kk

(33) இசை வேள்விக்கு ஏது சாதி?

Advertisment

இசைஞானி இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது கிடைத்ததை... அந்தப் பத்திரிகை சாதிய அணுகுமுறையோடு எழுதியிருந்தது பற்றிய சர்ச்சையில்... ‘சாதி துவேஷம் குறித்து, போன இதழில் எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையின் தொடர்ச்சியாக சில விஷயங்களை எழுதுறேன்.

""இளையராஜா அய்யராக (பிராமணராக) முயற்சி செய்றார்''’என இயக்குநர் பாரதிராஜா சார் கூட ஒரு கருத்தை தெரிவிச்சிருந்தார். மகாபாரதத்துல நகுசன் மகாராஜா கதை ஒண்ணு இருக்கு. அதை இங்கே சொல்றது சரியா இருக்கும்.

தேவர்குல தலைவனான இந்திரன், தன்னுடைய எதிரியான அசுரர் குலத்தைச் சேர்ந்த... ஒரு அந்தணனாக வாழ்ந்துக்கிட்டிருந்த விருத்ரனை அழிக்கிறதுக்காக... அவனிடம் நட்பு வச்சு... நம்பிக்கைத் துரோகம் செஞ்சு...

Advertisment

கொலைபண்ணிடுவான். இதனால உண்டான பாவம் இந்திரனைப் பீடிச்சது. அவனுக்கு ஆபத்து வந்தது. அதனால் பயந்துபோய்... யார் கண்ணிலயும் படாதபடி ஒரு தாமரைத் தண்டுக்குள்ளாற போய் ஒளிஞ்சுக்குவான்.

ராஜாவான இந்திரன் இல்லாம தவிக்கிற தேவலோகத்துக்கு பூமியிலருந்து... அறம் வாய்ந்த, நீதி வழுவாத... எல்லா வகையிலும் சிறந்த... மனிதருள் மாணிக்கமான ஒருத்தனை கண்டுபிடிப்பாங்க.

kasturi

அவன்தான் நகுச மகாராஜா.

தேவலோக ராஜாவாக பதவியேற்ற நகுச மகாராஜா... தேவலோகத்துல இருக்க எல்லாருமே பாராட்டும்படியான... ஒரு சிறப்பான ஆட்சியை நடத்திக்கிட்டு வந்தான்.

"ஆஹா... முன்னாடி இருந்த இந்திரனைவிட இந்த புது இந்திரன் பிரமாதமா ஆட்சி செய்யுறார்'னு புகழப் புகழ... நல்லவனான நகுசனுக்கு செருக்கு தலைக்கு ஏறிடும். ஏனைய தேவர்களையும். பஞ்சபூதங்களையும்... இஷ்டத்துக்கு வேலை ஏவி... மரியாதைக் குறைவா நடத்தி... அதிகாரம்பண்ண ஆரம்பிச்சான். தேவதைகளையும், ரிஷிகளையும் அலட்சியமா நடத்த ஆரம்பிச்சான். கொஞ்சம் கொஞ்சமா நகுசனுக்கு திமிரு ஏறிக்கிட்டுப் போகுது. யாராலயும் தட்டிக்கேட்க முடியல.

உச்சகட்டமா... “""நான்தான... இந்திரன். அப்ப இந்திரன் மனைவி இந்திராணி எனக்கு மனைவியா சேவகம் செய்யட்டும்... கூப்பபிடு அவள''னு கொக்கரிச்சான்.

கற்புக்கரசியான இந்திராணியோ... ""அய்யய்யோ... நான் என்ன பண்ணுவேன்? என்னக் காப்பாத்துங்க...''னு அலற... ""சட்டப்படி நகுச மகாராஜாதான் இந்திரன் ஆயிட்டாரு. அப்ப இந்திரனோட மனைவியும் இந்திரனுக்கே சொந்தம்''னு எல்லாரும் "ஆமாம்'’போட ஆரம்பிச்சிட்டாங்க.

