Skip to main content

கர்ஜனை! -"இளையவேள்'’ராதாரவி (48)

(48) வைகோவுக்காக "ஸ்பெஷல்' பிரச்சாரம்!

ண்டாள் பிரச்சினைல ஆன்மிக ரீதியா மட்டும் யோசிக்காம ஆத்மார்த்தமாவும் யோசிச்சதுனால... கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு என்னோட ஆதரவ "சோத்துக்கட்சி' மூலமா தெரிவிச்சிருந்தேன்.

போனவாரம் ஒருநாள்... வைரமுத்து அவர்கள் எனக்கு போன்பண்ணி, "எதிர்ப்பு வரும்னு தெரிஞ்சும் உங்களுடைய கருத்துகளை துணிஞ்சு சொன்னதுக்கு... என்னோட நின்னதுக்கு ரொம்ப நன்றி'னு சொன்னார்.

நான் பதறிட்டேன்.

"உங்களோட நிற்கிறதுக்கு நான் யாருங்க... கத்துக்குட்டி. உங்க பின்னாடி நிற்கிறேன். அதுவே எனக்குப் பெருமை'னு சொன்னேன்.

கவிஞர் நெகிழ்ந்துபோய், "உங்க தமிழ் ஆர்வத்தைக் கூர்ந்து கவனிச்சிக்கிட்டிருக்கேன். அடுத்ததா மறைமலையடிகள் குறித்த கட்டுரையை அரங்கேற்றுகிறேன். கண்டிப்பாக நீங்க வரணும்'னு கூப்பிட்டார்.

நான் ரொம்ப மகிழ்ச்சியோட கலந்துக்கிட்டேன்.

அரசியல் சார்புடையவங்க, வைரமுத்துவோட வைராக்கிய ரசிகர்கள், "மறுபடி ஏதாவது பரபரப்பு சிக்குமா?'னு ஆர்வத்துல வந்தவங்க... இப்படி பலரையும் தாண்டி, "உடல் நனையாம உயிர் நனைகிற வைரமுத்துவின் தமிழ் மழை'யில் நனைகிறதுக்காக என்னை மாதிரி நூற்றுக்கணக்கான தமிழ்க் காதலர்கள் நிறைய வந்ததில் காமராஜர் அரங்கம் நிரம்பி வழிந்தது.

மறைமலையடிகள் பத்தி வைரமுத்து ரொம்ப சிறப்பா பேசினார். தமிழ்த் தொண்டாற்றியவர்கள் பற்றிய அவரோட உரைகள்ல இது 14-வது உரை.

மறைமலையடிகளை இந்தக் காலத்தில் நினைவுபடுத்திக்க வேண்டியது ரொம்ப அவசியம். அதுவும் இப்ப இருக்க சூழல்ல... அவரோட தத்துவங்கள நாம எல்லாரும் நினைச்சுப் பார்க்க வேண்டியது கட்டாயம்.

"பகுத்தறிவு' அப்படின்னா... "கடவுள் மறுப்பு' அப்படிங்கிறதுதான் இன்னிக்கு நாம புரிஞ்சுக்கிட்டிருக்க திராவிடம்.

ஆனா... அதில்ல!

பகுத்தறிவும், ஆன்மிகமும், தமிழ் இனமும்... மூன்றுமே ஒன்றுக்கொன்று இணைந்தது, பிணைந்தது அப்படிங்கிறதுக்கு தானே ஒரு முன்மாதிரியா வாழ்ந்துகாட்டியவர் மறைமலையடிகள்.

சுயமரியாதையையும், சைவ சித்தாந்தத்தையும் இரு கண்களாகப் பாவித்தவர்.

"தமிழ் செம்மொழி... மறுக்கப்பட்ட தமிழ் அடையாளத்த மீட்கணும்'னு இன்னைக்கி நாம போராடிக்கிட்டிருக்கோம். ஆனா... இந்தப் போராட்டத்துக்கான விதையைப் போட்டு, விருட்சமா மாற்றினது... "தனித்தமிழ் இயக்கம்' நிறுவிய மறைமலையடிகள்தான். அவரோட இயற்பெயர் வேதாச்சலம்.

"எதுக்காக வடமொழிச் சொல்லுல "வேதாச்சலம்'னு நம்ம பேர் இருக்கணும்? தன்னோட பேரை "மறைமலை'னு மாத்திக்கிட்டவர். அவரோட அச்சகத்தின் பெயர் "ஞான சாகரம்'. அதை "அறிவுக்கடல் பிரசுரம்'னு தமிழ்ப்படுத்தினார்.

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்'னு சொன்ன புலவன் பாரதிபோல... மறைமலையும் அதே கருத்தைக் கொண்டவர்.

