"ஒன்றிய அமைச்சரிடமே கேள்வி கேட்குறீயா.? அந்தளவிற்கு தைரியமா உனக்கு.? ஹோட்டல் நடத்தணும்ல.. மரியாதையா மன்னிப்புக் கேளு'' என சங்கிகளால் மிரட்டப்பட்ட நிலையில்... நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டிருக்கின்றார் அன்னபூர்ணா ஹோட்டல்களின் உரிமையாளர்.

கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சிறு, குறு தொழில் முனைவோர், பஞ்சாலை உரிமையாளர்கள், விவ சாயிகள், வணிகர்களை உள்ளடக்கிய தொழில் முனைவோர்களுடன் கோவையிலுள்ள கொடிசியா வளாகத்தில் கலந்துரையாடினார் ஒன்றிய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன். கொடிசியா மற்றும் லகு உத்யோக் பாரதி தொழில் அமைப்பு சார்பில் ஏற் பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், தொழில் முனைவோர் தங்களது கோரிக்கைகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தெரிவித்தனர்.

nirmala

இந்த நிலையில், தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத்தின் கௌரவத் தலைவர், தென்னிந்திய நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்ட் சங்கத்தின் துணைத்தலைவருமான சீனிவாசன் மைக்கில், "எங்களுக்கு ஒரே ஒரு பிரச்சனைதான் மேம். பக்கத்துல இருக்குற எம்.எல்.ஏ. வானதி அம்மா எங்க ஹோட்டலின் ரெகுலர் கஸ்டமர். வர்றப்பெல்லாம் சண்ட போடுறாங்க. ஏன்னா, ஸ்வீட் சாப்பிட்டுவிட்டு காரத்திற்கு என்ன இந்த பில்? என கேட்குறாங்க. இனிப்புக்கு 5 சதவிகிதம், காரத்திற்கு 12 சதவிகிதம் ஜி.எஸ்.டி. போடுறதுதான் காரணம். அதனைக் குறைங்க என்றால், வடநாட்டில் ஸ்வீட் வகைகளை அதிகம் சாப்பிடுவதால் ஸ்வீட்டுக்கு 5 சதவிகிதமும், காரத்துக்கு 12 சதவிகிதமும் ஜி.எஸ்.டி. போடுவதாகக் கூறுகிறார்கள்.

Advertisment

இப்படி செய்தால் என்ன ஆவது? தமிழ் நாட்டில் ஸ்வீட், காரம், காஃபிதான் அதிகம் விற்பனையாகிறது. தயவுசெய்து அதை ஆலோசியுங் கள் மேடம். ஸ்வீட், கார வகை உணவுப் பண்டங்களுக்கு ஒரேமாதிரியான ஜி.எஸ்.டி. வேண்டும். அதுபோக Bun-க்கு ஜி.எஸ்.டி. கிடையாது. ஆனால், இன்ய்க்குள்ள வைக்குற கிரீமுக்கு 18% ஜி.எஸ்.டி. இருக்கு.. கஸ்டமர் கிரீமை கொடுத்துடு, நானே இன்ய்க்குள்ள வச்சு சாப்பிட்டுக்குறேன்னு சொல்றாரு. கடைய நடத்த முடியல மேடம். பில் எப்படி போடுறது? ஒரு குடும்பம் வந்தால் கம்ப்யூட்டரே திணறுது மேடம்'' என கோவை மண்ணுக்கேயுரிய பாணியில் கூறி அமர்ந்தது சர்ச்சையானது. (மேடையில் கோவை தெற்கு தொகுதியின் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் இருந்ததுதான் ஹைலைட்டே!)

பதிலுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமனோ, "ஜி.எஸ்.டி. கோரிக்கைகள் குறித்த விவகாரம் தொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சிலில் கட்டாயம் பேசுகின்றேன்'' என வாக்குறுதியளித் தவர், அடுத்தகணமே, "அன்னபூர்ணா சீனிவாசன் பேசியது கேட்க வேண்டுமானால், ஜனரஞ்சகமாக இருக்குமே தவிர, ஜி.எஸ்.டி.யை எதிர்ப்பவர்களுக் குத்தான் சாதகமாக அமையும். இதைப்பற்றியெல் லாம் நான் கவலைப்படுவதில்லை'' என்றார் அவர். இதேவேளையில், அன்னபூர்ணா சீனிவாசனின் வீடியோக்கள் இந்தியா முழுக்க வைரலானது.

