யோகா குரு என்று அழைக்கப்படும் பதஞ்சலி ராம்தேவ், சமீபத்தில் நிகழ்ச்சி யொன்றில் கலந்துகொண்டு பேசியபோது, “"ஆங்கில மருத்துவம் முட்டாள்தனமானது. தோல்வியடைந்த அறிவியல் முறை. கொரோ னா பாதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் கிடைக்காமல், சிகிச்சை கிடைக்காமல் இறந்தவர்களைவிட, அலோபதி மருத்துவ முறைகளால் லட்சக் கணக்கான நபர்கள் இறந்துள்ளனர்''’எனக் குறிப்பிட்டார்.

Advertisment

ramdev

இந்தக் கருத்துக்கு அலோபதி மருத்துவர்கள் தரப்பிலிருந்து எதிர்ப்புக் கிளம்பிய தோடு, இந்திய மருத்துவ சங்கமும் கடும் கண்டனம் தெரிவித்தது. கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலைகளில், தங்களது உயிரிழப்பையும் பொருட்படுத்தாது இரவும் பகலுமாக பணிபுரிந்துவரும் நிலையில் இத்தகைய விமர்சனங்கள் தங்களைப் புண்படுத்துவதாகத் தெரிவித்தனர். இதையடுத்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர் தன், ராம்தேவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்ததோடு, "ராம்தேவ் தனது கருத்தைத் திரும்பப் பெறவேண்டும்' என தெரிவித்தார்.

Advertisment

எதிர்ப்புகள் வலுப்பதையறிந்த ராம்தேவ், அவசர அவசரமாக, “தான் பேசிய வீடியோ எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ள தாகவும், தான் பேசியது தனது சொந்தக் கருத்து அல்ல எனவும் வாட்ஸ் அப்பில் வந்த கருத்து எனவும், அதை வெறுமனே தான் படித்துமட்டும் காட்டியதாக'வும் சரணாகதி மோடுக்கு மாறி தனது கருத்தைத் திரும்பப்பெற்றுள்ளார்.

பாபா ராம்தேவ் யார்? அவரது தகுதி என்னவென்று பார்க்கலாம்...

பாபா ராம்தேவ் இந்தியா முழுமைக்கும் கவனத்துக்கு வந்தது, 2011-ல் அன்னா ஹசாரே ஜன் லோக்பால் சட்டத்துக்காக டெல்லியில் நடத்திய போராட்டத்தின்போதுதான். அன்னா ஹசாரேவின் போராட்டத்துக்கு ஆதரவளித்த முகங்களில் பாபா ராம்தேவுடையதும் ஒன்று. அன்னாவின் போராட்டத்துக்குக் குவிந்த பெரும் திரள், ராம்தேவை சபலத்துக்குள்ளாக்கியது.

Advertisment

ramdev

2012-ல் வெளிநாட்டு வங்கிகளிலிருக்கும் இந்தியப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டும், 500, 1000 ரூபாய் பணத்தைத் தடைசெய்ய வேண்டுமெனக் கூறி ராம்லீலா மைதானத்தில் பாபா ராம்தேவ் போராட்டத்தைத் தொடங்கினார். மத்திய அரசு அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாகக் கூறி உண்ணாவிரதத்தைக் கைவிட வலியுறுத்தியது. ஆனால், எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கவேண்டுமென அவர் அடம்பிடிக்க, ராம்தேவை கைதுசெய்யும் நடவடிக்கையில் இறங்கியது அன்றைய மத்திய அரசு.

அத்தனை வீராப்பு காட்டிய ராம்தேவ் கைது அறிவிப்பு வந்து, போலீஸ் தேடிவந்தவுடன், பெண்கள் அணியும் சுடிதாரை அணிந்துகொண்டு துப்பட்டா வால் முகத்தை மறைத்துக்கொண்டு ஒரு மணி நேரம் போராட்ட மைதானத்தில் தலைமறைவாய்த் திரிந்தார். பாபாவின் சுடிதார் கோலம் அவரை இந்தியா முழுவதும் பிரபலமாக்கியது.

