தன் பள்ளிப்பருவம் தொட்டு இறுதிக்காலம் வரை பத்திரிகையாளராகவே வாழ்ந்து மறைந்தவர் கலைஞர். தான் ஒரு பத்திரிகையாளர் என்பதால் பதவித் தோரணைகளைத் தவிர்த்து, இயல்பிலேயே பத்திரிகையாளர்களை அரவணைத்துக் கொள்பவர். அவரது மறைவையொட்டி, தமிழகத்தைச் சேர்ந்த மிகமுக்கியமான பத்திரிகையாளர்கள் கலைஞருடனான தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், அதை மக்களிடம் கொண்டுசெல்லவும் "கருத்துரிமை காத்தவர் கலைஞர்'’ என்ற தலைப்பில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி திருச்சியில் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை திருச்சியிலுள்ள கலைஞர் அறிவாலயத்தில் மா.செ. கே.என்.நேரு செய்திருந்தார். பந்தல் சிவா கைவண்ணத்தால் கலைநயத்துடன் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் சூரியக்கதிர்களுக்கு நடுவில் கலைஞரின் புகைப்படம் இருந்தது, கலைஞரே கூட்டத்தை ரசிப்பது போன்ற நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல், ‘"புத்தகத்தில் உலகத்தைப் படித்தால் அறிவு செழிக்கும், உலகத்தையே புத்தகமாக படித்தால் அனுபவமாக தழைக்கும்'’ என்றும், "நீதியற்ற ஆட்சிக்கு புகழாரம் சூட்டுவோரும், நெருப்புக்கு பஞ்சு மெத்தை வைப்போரும் ஒருவகையினரேயாவர்'’என்றும் மேடையின் இரண்டு பக்கங்களிலும் கலைஞரின் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு ஊடகவியலாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர். மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதிமரியாதை நடந்ததால், நிகழ்ச்சி 2 மணிநேரம் தாமதமாகவே தொடங்கியது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நமது நக்கீரன் ஆசிரியர், “"கருத்துரிமையை கலைஞர் மட்டும் எடுத்துக்கொள்ளவில்லை. அதை அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்தார். ‘அவர்போட்ட ரோட்டில்தான் நாங்கள் நடக்கிறோம்’ என அடிக்கடி சொல்வேன். அடக்குமுறைகளால் கொல்லப்பட்ட அய்யா கணேசனுடைய படம் திறந்து கருத்துரிமை காக்க மிகப்பெரிய நிகழ்ச்சி நடத்தினோம். அதைத்தொடர்ந்து ‘"நக்கீரன் இவ்விடத்தில் பிரிண்ட் செய்து தரப்படமாட்டாது'’ என போர்டுகளை வைத்தன பிரிண்டிங் பிரஸ்கள். அப்போது முரசொலி மட்டும்தான் எங்களுக்காக முன்வந்தது. பொடா சட்டத்திற்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தவர் கலைஞர். வாழ்நாள் முழுவதும் ஓடிக்கொண்டிருந்த கலைஞர் தன் ரிலே பேட்டனை ஸ்டாலினிடம் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். கலைஞர் என்றும் நம்முடன் இருப்பார்''’என நெகிழ்ந்து பேசினார்.
"கலைஞரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள்கூட அவருக்கு அஞ்சலி செலுத்தியது பெருமை' என தன் பேச்சைத் தொடங்கிய தி இந்து ஆசிரியர் என்.ராம், ""முரசொலியை 75 ஆண்டுகாலம் நடத்தியது கலைஞரின் மறுக்கமுடியாத சாதனை. கலைஞர் சிறந்த உழைப்பாளி; பல்வேறு துறைகளில் செயலாற்றியவர். எமர்ஜென்சியை எதிர்த்த ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். அதை எதிர்க்க கலைஞர் பயப்படவில்லை. வாசகர்களின் உணர்ச்சியைப் புரிந்துகொள்ளும் பொறுப்பு பத்திரிகையாளர்களுக்கு இருக்கிறது. கலைஞர் இலக்கிய இதழியலாளர்; தகவல்களின் அரசன். விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள்தான் இன்றைய அரசியலில் இருக்கிறார்கள்''’என்றார்.
""தமிழ்நாட்டிற்கு முதல்வராக ஒரு அறிஞர் வந்தார், பின் கலைஞர் வந்தார். தமிழர்கள் கொடுத்து வைத்தவர்கள். தமிழ்த்தாயின் கருத்துரிமையைக் காத்துநின்று மீட்டெடுத்தவர் கலைஞர். தமிழ் வெகுமக்களிடம் சிலப்பதிகாரத்தையும், திருக்குறளையும் கொண்டுசேர்த்தார். கண்ணகி சிலையைப் பார்க்கும் போதெல்லாம் இளங்கோவடிகள் மட்டுமல்ல… கலைஞரும் என் நெஞ்சில் நிற்கிறார்''’என பேசினார் பேராசிரியர் அருணன்.
