Skip to main content

கலைஞர் விட்டுச் சென்ற வெற்றிடம்! -அலசும் திருமா!

வ்வோர் ஆண்டும் தனது பிறந்ததினத்தை ஓர் அரசியல் இயக்கமாக நடத்தி வருகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். நதிநீர் உரிமை மாநாடு, மதச்சார்பற்ற கட்சிகளின் மாநாடு ஆகியவற்றோடு சேர்த்து, இந்தாண்டு ஒரு லட்சம் பனைவிதைகள் நடும் இயக்கத்தை தொடங்கியிருக்கிறார். அவருடைய சூழலியல் பார்வை குறித்தும், தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் பல்வேறு கேள்விகளை அவரிடம் முன்வைத்தோம்...

திராவிட இயக்கத் தலைவரான கலைஞருக்கு "பாரத ரத்னா'’விருது வழங்க முதல் கோரிக்கை வைத்ததன் காரணம்?

திருமா: கலைஞரின் மறைவையொட்டி பல இரங்கல் அறிக்கைகள் வெளியிடப்பட்டன. அது வெறும் இரங்கல் அறிக்கையாக மட்டும் இருந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில்தான், கலைஞருக்கு "பாரத ரத்னா' வழங்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் அறிக்கை வெளியிட்டோம். காரணம், தமிழ் மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் பாடுபட்டார் என்பதையும் தாண்டி, தேசிய அளவிலும் கலைஞரின் பங்களிப்பு மிக முக்கியமானது. மாநில சுயாட்சியைப் பெறவேண்டும் என்பதோடு, இந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கவேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தார். மேலும், மத்தியில் கூட்டாட்சி அமையவும், மாநிலங்கள் வளம்பெறவும் அவர் காரணமாக இருந்தார். மராத்வாடா பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயரைச் சூட்டக்கூடாது என சாதிய, மதவாதிகள் எதிர்ப்பு தெரிவித்தபோது, அதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டவர் கலைஞர். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் சட்டக்கல்லூரிகளை இணைத்து அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகமாக மாற்றினார். எங்களைப்போல பலரும் கலைஞருக்கு பாரத ரத்னா வழங்க வலியுறுத்தியுள்ளனர். கோரிக்கை வெல்லும் என்று நம்புகிறோம்.

ஜெ. மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்டதுபோல், கலைஞர் இல்லாத தி.மு.க.விலும் வெற்றிடம் உருவாகுமா?

திருமா: தனிநபர் பங்களிப்பு மற்றும் அவர்கள் உள்வாங்கிய கருத்தியல் கோட்பாடு என வெற்றிடத்தை இரண்டு வகைகளாகப் பிரித்துப் பார்க்கவேண்டும். ஜெயலலிதா என்ற தனிநபர் கவர்ச்சி மற்றும் துணிச்சலுக்கு வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. பேசுவது, எழுதுவது, விவாதிப்பது மற்றும் தோழமைக் கட்சிகளை அரவணைத்து நடப்பது போன்ற கலைஞரின் தனிநபர் திறன்களை நிச்சயம் யாராலும் நிரப்பமுடியாது. அவரது கொள்கை, உறுதிப்பாடுகள், நடைமுறைகள் என தி.மு.க.வை வழிநடத்துகிற வெற்றிடத்தை ஸ்டாலின் நிச்சயம் நிரப்புவார்; வழிநடத்திக் கொண்டிருக்கிறார். அதேசமயம், கொள்கைப்பகையைக் கையாள்வதில் கலைஞர் விட்டுச் சென்றிருப்பது மிகமுக்கியமான வெற்றிடம். கொள்கைப்பகை என்பது சமூகநீதி; சமத்துவத்திற்கானது. சேதுசமுத்திரத் திட்டத்தில் மத்திய பா.ஜ.க. அரசு "ராமர் கட்டிய பாலத்தை இடிக்கக்கூடாது' எனக் கூறியபோது, ‘"ராமர் எந்தக் கல்லூரியில் பொறியியல் படித்தார்?'’என தன் கொள்கைப் பிடிப்போடு கேள்வியெழுப்பியவர் கலைஞர். அந்த இடத்தை ஸ்டாலின் எப்படி நிரப்பப்போகிறார் என்பது போகப்போகத்தான் தெரியும்.