"இந்த இக்கட்டுலருந்து நான் எப்படி தப்பிக்கிறது?'னு புலம்பியபடி தன் புருஷன் இந்திரனை தேடி ஓடுறா. அவனோ... ஒரு தாமரைத் தண்டுக்குள்ள ஒளிஞ்சு உட்கார்ந்திருக்கான்.

"இனி இவனால எந்த பிரயோஜனமும் இல்ல'னு இந்திராணிக்கு புரிஞ்சுபோச்சு. அந்தக் காலத்துலருந்து... இந்தக் காலம் வரைக்கும் பெண்கள் தங்களோட பாதுகாப்ப... தாங்களே நிர்ணயிச்சுக்க வேண்டிய கட்டாயத்துலதான இருக்காங்க.

யோசிச்சு ஒரு முடிவெடுத்தா இந்திராணி.

ராஜாவோட ஆளுங்ககிட்ட... ""சரிங்க... நான் அரசனோட விருப்பத்துக்கு கட்டுப்படுறேன்''னு சொன்னவ... "நாளை காலையில்... ஒரு நல்ல முகூர்த்தத்தில்... நான் என் வீட்டில் காத்திருக்கிறேன். அந்த முகூர்த்தநேரம் தவறுவதற்கு முன்பாக... நானாவித பரிமளங்களையும், வாசனை திரவியங்களையும் பூசிக்கொண்டு, நன்கு அலங்கரித்துக்கொண்டு, அழகுமிளிர... சர்வ லட்சணமும் பொருந்திய ஒரு மாமன்னராக... தேவேந்திரனாக என்னுடைய வீட்டை வந்து அடைவாயாக'னு ஒரு ஓலை அனுப்பினா.

கூடவே ஒரு கண்டிஷனையும் போட்டா.

""நீங்க பல்லக்குல வரணும். வழக்கமா பல்லக்கு தூக்குறவங்க... உங்க பல்லக்க தூக்கிட்டு வரக்கூடாது. சப்தரிஷிகள்தான் உங்க பல்லக்க சுமந்திட்டு வரணும்''னு சொல்லியனுப்பினா.

"ரிஷிகள்தான் பல்லக்க தூக்கிட்டு வரணும்'னு இந்திராணி சொன்னதுல இருந்த திட்டம் நகுசனுக்கு தெரியல. ஏன்னா... யோசிக்கல. ஏன் யோசிக்கலேன்னா... இந்திராணி மேல இருந்த அவனோட காமம் கண்ணவும், கருத்தவும் மறச்சிருச்சு.

சப்தரிஷிகள் ஆறுபேர்களும் உடலமைப்புல... குறிப்பா உயரத்துல... ஆளுக்கொரு விதம். அதிலயும் குறிப்பா... சப்தரிஷிகள்ல ஒருத்தரான அகத்திய முனிவர் ரொம்ப குள்ளமானவர். அதனாலதான் அவரை "குறுமுனி'னு சொல்வாங்க.

ஆசையும் ஆவலுமா பல்லக்குல ஏறி உட்கார்ந்தான் நகுசன். "அந்தா இந்தா'னு பல்லக்கு மெதுவா ஆடி அசைஞ்சு போய்க்கிட்டிருக்கு. பல்லக்கு தூக்குறவங்க சமமா இல்லாததால பல்லக்கு சீரான வேகத்தோட போகாம... நகருது. அதிலயும் பல்லக்கோட முன்பக்கத்த அகத்தியர் சுமக்கிறதால... பல்லக்கு நொண்டியடிக்குது.

காமமும், மோகமும் தலைக்கு ஏறின நகுசனுக்கு இதனால் ஆங்காரமும், ஆத்திரமும் அதிகமாக... ’ஸர்ப்ப... ஸர்ப்ப....னு சொல்லிக்கிட்டே... அகத்தியரோட முதுகுல தன்னோட காலால உதைக்கிறான். அதாவது... ’"என்ன ஊர்ந்து போற? சீக்கிரமாப் போ...'னு உதைக்கிறான்.

