""ஹலோ தலைவரே, கலைஞரின் உடல்நிலை பத்தி காவேரி மருத்துவமனை 26-ஆம் தேதி இரவு அறிக்கை வெளியிட்டிருந்துச்சு. "கலைஞரின் சிறுநீரகப் பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமா காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் தீவிர கண்காணிப்பில் இருப்பதால் கலைஞரைப் பார்க்க யாரும் நேரில் வர வேண்டாம்' எனவும் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டது. நினைவு கடந்த நிலையிலும் வயது மூப்பு காரணமாகவும் மருந்துகளை ஏற்றுக் கொள்ளும் நிலையில் கலைஞரின் உடல்நிலை இல்லை. 26-ந்தேதி இரவு 10.00 மணிக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி ஆகியோர் கோபாலபுரம் சென்று கலைஞரின் உடல்நலம் குறித்து விசாரித்தனர். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமா, மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன், ச.ம.க. தலைவர் சரத்குமார் மற்றும் ம.நீ,ம. தலைவர் கமலஹாசன் உள்பட பல்வேறு தலைவர்கள் கோபாலபுரம் வந்து கலைஞரின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் விசாரித்துச் சென்றனர். '

kalaingar

""ஓ... இதுதான் தமிழ்நாடு முழுக்க பரபரப்பா மாறிடுச்சா?''

""தி.மு.க. தலைவராகி 50 ஆண்டுகளை நிறைவு செய்து சாதனை படைச்சிருக்கும் கலைஞரின் உடல்நிலை பற்றி சொல்றேங்க தலைவரே, போனமுறையே கலைஞரின் பார்வைக் குறைபாடு குறித்தும் அவரது கேட்கும் திறன் குறைந்தது குறித்தும் நினைவு மாறுவது பற்றியும் பேசிக்கிட்டோம். முன்பெல்லாம் தினமும் கொஞ்ச நேரம், கலைஞர் உட்கார வைக்கப்படுவார். அப்ப குடும்பத்தினரையும் கட்சிப் பிரமுகர்களையும் அடையாளம் கண்டுக்கிட்டு ரீயாக்ட் பண்ணுவார். அதுதான் அவருக்கு பெரிய தெம்பா இருக்கும். இப்ப, கலைஞர் உட்காரவைக்க முடியாத நிலையில் இருக்கார். அதனால்தால் அவரைப் பார்க்க யாரும் அனுமதிக்கப்படலை. 95 வயதான கலைஞரின் உடல்நிலை கருதி மருந்து கொடுப்பதிலும் டாக்டர்கள் பலவித ஆலோசனைகள் நடத்திதான் முடிவெடுக்குறாங்க''.

""ஆனாலும் வதந்திகள் சிறகடிச்சிப் பறக்க ஆரம்பிச்சிடுச்சே!''

""இதைப் பார்த்த ஸ்டாலின், மருத்துவமனையில் மூச்சுக் குழாய் மாற்றிய பிறகு கலைஞருக்கு லேசான காய்ச்சல் இருந்தது. அதுக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டது. மற்றபடி அதிர்ச்சிதரும் அளவிற்கு அவருடைய உடல்நிலை இல்லைன்னு சொல்லி, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வச்சாரு. பொதுவா, கலைஞரின் உடல்நிலை பற்றிய செய்திகள் எதுவும் பெரிதாக மறைக்கப்படுவது இல்லை. முதல்வர் எடப்பாடி உள்ளிட்ட அ.தி.மு.க. முக்கியப் பிரமுகர்களிடமும் கூட கலைஞரின் உடல்நிலை பற்றி தி.மு.க. சைடிலிருந்து தெரிவிச்சிருக்காங்க''’

""இந்த நிலையில் ஆகஸ்ட் 19-ல் தி.மு.க.வின் பொதுக்குழு கூடுவது பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்குதே?''’

""உண்மைதாங்க தலைவரே, தி.மு.க. செயல் தலைவரா மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதன்முதலா ஆகஸ்ட் 19-ந் தேதி கட்சியின் பொதுக்குழு கூடுது. வழக்கமா அறிவாலயத்தில் இருக்கும் கலைஞர் அரங்கில் கூட்டப்படும் பொதுக்குழு, இந்தமுறை, வருகிறவர்களின் எண்ணிக்கையைக் கருதி சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் கூட்டப்படுது. வழக்கமா ஜெ. தான் இங்க அ.தி.மு.க. பொதுக்குழுவைக் கூட்டுவார். அவர் பாணியில் இங்கே கூட்டப்படுவதை, ஒருவித வெற்றி சென்டிமெண்ட்டாவும் தி.மு.க. பார்க்குது. இதில் தி.மு.க.வின் தலைவர் பொறுப்புக்கு ஸ்டாலின் வருவாராங்கிற அளவுக்கு எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கு.''’

kalangar house

Advertisment

""முக.ஸ்டாலின்கிட்ட மு.க.அழகிரி பேசியதாவும் செய்தி வருதே?''’