அ.தி.மு.க.வைப் போல் தி.மு.க.விலும் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறதா பா.ஜ.க.?

திருமா: கலைஞர் இல்லாத சூழலைப் பயன்படுத்திக் கொண்டு தி.மு.க.வுக்குள் ஊடுருவும் முயற்சியில் பா.ஜ.க. ஈடுபடலாம். ஆனால், அவர்களது முயற்சி வெற்றிபெறாது. தி.மு.க. அடிப்படையில் ஜனநாயகத்தை உயிரோட்டமாகக் கொண்டு இயங்கிவரும் கட்சி. ஆகவே, கலைஞருக்குப் பின்னும் அந்தக் கட்சி அதே கட்டுக்கோப்போடு இயங்கும் என்ற நம்பிக்கையும், விருப்பமும் இருக்கிறது.

கலைஞரின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டதைப் பற்றி...

திருமா: அண்ணா மறைந்த சமயத்தில் சோஷியல் மீடியாக்கள் கிடையாது. அதனால், எல்லோரும் சென்னைக்கு வந்துதான் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தவேண்டிய நிலை இருந்தது. ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அதையும்தாண்டி ஐந்து லட்சம் பேர் கலந்துகொண்டதாக ஊடகங்கள் பதிவுசெய்தன. தலைமுறை இடைவெளி இல்லாமல் தன்னுடைய தலைமையைத் தக்கவைத்துக்கொண்ட மகத்தான தலைவர் அவர். காலத்திற்கு ஏற்றாற்போல் தன்னைப் பதப்படுத்திக் கொண்டதன் மூலம், முதுமையிலும் இளைஞர் கூட்டத்தை தன்னை நோக்கி ஈர்த்திருக்கிறார்.

வருங்காலக் கூட்டணி குறித்து என்ன முடிவெடுத்து இருக்கிறீர்கள்?

திருமா: மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை வீழ்த்த மெகா கூட்டணி அவசியமாகிறது. இதில் காங்கிரஸுக்கு இணையான கடமை தி.மு.க.வுக்கும் இருக்கிறது. வளர்ந்துவரும் மதவாத சக்திகளை அழிக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியைச் சந்தித்துப் பேசினேன். வெறுமனே காங்கிரஸ்-வி.சி.க. கூட்டணி என்றில்லாமல், தி.மு.க., இடதுசாரிகளும் கைகோ(ர்)த்து, வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்ளவேண்டும் என்பது வி.சி.க.வின் நிலைப்பாடு.

பனைவிதைகளைச் சேகரித்து நடுகிற எண்ணம் எப்படி வந்தது?

திருமா: எட்டுவழிச்சாலை போன்ற திட்டங்களால் இயற்கை வளங்கள் பேரழிவை எதிர்கொண்டுள்ளன. அந்தவகையில், இயற்கை வளங்களைக் காக்கவேண்டும் என்கிற உந்துதல்தான் அழிவை எதிர்கொண்டிருக்கும் பனைமரங்களைத் தேர்ந்தெடுக்கச் செய்தது. அவை நிழல் தராது என்றாலும், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் முக்கியமானவை. மண்ணையும், காற்றையும் ஈரப்பதமாக வைத்து மழைபொழிய பேருதவி செய்யக்கூடியவை. முதலில் பனைக்கன்றுகளை நடவேண்டும் என்று முடிவுசெய்தோம். அது பலனளிக்காது என்பதை அறிந்து, தற்போது பனைவிதைகளை தேடித்தேடி சேகரித்து, கையோடு விதைக்கவும் செய்கிறோம். இதை வாக்கு வங்கியாக அல்லாமல், மக்கள் இயக்கமாக நடத்துகிறோம். ‘"இயற்கை வளங்களைப் பாதுகாப்போம்'’ என்பதுதான் இந்தாண்டு பிறந்ததினத்தின் சூளுரை!

-சந்திப்பு: அ.அருண்பாண்டியன்
தொகுப்பு: -ச.ப.மதிவாணன்

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்