நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் நிகழ்வுகள் குறித்து தனக்கு ஏற்பட்ட நேரடி அனுபவங்களை நக்கீரனிடம் பகிர்ந்துகொள்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனரும் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன்.
கலைஞர் தலைமையிலான ஆட்சியின் போதும், அம்மையார் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி யின்போதும் எம்.எல்.ஏ.வாக இந்த அவையில் வீற்றிருந் திருக்கிறேன். தற்போது தி.மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியிலும் இந்த சட்டமன்றத்தில் பங்கேற்கும் வாய்ப்பினை எனக்கு மக்கள் அளித்திருக்கிறார்கள். இந்த வாய்ப்பினை பெருமிதமாக முதலில் கருதுகிறேன்.
முன்பைவிட இப்போது நிறைய வித்தியாசத்தையும் ஆச்சரியத்தையும் கவனிக்க முடிகிறது. குறிப்பாக, கடந்த காலங்களில், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் எதிரி கட்சிகளாகவே சட்டமன்றத்தில் வாள் சுழற்றிய சம்பவங்கள் நிறைய உண்டு. ஜெயலலிதா அவர்களின் காலத்தில் சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் அ.தி.மு.க.வின் செயல்பாடு அத்தகையதாக இருந்தது. அத்தகைய மனநிலையிலிருந்து அ.தி.மு.க. தலைவர்களும் எம்.எல்.ஏ. க்களும் தற்போது விடுபட்டிருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.
சபை நடந்துகொண்டிருக்கும்போது டீ குடிக்க சட்டமன்றத்தை ஒட்டியுள்ள கேண்டீனுக்கு எல்லா கட்சி எம்.எல்.ஏ.க்களும் சென்று வருவதுண்டு. ஜெயலலிதா அம்மையார் இருந்த காலங்களில் தி.மு.க. உறுப்பினர் ஒருவர் கேண்டீனில் இருந்தாலே அந்த பக்கம் எட்டிக்கூட பார்க்க மாட்டார்கள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள். இப்போது சபை கேண்டீனில் தி.மு.க. கரை வேட்டியும் அ.தி.மு.க. கரை வேட்டியும் ஒரே டேபிளில் உட்கார்ந்து கதை பேசிக்கொண்டே ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை பார்க்கலாம்.
முதல்வர் ஸ்டாலின் ஆட்சியிலான இந்த சட்டமன்றத்தில், எதிரி கட்சி என்கிற மனநிலையிலிருந்து விடுபட்டு, ஆக்கப்பூர்வமான எதிரெதிர் கட்சிகளாக தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் செயல்படுவதை என்னால் பார்க்க முடிந்தது. அதற்கேற்ப விவாதங்கள் நடக்க அனுமதித்தார் முதல்வர் ஸ்டாலின்.
குறிப்பாக, அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. ஆகிய எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் பேசும் போது, அமைச்சர்கள் அடிக்கடிக் குறுக்கிடுவது உண்டு. இது தொடர்ச்சியாக நடந்ததால், குறுக்கிட்ட முதல்வர் ஸ்டாலின், ‘’எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும்போது, அமைச்சரின் பெயரை குறிப்பிட்டோ அல்லது நேரடியாகவோ குற்றச்சாட்டுகள் சொன்னால் மட்டுமே குறுக்கிட்டுப் பதில் சொல்லுங்கள். மற்றபடி, அவர்களின் பேச்சுக்கு இடையூறு செய்யாதீர்கள். பேசி முடித்ததற்கு பிறகு அமைச்சர்கள் தங்களின் பதிலுரையில் விளக்கம் தரட்டும். எதற்கெடுத்தாலும் குறுக்கிட்டுப் பேசுவதை அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும் என்று தி.மு.க. அமைச்சர்களுக்கு அறிவுறுத்தினார். அவரின் இந்த அறிவுரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் மேஜையை தட்டி தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
அது மட்டுமல்ல, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பேச்சு நீண்டுகொண்டே சென்றால் சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு, சீக்கிரம் முடியுங்களேன் என்பார். அப்போது முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி உறுப்பினர் பேசட்டும்; முழுமையாக பேச நேரம் கொடுங்கள் என்று சபாநாயகரிடம் வாதிட்டு அதிக நேரம் பேச அனுமதி வாங்கித் தருவார். அ.தி.மு.க.வினருக்கே இது ஆச்சரியம்தான். தி.மு.க. உறுப்பினர்களுக்கும் தி.மு.க.வின் தோழமைக் கட்சி உறுப்பினர்களுக்கும் 20 நிமிடம் பேச வாய்ப்புக் கிடைத்தால் எதிர்க்கட்சிகளுக்கு 40 நிமிடத்துக்கும் அதிகமான நேரம் கொடுக்கப்பட்டது.