""குடும்ப உறுப்பினர்கள்கிட்டே விசாரிச்சேங்க தலைவரே... சமீபத்தில் அழகிரி சென்னைக்கு வந்து கலைஞரை பார்த்தாரு. அப்புறம் ஸ்டாலினிடம் அழகிரி கலைஞர் உடல்நிலை பத்தியும், கட்சி நிலவரம், தேர்தல் நிலவரம் பத்தியும் விசாரிச்சதா சொல்றாங்க. அதோட கொஞ்சகாலத்துக்கு அதிரடியா எதையும் பேசுறது இல்லைன்னு அழகிரி முடிவெடுத்திருக்கிறாராம். தற்போதைய நிலையில், கலைஞருக்கான சிகிச்சை- கட்சியில் ஒருங்கிணைப்பு- தேர்தலுக்குத் தேவையான நடவடிக்கைகள் இதில்தான் ஸ்டாலினும் கவனமா இருக்காரு. அழகிரியோ, கொஞ்ச காலத்துக்கு பொறுத்திருப்போம்னு நினைக்கிறாராம்.''’

""தேர்தலுக்காக தி.மு.க. தரப்பில் பொறுமை தெரியுது. ஆனா தி.மு.க.வை எப்படி வீழ்த்துவதுன்னு பல வகையிலும் எதிர்முகாம் வியூகம் வகுக்குதே?''’

""கொஞ்ச நஞ்ச வியூகங்கள் இல்லீங்க தலைவரே. உளவுத்துறை மூலம் பா.ஜ.க. எடுத்த சர்வேயில் தமிழகத்தில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணிக்கு 41 சதவீதத்துக்கு மேல் வாக்குபலம் இருப்பது தெரியவந்திருக்காம். அதேபோல் அ.தி.மு.க.வுக்கு 23 சதமும், ரஜினிக்கு 8 சதமும், பா.ஜ.க.வுக்கு 3 சதமும், பா.ம.க.வுக்கு 4 சதமும் ஓட்டு இருக்குதாம். இந்தக் கணக்கின் படி பார்த்தால் பா.ஜ.க.வுக்கு 40 சத வாக்கு கிடைக்குமாம். தினகரனுக்கு 8 சத வாக்கு இருக்குதாம். அதனால் தினகரனின் அ.ம.மு.க., கமலின் மக்கள் நீதி மய்யம், கம்யூனிஸ்ட் கட்சிகள், சில முஸ்லிம் அமைப்புகள் இவற்றோடு இயன்றால் விடுதலை சிறுத்தைகள் அமைப்பையும் ஒன்றாக்கி, ஒரு மூன்றாவது அணியை உருவாகச் செய்தால், அது தி.மு.க.வுக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்கும்னு பா.ஜ.க. விறுவிறுப்பா கணக்குப் போடுது.. இந்தத் தேர்தல் களத்தில் அ.தி.மு.க. தரப்போடு ரஜினி தரப்பின் கையையும் பிடித்துக்கொண்டால் எப்படியும் கணிசமான தொகுதிகளில் கரையேறிவிடலாம்ன்னு வியூகம் வகுத்துக் கொண்டிருக்கிறது பா.ஜ.க,.''’

rajini

Advertisment

""ரஜினி, இதுக்கெல்லாம் ஒத்துக்கொண்டிருக்கிறாரா? அப்படியானால் தேர்தலுக்கு முன்பாகவே அவர் அரசியல் கட்சியைத் தொடங்கிவிடுவாரா?''’

""அவர் ரொம்ப பொறுமையா ஸ்டெப் வைக்கிறாரு. பா.ஜ.க. தரப்போ தேர்தலுக்கு முன் கட்சியைத் தொடங்க வேண்டாம். நீங்கள் இப்போது இருக்கிற மாதிரியே இருந்து, எங்களை முழுமையாக ஆதரித்து வேலைசெய்தால் போதும்னு அமித்ஷாவே ரஜினியிடம் சொல்லியிருக்காராம். ரஜினி ஆழ்ந்து யோசிப்பதைப் பார்த்த அமித்ஷா, உங்களுக்கு எந்த செலவும் இல்லை. உங்க மூலமே பிரச்சாரம் நடக்கட்டும். எங்களோட பட்ஜெட் 1000 கோடி ரூபாய்னு டார்கெட் பிக்ஸ் பண்ணி சொல்லியிருக்காரு. இப்படி சூப்பர் ஸ்டாரை வச்சி சூப்பர் வியூகங்கள் வகுக்கப்பட்டு வருது''’

""துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சந்திச்சதை வச்சி, அந்தத் தரப்பிலும் பரபரப்பு தெரியுதே?''’

