தென்னிந்தியாவின் பிரபல சிவன் கோவில்களில் முக்கியதலமாகிவிட்டது அண்ணாமலையார் கோவில். தினமும் ஆந்திரா, தெலுங் கானா, கர்நாடகா மாநில பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வருகிறார்கள். வெளிமாநில பக்தர்கள் வருகை அதிகரித்த திலிருந்து திருவண்ணாமலையின் அடையாளமே மாறிவருகிறது. நகரெங்கும் பெருகிவரும் ஹோட்டல்கள், தங்குமிடங்கள்... அங்கெல்லாம் வெளிமாநில பக்தர்களை அழைத்துச்செல்ல ஆட்டோக்கள், வாகனங்களென நகரமே மக்கள் நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. திருவண்ணா மலை நகரில் மட்டும் 2500 ஆட்டோக்கள் ஓடுகின்றன. வெளிமாநில பக்தர்கள் வருகையால் திருவண்ணாமலையின் அடையாளம் மாறுவ தோடு, சமீப காலமாக திருவண்ணாமலை என்ற பெயரே மாற்றப்படுவது தான் உள்ளூர் மக்களி டையே கொந்தளிப்பை ஏற்படுத்திவருகிறது.
ஆந்திரா, கர்நாடகா பக்தர்கள், திருவண்ணா மலையை அருணாச்சலா, அருணாச்சலம் எனக் குறிப்பிடுகின்றனர். பேருந்தில், ரயிலில் டிக்கட் எடுக்கும்போது, "அருணாச்சலாவுக்கு டிக்கட் தாங்கள்' என்கிறார்கள். ஆந்திராவை சேர்ந்தவர்கள் திருவண்ணா மலையில் மண்டபங்கள், ஹோட்டல்கள் புதிய தாக நடத்தத் துவங்கியுள்ளார்கள். அந்த மண்டபங்களில் திருவண்ணாமலையின் பெயரை அருணாச்சலா என்றே குறிப்பிடுகிறார்கள். ஆந்திரா பேருந்துகளில் திருவண்ணாமலைக்கு பதில் அருணாச்சலம் என எழுதிவருகிறார்கள். இப்போது ஆந்திராவிற்கு திருவண்ணாமலை வழியாக போய்வரும் தமிழ்நாடு அரசு பேருந்து களிலும் அருணாச்சலம் என எழுதியுள்ளார்கள். எதிர்ப்புக்குரல் எழுந்ததும் அதனை திரும்பப் பெற்றுள்ளார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர், வழக்கறிஞர் பாசறை.பாபு, "அண்ணா மலையார் கோவில் என்பதுதான் இக்கோவிலின் பெயர். இதனை சமஸ்கிருதத்தில் அருணாச்ச லேஸ்வரர் எனப் பெயர் மாற்றினார்கள். உள்ளூர் மக்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இன்ற ளவும் அண்ணாமலையார் கோவில் தான். சமீப காலமாக ஆந்திரா, தெலுங்கானா விலிருந்து வரும் பக்தர்கள், அருணாச்சலா என அழைக் கத் துவங்கினார்கள். ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் முதலில் அவர்களின் மொழியை அழிக்க வேண்டும் என்பார்கள். அதனைத்தான் ஆந்திரா, தெலுங் கானா மக்கள் திருவண்ணாமலையில் செய்கிறார்கள் என நினைக்கிறேன். திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில் என்பது தமிழர் ஆட்சிக்குட் பட்ட பகுதியாக இருந்தது. மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது திருப்பதி, சித்தூர் பகுதிகள் ஆந்திர மாநிலத்தில் சேர்க்கப்பட்டது. அப் போதே அதை எதிர்த்து பல போராட் டங்கள் நடைபெற்றது என்பது வரலாறு. இன்றளவும் திருப்பதி திருமலைக்கு செல்லும் பக்தர்களில் 30 சதவீதம் பேர் தமிழர்கள். கோவில் சுவரிலிருந்த தமிழ்க் கல்வெட்டுக்களை அழித்தார்கள். இதுகுறித்து ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கலான போது, கடும் கண்டனம் தெரிவிக்கப் பட்டது. அப்போதும் தங்கத்தகடு பதிக்கிறோம் எனச்சொல்லி கல் வெட்டுக்களை மறைத்து வைத்து அந்த கோவிலுக்கும், தமிழர்களுக்கும் எந்த பங்கும் இல்லை என்பதைப்போல் திட்டமிட்டு மறைத்தார்கள்.
