இந்தியாவின் தோள்பட்டையில் அமர்ந்திருப்பது போன்ற குட்டி நாடுதான் நேபாளம். மொத்த மக்கள் தொகை சுமார் 2.96 கோடியாக வுள்ள இந்நாட்டில் மாணவர்கள், இளைஞர்களென 'ஜென்' தலைமுறையினரின் போராட்டத்தினாலும், வன்முறையாலும் கடந்த சில நாட்களாக நாடெங்கும் பற்றியெரிந்துகொண்டிருக் கிறது. நேபாள பிரதமர், அதிபர், அமைச்சர்கள், முன்னாள் அதிபர் களின் வீடுகள், அலுவலகங்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய தில் நாடு முழுக்க பெரும் பதட்டத்தில் இருக்கிறது. போராட்டக் காரர்களின் வன்முறையால் இதுவரை 19 பேர் வரை கொல்லப் பட்டுள்ளனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளது. வன்முறையை கட்டுப்படுத்த முடியாமல் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நேபாளத்தில் வன்முறை வெடிக்குமளவு அப்படியென்ன பிரச்சனை?
சமூக வலைத்தளங்களின் வீச்சு உலகம் முழுக்க பரந்து விரிந்துள்ள நிலையில், நேபாளத்தில் கே.பி.சர்மா ஒலி தலைமை யிலான அரசின் ஊழல் களுக்கெதிராக 'சங்ல்ர் ஃண்க்' என்ற இளம் தலைமுறை யினரின் அமைப்பு பிரச்சாரத்தில் இறங்கி யுள்ளது. குறிப்பாக, அமைச்சர் களின் ஊழல்கள், அமைச்சர்கள், உயரதிகாரிகளின் வாரிசுகளின் ஆடம்பர வாழ்க்கையை அம்பலப் படுத்தும் செய்திகள், ஒளிப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங் களின் மூலம் வெளியிடப்பட்டன. நேபாள ஆட்சியாளர்களின் ஆடம்பர வாழ்க்கைக்கான பணம் எப்படி வந்தது? ஊழல் மூலம் வந்ததா? என்ற கேள்விகள் எழுப்பப் பட்டன. இதனால், தங்கள் ஆட்சிக் கெதிராக மக்கள் திரும்புவதை தடுப் பதற்காக, சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் நேபாள அரசு ஈடுபட்டது.
சமூக வலைத்தளங்களால் பொருளாதாரக் குற்றங்கள், பாலியல் குற்றங்கள் பெருகுவதாகக் குறிப்பிட்ட நேபாள அரசு, சமூக வலைத்தளங்களை நேபாளத்தில் இயங்கச்செய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது. இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றமும் தலையிட, அதன் உத்தரவுப்படி, நேபாளத்தின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் அனைத்து சமூக வலைத்தளங்களும் பதிவுசெய்ய வேண்டுமென்று நேபாள அரசு உத்தரவிட்டது. இதன்படி, நேபாளத்தில் இயங்கும் சமூக வலைத்தளங்கள், நேபாளத்தில் தங்கள் அலுவலகத்தை வைத்திருக்க வேண்டும். அதில் நேபாளத்தை சேர்ந்த அதிகாரி பணியாற்ற வேண்டும். அவர், சமூக வலைத்தளத்தின் செயல்பாடுகளை தொடர்ச்சியாகக் கண்காணித்து அரசுக்கு தெரிவித்துவருவார் என்று கூறப்பட்டது.
இதற்காக, கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், அனைத்து சமூக வலைத்தளங்களும் பதிவுசெய்வதற்கு ஒரு வார காலக் கெடு விதிக்கப்பட்டது. நேபாள அரசு சமூக வலைத்தளங்களுக்கு கொண்டுவந்துள்ள கட்டுப்பாடு, கருத்துரிமைக்கு எதிரானதாகவும், அரசுக்கு எதிரான கருத்துக்களை முடக்குவதற்கான செயல்திட்டமாகவும் பார்க்கப்பட்டது. ஏற்கெனவே டிக்டாக், டெலிகிராம் போன்றவை தடை செய்யப்பட்டு, பின்னர் நேபாள அரசின் கட்டுப்பாட்டுக்கு ஒப்புக்கொண்டதால் தடை நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்படியான சூழலில், அரசின் உத்தரவை ஏற்க மறுத்த பேஸ்புக், வாட்ஸ்அப், யூடியூப், எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 26 சமூக வலைத்தளங்களை கடந்த 4-ந் தேதி நள்ளிரவு முதல் நேபாள அரசு தடை செய்தது.
இத்தடையானது நேபாள மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வையும் குழப்பத்தையும் ஏற்படுத் தியது. நேபாளத்தில் தற்போது சுமார் 1.43 கோடி மக்கள் சமூக வலைத்தளத்தை பயன்படுத்துவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்த எண்ணிக்கையானது, நேபாளத்தின் மொத்த மக்கள் தொகையில் 48.1 சதவீதமாகும். இவர்களில் பொழுது போக்காக சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்து வதை தவிர்த்து, பணப்பரிமாற்றங்களுக்காக பயன் படுத்துவது, வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர் களைத் தொடர்புகொள்வதற்காக சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்துவது, கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பாகப் பயன்படுத்துவதென, நேபாளத்தில் சமூக வலைத்தளங்கள் அத்தியாவசியமான ஒன்றா கப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக "ஜென்' தலைமுறை யினர் பிறந்தது முதலே சமூக வலைத்தளங்களோடு இயங்கியே பழகியவர்கள். எனவே சமூக வலைத் தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை, நேபாள மாண வர்கள், இளைஞர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, நேபாள அரசு சர்வாதிகாரத்தன்மையோடு செயல்படுவதாகக் கூறி "ஜென்' தலைமுறையினர் போராட்டத்தில் இறங்கினர்.
