"விவசாய வேலைக்கு நாத்து நடணுமா, களை எடுக்கணுமா, கூப்பிடுங்கப்பா சின்னபிள்ளைய' என்னும் அளவுக்கு மதுரையைச் சுற்றி உள்ள கிராமங்களில் பேர் போனவர் சின்னபிள்ளை. பிரதமராக இருந்த வாஜ்பாய் கையால் "சக்தி புரஷ்கார்' விருது வாங்கி, வாஜ்பாயே இவரின் பாதம் தொட்டு ஆசி வாங்கியதும், இந்திய அளவில் புகழ் பெற்றார் சின்னபிள்ளை. முதல்வராக இருந்த கலைஞரின் பாராட்டையும் பெற்றவர் என்பதால், கலைஞர் மரணச் செய்தி கேட்டு கலங்கிப் போயிருந்த சின்னபிள்ளையைச் சந்தித்தோம்...
இப்ப நான் இருக்கும் பில்லுசேரியில முக்கால்வாசி கூரை வீடுகள்தான் இருந்துச்சு. குடிக்க தண்ணி, தெருவிளக்கு இப்படி ஒவ்வொண்ணுக்கும் பெண்கள் போராட வேண்டியிருந்துச்சு. அந்தப் பெண்களையெல்லாம் ஒண்ணு திரட்டி, விவசாயக் கூலிக்கு அனுப்பி என்னால முடிஞ்ச உதவி பண்ணுனேன். அந்தக் காலத்துல பெண்களுக்கு விவசாய கூலி ரொம்ப கம்மி. அதையும் உயர்த்துவதற்காக குரல் கொடுத்தேன். அடிப்படை வசதி இல்லாத கிராமங்களை மேம்படுத்துவதற்காக 1990-ஆம் வருஷம் வெறும் 4 பெண்களை ஒருங்கிணைத்து "களஞ்சியம்' மகளிர் குழுவை ஆரம்பித்தேன். இப்ப 16 மாநிலங்களில் 10 லட்சம் பெண்கள் எங்கள் குழுவில் இருக்கிறார்கள்.
வாஜ்பாய் அய்யா கையால விருது வாங்கியது எனக்கு மேலும் உத்வேகத்தைக் கொடுத்தது. ""சரி தம்பி, நான் கௌம்புறேன். மருந்து செலவுக்கு காசில்ல, களஞ்சியத்துக்குப் போனா உதவி பண்ணுவாக''’என்றவரிடம், “""போன மாசம்கூட முதல்வர் கையால அவ்வையார் விருதும் 1 லட்சமும் வாங்குனீங்களே, என்ன பண்ணுனீங்க?''’என்றதும், “""அதுவா தம்பி, இதுவரைக்கும் எனக்கு 4 லட்சம் வந்துச்சு. அம்புட்டையும் "டான் அறக்கட்டளை'க்கே கொடுத்துருவேன். ஏன்னா அவுகதான் என் பேரை விருதுக்கு பரிந்துரை பண்ணுவாக. இப்பதான் சின்னதா ஒரு வீட்டைக் கட்டினேன். அதுவும் என் பேரன் மழையில நனையாம தூங்குறதுக்குத்தான்''’எனச் சொல்லியபடியே வந்தவர், கலைஞர் குறித்தான நினைவுகளைச் சொல்ல ஆரம்பித்தார்.
""ஒருவாட்டி கலைஞர் அய்யா என்னைக் கூப்பிட்டனுப்பினார். கோபாலபுரம் வீட்டுக்குப் போனதும், ""வாங்க சம்பந்தி''ன்னு வாய் நிறைய கூப்பிட்டாரு அந்த மகராசன். இப்பக்கூட அவரு ஆஸ்பத்திரியில இருந்ததை டி.வி.யில, அதுவும் அவரு கொடுத்த டி.வி.யில பார்த்ததும் மனசு கொள்ளல... சாப்பாடு எறங்கல தம்பி. பாண்டி அய்யா கோவிலுக்குப் போயி, "ஏஞ்சாமீ... எனக்கு வயசு 78 ஆகிப்போச்சு. என் கண்ணுக்குப் பெறகுதான் எதுவும் நடக்கணும். கலைஞர் அய்யா உசுரோட இருக்கணும். ஏன்னா நம்ம ஊரைக் காக்கும் அய்யனாருய்யா அவரு'ன்னு வேண்டிக்கிட்டேன். ஆனா போய்ச் சேர்ந்துட்டாரே அந்த மவராசன்''’என கண்கலங்கினார் சின்னபிள்ளை.
-அண்ணல்