"தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு முறையும் சட்டமன்ற மேலவை மீண்டும் கொண்டு வரப்படும்' என்ற வாக்குறுதி அளிக்கப்படுவது வழக்கம். இம்முறையும் அது இடம்பெற்றுள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியும் "மேலவையை மீண்டும் கொண்டுவர முயல்வோம்' என தெரிவித்திருக்கிறது. மேலவை மீண்டும் வருவதன் மூலம் அதிகபட்சம் 58 பேர் சட்டமன்ற மேலவை உறுப்பினர்களாக (எம்.எல்.சி.) தேர்ந்தெடுக்க வாய்ப்புண்டு. அது ஆளுந்தரப்புக்கும் அதன் கூட்டணிக்கும் சாதகமான அம்சம்.

"மேலவையை மீண்டும் உருவாக்குவது சாத்தியமா?' என விசாரித்தோம்.

counsil

"ஆட்சியாளர்களுக்கு ஆலோசனை வழங்கவும், நிர்வாகத்தை முறைப்படுத்தவும், நெறிப்படுத்தவும் இந்தியாவில் உருவாக்கப்பட்டது மாநில சட்ட மேலவை. இதில் கல்வியாளர்கள், நேர்மையாளர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் உறுப்பினர்களாக இருப்பர். பேரவைத் தேர்தலில் பயன்படுத்திக்கொள்ள முடியாத சிந்தனையாளர்களுக்கும், கல்வியாளர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் வாய்ப்பளிப்பதற்காகவே மேலவை கொண்டு வரப்படலாம்.

Advertisment

மேலவைக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் இல்லையெனினும், சட்டப் பேரவை நிறைவேற்றும் சட்டங்களில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டும் அதிகாரம் இருக்கிறது. ஆனால், பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ரத்து செய்யவோ நிரா கரிக்கவோ மேலவைக்கு அதிகாரம் இல்லை. இருப்பினும், அறிவுஜீவிகள் அடங்கிய மூத்தோர் சபை என வர்ணிக்கப்படுகிற மேலவை உறுப் பினர்கள் பயன்படுத்தும் சொற் களுக்கு வலிமை உண்டு''‘என்கிறார் பிரபல அரசியல் விமர்சகரான வழக்கறிஞர் ரவீந்திரன் துரைசாமி.

தமிழகத்தில் இரட்டைமலை சீனிவாசன், ராஜாஜி, ஓமந்தூரார், எம்.சி.ராஜா, ஏ.டி.பன்னீர்செல்வம், பக்தவச்சலம், அண்ணா, ஆர்.வெங்கட் ராமன், கலைஞர், எம்.ஜி.ஆர். உள்ளிட்ட அரசியல் ஆளுமைகள் மேலவை உறுப்பினர்களாக அலங்கரித்திருக்கிறார்கள். ராஜாஜியும் அண்ணாவும் மேலவை உறுப்பினர்களாக முதல்வர் பதவியில் இருந்தவர்கள். பேரவையும் மேலவையும் "கப் அண்ட் சாசர்' என்பார் அறிஞர் அண்ணா.

cc

Advertisment

தமிழகத்தில் 60 ஆண்டுகாலம் நிலைப்பெற்றிருந்த சட்ட மேலவையை 1986-ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். கலைத்தார். நடிகை வெண்ணிற ஆடை நிர்மலாவை மேலவை உறுப்பினராகக் கொண்டுவர விரும்பி, அவரை வேட்பு மனு தாக்கல் செய்யவைத்தார். நிர்மலாவும் வேட்புமனு தாக்கல் செய்ய அது ஏற்றுக்கொள்ளப்பட்டு, பதவி பிரமாணம் எடுத்துக்கொள்வதற்கான ஏற்பாடுகளும் ராஜ்பவனில் நடந்தன. ஆனால், வெண்ணிறஆடை நிர்மலா திவாலானவர்; "அரசியலமைப்புச் சட்டம் 102(1) சி பிரிவின்படி திவாலான ஒருவரை உறுப்பினராக தேர்வு செய்ய முடியாது' என நிர்மலாவின் நியமனத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்குத் தொடர்ந்தார் வழக்கறிஞர் சுந்தரம் என்பவர்.

