விழுப்புரத்தில் நடைபெற்றுள்ள நவீன கொள்ளைச் சம்பவ மொன்று பலரையும் ஆச்சரியப்பட வைத்துள் ளது.
கடந்த 12-ஆம் தேதி மாலை நான்குமணி அளவில் விழுப்புரம்- புதுச் சேரி சாலையிலுள்ள மகா ராஜபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் ஸ்டேட் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றின் ஏ.டி.எம். மையங்களில் வாடிக்கையாளர்கள் பணமெடுத்தபோது ஏ.டி.எம்.மில் பணம் எண்ணும் சத்தம் மட்டும் கேட்டுள்ளது, ஆனால் பணம் வரவில்லை. சரி, ஏதோ மிஷினில் கோளாறென்று வாடிக்கை யாளர்கள் திரும்பிச்சென்று விட்டனர். ஆனால் அவர்களது செல்போனுக்கு பணம் எடுக்கப் பட்டதாக எஸ்.எம்.எஸ். தகவல் வந்துள்ளது. வங்கி நேரம் முடிந்துவிட்டதால் மறுநாள் காலை வங்கிக்குச் சென்று விவரம்கேட்க முடிவுசெய்தனர்.
இந்நிலையில் அன்றிரவு 8 மணியளவில் ஏ.டி.எம். மையத்திற்கு நான்கு பேர் வந்துள்ளனர். அவர்களில் இருவர் அருகிலுள்ள பழக்கடையில் அக்கம் பக்கத்தை நோட்ட மிட்டபடி நின்று கொண்டனர். இரண்டு பேர் ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம். மையத்தினுள்ளே சென்றவர்கள் ஷட் டரை பாதியளவு இறக்கிவிட்டு நீண்ட நேரம் மையத்தி னுள்ளே இருந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த மையத்தின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த விஜயா, மையத்தினுள்ளே எட்டிப்பார்த்துள்ளார். அப்போது அவர்கள் மிஷினிலிருந்து பணம் வரும் கதவைத்திறந்து கத்தை கத்தையாக பணத்தை எடுத்து வைப்பதைப் பார்த்து, அருகிலுள்ள கடைக்காரர்களிடம் நடப்பதை ரகசியமாகக் கூறியுள்ளார். அங்கிருந்த கடைக்காரர்கள் மர்ம நபர்களை மடக்கிப் பிடிக்க முயலும்போது உஷாரான கொள்ளையர்கள் தங்கள் கூட்டாளிகளுடன் காரில் தப்பிச் சென்றுவிட்டனர்.
கொள்ளையர்கள் வந்த கார் புதுச்சேரி பகுதியை நோக்கிச் சென்றுள்ளது இதுகுறித்த தகவலை காவல்துறைக்குத் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் உடனடியாக ஏ.டி.எம். மையத்தின் பராமரிப்பு அதிகாரிகளை வரவழைத்துள்ளனர். உள்ளேசென்று ஆய்வு செய்ததில், ஏ.டி.எம். எந்திரத்திலிருந்து பணம் வெளியேவரும் வழியில் அலுமினியத் தகடொன்றை வைத்து அடைத்துவிட்டனர். இதனால் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும்போது, பணம் வெளியேவராமல் தேங்கிநின்றுள்ளது. இரவு எட்டு மணியளவில் வெளியேவராமல் தடைப்பட்ட பணத்தை நவீன முறையில் திறந்து பணத்தை எடுத்துள்ளனர் என வங்கி அதிகாரிகள் கண்டு கொண்டனர்.
இதையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சரவணன் ஏ.டி.எம். கொள் ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். விழுப்புரம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரகுமார் மேற்பார்வையில் நகர காவல் ஆய்வாளர் சித்ரா, காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ், தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் தனலியோ சார்லஸ் மற்றும் சைபர் க்ரைம் போலீசார் அதில் இடம்பெற்றனர். அப்பகுதியில் பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வுசெய்தனர். அதில் கொள்ளையர்களின் தோற்றமும், விழுப்புரம் சிக்னல் பகுதி உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வுசெய்ததில் கொள்ளையர்கள் சென்ற காரின் எண்ணும் கிடைத்தது. அதைக் கொண்டு அந்த வாடகை கார் டிரைவரை மடக்கிப்பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் வடமாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் ஆன்லைன் மூலம் காரை வாடகைக்கு எடுத்ததாகவும், அவர்களை விழுப்புரம் பகுதிக்கு அழைத்துச்சென்றுவிட்டு மீண்டும் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குச் சென்றதாகவும் தெரிவித்தார். மேலும் பெங்களூர் செல்லும் டபுள்டக்கர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறிச்சென்றதாகவும் கூறியுள்ளார்.
சுதாரித்துக்கொண்ட தனிப்படை போலீசார் ரயில்வே போலீசாரை தொடர்புகொண்டு உதவிகேட்டனர். அதன்படி ஏ.டி.எம். கொள்ளையர்களின் படத்தை செல்போன் மூலம் பரிமாறினர். அந்த ரயில் காட்பாடியை கடந்து சென்றுகொண்டிருந்தது. உடனே ரயில்வே போலீசார் எந்த கோச்சில் கொள்ளையர்கள் பயணம் செய்கிறார்கள் என்பதை உறுதிசெய்தனர். ரயிலில் பயணிகளுக்கு டீ, வடை விற்பனைசெய்யும் நபர்களைப் பயன்படுத்தி அவர்கள் நடமாட்டத்தை தீவிரமாகக் கண்காணித்தபடி இருக்குமாறு அறிவுறுத்தினர். அந்த ரயில் கர்நாடக மாநிலம் மைசூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் நின்றபோது போலீசார் சுற்றிவளைத்துப் பிடித்தனர்.
விழுப்புரம் கொண்டுவரப்பட்ட கொள்ளையர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், உத்தரப்பிரதேச மாநிலம், முஸ்தாகி மாவட்டம், ஹீராப்பூர் பகுதியைச் சேர்ந்த சோனு, லவ்குஷ், சஞ்சய்குமார், சிவா எனும் 30 வயதுக்குட்பட்ட அவர்களிடமிருந்து 10,200 ரூபாய் பணம், நான்கு செல்போன்கள், நான்கு ஏ.டி.எம். கார்டுகள், ஏ.டி.எம். கதவினை அடைக்கப் பயன்படுத்தப்படும் அலுமினியத் தகடுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர்கள் நால்வரும் வங்கி ஏ.டி.எம்.மை கொள்ளையடித்தல், தடுக்க முயன்ற பொதுமக்களை காரை ஏற்றி கொலைசெய்ய முயற்சித்ததாக வழக்குப் பதிவுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இந்தக் கொள்ளையர்கள் விழுப்புரம் எம்.ஜி. சாலை, மாம்பழப்பட்டு சாலை, ரெட்டியார் மில் பஸ் நிறுத்தம் ஆகிய பகுதிகளிலிருந்த மேலும் சில ஏ.டி.எம். மிஷின்களில் அலுமினியத் தகடை பொருத்தி ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் எடுத்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
கடந்த 11-ஆம் தேதி உத்தரப் பிரதேசத்திலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த கொள்ளையர்கள், திருவல்லிக்கேணி பகுதியில் சொகுசு ஓட்டலில் அறையெடுத்து தங்கி, பிறகு அங்கிருந்து வாடகைக் கார் மூலம் விழுப்புரம் வந்து கொள்ளைச் சம்பவங்களை அரங்கேற்றியுள்ளனர்.
கொள்ளை நடந்த மூன்றே நாட்களில் ஏ.டி.எம். கொள்ளையர்களை மடக்கிப்பிடித்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.