இளைஞர்களின் போராட்டத்துக்கு நேபாள பிரபலங்களும் ஆதரவை தெரிவித்ததால் போராட்டம் வலுக்கத் தொடங்கியது. நேபாள தலைநகர் காத் மாண்டுவில் திங்களன்று தொடங்கிய போராட்டத் தால், வீதிகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு, அரசுக்கு எதிராகக் கோஷமெழுப்பி வன் முறையில் ஈடுபட்டனர். அதையடுத்து காத்மாண்டு வில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேபாள அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவையும் மீறி, போராட்டக்காரர்கள், அரசின் கட்டுப்பாட்டிலுள்ள நாடாளுமன்றம், அமைச்சர்களின் வீடுகளை குறிவைத்து தாக்குதலில் இறங்கினர். போராட்டம் அடுத்தடுத்து, பொக்காரா, புட்வால், தாரன், கோரகி உள்ளிட்ட பகுதிகளுக்கும் பரவியது. பிரச்சனை எல்லைமீறியதால், போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைக்குண்டுகள் வீசப்பட்டன. தண்ணீ ரைப் பீய்ச்சியடித்தனர். போராட்டக்காரர்களும் போலீசார் மீது கல்லெறிவது, வாகனங்கள், கட்டடங்களுக்கு தீவைப்பது, சூறையாடுவதென வன்முறையில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற வளாகத்தினுள் நுழைந்ததால், அவர் களைக் கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 19 பேர் பலியாகினர். சுமார் 300க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். நாடாளுமன்ற வளாகம் பற்றியெரிந்தது. போராட்டம் கட்டுக்கடங் காமல் சென்றதால், சமூக வலைத்தளங்கள் மீதான தடையை நேபாள அரசு நீக்கியது. ஆனால் அதற்குள் போராட்டம், அரசின் ஊழல்களுக்கு எதிரானதாக திரும்பியது.
"அனைத்துக்கட்சிகளும் அடங்கிய தேசிய அரசு அமைக்க வேண்டும்! ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! கருத்து சுதந்திரத்திற்கு உத்தரவாதம் வேண்டும்! அரசியலில் பதவி வகிப்பவர்களுக்கு ஓய்வு வயது நிர்ணயிக்க வேண்டும்!' ஆகிய கோரிக்கைகளை போராட்டக் காரர்கள் எழுப்பினர். 'கே.பி. திருடனே! நாட்டை விட்டு வெளியேறு!' என்ற கோஷத்தை எழுப்பினர். போராட்டக்காரர்கள், பால்கோட்டிலுள்ள பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் சொந்த வீட்டுக்குள் புகுந்து தீவைத்தனர். பிரதமர் அலுவலகத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், அவர் பதவி விலகக்கோரி கோஷமிட்டனர். முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் வீடடை தீக்கிரையாக்கியதில், அவரது மனைவி ராஜலட்சுமி சித்ரகருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஜனாதிபதி ராமச்சந்திர பவுடலின் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக்கின் வீட்டுக்கு தீவைக்கப்பட்டது. லலித்பூர் மாவட்டத்திலுள்ள தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பிரித்வி சுப்பா குருங்கின் வீட்டின்மீது கற்கள் வீசப்பட்டன. லலித்பூரிலுள்ள முன்னாள் பிரதமர் பிரசாந்தாவின் வீட்டை சூறையாடினர். மற்றொரு முன்னாள் பிரதமர் ஷெர் பகதுர் துபாவின் இல்லம் தாக்குதலுக் குள்ளானதில், அவர்மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. நிதியமைச்சர் பிஷ்ணு பிரசாத்தை வீடு புகுந்து விரட்டிய போராட்டக்காரர்கள், தெருவில் அவரை துரத்தித்துரத்தி அடித்து உதைத்த வீடியோ வைரலாகியது. காத்மாண்டுவில் நிலவிய அசாதாரண சூழலால், விமான நிலையம் மூடப்பட்டது. பொக்காரா விலுள்ள முதல்வரின் அலுவலகம் சூறையாடப்பட்டது. நேபாளம் சிறையி-ருந்து 450 கைதிகள் தப்பி ஓடிவிட்டனர்.
நிலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல், நேபாள உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் திங்களன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து, நேபாள காங்கிரஸை சேர்ந்த வேளாண்துறை அமைச்சர் ராம்நாத் அதிகாரி, சுகாதாரம், மக்கள்தொகை அமைச்சர் பிரதீப் பவுடல் ஆகியோர் ராஜினாமா செய்தனர். நிலவரத்தை கட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பாக ஆலோசிக்க அவசரக் கூட்டத்துக்கு அழைப்புவிடுத்த நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பினார்.
போராட்டத்தை கட்டுப்படுத்த ராணுவம் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி மாளிகை, துணை ஜனாதிபதி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட் டம், போராட்டங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. காத்மாண்டு சர்வதேச விமான நிலையத்தை நேபாள ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.