ss

Advertisment

இது இப்படியிருக்க, கட்சி நிகழ்ச்சியாக சூலூர் சட்டமன்றத்திற்குட்பட்ட ஊஞ்சபாளையத் தில் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை விழாவில் கலந்துகொண்டார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். தொடர்ச்சியாக, அங்கிருந்த திண்ணை ஒன்றில் அமர்ந்து கொண்டு, பா.ஜ.க.வில் புதிதாகச் சேர்ந்தவர்களின் உறுப்பினர் அட்டையை வழங்கிவந்திருக்கின்றார். அப்பொழுது எவரும் எதிர்பாராதவிதமாக அருண்சந்திரன் எனும் இளைஞர், "செமிகண்டக்டரை ஏன் இங்கு உற்பத்தி செய்யவில்லை? வெளிநாடுகளிலிருந்துதான் வாங்குகிறீர்கள்? இதன் ரகசியம் என்ன? என உரக்கக் கேள்வியெழுப்ப, "இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள குறிப்புகளை படித்துத் தெரிந்து கொண்டு, அதன்பின் டெல்லி வந்து சந்தித்து நேரடியாக விவாதம் செய்ய லாம்'' என நிர்மலா சீதாராமன் பதி லளித்தார். பதிலில் திருப்தியடையாத அருண்சந்திரன், "சீனாவிற்கு கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?'' என விடாமல் கேள்வியெழுப்ப, நிர்மலாவின் முகம் கோபத்தில் கருத்தது. கட்சிக்காரர் களால் போலீஸிடம் ஒப்படைக்கப் பட்டார் அந்த இளைஞர்.

"தொடர்ச்சியாக இரண்டு நிகழ்வு களில் மூக்குடைபட்ட நிர்மலா சீதாராமனை சரிசெய்யவேண்டிய நிலை உள்ளூர் பா.ஜ.க.விற்கு. இதனால் ஆளாளுக்கு அன்னபூர்ணா சீனிவாசனை மிரட்ட ஆரம்பித்தனர். வேறுவழியின்றி தொகுதி எம்.எல்.ஏ. வானதியிடமே சரணடைந்தார் அன்னபூர்ணா சீனி வாசன். அதற்கடுத்த தினத்தில், நிர்மலா சீதாராமன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வரவழைக்கப்பட்டார் சீனிவாசன். உள்ளூர் எம்.எல்.ஏ. வானதி உடனிருக்க, நிர்மலாவிடம் மன்னிப்பு கேட்டார் அன்னபூர்ணா சீனிவாசன். நான்கு சுவர்களுக்குள் நடைபெற்ற இந்த நிகழ்வை வீடியோவாக்கி வைரலாக்க வேண்டிய அவசியம் என்ன?'' என்கின் றார் உள்ளூர் பா.ஜ.க. நிர்வாகி ஒருவர்.

அன்னபூர்ணா சீனிவாசன் மன் னிப்பு கேட்ட நிகழ்வினையொட்டி, "கோயம்புத்தூரிலுள்ள அன்னபூர்ணா உணவகம் போன்ற ஒரு சிறு வணிகத்தின் உரிமையாளர், நமது பொதுமக்களுக்கான ஊழியர்களிடம் எளிமைப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. முறை வேண்டும் என கோரிக்கை வைக்கும்போது, அவரது கோரிக்கை ஆணவத்துடனும் முற்றிலும் அவமரியாதையுடன் கையாளப் பட்டுள்ளது.

பணமதிப்பு நீக்கம், அணுகமுடியாத வங்கி முறை, வரி பறிப்பு, பேரழிவு தரும் ஜி.எஸ்.டி. போன்றவற்றின் தாக்கங்களை நமது சிறு வணிக உரிமையாளர்கள் ஏற்கனவே சகித்துக்கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி கடைசியாக இப்போது அவர்கள் அவமானத்திற்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். அதிகாரத் தில் இருப்பவர்களின் பலவீனமான ஈகோக்கள் புண்படுத்தப்படும்போது, அவர்களை அவமானப்படுத்தவே நினைக்கிறார்கள். சிறு, குறு வணிகம் மேற்கொள்பவர்கள் பல ஆண்டுகளாக நிவாரணம் கேட்டுவருகின்றனர். இந்த திமிர்பிடித்த அரசாங்கம் மக்கள் சொல் வதைக் காதுகொடுத்துக் கேட்டால், ஒரே வரி விகிதத்துடன் கூடிய எளிமைப்படுத்தப்பட்ட ஜி.எஸ் .டி.யால் லட்சக்கணக்கான வணிகர்களின் பிரச்சனைகளைத் தீர்க்கலாம் என்பதை புரிந்துகொள்வார்கள்' என ராகுல்காந்தி ட்வீட் செய்து தன்னுடைய கண்டனத்தைப் பதிவுசெய்தார்.