என்னிடம் பேசும் அ.தி.மு.க. உறுப்பினர்கள், ஸ்டாலினிடம் இப்படிப்பட்ட மாற்றத்தை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை; சட்டமன்ற ஜனநாயகத்தின் பாதுகாவலராகத் தெரிகிறார். கலைஞரிடம் பாடம் பயின்றவர் அல்லவா என்று அவர்கள் மனம் திறந்து மெய்சிலிர்த்துப் போனதை நான் உணர்ந்திருக்கிறேன்.
நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மானிய கோரிக்கை 24-ந்தேதி நடந்தது. மதியம் 1 மணி இருக்கும். கேண்டீனுக்கு சென்றேன். எனது டேபிளுக்கு வந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான ஒருவர், நாங்க ரொம்பவுமே மாறிட்டோம்; ஸ்டாலினின் சபை நாகரிகம் எங்களை வியக்க வைக்கிறது. இனிமே இப்படித்தான். சண்டை போட வேண்டிய இடத்தில் சண்டை போடுவோம்; பாராட்ட வேண்டிய இடத்தில் பாராட்டுவோம் என்றார். தி.மு.க.வின் எதிர்ப்பிலேயே 50 ஆண்டுகாலம் வளர்ந்த அ.தி.மு.க.வை முதல் கூட்டத்திலேயே இப்படி பேச வைக்கும் அளவுக்கு முதல்வர் ஸ்டாலினின் பண்பட்ட அணுகுமுறை அமைந்திருக்கிறது.
சபாநாயகர் சபையை நடத்தும் விதமும் பல சமயங்களில் சுவாரஸ்யமாக இருக்கும். ஒரு பொருள் குறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி பேசிக்கொண்டே இருந்தார். உறுப்பினர்கள் எல்லாம் நெளிந்து கொண்டிருக்க, அந்த சூழலை சபாநாயகர் உணர்ந்து கொண்டாரோ என்னவோ, உடனே, "மாண்புமிகு உறுப்பினர் ஜி.கே. மணியும் நானும் ஆசிரியர்களாக இருந்தவர்கள். பீரியடு முடிந்து போனால் பாடம் நடத்துவதை நிறுத்திவிட வேண்டும் என தெரிந்த வர்கள்” என்று சபாநாயகர் சொல்ல, அதன் அர்த்தத்தை புரிந்துகொண்ட தால் சபையே கலகலவென சிரித்து மகிழ்ந்தது. ஜி.கே.மணிக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. சபாநாயகரின் கமெண்ட்டை முதல்வரும் ரசித்த படியே, உறுப்பினர் முழுமையாக பேசி முடிக்கட்டும்'' என சொன்னார்.
அதேபோல, பாராட்டுதல் களாலும் இந்த முறை சபை நிறைந் திருந்தது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டமன்றத்திற்கு 10 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு 50 ஆண்டுகால பொன்விழாவை நினைவு கூர்ந்திடும் வகையில் பாராட்டு தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் ஸ்டாலின். துரைமுருகனே இதனை எதிர்பார்க்கவில்லை. தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர், கலைஞருக்கும் துரைமுருகனுக்கும் இடையே இருந்த நட்பையும் பாசத்தையும் உணர்வுப்பூர்வமாக சுட்டிக்காட்டிவிட்டு, நூறாண்டுகால சட்டமன்றத்தில் அரை நூற்றாண்டுக்கு முன்பு இங்கு வந்தவர் அண்ணன் துரைமுருகன். என்னை இளைஞராக பார்த்ததாக அடிக்கடி அவர் சொல்வார். நான் அவரை கலைஞர், பேராசிரியர் இடத்தில் வைத்துப் பார்க்கிறேன் என்று சொன்னபோது, துரைமுருகனின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது.