"தான் கலைஞருக்கு புகழஞ்சலி செலுத்த வரவில்லை; நன்றியஞ்சலி செலுத்த வந்திருக்கிறேன்' எனத்தொடங்கிய நியூஸ் 18 தமிழ்நாடு ஆசிரியர் குணசேகரன், மிகக்கடுமையாக கலைஞரை விமர்சித்ததையும், அதற்கு அவதூறு வழக்கிற்கு பதிலாக பதில் கட்டுரை வந்ததையும் குறிப்பிட்டுப் பேசினார். தொடர்ந்து, ""எழுத்தின் மீது தீராக்காதல் கொண்ட கலைஞர், அதை மக்களின் சுயமரியாதைக்காகவும், சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து பயன்படுத்தினார். நவீன தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பி. வள்ளுவர் கோட்டம் அவரை இருட்டடிப்பு செய்து திறக்கப்பட்டது. ‘சரித்திரத்தில் நமக்கு கிடைக்கிற இடம், சலுகையால் பெறக்கூடியதல்ல''’என்று கலைஞர் எழுதியதைச் சுட்டிக்காட்டி நெகிழ்ச்சியடைந்தார்.
"அவனை என்றோ ஒருநாள் பார்க்கவேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு எழுதுங்கள். அதுதான் விமர்சனத்திற்கான அளவுகோல்' என்ற கலைஞரின் கூற்றைக் குறிப்பிட்டுப் பேசிய கலைஞர் செய்திகள் ஆசிரியர் திருமாவேலன், ""என் கையில் இருந்து பேனாவைப் பிடுங்கினால் இறந்துவிடுவேன் என்றார். அவர் எழுதாததால்தான் மறைந்தார். அவரது மறைவு பத்திரிகையாளர்களுக்கும் பேரிழப்பு''’’என பேசி முடித்தார்.
""தன் இறுதிக் காலம்வரை விடாமல் எழுதிய கலைஞர், "தொண்டர்களுக்காக எழுதுவது என்மீது சுமத்தப்பட்ட பணி' என்றார். மாநில சுயாட்சி மற்றும் சமூகநீதியின் முக்கியத்துவத்தை 1970-களிலேயே மக்களிடம் எடுத்துச்சென்றார். தன் 90 வயதிலும் சாதிய இழிவு தன்னைத் துரத்துகிறது என மனம்நொந்தார். எழுத்தில் வாழ்பவனுக்கு மரணமே கிடையாது''’என்றார் இந்து தமிழ்திசை ஆசிரியர் சமஸ்.
சன் நியூஸ் ராஜா திருவேங்கடம், “""நிருபர் செய்த தவறை, அவரைத் தொடர்புகொண்டே கூறுவார். சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து நிருபருக்கு கஷ்டத்தை ஏற்படுத்த மாட்டார்''’என்றார். “
""பத்திரிகையாளர்களுக்கு கலைஞர் சொன்ன நான்கு வார்த்தை தத்துவம்... ‘"இன்றைய செய்தி நாளைய வரலாறு.' கல்கியில் "கலைஞரிடம் கேட்கக்கூடாத 10 கேள்விகள்' என்று செய்தி வெளியிட்டோம். அதற்கு மறுநாள் முரசொலியில் அவருக்கே உண்டான பாணியில் பதிலளித்திருந்தார். யாரோவொருவரின் கருத்துரிமைக்கும் அங்கீகாரம் கொடுத்தவர் கலைஞர்''’’ என பேசினார் நியூஸ் 7 ஆசிரியர் முத்துக்குமார். “
""கலைஞர் ஒரு கலை. அவர் பேசும் தமிழ் பல அர்த்தங்களைக் குறிக்கும். அவர் சொன்னதை மாறாமல் எழுதினால் பெரிதும் மகிழ்ச்சிகொள்வார்''’என்றார் "டைம்ஸ் ஆஃப் இந்தியா' அருண் ராம்.
""கலைஞர் அதிகாலை 4 மணிக்கு போன்செய்து, கட்டுரை பற்றி பேசியதையும், இவருக்கு மட்டும் ஓய்வின்றி உழைக்க எங்கிருந்துதான் நேரம் கிடைக்கிறது'' என்ற ஆச்சரியத்தையும் குறிப்பிட்டுக் காட்டினார் "டெக்கான் கிரானிக்கல்' ஆசிரியர் பகவான்சிங்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பத்திரிகையாளர்களுக்கு கலைஞர் பயன்படுத்திய பேனாக்களில் ஒன்று நினைவுப்பரிசாக கொடுக்கப்பட்டது. அதைப் பெற்றதும் கலைஞரின் கரம் பிடித்ததுபோலவே பத்திரிகையாளர்களின் முகம் மலர்ந்தது. ஆம்... அவர்கள் கையில் கருத்துரிமையின் பேனா.
-ஜெ.டி.ஆர்.