cc

இதேவேளையில் செய்தியாளர்களைச் சந்தித்த கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனோ, "தனது ஓட்டலில் ஒரு பெண் எம்.எல்.ஏ. என்ன சாப்பிட்டார் என்பதை எல்லாம் பொதுவெளியில் பகிர்வது சரியா? அவர் சொன்னது போல நான் அன்னபூர்ணாவில் ஜிலேபி சாப்பிட்டதே இல்லை. பேசும்போது நான் சாப்பிடாததை எல்லாம் அவர் கூறினார். அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று சீனிவாசன்தான் நேரம் கேட்டார். அவரை யாரும் மிரட்டவில்லை. வேண்டுமெனில் அவரையே நீங்கள் நேரடி யாகக் கேட்கலாம்''” என தன் பங்கிற்கு நியாயம் கற்பித்தார்.

எது எப்படியோ? அன்னபூர்ணா சீனிவாசனை மண்டியிடவைத்த அதிகார மமதையை சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

படங்கள்: விவேக்

__________

அதுதான் பெரியார்! அதனால்தான் பெரியார்!

ss

அன்னபூர்ணா ஹோட்டல் உரிமை யாளர் பா.ஜ.க.வுக்கு எதிரானவரல்ல. திராவிட இயக்கத்திலோ, கம்யூனிஸ்ட் கட்சியிலோ, காங்கிரசிலோகூட அவர் இல்லை. வியாபாரத்தை நேர்த்தியாக செய்யக்கூடியவர். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த வேண்டுமென்ற எண்ணம் கொண்டவர். பா.ஜ.க. பரிவாரங்களுக்கு நண்பராக இருப்பவர். அதனால்தான் நிதியமைச்சர் நடத்திய கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார்.

அவர் ஜி.எஸ்.டி வேண்டாமென்று சொல்லவில்லை. ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு குழப்பமில்லாமல் இருந்தால்போதும் என்று மட்டும்தான் கோரிக்கை வைத்தார். அதுவும் மேடையிலிருந்த சட்டமன்ற உறுப்பினரை சாட்சியமாக்கி, நடைமுறை அனுபவத்துடன் விளக்கினார். அதைக்கூட பொறுத்துக் கொள்ள முடியாமல், அதிகாரத் திமிரை ஆணவத்துடன் வெளிப்படுத்தியிருக்கிறார் ஒன்றிய நிதியமைச்சர். இந்த நேரத்தில், வரலாற்று நிகழ்வு ஒன்றை நினைவுபடுத்தவேண்டிய தேவை உள்ளது.

பிராமணாள் கபே/பிராமணாள் ஹோட்டல் பெயர்ப் பலகைகளை நீக்கச் சொல்லி பெரியார் முன்னெடுத்த போராட்டத்தின் முக்கியக் களமாக இருந்தது திருவல்லிக்கேணி பாரதி சாலை (பைகிராப்ட்ஸ் ரோடு) முரளி கபே.

முரளி பிராமணாள் கபே என்றிருந் ததை 1956 மே மாதம் முதல் 1957 மார்ச் வரை தொடர்ச்சியான போராட்டம் நடத்தி யும், திராவிடர் கழகத் தொண்டர்கள் தின மும் பத்துப் பத்துப் பேராகக் கைதாகி சிறைசென்றும், ஹோட்டல் மாடியிலிருந்து கொட்டப்பட்ட வெந்நீரால் போராட்டக்காரர் கள் துன்பப்பட்டும், நீண்ட போராட்டத்துக்குப் பின்‘பிராமணாள்’ நீக்கப்பட்டு, முரளி ‘ஐடி யல்’ கபே ஆனது. சிந்தாதிரிப்பேட்டையில் பெரியாரை இரவு நேரத்தில் சந்தித்த ஹோட்டல் முதலாளி தன் ஹோட்டல் நிர்வாகத்தின் செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கோரினார்.

அப்போதெல்லாம் இப்படி முதுகுக்கு பின்னே செல்போன் கேமராவால் வீடியோ எடுக்கும் வசதிகள் கிடையாது. அதிகபட்சம் புகைப்படம் எடுக்கலாம். ஆனாலும் பெரியார் இதற்கு அனுமதிக்கவில்லை. முரளி கஃபே முதலாளி தன்னை வந்து சந்தித்து மன்னிப்பு கேட்டதைக்கூட விடுதலை நாளிதழில் செய்தியாக வெளியிடக்கூடாது என்றும் கறாராக உத்தரவிட்டார்.

அவர்தான் பெரியார்

அதனால்தான் பெரியார்.

-கீரன்