்படுத்த தற்போது எடப்பாடி துணிந்ததால், ஐ.ஏ.ஸ்.அதிகாரிகளின் மாற்றத்திற்கு ஒப்புதல் தர பணிந்தார் கிரிஜா வைத்தியநாதன்!
-இரா.இளையசெல்வன்