இன்னைக்கி நிறையபேர்களுக்கு "தமிழ் தமிழ்'னு குரல் கொடுக்கிறவங்களுக்கு தமிழைத் தவிர வேற மொழி தெரியாது.

"நாம பேசுற தமிழை உலகம் பேசட்டும்'னு "கிணற்றுத் தவளை'யா குரல் கொடுக்குறாங்க.

பாரதியின் குரலும், மறைமலையடிகள் குரலும் அப்படிக் கிடையாது.

பாரதியார்... பிரெஞ்ச், சமஸ்கிருதம், ஆங்கிலம் உட்பட ஏழு மொழிகளில் எழுத, படிக்க, பேச... புலமை பெற்றவர்.

மறைமலையடிகளும் வடமொழிகள்லயும், ஆங்கிலத்துலயும் புலமை பெற்றவர்.

பிற மொழிகளைப் படித்து, தெரிந்து, தெளிந்த பிறகு... "தமிழ்மொழிதான் சிறப்பு'னு நாலு இடம் பார்த்திட்டு... தாய்மொழி தமிழுக்கு திரும்பி வந்தாங்க பாருங்க பாரதியும் மறைமலையும்.

அப்ப அவங்க சொல்றதுல "தமிழே சிறப்பு'னு சொல்றதுல இருக்க நியாயத்த யாருமே மறுக்க முடியாது.

இன்னைக்கி நான் இந்தக் கட்டுரையை எழுதும்போது அதுல சரளமா வழக்குத் தமிழ் வார்த்தைகள், ஆங்கிலச் சொற்கள், இந்திச் சொற்கள்... இப்படி எல்லாத்தையும் கலந்து கேஷுவலா எழுதுறேன்...

ஆனால் பிறமொழி கலப்பு இல்லாம... கலப்படமில்லாத தமிழில் எழுதிய மனிதர் மறைமலையடிகள்.

"தூயதமிழில் எழுதவேண்டும்' என்னும் சிந்தனையை முதன்முதலில் ஊட்டியவர்.

எல்லா மொழியிலும் அதிகாரப்பூர்வமாவே பிறமொழிச் சொற்கள் கலந்திருக்கு. இப்ப ஆங்கிலச் சொல்லான "இன்டர்நெட்' என்பது லத்தீன் மொழியிலிருந்து எடுக்கப்பட்டு ஆங்கிலத்தில் சேர்க்கப்பட்டது. ஆனா... "இன்டர்நெட்'டுக்கு "பொறிவலை', "கணிவலை'னு தமிழ்ல சொல்ல முடியும். எந்த ஒரு வார்த்தைக்கும் பொருத்தமான சொற்கள் தமிழில் உண்டு. அப்படின்னா... எவ்வளவு மகத்துவம் வாய்ந்த, தொன்மையான மொழி தமிழ். இதை உணர்த்தத்தான் "தனித்தமிழ் இயக்கம்' கண்டார் மறைமலையடிகள்.

தமிழின் மகத்துவத்தை நாம் உணரும்போது... தமிழனின் மகத்துவத்தையும் உணர முடியும். "மொழி நீட்சி'ங்கிறபோது... அதுல "இனநீட்சி'யும் வரும். நம் மொழியின் சிறப்பையும், இனத்தின் சிறப்பையும் உணர வைத்தது மலைமலையடிகள் ஆற்றிய மிகப்பெரிய தொண்டு.

"தமிழன்'னு சொன்னா...

"அவன் திராவிட சிந்தனை உடையவன்'னும், "ஆன்மிகத்துக்கும் தமிழுக்கும் ஒத்துவராது'னும், "பகுத்தறிவுக்கும் கடவுள் சிந்தனைக்கும் ஒத்துவராது'னும் பலவிதமான கருத்து பரவிக்கிடக்கு.

கமல்ஹாசன், ஹார்வர்ட்ல வேட்டி கட்டிய தமிழனாக உரையாற்றியிருக்கிறார். அதுக்கு ஒரு சல்யூட். "ஆங்கிலம் பேசினாலும், தமிழன்தான்'னு சொல்லீருக்கார்... அதுக்கு ஒரு சல்யூட்.

அங்க ஒரு இன்டர்வியூல சொன்ன ஒரு கருத்து, அவரோட உரையைத் தாண்டி பரபரப்ப ஏற்படுத்தியிருக்கு.

"ரஜினியோட கூட்டணி வைப்பீங்களா?'னு கேட்டதுக்கு... ""ரஜினியுடைய அரசியல் காவியாக இருந்தால்... சேர முடியாது'' அப்படினு கமல் சொல்லீருக்கார்.

"நான் பகுத்தறிவுவாதி. பகுத்தறிவுக்கும், காவிக்கும் ஒத்துவராது'னு சொன்ன கமலுக்கு... இந்த இடத்துல நான் ஒரு விஷயத்த சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கேன்.