ஆயுர்வேத மருந்துகள் மற்றும் யோகாவை ஒரு பிராண்ட் ஆக்கி, அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் ராம்தேவ், அவரது மருந்துகளின் தரத்திலும் பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண் டுள்ளார். பதஞ்சலி ஆயுர்வேத மருந்துகளில் மனித மற்றும் எலும்புக் கழிவுகள் இருப்பதாக கம்யூனிஸ்ட் கட்சியின் பிருந்தா காரத் ஆய்வுகள் நடத்தி உறுதிப் படுத்தினார்.

2006-களில் தனது யோகப் பயிற்சி மூலம் எய்ட்ஸ், புற்றுநோய் போன்றவற்றைக் குணப்படுத்தலாம் என தனது வலைப்பக்கத்தில் விளம்பரம் செய்தார். இது சர்ச்சைக்குள்ளானது. அறிவியல் சார்புடையவர்கள் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, "நான் ஒருபோதும் எய்ட்ஸை குணப்படுத்துவதாகத் தெரிவிக்கவே இல்லை'’என அந்தர்பல்டி அடித்தார்.

இதேபோல ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்தும் தவறான கருத்துகளைத் தெரிவித்ததோடு, அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் எனவும், அவர்களை தனது ஆயுர்வேத மருந்துகள் குணப்படுத்தும் எனவும் அறிவியலுக்கு முரணான கருத்தைத் தெரிவித்தார்.

2017-ல் 40 சதவிகித ஆயுர்வேதப் பொருட்கள் தரக்குறைவான பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ளதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ஹரித்துவாரின் ஆயுர்வேத மற்றும் யுனானி அலுவலகம் கண்டறிந்து வெளிப்படுத்தியது. இதில் ராம்தேவின் பல்வேறு ஆயுர்வேதப் பொருட்களும் இடம்பெற்றிருந்தன.

அதுமட்டுமின்றி, கொரோனா முதல் அலையின்போது பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், கோவிட்டைக் குணப்படுத்தும் என்ற விளம்பரத்துடன் கரோனில் மற்றும் ஸ்வாசரி என இரு மருந்துகளை அறிமுகம் செய்தது. பலத்த எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் ஆயுஷ் அமைச்சரகம், பதஞ்சலியின் மருந்துகள் கோவிட் தொற்றைக் குணப்படுத்தும் என விளம்பரம் செய்ய தடை விதித்தது. இதையடுத்து அந்நிறுவனம் எங்களது மருந்துகள் கொரோனாவைக் குணப்படுத்தும் என்றோ தடுக்கும் என்றோ சொல்லவில்லை. நோயெ திர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இருமல் மற்றும் ஜல தோஷத்தைக் கட்டுப்படுத்தவுமே இம்மருந்து அறிமுகப் படுத்தப்பட்டது என அவசர அவசரமாகப் பின் வாங்கியது.

பாபா ராம்தேவின் பிரதான உதவியாளர் பால கிருஷ்ணாவுக்கு நெஞ்சுவலியும் மயக்கமும் வந்தபோது, ராம்தேவ் தனது ஆயுர்வேத மருந்துகளை அளித்து குணப்படுத்துவதற்குப் பதில் அவரை எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பினார். "தங்களுக்கு அலோபதி, மற்றவர்களுக்கு ஆயுர்வேதமா?' என அப்போது இது சர்ச்சையானது.

தன் காதிலிருக்கும் குரும்பையைச் சுத்தம்செய்யாத பாபா, அடுத்த காதுகளில் இருக்கும் அழுக்கைப் பற்றி மாய்ந்து மாய்ந்து பேசுவது சரிதானா?

-க.சுப்பிரமணியன்