பாளை. சிறையில் அரங்கேறிய கலவரப் படுகொலையால், நெல்லை மாவட்டத்தில் சாதிக்கலவர அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
கடந்த ஏப்.17-20 நக்கீரனில், "காதலன் கதையை முடிக்க மாணவியின் கூலிப்படை' எனும் தலைப்பில் நெல்லை மாவட்டத்தின் பணகுடி நிகழ்ச்சி குறித்த செய்தியை வெளியிட்டிருந்தோம்.
ப்ளஸ் 2 மாணவன் விக்னேஷ், சக மாணவி ஒருவரை காதலித்தது குறித்தும், இடையில் அந்த மாணவி காதலனை மாற்றியதால், தன்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வெளியிடுவேன் என்று விக்னேஷ் மிரட்டியது குறித்தும், அதனால் விக்னேஷைத் தீர்த்துக்கட்ட அந்த மாணவி, கூலிப்படையை ஏவியது குறித்தும் அதில் நாம் விவரித்திருந்தோம்.
அந்தக் கூலிப்படை, விக்னேஷைத் தந்திரமாக பெத்தானியா மலைப்பகுதிக்கு வரவழைத்து, வீச்சரிவாள் மற்றும் வெடி குண்டுகளைப் பயன் படுத்தி, அவனைக் கொலை செய்ய முயல, அவன் மன்னிப்புக் கேட்டு, அவர்களின் காலில் விழுந்து கதறி, உயிர்தப்பி ஓட்டமெடுத்ததையும் கூட அதில் படம்பிடித்திருந்தோம். இதைத்தொடர்ந்து, களக்காடு இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் தலைமையிலான போலீஸ் டீம், அந்த கூலிப்படையைச் சேர்ந்த 4 பேரையும் சுற்றி வளைத்து அள்ளிக் கொண்டுக்கொண்டு சென்றனர்.
விசாரணையில் பொத்தையடி, விஜயநாரா யணம் மற்றும் வாகைக்குளம் பகுதிகளைச் சேர்ந்த கூலிப்படை நபர்களான முத்துமனோ, கண்ணன், சந்திரசேகரன், மாதவன் ஆகியோர்தான் அவர்கள் எனத் தெரியவந்தது. இந்த நான்குபேர் மீதும் வெடிகுண்டு, க்ரைம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீஸ் டீம், அவர்களை கடந்த 11-ந் தேதி ரிமாண்ட் செய்து, ஸ்ரீவைகுண்டம் சப்-ஜெயிலில் அடைத்தது. அங்குதான், பிரச்சினை பெரிதானது.
இந்த 4 பேரும், மறைந்த பசுபதி பாண்டி யனின் ‘தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப் பைச் சேர்ந்த தச்சநல்லூர் கண்ண பிரானின் சகாக்கள் என்கிறார்கள். இவர்களில் வாகைக்குளம் முத்துமனோ, தூத்துக்குடி மாவட்ட வல்லநாடு அருகிலுள்ள பக்கப்பட்டி கிராமத்தில் நடந்த, எதிர் சமூகக் கொலையில் தொடர்புடையவர்.
கொலை செய்யபட்டவரின் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அந்த சப்ஜெயிலில் இருந்ததால், முத்துமனோவின் டீம் அங்கு கொண்டு செல்லப்பட்டபோதே... இரு தரப்பினருக்கும் இடையில் உரசல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் தங்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று அஞ்சிய முத்துமனோவும் மற்றவர்களும், தங்களை வேறு சிறைக்கு மாற்றும்படி, ஸ்ரீவைகுண் டம் சப்ஜெயில் கண்காணிப் பாளரிடம் முறையிட்டிருக்கிறார்கள்.
இதன்பிறகு என்ன நடந்தது என்பதை காவல்துறையில் சிலரே நம்மிடம் விவரித்தனர்.
""முத்துமனோ டீமை கடந்த 22-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, அவர்களை, பாளை மத்திய சிறைக்கு எங்க போலீஸ் டீம் கொண்டு போயிருக்கு. மதிய உணவுக்குப் பின் இவர்கள் நால்வரையும் பிளாக்கில் அடைப் பதற்காக அங்குள்ள ஒரு பிளாக் பக்கம் இருக்க வைத்திருக்கிறார்கள். அங்குள்ள ஏ.பிளாக்கில் இருந்தவர் கள், முத்துமனோ தரப்பிற்கு எதிரானவர்களாம்.
