அசோக் தியாகி இயக்கத்தில், "நான் ஏன் காந்தியைக் கொன்றேன்' என்ற தலைப்பில் குறும்படம் ஒன்று உருவாகியுள்ளது. நாதுராம் கோட்சே, காந்தியைக் கொன்றதற்கான காரணத்தை விளக்கி, சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் இக் குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குறும்படத்தில் நடிகரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யுமான அமோல் கோல்ஹே, நாதுராம் கோட்சேவாக நடித்துள்ளார். இக்குறும் படம் கடந்த 2017-ஆம் ஆண்டே எடுக்கப்பட்டுவிட்ட நிலையில், காந்தியின் நினைவு தினமான வரும் ஜனவரி 30-ஆம் தேதி லைம் லைட் என்ற ஓ.டி.டி. தளத்தில் வெளியாக வுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வெளி யானது முதலே பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில்... இப்படத்தைத் தடை செய்யவேண்டும் என்று மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு, அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் நானா படேல் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், "காந்தியைக் கொலை செய்தவரை ஹீரோவாக சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவரைக் கொலை செய்தவரின் புகழ் பாடினால் அதை காங்கிரஸ் எதிர்க்கும்'' என்றார். அதேபோல, அகில இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம், இக் குறும்படத்தை முழுமையாகத் தடை செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.
இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், அமோல் கோல்ஹேக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "இந்தப் படத்தில் நடித்தபோது அமோல் கோல்ஹே தேசிய வாத காங்கிரஸ் கட்சியில் இல்லை. அவர் ஒரு நடிகராக மட்டுமே அந்த கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். இந்த கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார் என்பதால் அவர் காந்திக்கு எதிரானவர் என்று அர்த்தமில்லை'' எனக் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸும் சிவசேனா தலைமையிலான மகாராஷ்டிரா முன்னேற்ற முன்னணி கூட்டணியில் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்பார்ப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆல்பம்!
இயக்குநரும் நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கடந்த 2004-ஆம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 18 ஆண்டுகள் சுமுகமாகச் சென்ற இவர்களது திருமண வாழ்வில் திடீரென விரிசல் ஏற்பட, இருவரும் விவாகரத்து செய்வதாக சமீபத்தில் அறிவித்தனர். இருவரையும் சமாதானம் செய்துவைக்க முயற்சிகள் நடந்துவருவதாக நடிகர் தனுஷின் தந்தை தெரிவித்திருந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தரப்பும் அதற்கான முயற்சியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருமே தங்களது அடுத்தடுத்த வேலைகளில் வழக்கம்போல கவனம் செலுத்தி வரு கின்றனர். வெங்கி அட்லூரி இயக்கத்தில் தன்னுடைய டோலிவுட் என்ட்ரி படத்தில் தனுஷ் கவனம் செலுத்திவரும் நிலையில்... ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆல்பம் பாடல் இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். "பே ஃபிலிம்ஸ்' நிறுவனம் வெளியிடவுள்ள இந்த ஆல்பம் பாடலுக்கான படப்பிடிப்பு, ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றுவருகிறது. இப்பாடல் காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி வெளி யாகவுள்ளதாம். இப்பாடல் காதலின் சிறப்பைச் சொல்லும் பாடலாக இருக்குமா அல்லது ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் தற்போ தைய மனநிலையைப் பிரதிபலிக்கும் வகையிலான காதல் தோல்விப் பாடலாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மீண்டும் கவர்ச்சியில் சமந்தா!
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான "புஷ்பா' திரைப்படம் கலவையான விமர்சனங்களைக் கடந்து வசூலில் மிகப்பெரிய தொகையைக் கல்லா கட்டியது. இப்படத்தில் இடம்பெற்றிருந்த "ஊ சொல்றியா மாமா...' பாடல் அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்தது. இப்பாடலுக்கு கௌரவ வேடத்தில் தோன்றி நடிகை சமந்தா கவர்ச்சி நடனம் ஆடி யிருந்தார். இந்தியா முழுவதும் இப்பாடல் பேசு பொருளான நிலையில், மீண்டும் ஒரு படத்தில் நடிகை சமந்தா கவர்ச்சி நடனம் ஆட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகிவரும் "லைகர்' திரைப்படத்தில் அவர் கவர்ச்சி நடனமாட உள்ளாராம். "ஊ சொல்றியா மாமா...' பாடல் வெற்றியையடுத்து, "லைகர்' படக்குழு அண்மையில் சமந்தாவை அணுக, அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. "ஊ சொல்றியா மாமா...' பாடலுக்கு நடிகை சமந்தா ரூ.5 கோடிவரை சம்பளம் பெற்றதாகக் கூறப்படும் நிலை யில், "லைகர்' படத்திற்கு அதை விடக் கூடுதலான தொகையை அவர் சம்பளமாகப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-இரா.சிவா