உதைபட்ட அகத்தியர் அப்படியே திரும்பி நகுசனப் பார்த்தார். "ஊர்ந்து போறியா?னு என்னக்கேட்ட நீ... ஊர்ந்து போற பாம்பா போ...'னு’ சாபம்விட்டார்.

நகுச மகாராஜா ஒரு மலைப்பாம்பா மாறி பல்லக்குலருந்து கீழவிழுந்து ஊர்ந்தான்.

"ஆயிரம் வருஷங்கள் நீ பாம்பாக இருக்கணும். ஒருநாள் யுதிஷ்டிரனால (தர்மர்) இந்த சாபத்திலருந்து உனக்கு விமோசனம் கிடைக்கும்'னு அகத்திய முனி சபிச்சிட்டார்.

காலங்கள் கடந்துச்சு. பாண்டவர்கள் வனவாசத்துல இருந்த சமயம்...

ஒரு நாள்... பாண்டவ சகோதரர்கள்ல பலசாலியான பீமன், அந்தப் பக்கமா வர்றான். நகுச மலைப்பாம்பு... பீமன சுத்திக்கிட்டு நெரிக்குது. அந்த அரவு அணைப்புலருந்து விடுபட போராடுறான். பீமனோட பலம் இந்த பாம்புகிட்ட வேலைக்கு ஆகல. ‘"வலிமையால இத வெல்ல முடியாது... மதியால தான் வெல்ல முடியும்'னு உணர்ந்துக்கிட்ட பீமன்... “""அண்ணா... காப்பாத்து''னு கூக்குரலிடுறான். தம்பியோட குரல் கேட்ட யுதிஷ்டிரன் ஓடிவந்து... பார்த்து... “""அய்யோ.. என் தம்பியை விட்ரு. அதுக்குப் பதிலா என்னோட உசுர எடுத்துக்க''னு கெஞ்சுறார்.

""எனக்கு உன்னோட உசுரு வேணாம்... நான் உன்கிட்ட தர்மத்தப் பத்தியும், வாழ்வியல் பத்தியும் விவாதம் பண்ண விரும்புறேன். என்னோட கேள்விகளுக்கு நீ சரியான பதிலை கொடுத்திட்டா... உன் தம்பிய நான் விடுவிச்சிடுறேன்''னு நகுச பாம்பு சொல்ல.... தர்மத்தின் குருவாக பிறந்தவர்தானே தர்மனான யுதிஷ்டிரன். உடனே தர்க்கத்துக்கு சம்மதிச்சார்.

ஒரு பிராமணன் என்பது யார்?’னு முதல் கேள்வியைக் கேட்டது நகுச பாம்பு.

""எவன் ஒருவன் தனிமனித ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கிறானோ... வாழ்வின் கடைசிவரை கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற தேடல் குறையாமல் இருக்கிறானோ... எவன் ஒருவன் தன் குடும்பத்தினரையும், தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தினரையும் மிகவும் மரியாதையுடன் நடத்துகிறானோ... எவன் ஒருவன் தொலைநோக்குப் பார்வையுடன் ஞானத்தைத் தேடுகிறானோ... கோபத்தைக் கட்டுப்படுத்துகிறானோ... அவனே பிராமணன்''’’

யுதிஷ்டிரன் சொன்ன இந்தப் பதிலக் கேட்டு... பாம்பு சிரிக்குது. “""நீ சொல்றதப் பார்த்தா... பிறப்பால் பிராமணனா இருக்கிறவங்களத் தாண்டி... பிறப்பால் சூத்திரர்களா இருக்கிறவங்களும் இதுல வருவாங்களே... ஒழுக்கத்தையும், மன விசாலத்தையும் நீ பிராமணாத்துவம்னு சொல்றதப் பார்த்தா... இந்தக் குணம்கொண்ட எல்லாருமே இதுல அடங்குவாங்களே...''னு பாம்பு சந்தேகமா கேட்குது.

