நீதிமன்றத்தையும், அரசு வழக்கறிஞரையும் ஏமாற்றி, போலி ஆவணம் மூலம் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வாங்கிக் கொடுத்த போலீசாரின் செயல், குமரியில் ஹாட் நியூஸாக ஓடிக்கொண்டிருக்கிறது.
குமரி மாவட்டம் இரணியல் பேரூராட்சியின் 4வது வார்டுக்குட்பட்ட கண்ணாட்டுவிளையைச் சேர்ந்த ராஜன் மனைவி ஜென்சிமலர். இவரை, அதே வார்டை சேர்ந்த பா.ஜ.க. கவுன்சிலர் கிரிஜா மற்றும் அவருடைய கணவர் பிரபுராஜ் ஆகிய இருவரும் சேர்ந்து தாக்கிய வழக்கில், தலைமறைவான இருவருக்கும் ஜாமீன் கிடைக்க, இரணியல் போலீசார் போலி ஆவணம் தயார் செய்து கொடுத்து நீதிமன்றத்தை ஏமாற்றியிருக்கிறார்கள்.
இது குறித்து நம்மிடம் பேசிய ஜென்சிமலர், "இரணியல் பேரூராட்சித் தேர்தலில் 4-ம் வார்டில் போட்டியிட்ட பா.ஜ.க.வைச் சேர்ந்த கிரிஜாவுக்கு, நானும் என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் ஓட்டுப் போடவில்லை. இதனால் அவரும் அவருடைய கணவரும், எங்கள் மீது கோபத்தில் இருந்தனர். பேரூராட்சி மூலம் எந்த சலுகையும், உதவியும் எங்கள் குடும்பத்துக்கு கிடைக்க விடமாட்டோமென சவாலும் விட்டனர். இதையடுத்து, எங்கள் வீட்டுக் குப்பைகளைக் கூட பேரூராட்சி ஊழியர்கள் எடுத்துச் செல்லமாட்டார்கள்.
இந்நிலையில், எனது வீட்டுக்கு குடிநீர் இணைப்பு கேட்டு பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு கொடுத்தேன். இதையறிந்த கவுன்சிலர் கிரிஜா வும், அவருடைய கணவரும், கடந்த 22-ஆம் தேதி, இருசக்கர வாகனத்தில் வந்துகொண் டிருந்த என்னை தடுத்து நிறுத்தி, "நீ ஓட்டு போட்ட ஆளு தோத்துட்டாங்க. நான் இந்த வார்டுக்கு கவுன்சிலரா இருக் கிறேன். இந்த வார்டுக்குள்ள எல்லாமே நான்தான். எங்க வார்டுக்குள்ள இருந்துட்டு எந்த மூஞ்சிய வச்சி குடிநீர் இணைப்பு கேட்ப? உனக்கு குடிநீர் இணைப்புத் தர விடமாட்டேன்'' என சவால்விட்டு தகராறு செய்தவர்கள், என்னைத் தாக்கிக் காயப்படுத்தியதோடு, செல்போனையும் பிடுங்கி எறிந்து உடைத்தனர். என்னைத் தாக்கியதால் பலத்த காயத்துடன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன்.
மருத்துவமனையில் என்னிடம் விசாரிக்க வந்த இரணியல் போலீசார், அவர்களோடு சமரசமாகப் போகச்சொல்லி பேசிப் பார்த்தார்கள். நான் முடியாது என்று சொன்னதால், இரண்டு நாள் கழித்து கிரிஜா மீதும், அவரது கணவர் பிரபுராஜ் மீதும் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். அதன்பிறகு, "இந்த வழக்கு உனக்கு சாதகமாக இருக்காது. பத்தோட ஒண்ணு பதினொன் றாகத்தான் இருக்கும். அதனால உடனே நீ மருத்துவமனையிலருந்து டிஸ்சார்ஜ் ஆகிடு. அப்போதுதான் அவர்களுக்கு ஜாமீன் கிடைக்கும். இல்லைன்னா, அவர்களுக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கால், உன்னையே டிஸ்சார்ஜ் செய்து விடுவார்கள்'' என உதவி ஆய்வாளர் தனிஸ்லாஸ் என்னை மிரட்டும் தொனியில் பேசினார். பா.ஜ.க.வினர் சிலரும் இதேபோல நெருக்கடி தந்தனர்.
நான் கடந்த மாதம் 22-ம் தேதியிலிருந்து, இந்த மாதம் 3-ம் தேதி வரை, 10 நாட்கள் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சையில் இருந்துள்ளேன். ஆனால் நான் கடந்த மாதம் 28-ம் தேதியே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டேன் என இரணியல் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் தனிஸ்லாஸ், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான உதவி ஆய்வாளர் சந்திரகுமார் ஆகியோர் திட்டமிட்டு போலி ஆவணங்கள் தயார் செய்து நீதிமன்றத்தையும், அரசு வழக்கறிஞரையும் ஏமாற்றி, மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், கிரிஜாவுக்கும் அவர் கணவருக்கும் கடந்த மாதம் 30-ஆம் தேதி ஜாமீன் வாங்கியுள்ளனர்.
இது எவ்வளவு பெரிய குற்றம். இதனால் அந்த ஜாமீனை ரத்து செய்வதுடன், இதற்கு உடந்தையாகச் செயல்பட்ட அந்த காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, கடந்த 5-ஆம் தேதி பத்மநாபபுரம் சப்-கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்.பி. ஆகியோரிடம் மனு கொடுத்துள்ளேன். மேலும், நீதிமன்றத்திலும் முறையிட உள்ளேன்'' என்றார். இது குறித்து எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத்திடம் கேட்டபோது, "புகார் வந்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள் ளேன். இதில் தவறு நடந் திருந்தால் கண்டிப்பாக நட வடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
மாவட்ட அரசு வழக்கறிஞர் ரசல்ராஜிடம் கேட்டபோது, "இந்த வழக்கில் முன்ஜாமீனுக் காக, இரணியல் காவல் நிலைய அதிகாரிகள் என் னிடம் பொய்யான தகவ லைக் கொடுத்து, குற்றவாளி களுக்கு ஜாமீன் பெற்றுக் கொடுத்திருப்பதாகத் தெரிய வந்ததையடுத்து, இது சம் பந்தமாக டி.ஜி.பி. மற்றும் எஸ்.பி.க்கு கடிதம் அனுப்பி யுள்ளேன்'' என்றார்.
இச்சம்பவம், குமரி காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி யிருக்கும் நிலையில்... அந்த காவல் அதிகாரிகள்மீது நட வடிக்கை எடுக்க வேண்டு மென்று சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.