""உண்மைதாங்க தலைவரே, வெங்கையாவின் நீண்டகால நண்பர்தான் திருநாவுக்கரசர். அவர் பா.ஜ.க.வில் இருந்தபோது, வெங்கையாதான் வாஜ்பாயிடம் வாதாடி அவருக்கு எம்.பி. சீட் வாங்கிக் கொடுத்தாராம். அந்த நட்புணர்வோடு வெங்கையா, துணை ஜனாதிபதி ஆனதும் அவருக்கு வாழ்த்துச் சொல்ல அப்பாயின்மெண்ட் கேட்டாராம் திருநா. ஆனா ஜூலை 24-ல் தான் அப்பாயின்மெண்ட் கிடைச்சிதாம். அதனால் முன்னாள் எம்.பி. காஞ்சிபுரம் விசுவநாதனோட போய் வாழ்த்து தெரிவிச்சிட்டு வந்திருக்கார் திருநா. இந்த சந்திப்புத் தகவல் தெரிஞ்சதும், காங்கிரசில் உள்ள அவரது எதிர்கோஷ்டிகள் இதுகுறித்து ராகுலுக்குப் புகார் அனுப்பியதோட, தி.மு.க. கூட்டணியை விரும்பாத திருநாவுக்கரசரை, தி.மு.க.வும் விரும்பலை. அதனால் ஒருவேளை தனது மாநிலத் தலைவர் பதவியை ராகுல் பறித்தால், எதிர் முகாமுக்குத் தாவறதுக்காகத்தான் திருநா, இப்பவே ரூட் போடறார்ன்னு டமாரம் அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க''’

vijayakanth""இதுக்கு திருநாவுக்கரசர் தரப்பு என்ன விளக்கம் சொல்லுது?''’

""ராகுலின் இதயத்தில் இருந்து திருநாவுக்கரசரை யாராலும் நீக்கவே முடியாதுன்னு சொல்லும் அவரது ஆதரவாளர்கள், அண்மையில் டெல்லியில் நடந்த காங்கிரஸ் காரியக் கமிட்டியில் பேசிய திருநாவுக்கரசர், ராகுலைப் பிரதமரா ஆக்குவது இருக்கட்டும். முதலில் இந்தக் காரியக் கமிட்டியில் இருக்கும் சீனியர் தலைவர்கள், அவரை பிரதமர் வேட்பாளர் என்பதை முழு மனதோடு ஏற்கவேண்டும். அதேபோல் ராகுலைப் பிரதமராக ஏற்கும் கட்சிகளுடன்தான் நாம் கூட்டு வைக்கவேண்டும்னு பேசினார். இதை ராகுல் மகிழ்வோடு பாராட்டினாராம். அதோடு, துணை ஜனாதிபதி வெங்கையாவை சந்திப்பதற்கு முன்பே, ராகுலிடம் சொல்லி அனுமதி வாங்கிட்டுதான் எங்கள் திருநாவே போனார்னு சொல்றாங்க. ஆனாலும், குஷ்பு போன்றவர்கள் ராகுலை சந்தித்து திருநாவுக்கரசருக்கு எதிராக நீட்டோலை வாசித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்''’

""தி.மு.க. எம்.பி. கனிமொழி எதற்காக டெல்லியில் ராகுலைச் சந்தித்தார்?''’

""ஆகஸ்ட் கடைசியில் தி.மு.க. நடத்தும் மாநில சுயாட்சி மாநாட்டுக்கு ராகுல் வரணும்னு தி.மு.க. எதிர்பார்க்குது. அவர் அந்த சமயத்தில் வெளிநாட்டில் இருக்க வேண்டி இருப்பதால், அவருக்கு பதில் இயன்றால் சோனியா கலந்துகொள்வார் என்று சொல்லப்பட்டது. எனினும் ராகுல் வரவை ஆர்வமாக எதிர்பார்க்கும் தி.மு.க. தலைமை, தன் எண்ணத்தை வெளிப்படுத்த கனிமொழியை அவரிடம் அனுப்பி வைத்தது. கனிமொழியும் ராகுலிடம், உங்கள் வருகையால் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி வலுவடையும்ன்னு சொல்லியிருக்கார். இதைத் தொடர்ந்து, தான் சென்னை வருவது குறித்துப் பரிசீலிப்பதாகச் சொல்லியிருக்கிறாராம் ராகுல்''’

""விஜயகாந்த்தின் தே.மு.தி.க. தரப்பிலும் விறுவிறுப்பு தெரியுதே?''’

