நாடாளு மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டி லேயே புதுக் கோட்டை மாவட் டத்தில்தான் அதிக மான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளைக் காண முடிந்தது. அதே போலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கைவயல் கிராமத்திலுள்ள மேல்நிலை குடிதண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த உண்மைக் குற்றவாளிகளைக் கைதுசெய்யக் கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

ve

இதே கோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களைக் கொண்ட வேங்கைவயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்புப் பதாகை வைத்தனர். இந்தப் பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்துசென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப் பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கைவயல் கிராமங்களிலுள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப் பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. காலை முதல் அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது. தொடர்ந்து இந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரிலிருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது. இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Advertisment

திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதி என்பதால் மாலையில் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தண்ணீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்யவேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்புப் பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித் தரவேண்டும்.

vv

வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தரவேண்டும் என்று பல கோரிக்கைகளை முன்வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் "வழக்கு சம்பந்தமாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடக்கிறது. விரைவில் குற்றவாளிகளைக் கைதுசெய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்கிறோம். அதனால் வாக்குப் பதிவு செய்யுங்கள்' என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயலின் 59 வாக்காளர்களில் 53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

Advertisment

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்றபோது, வேங்கைவயல் கிராமத்திலுள்ள குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும்வரை எந்தத் தேர்தலிலும் வாக்களிக்கமாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப்பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.

வேங்கைவயல் மக்களின் 53 வாக்கு களுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகியதால், இறையூர் மக்கள் முழுமையாகத் தேர்தலைப் புறக்கணித் திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. வேங்கைவயல் கிராம தண்ணீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த உண்மை யான சமூகவிரோதிகளைக் கைதுசெய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர்.

இதேபோல புதுக்கோட்டை மாநக ராட்சியாக மாற்றப்பட்டுள்ள நிலையில் சுற்றியுள்ள கிராமங்களையும் இணைக்க எதிர்ப்புத் தெரிவித்து ஏற்கனவே பல போராட்டங்களை நடத்திய திருக்கட்டளை, தேக்காட்டூர், முள்ளூர் சுற்றியுள்ள ஊராட்சி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக பதாகை வைத்திருந்தனர். சொன்னதுபோல வாக்குப் பதிவு நாளில் பொதுமக்கள் வாக்களிக்க வரவில்லை. அதிகாரிகள் சமாதானம் செய்த பிறகும் குறைவான வாக்குகளே பதிவாகி உள்ளது.

vv

இதில் தேக்காட்டூர் ஊராட்சியிலுள்ள மேலதேமுத்துப்பட்டி வாக்குச்சாவடியில் வாக்களிக்கவேண்டிய பொதுமக்கள், எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் வாக்களிக்கமாட்டோம் என்று உறுதியாக இருந்துள்ளனர். அந்த வாக்குச்சாவடியில் 2,298 வாக்காளர்களில் 1 சதவீதம் பேர்கூட வாக்களிக்கவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

குளத்தூர் தாலுகா வத்தனாக்குறிச்சி ஊராட்சி வெவ்வயல்பட்டி கிராமத்தில் தனியார் குவாரியால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக தேர்தலைப் புறக்கணித்திருந்தனர். அங்கு சென்ற கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, பொதுமக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி, சட்டப் போராட்டம் நடத்தி குவாரிக்கு முடிவுகட்டுவோம் என்று கூறி வாக்களிக்க அழைத்துச்சென்றார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களிலும் அடிப்படை வசதிகள் கேட்டு புறக்கணிப்பு செய்வதாக அறிவித்த பகுதிகளில் குறைவான வாக்குப் பதிவுகளே நடந்துள்ளது. இதனால் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.