அந்த மாநில மக்கள் தான் திருவண்ணாமலை என்கிற பெயரை அருணாச்சலா என மாற்றிக்கொண் டிருக்கிறார்கள். திருப்பதியின் பெயரை திருவண்ணாமலை என மாற்ற ஒப்புக்கொள்வார்களா? பிற மாநில மக்கள் பக்தியோடு இங்கே வரட்டும், இங்கேயே தங்கட்டும், தொழில் செய்யட்டும். எங்கள் ஊரின் பெயரை, கடவுளின் பெயரை மாற்றுவதை அனுமதிக்க முடியாது'' என்றவரிடம், அருணாச்சலா என சில நூல்களிலிருந்து ஆதாரத்தைக் காட்டினால், "இது அண்ணா நாடு என இலக்கியத்தில், வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது, அதன்படி அண்ணா நாடு எனப் பெயர் வைக்க சம்மதமா?'' எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், "திருநாவுக்கரசர், அருணகிரிநாதரால் பாடல்பெற்ற இத்தலங்களில் பெரும்பாலான பாடல்களில் அண்ணாமலை, உண்ணாமுலை அம்மன் என்றே பாடல் இயற்றப்பட்டு பாடப்பட்டுள்ளன. பார்ப்பனீயம் திட்ட மிட்டு அண்ணாமலையாரை அருணாச்சலேஸ்வரர் என்றும், உண்ணாமுலையை அபிதகுஜலாம்பாள் எனவும் மாற்றிவிட்டார்கள். இப்படி ஊர்ப்பெயரை மட்டுமல்ல, மாட வீதியில் பெரிய தெருவில் ஆந்திரா மக்கள் ஒரு திருமண மண்டபத்தை விலைக்கு வாங்கி, ஊரின் பெயரை அருணாச்சலம் எனக் குறிப்பிட்டுள்ளார்கள். கிரிவலப் பாதையில், பெண்கள் குழந்தை பெற்றெடுக்கும்போது எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதை ஆண் சமுதாயத் துக்கு தெரியப்படுத்த, சிறிய பாறையின் துளையில் ஒருபக்கம் நுழைந்து மற்றொரு பக்கம் வெளிவருவது போல் செய்து வைத்துள்ளார்கள், இதனை இடுக்குப் பிள்ளையார் என அழைத்து வணங்கிவருகின்றனர். இதனை ஆந்திரா, தெலுங்கானா மக்கள், 'மோட்ச மார்க்கம்' எனப் பெயர் வைத்ததால், அண்ணாமலை யாரை தரிசிக்க க்யூ நிற்பதுபோல் கிலோமீட்டர் கணக்கில் இங்கும் நிற்கிறார்கள்'' என வேதனைப்படுகின்றனர்.
சித்திரை மாத பௌர்ணமியன்று சங்கி அமைப்பின் தலைவர் ஒருவர், "ஆன்மிக பூமியான இங்கு அசைவம் விற்பனை தடை செய்யவேண்டும்'' எனக் கோரிக்கை விடுத்தார். மக்களிடமிருந்து எதிர்ப்பு எழுந்ததும் அடங்கிப்போனார்கள். இதையே ஓராண்டுக்கு முன்பு கவர்னரும் வெளிப்படுத்தினார், இந்துத்துவா அமைப்புகள், அசைவத்தை தடை செய்யவேண்டுமென்று தொடர்ச்சியாக சொல்லிவருகிறார்கள். பக்தியோடு மக்கள் குவியும் நகரத்தின் பெயர்களை பா.ஜ.க., இந்துத்துவா பெயராக மாற்றிவருகிறது. பா.ஜ.க. ஆளும் உ.பி., பீகார் போன்ற மாநிலங்களில் இப்படி பல ஆன்மிக நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட் டுள்ளன. அந்த வரிசையில் திருவண் ணாமலையின் பெயரை, அடை யாளத்தை மாற்ற முயற்சிக்கிறார்கள்.
படங்கள்: எம்.ஆர்.விவேகானந்தன்