""அதுல சந்தேகம் என்ன? கண்டிப்பா. பிறப்பு என்கிற இயல்பான நிகழ்வு ஒருவனின் சாதியை நிர்ணயிக்க முடியுமா? ஒருவனின் நடத்தைதான் அவனுடைய சாதியை நிர்ணயிக்கும்''னு தர்மர் சொன்னார்.

""அப்ப... பிறப்பால எவனும் பிராமணன் இல்லையா? பிறப்பால எவனும் சூத்திரன் இல்லையா?''னு பாம்பு கேட்டுச்சு.

""பிராமண குலத்தில் பிறந்திருந்தாலும் ஒழுக்கமில்லாத, மேன்மையில்லாதவன் கீழோன். எந்த குலத்தில் பிறந்தவனாக இருந்தாலும்... அவனிடம் மேன்மையான குணங்கள் இருந்தால் அவன் மேலோன். இதுதான் உலக நியதி... உலக நீதி. இதுல வேற கேள்விக்கே இடமில்லை''னு தர்மர் சொன்னார்.

""அப்ப... கடவுள் வகுத்த வர்ணாசிரமத்த நீ மறுக்கிறியா?''னு பாம்பு விடாம கேட்டுச்சு.

""கடவுள் என்பதே ‘உண்மை’ என்பதுதானே. உண்மையைத்தானே நான் சொல்கிறேன்''னு தர்மர் சொன்னார்.

"தர்மரோட பகுத்தறிவு வாதம் மூலமா... மகாபாரதத்துலயே பகுத்தறிவு ஆரம்பிச்சிருச்சு'னு சொன்னாக்கூட தப்பில்ல.

(என் சொந்த வாழ்க்கைலருந்து நான் இதற்கு ஓர் உதாரணமா திருமுருக கிருபானந்தவாரியாரைச் சொல்லமுடியும். அவர் எந்த சாதியோ... எந்த மதமோங்கிறதத் தாண்டி... தன்னோட சேவைமூலம்... 64-வது நாயன்மாராத்தான் வாழ்ந்து மறைஞ்சிருக்கார். நான் என் கண்ணெதிர பார்த்த கடவுள் அவதாரம்... வாரியார்.)

ஒரு அந்தணனுடைய வேலை என்ன?

காலம் முழுக்க யாகம் செய்றது, அக்கினி வளர்த்து வேள்வி செய்றது, வேதம் படிக்கிறது, அதுல இருக்க நல்ல விஷயங்களை பரப்புறது, கடவுளை கோவில்களில் வைத்து ஆராதிப்பது... இதுதானே... ஒரு அந்தணனுடைய வேலை.

இப்ப இளையராஜா என்ன செஞ்சிருக்கார்... செஞ்சிட்டிருக்கார்...?

காலம் முழுக்க இசை வேள்வியை நடத்தியிருக்கார். நாலாபுறமும் தன்னோட இசைய பரப்பியிருக்கார். எந்த மதத்தினராகட்டும்... சாதியினராகட்டும்... எல்லாத்தையும் மறந்து எல்லாரையும் இசையால ஒன்றுபட வச்சிருக்கார். ‘ஒன்றே குலம்... ஒருவனே தேவன்னு அவரோட இசையில நாம மூழ்கிக் கிடக்கிறோம்.

இப்ப நான் கேட்கிறேன்... காலம் முழுக்க இசை வேள்வி செய்ற இளையராஜாவை என்ன சாதினு சொல்லமுடியும்?

பிறப்பால் ஒரு சமூகத்த சேர்ந்தவரான ராஜா சார், அந்த சமூகத்துக்கு பெருமை தேடித் தந்தத நான் மறுக்கல. ஆனா... அதையெல்லாம் தாண்டி, அவர் தன்னோட இசையால் அவர் நிற்பதை... குறைச்சு மதிப்பிட்டு எழுதுனது எனக்குப் பொறுக்கல.

(அடுத்த விஷயத்தை ஒரு இதழ் விட்டு மறு இதழில் எழுதுகிறேன்!)