பிரபல கொரோனா பரிசோதனை மையத்துக்கு அதிரடியாக மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் சீல் வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாநகரிலுள்ள 20-க்கும் மேற்பட்ட முக்கியமான சீனியர் மருத்துவர் இணைந்து நடந்தும் இரத்த பரிசோதனை மையம் டாக்டர்ஸ் டயக்னோஸ்டிக் சென்டர். நேரடியாக மத்திய அரசின் அனுமதியோடு கொரோனோ பரிசோதனைக்கான அனுமதியும் வாங்கி பரிசோதனை செய்துவருகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பரிசோதனைகளில் அதிகமான பரிசோதனைகள் இங்குதான் நடைபெறும்.
திடீரென மாநகராட்சி ஆட்கள் அதிரடியாக வந்து பரிசோதனை மையத்தின் கட்டடங்கள் விதிமுறைகளை மீறியிருப்பதாகச் சொல்லி கட்டடத்திற்கு சீல் வைத்தனர்.
இங்கே கொரோனா பரிசோதனை செய்து சொல்லும் முடிவுகளில் சில தவறுகள் நடந்துள்ளன. எனவே கொரோனோ மாதிரி பரிசோதனை செய்யக்கூடாது என்று திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உத்தரவு பிறப்பித்து 5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல மேக்னம் என்கிற பரிசோதனை நிலையமும் கொரோனா பரிசோதனைக்கு அனுமதி வாங்கியிருந்தனர். தற்போது அந்த மையத்திற்கும் கொரோனோ பரிசோதனை செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர்.
திருச்சியில் கொரோனோ பரிசோதனை செய்ய திருச்சி அரசு மருத்துவமனையை மட்டுமே நம்பியிருக்கவேண்டிய நிலையை திட்டமிட்டு உருவாக்கியுள்ளனர். இதுகுறித்து கருத்தறிய டாக்டர்ஸ் டயக்னோஸ்டிக் சென்டர் பொறுப்பாளர் மருத்துவர் ரத்திடம் பேசினோம்…
""கடந்த 15 வருடத்திற்கு மேல் இந்த மையத்தை நடத்தி வருகிறோம். இந்த கட்டடம் கட்டினது 2011-ஆம் ஆண்டு. ஆனால் தற்போது திடீரென விதியை மீறி கட்டிவிட்டீர்கள் என்று நோட்டீஸ் கொடுத்தார்கள். 3 மாதம் டைம் கொடுங்கள் சரி பண்றேன் என்று சொன்னேன. ஆனால் திடீரென சனிக்கிழமை 5 லட்சம் அபராதம் கட்டுங்கள், இல்லையென்றால் சீல் வைத்து விடுவோமென சொல்லிவிட்டு திங்கள்கிழமை சீல் வைத்துவிட்டார்கள்.
கொரோனா பரிசோதனை முடிவுகள் எல்லாம் மிக துல்லியமாகத்தான் கொடுத்திருக்கிறோம். ஆனால் உங்கள் மையத்தில் பாசிடிவ் என்று வருவது, அரசு மருத்துமனையில் பரிசோதனை செய்தால் நெகடிவ் என்று வருகிறது என்று மாவட்ட நிர்வாகத் தரப்பில் சொல்கிறார்கள். ஒரு நாளைக்கு 200 பேருக்கு கொரோனா இரத்த மாதிரி பரிசோதனை செய்கிறோம். கொரோனா மட்டுமல்லாம இன்னும் பல நூறு வகையான சிசிக்சைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்துவருகிறோம்.
எங்களிடம் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் அரசாங்கம் சர்வபலத்தையும் பயன்படுத்தி எங்களுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். அவ்வளவுதான் என்னால் சொல்லமுடியும்'' என்றார்.
-ஜெ.டி.ஆர்