""ஆமாங்க தலைவரே, சிகிச்சைக்காக விஜயகாந்த், மனைவி பிரேமலதாவோடு அமெரிக்கா போயிருக்கிறார். அங்குள்ள பிரபல மருத்துவமனைக்கு 11-ந் தேதி அவர் போனபோது, அவர் எடுத்து வந்திருந்த மருத்துவ ஆவணங்களைப் பார்த்த டாக்டர்கள், இந்த டெஸ்ட் ரிப்போர்ட்டுகளில் எங்களுக்கு திருப்தி இல்லை. அதனால் இங்கு முதலில் இருந்தே எல்லா டெஸ்டுகளையும் எடுக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார்களாம். இதன் அடிப்படையில் ஆகஸ்ட் முதல்வாரம் அவருக்கு ஒரு ஆபரேசன் நடக்க இருக்கிறது. இதன் பின்னர் மூன்றாம் வாரம் அவர் சென்னை திரும்பத் திட்டமிட்டிருக்கிறார். ஆகஸ்ட் 25-ல் அவரது பிறந்தநாள் வருகிறது. அதைக் கொண்டாடும் பரபரப்பில் மா.செ.க்கள் இருக்க, அதை சிறப்பாக தடபுடலாகக் கொண்டாட வேண்டுமென அங்கிருந்தே பிரேமலதா, கட்சி மா.செ.க்களிடம் பேசியிருக்கிறார். மா.செ.க்களோ, எங்களிடம் பெரிய அளவில் செலவு செய்ய வசதி இல்லை. அதனால் நம் கட்சி அலுவலகத்திலேயே கொண்டாடிவிடுவோம்ன்னு சொல்லியிருக்காங்க. இதைக் கேட்டு அப்செட்டாகிவிட்டாராம் பிரேமலதா!''’

kanimozhi

""18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கு, தினகரன் தரப்பிற்கும் எடப்பாடி தரப்பிற்கும் ஒருசேர பரபரப்பை ஏற்படுத்திக்கிட்டு இருக்கே?''’

""அதுவும் உண்மைதாங்க தலைவரே, தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்களின் தரப்பு, தன்னோட வாதத்தில், நாங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட போது, அ.தி.மு.க.வின் சின்னம், கொடி எல்லாம் யாருக்குன்னு முடிவாகாத நிலை. அந்த நிலையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை எங்களை எப்படிக் கட்டுப்படுத்தும்னு ஒரு புதுக்கோணத்தில் பாயின்ட்டை வைத்தது. சபாநாயகர் தரப்போ, சபாநாயகரின் அதிகாரத்தில் கோர்ட் தலையிடமுடியாது என்ற வாதத்தையே திரும்பத் திரும்ப வைத்தது. வழக்கை விசாரிக்கும் நீதிபதி சத்யநாராயணா பொதுவாக கேள்விகளை கடுமையாக எழுப்புவார். அதை வைத்தே வழக்கின் போக்கை ஓரளவு தீர்மானிக்கலாம். ஆனால் இந்த வழக்கில் அவர் அமைதியாக வாதத்தையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கிறார். அதனால் தீர்ப்பின் போக்கு எப்படி இருக்குமோ என்று இரு தரப்புமே விறுவிறுத்துப் போயிருக்கிறது''’

""நானும் ஒரு வழக்குத் தகவலைச் சொல்றேம்பா. 2010-ல் ரஜினியின் "எந்திரன்' திரைப்படம் வெளியான போது, 1996-லேயே "இனிய உதயம்' இதழில் தான் எழுதிய "ஜூகிபா' என்ற கதையைத் திருடித்தான் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்று நக்கீரன் தலைமைத் துணை ஆசிரியரும் கவிஞருமான ஆரூர் தமிழ்நாடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்திருந்தார். நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில், 27.04.2018-க்குள் சாட்சியங்கள் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணையை முடிக்கணும்னு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில், இயக்குநர் ஷங்கருக்கு பதிலாக அவர் உதவியாளர் யோகேஷ் என்பவர் சாட்சியமளிக்க வர, கதைத்திருட்டுப் புகாருக்கு இயக்குநரான ஷங்கர்தான் பதிலளிக்க முடியும். அவர் கதையைத் திருடலைன்னு மூணாவது நபர் சாட்சிசொல்ல சட்டத்தில் இடமில்லைன்னு மனுதாரர் தரப்பு வாதிட்டது. 26-ந் தேதி, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் வாதத்தை ஏற்றுக்கொண்டு, ஆகஸ்ட் ஒன்றாம் தேதி இயக்குநர் ஷங்கர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சி சொல்லணும்னு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கு''’.

படங்கள்: அசோக் & குமரேஷ்