விளையாடிக் கொண்டிருந்த 5 வயது குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்தது அந்த வீட்டின் ஹவுஸ் ஓனராக இருந்தக் கொடூர மிருகம். பி-2 ஓட்டேரி காவல்நிலையத்தில் கண்ணீரோடு புகார் கொடுத்தார்கள் வாடகைக்கு குடியிருந்த அக்குழந்தையின் பெற்றோர். ஆனால், அந்த மிருகத்துக்கு ஆதரவாக வந்த வட்டச்செயலாளர் கோவிந்தன் என்கிற இன்னொரு மிருகம் பேரம் பேச, ஓட்டேரி காவல்நிலைய விசாரணை அதிகாரி எஸ்.ஐ. பாலு என்கிற மூன்றாவது மிருகம், நடவடிக்கை எடுக்காமல் அனுப்பி வைத்துவிட்டது.
20 வருடங்களுக்கு முன்னாள் நடந்த இக்கொடூர பாலியல் குற்றத்திலிருந்து தண்டிக்கப்படாமல்; தப்பவைக்கப்பட்ட அந்த மிருகம் வேறு யாருமல்ல. தற்போது, அயனாவரத்திலுள்ள 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்தில் கைது செய்யப்பட்ட "நம்பர் 1' அக்யூஸ்ட் லிஃப்ட் ஆபரேட்டரான 66 வயது ரவிக்குமார்தான். ""சிறுமி தரப்பினரின் சம்மதமில்லாமல் இப்படி நிகழ்ந்திருக்குமா? ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஏழு மாதங்கள் கழித்து ஏன் இப்போது சொல்ல வேண்டும்?''’என்றெல்லாம் கேள்வி களால் ஆன வன்புணர்வுகளுக்கு "இந்த ஃப்ளாஷ்பேக்தான் பதில்' என்று நக்கீரனில் எழுதப்பட்ட வரிகளை நீதிபதி மஞ்சுளாவிடம் நீதிமன்றத்திலேயே படித்துக்காண்பித்தார் அரசுத் தரப்பு வழக்கறிஞர் ரமேஷ்.
நம்மிடம் இதுகுறித்து நீதிபதி மஞ்சுளா கேட்க, "நக்கீரனில் எழுதியது உண்மைதான்' என்று அக்யூஸ்டுகள் முன்னிலையில் சாட்சியம் அளித்தோம். அந்த வழக்கில்தான் 14 பேரும் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம். அதுவும் நக்கீரனால் அம்பலப் படுத்தப்பட்ட ரவிக்குமார் உட்பட சுரேஷ், அபிஷேக், பழனி ஆகிய 4 பேருக்கு சாகும் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருக் கிறது.
பரமசிவன், ஜெய்கணேஷ், சுகுமாரன், முருகேசன் உள்ளிட்ட 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருக் கிறது. ராஜசேகருக்கு ஆயுள் தண்டனை, ஏரல்ப்ராஸுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. குணசேகரன் மட்டும் விடுவிக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து மேல்முறையீடு செய்ய இருக்கிறது அரசுத் தரப்பு.
குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்யும் கொடூரன்களுக்கு பாடமாக அமைந்திருக்கிறது தீர்ப்பு.
பொள்ளாச்சி காமக்கொடூரன் களுக்கு மட்டும் என்ன விதிவிலக்கோ?
-மனோ