சிவகங்கை போலீஸும் புரோக்கருமான சித்தாண்டி கைதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸாரால் தேடப்பட்டுவந்த புரோக்கர் ஜெயக்குமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். ஜெயக்குமாரின் வாக்குமூலத்தை வைத்து இன்னும் பலர் கைது செய்யப்பட இருப்பதால் பணம் கொடுத்து அரசுவேலையில் சேர்ந்த பலரும் பீதியில் இருக்கிறார்கள்.
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வில் நடந்த முறைகேட்டை தொடர்ந்து குரூப் 2 ஏ, குரூப் 2 என தமிழக அரசுப்பணிகளில் நடந்த முறைகேடுகள் நாளுக்கு நாள் வெளிச்சத்துக்கு வந்துகொண்டே இருக்கின்றன. டி.என்.பி.எஸ்.சி. கடைநிலை ஊழி யர்கள் ஓம்காந்தன், மாணிக்கவேலுவைத் தொ டர்ந்து மதுரை போலீஸும் புரோக்கருமான முத்துக் குமார், சித்தாண்டி, பூபதி மற்றும் வணிகவரித் துறை உதவியாளரும் புரோக்கருமான கார்த்திக், விழுப்புரம் மாவட்டம் அரியூர் வி.ஏ.ஓ.வும் புரோக்கரு மான சக்தி என்கிற நாராயணன் உள்ளிட்டவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும், நக்கீரனால் அம்பலப்படுத்தப்பட்ட மதுரையை சேர்ந்த, காவல்துறையில் பணியாற்றிய மாசாணம் அவரது நண்பர் முத்துராஜா, மாசாணத்தின் அண்ணனும் போலீஸுமான முனியாண்டி மற்றும் இவர்களின் குடும்பத்தார் வினாத்தாள் லீக் அவுட் செய்ததாக கைதுசெய்யப்பட இருக்கிறார்கள்.
இதுகுறித்து, வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் போட்டித்தேர்விற்கு மதுரை மாநகராட்சி வளாகத்தில் படிக்கும் மாணவர்கள் சார்பில் தமிழ் நாடு அரசுத் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. செயலாளருக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள் ளது. அதில் இருக்கும் தகவல்கள் உண்மைதானா? என்று நாம் விசாரித்தபோது, ""அந்த புகார் கடிதத் தில் இருப்பவை உண்மைதான். இவர்கள் மட்டு மல்ல, மதுரையில் வருவாய் உதவியாளராக பணிபுரி யும் முனீஸ்வரன், வி.ஏ.ஓ. அழகுராஜா உள்ளிட்ட வர்களும் தேர்வுக்கு முந்தையநாளே வினாத்தாள் லீக் அவுட் செய்து லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு தேர்ச்சிபெற வைத்திருக்கிறார்கள்.
முத்துராஜும், மாசாணத்தின் நண்பரான தங்கவிக்னேஷும் அவரது மனைவியும் இதேபோல் குரூப் 4 தேர்வில் தேர்ச்சிபெற்று அரசுப்பணியை பிடித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் கைது செய்து விசாரணை செய்தாலே டி.என். பி.எஸ்.சி. வினாத்தாள் எப்படி லீக் அவுட் ஆனது என்பதை கண்டுபிடித்துவிடலாம்'' என்கிறார்கள். கடலூர் மாவட்டம் ராமாபுரத்தைச்சேர்ந்த இளைஞர்கள் 2011 குரூப் 2 தேர்வில் ஒரே ஊரில் தேர்ச்சிபெற்றது எப்படி என்றும் விசாரணையை தொடங்கியிருக்கிறது சி.பி.சி.ஐ.டி.
இந்நிலையில், ஜெயக்குமாரின் நீதிமன்ற சரண் குறித்து நம்மிடம், ""தேடப்பட்டு வரும் ஜெயக்குமார் நீதிமன்றத்தில் சரண் அடையப் போவது முன்கூட்டியே தெரிந்துதான் நீதிமன்ற வளாகத்திற்கு வந்துவிட்டது சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டீம். அதற்குமுன்பே கைது செய்யாதது ஏன்? கொலை, கொள்ளை வழக்குக்குத்தான் முகத்தை மறைப்பார்கள். 1 லட்ச ரூபாய் பரிசு அறிவித்து தேடப்பட்ட அக்யூஸ்ட்டை முகம் மறைத்து அழைத்துச்செல்வது ஏன்? ஜெயக்குமாரைக் காப்பாற்ற நினைக்கும் பெரும்புள்ளிகளை கைது செய்தால்தான் டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு வெளிச்சத்துக்கு வரும்.
-மனோசௌந்தர்