தொடர்ந்து பேசிய முதல்வர், கலைஞரின் இதயத்தி லேயே ஆசனம் போட்டு உட்கார்ந்திருந்தவர். அத்தகைய இடம் எல்லோருக்கும் கிடைத்துவிடாது. நீர்வளத்துறை அமைச்சராக அவர் பொறுப்பேற்றிருப்பது தி.மு.க.வுக்கும் தி.மு.க. ஆட்சிக்கும் பெருமை; அவையின் முன்னவராக அவர் இருப்பது இந்த அவைக்கு பெருமை. 1971 முதல் 10 முறை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துரைமுருகன் பொன்விழா நாயகராக இருக்கிறார் என்று பாராட்டினார்.
அந்த பாராட்டு தீர்மானத்தின் மீது முதலில் பேசிய நான், துரைமுருகனின் ஆளுமை குறித்தும் சட்டமன்ற பணிகள் குறித்தும் விவரித்துப் பேசினேன். தொடர்ந்து அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் பேசினர். எதிர்க்கட்சியின் துணைத்தலைவர் ஓ.பி.எஸ். பா.ம.க. ஜி.கே.மணி, பா.ஜ.க. நயினார் நாகேந்திரன் வரை எல்லோரும் துரைமுருகனை பாராட்டி மெச்சினர். அந்த புகழுரைகள் இதுவரை துரைமுருகன் கண்டிராதவை. குறிப்பாக, ஓ.பி.எஸ். பேசும்போது,”"இந்த அவையில் எல்லோரையும் சிரிக்க வைக்கவும்; அழ வைக்கவும்; ரசிக்க வைக்கவும் தெரிந்தவர் அண்ணன் துரைமுருகன். ஆளும் தரப்பும் எதிர் தரப்பும் சபையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு இலக்கணமானவர். அவரிடமிருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறோம். அவருடையை சட்டசபை பணிகள் நீண்ட நெடிய வரலாறு கொண்டவை'' என்றார் ஓ.பி.எஸ். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கே.பி.முனுசாமி என அ.தி.மு.க.வின் தலைவர்கள் எல்லோரும் துரைமுருகனின் கைகளை குலுக்கி வாழ்த்துகளை தெரிவித்ததில் உணர்ச்சிக் குவியலாக இருந்தார் துரைமுருகன்.
தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்து பேசிய துரை முருகன், சட்டசபையை தவிர வேறு இடமாக இருந் திருந்தால் ஸ்டாலினை கட்டிப்பிடித்து அழுதிருப்பேன்‘’என்றவர் சிறு குழந்தைபோல அழுதார். அதேபோல, கலைஞருக்கு நினைவிடம் அமைக்கப்படுவது குறித்து சபையில் அறிவித்தார் முதல்வர். அதனை வரவேற்றுப் பேசிய ஓ.பி.எஸ்.,’"எனது தந்தை கலைஞரின் தீவிர பக்தர். அவருடைய பெட்டியில் எப்போதும் பராசக்தி, மனோகரா பட வசன புத்தகங்கள் இருக்கும். இந்த சபையில் சிறப்புமிக்க பல சட்டங்களையும் திட்டங்களையும் கொண்டு வந்தவர் கலைஞர். அவருக்கு நினைவிடம் அமைவதை அ.தி.மு.க. உறுப் பினர்கள் எல்லோரும் வரவேற்கிறோம்'' என்றார்.
இந்த வாரம், பாராட்டு மழையில் சபை நனைந்திருந்தாலும் காரசார விவாதங்களுக்கும் பஞ்சமில்லை. கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கையின்போது பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அ.தி.மு.க. அரசின் 10 ஆண்டுகால ஆட்சி, கூட்டுறவுத்துறையின் பொற்காலமாக இருந்தது என்றார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, கூட்டுறவுத்துறையில் நடந்த தவறுகளையும், பயிர்க்கடன் வழங்கியதில் நடந்த விதிமீறல்களையும் சுட்டிக்காட்டியதோடு கூட்டுறவு சங்க தேர்தலின் தவறுகளையும் விவரித்தார். இதனை வலிமையான ஆதாரங்களுடன் மறுக்க முடியாமல், ஜனநாயக முறைப்படிதான் தேர்தல் நடந்தது. கூட்டுறவுத்துறையில் எந்த தவறுகளுமே நடக்கவில்லை‘’ என்றார் செல்லூர் ராஜு. கூட்டுறவு வங்கிகளில் 3 லட்சம் ரூபாய் வரை மகளிர் சுய உதவிக்குழு பெறும் கடன்களுக்கான வட்டி விகிதத்ததை 12-லிருந்து 7 சதவீதமாக குறைத்து அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்தது வரவேற்பை பெற்றது.