அதோடு பக்க பட்டிக் கொலையில் பாதிக்கப்பட்டு முத்துமனோ மீது வன்மம் கொண்ட சிலரும் அங்கே இருந்திருக் கிறார்கள். இதையறியாத முத்துமனோ உள்ளிட்ட நான்கு பேர்களும் ஏ.பிளாக் அருகே செல்ல, அவர்களைத் தற்செயலாகப் பார்த்துவிட்ட அந்த இரு பிரிவினரும், ஆவேசமடைஞ்சிருக் காங்க. இதை முத்துமனோ டீம் கொஞ்சமும் எதிர்பார்க்கலை.
""அவனுகள விடாதலேய்...'' என்ற ஆவேசக் கூச்சலுடன், அவர்கள் முத்துமனோ உள்ளிட்ட நான்குபேரையும் சுற்றி வளைத்துத் தாக்கியிருக்கிறார்கள். கையில் கிடைத்த கல்லைக் கொண்டும் மூர்க்கமாக அவர்கள் அடிக்க, வலி பொறுக்கமுடியா மல் கத்திக் கதறியிருக்கிறார்கள். இவர்களின் கதறல் சத்தம் கேட்டு ஜெயில் வார்டன்கள் ஓடிவர, அவர்களையும் விரட்டியடித்த அந்தக் கைதிகள், சிக்கிகொண்ட முத்துமனோ டீமைப் பிடித்து, தலையைச் சுவரில் மோதி ரண வெறியாட்டம் நடத்தியிருக்கு. பிறகு சிறைக்காவலர்களால் ஒருவழியாக மோதல் கட்டுப்படுத்தப்பட்டிருக்கு. படுகாயமடைந்த நான்கு பேரையும் பாளை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். இவர்களில் தலையில் படுகாயமடைந்த முத்துமனோவுக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் பலனின்றி, அன்று இரவு ஏழரை மணிக்கு அவரின் உயிர் பிரிந்துவிட்டது. சப் ஜெயிலில் இருந்து பாளை சிறைக்கு அவர்களைக் கொண்டு போகும்போதே பிரச்சினையை போலீசிடம் சொல்லியிருந்தால், எதிரிகளின் கண்ணில் படாதபடி அவர்களை வேறு பகுதியில் அடைத்துக் கலவரத்தைத் தடுத்திருக்கலாம்''’என்கிறார்கள் கவலையாய்.
படுகாயமடைந்த கண்ணன், மாதவன், சந்திரசேகர் ஆகிய மூவரும் சிகிச்சையிலிருக்க, முத்துமனோ ஜெயிலில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அவர் தொடர்புடைய கிராமங்களில் கடும் பதற்றத்தைக் கிளப்பியிருக்கிறது. "சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதவரை உடலை வாங்கமாட்டோம்' என்று முத்துமனோ தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பாளை. மத்திய ஜெயில் சம்பவமறிந்து அங்கு வந்த நெல்லை மாநகர உதவி கமிஷனர்களான ஜான்பிரிட்டோ மற்றும் சதிஷ்குமார் உள்ளிட்டோர் ஸ்பாட்டுக்கு விரைந்து வந்து, சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் மற்றும் வார்டன்கள், சிறைக்கைதிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். "இந்த சிறையில் இதுபோல் அடிக்கடி கலவரம் நடக்கும்' என்று காவல்துறையினரே கூறுகிறார்கள்.
இதுகுறித்து நெல்லை மாநகர கமிஷனரான அன்புவிடம் கேட்டபோது, ""சம்பவத்திற்கு காரணமான ஏழு பேர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மூன்று ஜெயில் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சம்பவம் குறித்து நீதிமன்ற முதலாவது ஜுடீசியல் மாஜிஸ்திரேட் பாபு, பாளை. மத்திய சிறையில் விசாரணை நடத்தியிருக்கிறார். விசாரணை தொடர்கிறது''’என்றார்.
"ஜெயிலிலேயே கைதிகளுக்குப் பாதுகாப்பில்லை' என்ற நிலை துயரமானது. அந்தப் பகுதி கிராமங்களில் இரு சமூகத்தினரும் வன்மத்தோடு இருப்பது பகீரை ஏற்படுத்துகிறது.
-பரமசிவன்
படங்கள்: ப.இராம்குமார்