4,65,000 ரூபாய் கடனை அடைக்க முடியாததால் வெண்ணிற ஆடை நிர்மலா திவாலானவர் என ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்ததை சுட்டிக்காட்டியே அவரது நியமனத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதில் அதிர்ந்துபோன எம்.ஜி.ஆர்., உடனே அ.தி.மு.க. கட்சி நிதியிலிருந்து குறிப்பிட்ட அந்த தொகையை நிர்மலா வுக்கு கடனாக கொடுத்து, கடனை அடைக்க வைத்தார். இதன் மூலம், திவாலானவர் என்கிற நிலை திரும்பப் பெறப் பட்டது. இதனையடுத்து நிர்மலா வை நியமிக்க எந்த சட்டச் சிக்கலும் இல்லாத நிலை உருவானது. ஆனால், திடீரென தனது மனுவை வாபஸ் பெற்றார் நிர்மலா. அரசியல் வட்டாரங்களில் இது அதிர்ச்சியைத் தந்தது. ஏன்? எதற்கு? எப்படி ? என்கிற கேள்விகள் எதிரொலித்தன.

இதன் பின்னணி அப்போதே அம்பலமானது. அதாவது, நிர்மலாவுக்கு பதவி பிரமாணம் செய்ய வைப்பதற்கு முன்பாக எம்.ஜி.ஆரை ராஜ்பவனுக்கு அழைத்த அப்போதைய கவர்னர் எஸ்.எல்.குரனா, "திவாலான ஒருவரை எதன் அடிப்படையில் நியமிக்க முடிவு செய்தீர்கள்? அவரது வேட்பு மனு எப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது? அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருக்கிறீர்கள்' என கேள்வி எழுப்பியதை ஜீரணிக்க முடியாமல் கடும் கோபம் அடைந்த எம்.ஜி.ஆர்., மேலவையை கலைப்பதாக பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றினார். அந்த தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பிவைக்க, நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் மேலவை நீக்கம் தொடர்பான சட்ட மசோதா நிறைவேற்றப் பட்டு குடியரசு தலைவரால் ஒப்புதலும் பெறப் பட்டதில், 1986 நவம்பர் 1-ந் தேதி முதல் சட்ட ரீதியாக கலைந்துபோனது தமிழக சட்ட மேலவை.

jaya

இப்படிப்பட்ட சூழலில், 1989 மற்றும் 1996 தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த கலைஞர், மேலவையை மீண்டும் கொண்டு வர முயற்சி செய்தார். ஆனால், அப்போதைய அரசியல் சூழல் களால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளி லும் போதிய ஆதரவு இல்லாத நிலையில் கலைஞரின் முயற்சிகள் தோல்வியுற்றன. அதேசமயம், தி.மு.க. கொண்டுவந்த மேலவை தீர்மானத்தை அ.தி.மு.க. அரசில் ஜெயலலிதா திரும்ப பெறுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்த நிலையில், 2006-ல் ஐந்தாம் முறையாக தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மேலவையை உருவாக்கும் முயற்சியை மீண்டும் துவக்கினார் கலைஞர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை பலம் கிடைப்பதற் காக காத்திருந்தார். அந்த சூழலும் கனிந்துவந்த நிலையில், 2010-ல் இதற்கான சட்ட மசோதாவை பேரவையில் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார் கலைஞர். மத்திய காங்கிரஸ் தலை மையிலான அரசில் தி.மு.க. அங்கம் வகித்திருந்தால், இதனை மத்தியஅரசு ஏற்றுக்கொண்டது.

மேலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழக அரசின் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. இதனையடுத்து, 2010, செப்டம்பர் மாதம் 30-ந்தேதி தமிழகத்தில் மேலவையை உருவாக்கும் சட்டத்துக்கு ஒப்புதல் தந்தார் ஜனாதிபதி. மேலவைக்கான தொகுதிகளும் அறிவிக்கப்பட்டன. அதேசமயம், மேலவைக்கான தேர்தலை நடத்துவதற்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கும் குறுகிய காலமே இருந்ததால் 2011-பொதுத்தேர்தலுக்கு பிறகு மேலவையை உருவாக்கலாம் என திட்டமிட்டிருந்தார் கலைஞர். ஆனால், 2011 தேர்தலில் ஆட்சியை அ.தி.மு.க. கைப்பற்ற, தி.மு.க. கொண்டுவந்த மேலவை சட்டத்தை நிறைவேற்றாமல் கைவிட்டார் ஜெயலலிதா.

இப்படிப்பட்ட பின்னணிகளுக்கு மத்தியில் தான் "மேலவையை உருவாக்குவோம்' என தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். "நாடாளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சி யாக இருக்கும் தி.மு.க., மத்தியில் உள்ள ஆளும்கட்சியான பா.ஜ.க.வின் ஆதரவைப் பெற்றால் மட்டுமே ஸ்டாலின் கனவு நிறைவேறும்' என்கின்றனர் அரசியல் தலைவர்கள்.

c

இதுகுறித்து, தமிழக அரசின் முன்னாள் சபாநாயகர் தனபாலிடம் நாம் கேட்டபோது, "தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மேலவை குறித்த தீர்மானம் நிறைவேற்றுவதும், மத்தியில் அது நிறைவேறாமல் போவதும் வழக்கம். தமிழகத்தில் மேலவையை கொண்டுவர முடியாது என்பதல்ல. இப்போதைய தி.மு.க. அரசு நினைத்தால் பேரவையில் இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கலாம். ஆனால், நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் அது நிறைவேற வேண்டும். இப்போதைய அரசியல் சூழலில் அது சாத்தியப்படுமான்னு எனக்குத் தெரியாது'' என்கிறார்.

தமிழக காங்கிரசின் துணைத் தலைவரும் ஊடகப்பிரிவு தலைவருமான கோபண்ணாவிடம் நாம் பேசியபோது, "சான்றோர் கள் சபை என அழைக்கப்படும் மேலவை தமிழகத்திற்கு அவசியம் தேவை. மேலவையின் மீது கலைஞருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. அதனால்தான் தமிழக அரசுக்கு புதிய தலைமைச் செயலகத்தை அவர் உருவாக்கும் போது பேரவையை எப்படி சிறப்பாக வடிவமைத்தாரோ, அதற்கு இணையாக மேலவை யையும் வடிவமைத்திருந்தார். ஆனால், அதன் பெருமைகளை உணராத ஜெயலலிதா அரசு, புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றி விட்டது.

பொதுவாக, எம்.ஜி.ஆரால் கலைக்கப்பட்ட மேலவையை மீண்டும் உருவாக்க ஜெயலலிதா விரும்பியதில்லை. மேலவைக்கு அ.தி.மு.க. எதிரானது. 2011-ல் கலைஞர் மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் மேலவை நிச்சயம் உருவாகியிருக்கும். ஆனால், ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அதை கைவிட்டார். தற்போது ஆட்சியை தி.மு.க. பிடித்துள்ள நிலையில், மேலவைக்கான தீர்மானத்தை சட்டப்பேரவையில் எளிதாக நிறைவேற்றிட முடியும். ஆனால், நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் பா.ஜ.க.வின் ஆதரவைப் பெறாமல் மேலவை உருவாவது சாத்தியமில்லை. அதனால், பா.ஜ.க.வின் ஆதரவை பெறும் முயற்சியில் முதல்வர் ஸ்டாலின் ஈடுபடலாம். பா.ஜ.க.வின் ஆதரவு கிடைத்தால் தமிழகத்தில் மேலவை உருவாகும்'' என்கிறார் அழுத்தமாக .

"அறிவார்ந்தோர் சபை என அழைக்கப்படும் மேலவையின் எம்.எல்.சி. பதவிக்காக ஆளுந்தரப்பில் காத்திருப்பவர்களின் வெயிட்டிங் லிஸ்ட் நீளமாக உள்ளது' என்கிறார்கள் அறிவாலயத்தில்.