அதேபோல, உணவுத்துறையின் மூலம் அ.தி.மு.க. ஆட்சியில் பருப்பு கொள் முதலில் ஊழல் நடந்ததாக ஒரு பிரச்சனை வெடித்த போது முன்னாள் அமைச்சர் காமராஜ், ’"பருப்பு, பாமாயில் கொள்முதலை ஏனோதானோவென்று செய்துவிட முடியாது. 10 ஐ.ஏ.எஸ்.கள் கொண்ட வாரியமும், 3 ஐ.ஏ.எஸ்.கள் கொண்ட துணைக்குழுவும் இருக்கிறது. சந்தை மதிப்பைவிட ஒரு ரூபாய் கூட அதிகமாக கொடுத்துவிட முடியாது. டெண்டரில் முறைகேடு நடந்திருந்தால் நடவடிக்கை எடுங்கள்'' என்று சவால்விடுவது போல பேசினார்.
அதனை எதிர்கொண்ட அமைச்சர் சக்கரபாணி, "கடந்த ஆட்சியில் பருப்பு விலை 120-க்கு வாங்கப்பட்டது. நாங்கள் இப்போது 76 ரூபாய்க்கு வாங்குகிறோம். இதனால் அரசுக்கு 75 கோடி லாபம். அதேபோல பாமாயிலிலும் 5 கோடி லாபம்''’என்று சுட்டிக்காட்டியவர், "ராணிப் பேட்டை நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் மட்டும் 3.28 கோடிக்கு முறைகேடுகள் நடந்துள்ளன. இதற்கு சரிவர பதில் சொல்லாத தால் 8 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடந்து வருகிறது''’என்று அழுத்தமாக சொன்னார்.
இப்படி, இந்த வாரத்தின் சட்டமன்ற நிகழ்வுகள் தி.மு.க.வுடன் அ.தி.மு.க.-பா.ம.க. தலைவர்கள் காட்டும் நெருக்கம், பாராட்டுதல்கள், காரசார விவாதங்கள் என வெகு சுவாரஸ்யமாக இருந்ததை நான் கவனித்தேன். சட்டமன்றத்தின் மூலம் அரசியல் நாகரீகத்தை வளர்த்தெடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
_______________________________________
இறுதிச் சுற்று
நெடுஞ்சாலைத்துறையின் கறுப்பு பக்கங்கள்!
தமிழக அரசின் நிதி நிலை பற்றி நிதியமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட்டு பரபரப்பாக்கினார். இந்நிலையில், ‘நெடுஞ்சாலைத்துறையின் கறுப்புப் பக்கங்கள்‘ என்கிற தலைப்பில் துறையில் நடந்த நிர்வாக சீர்கேடுகளையும் ஊழல்களையும் அம்பலப்படுத்தும் வகையில் வெளியிடுகிறார் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல்.ரவி.
அ.தி.மு.க. ஆட்சியில் முதல்வராகவும் துறையின் அமைச்சராகவும் இருந்த எடப்பாடியின் நிர்வாகத்தில் நெடுஞ்சாலைத்துறை எந்தளவுக்கு ஊழல்களால் ஆக்ரமிக்கப்பட்டிருந்தது என்பதை 46 பக்கத்தில் விவரிக்கிறது அந்த வெள்ளை அறிக்கை. ஒப்பந்த முறைகேடுகள், போலி ஆவணங்கள், தேவையற்ற பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு உள்பட இந்த கறுப்புப் பக்கங்களில் உள்ள இந்த ஊழல்களை வேறு தலைப்புகளில் நக்கீரன் ஏற்கனவே அம்பலப்படுத்தியிருக்கிறது.
-இளையர்