மறைமலையடிகள் ஒரு சாமியார். அவர் ஒரு காவியேதான்.

சுயமரியாதை இயக்கத்தையும், பகுத்தறிவு வாதத்தையும், தனித்தமிழ் இயக்கத்தையும், தமிழ் இன நீட்சியையும் போராடிப் பெற்றுக்கொடுத்த மறைமலையடிகள், ஆன்மிகவாதிதான்... காவிதான்... காவியேதான்!

"தமிழ் செம்மொழி' என முதல் குரல் கொடுத்த... வடமொழியிலான "சூரியநாராயண சாஸ்திரி' என்கிற தன் பெயரை "பரிதிமாற் கலைஞர்' என தமிழ்ப்படுத்திக் கொண்ட பரிதிமாற்கலைஞர் போன்றவர்கள் ஆன்மிக வழியில் தமிழை, மொழி உணர்வை ஏற்படுத்தினார்கள்.

மறைமலையடிகளும், பரிதிமாற்கலைஞரும் சொல்லாத எந்த பகுத்தறிவை கமல்ஹாசன் சொல்லீட்டாரு?

"கடவுள் இல்லை'னு பேசுற நாத்திகமே ஒரு நம்பிக்கைதானே!

என்னைப் பொறுத்த வரைக்கும் "மக்கள் பணி'னு வந்திட்டா... ஒண்ணு சேரணும்.

மத்திய அரசோட கொள்கை அளவில் மாறுபடுற மாநில அரசுகள் இந்தியாவில் நிறைய உண்டு.

காங்கிரஸ், திரிணாமூல், பிஜு ஜனதாதள்னு பல கட்சிகள் ஆட்சியில இருக்கு. இவங்க யாரும் மத்திய பி.ஜே.பி. அரசுக்கு சொம்பு தூக்கிடல.

அதேசமயம்... "எங்களுக்கும், மத்திய அரசுக்கும் ஆகாது. அதனால நீங்க தர்ற மானியம் எங்களுக்கு வேணாம்'னு விட்டுக்குடுத்துடுவாங்களா?

"கூடுதலா சண்டை போட்டு அதிகமா நம்ம மாநிலத்துக்கு வாங்கணும்'னுதான நினைக்கிறாங்க.

மக்கள் நலனுக்காக ஒன்று சேர்ந்து குரல் கொடுக்காதது எந்த விதத்துல நியாயம்? நான் இந்த இடத்துல கமல்ஹாசனை மட்டும் சொல்லல. கமல்ஹாசன் சொன்னதை ஆண்டாண்டு காலமா... நம்ம தமிழ்நாட்டுல அரசியல் கட்சிகள் செஞ்சுக்கிட்டுதான் இருக்கு.

"புகை புடிக்காதீங்க... மதுக்கடை திறக்காதீங்க'னு அன்புமணி ராமதாஸ் நல்லது சொன்னா... "அவரு என்ன சொல்றது, நாம என்ன கேட்கிறது?'னு கூடுதலா நாலு டாஸ்மாக் கடைய திறந்து விட்டுக்கிட்டிருக்காங்க... கழக ஆட்சிகள்ல.

தி.மு.க. ஆட்சியில போட்ட திட்டங்கள.... ஜெயலலிதா வந்து மாத்துவாரு... கைவிடுவாரு.

பி.ஜே.பி.க்கு நான் ஆதரவா பேசுறதா நினைக்க வேணாம். ஆனா மத்திய அரசு பல நல்ல திட்டங்கள குடுக்குறாங்க.

உதாரணத்துக்கு... நவோதயா பள்ளி. இது எல்லா மாநிலத்துலயும் தமிழ்மொழிய விருப்பப்பாடமா கத்துக் கொடுக்கிற திட்டம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மக்களுக்கு முன்னுரிமை தர்ற, இலவச கல்வித் திட்டம் இது. இது தமிழ்மொழிவழிக் கல்வியாகத்தான் இருக்குது. முதல்ல இந்தத் திட்டத்த, இந்திக்கு முக்கியத்துவம் தந்து காங்கிரஸ் கவர்ன்மெண்ட் அறிமுகப்படுத்திச்சு. ஜெயலலிதா எதிர்த்தார். இப்ப... தமிழுக்கு முன்னுரிமை குடுத்து பி.ஜே.பி. அந்தத் திட்டத்த கொண்டுவருது. ஆனா... பி.ஜே.பி. திட்டம்ங்கிறதுனால தமிழ்நாட்டுல எதிர்ப்பு.

மக்கள் நலன்னு வந்தா... கொள்கைகளைத் தாண்டி... எல்லாக் கட்சியும் ஒண்ணுசேரணும்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!

இல்லேன்னா... நலிவு!

(அடுத்த விஷயத்தை ஒரு இதழ் விட்டு மறு இதழில் எழுதுகிறேன்!)

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்