கடந்த 10 வருடங்களுக்கு மேலாக "எந்திரன்' கதைத்திருட்டு வழக்கில் ஆஜராகாமல் வழக்கை இழுத்தடித்து வரும் இயக்குநர் ஷங்கருக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் அதிரடியாக பிடிவாரண்ட் பிறப்பித்திருக்கிறது.
கடந்த 1996 ஆம் ஆண்டு, ஏப்ரல் "இனிய உதயம்' இதழில் ’ஜூகிபா’ என்ற ரோபாட் பற்றிய அறிவியல் சிறுகதை பிரசுரமானது. இந்தக் கதையை நக்கீரன் இதழின் முதன்மைத் துணை ஆசிரியரும் கவிஞருமான ஆரூர் தமிழ்நாடன் எழுதியிருந்தார். இதே கதை மீண்டும் அவரது "தித் திக் தீபிகா' என்ற கதைத் தொகுப்பிலும் 2007 ஆம் ஆண்டு வெளியானது. இந்த நிலையில் 2010ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த "எந்திரன்' திரைப்படம் வெளியான பின்பு தான், அது தமிழ்நாடன் எழுதிய "ஜுகிபா' கதையைத் திருடி, டூயட், சண்டை, கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளிட்ட சினிமா சமாச்சாரங்கள் சேர்த்து எந்திரன் திரைப்படமாக எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து எழுத்தாளர் தமிழ்நாடன், கதையைத் திருடி படம் எடுத்த திரைப்படத்தின் இயக்குநர் ஷங்கர் மற்றும் படத்தின் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் ஆகியோர்மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் காப்புரிமை சட்டப்படி வழக்கு தொடர்ந்தார். அதேபோல், சென்னை எழும்பூர் 13 வது நீதிமன்றத்தில் தமிழ்நாடன் அவர்கள் மீது மோசடிக் குற்றச்சாட்டை உள்ளடக்கிய கிரிமினல் வழக்கையும் தொடுத்தார்.
இந்த வழக்கில் ஆஜராகுமாறு சம்பந்தப்பட்ட இருவருக்கும் எழும்பூர் 13 ஆவது நீதிமன்றம் 2011-ல் சம்மன் அனுப்பியது. அந்த சம்மனை அடுத்து இயக்குனர் ஷங்கரும் கலாநிதிமாறனும் அந்த கிரிமினல் வழக்கு செல்லாது என்று உத்தரவிடும்படி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து, எழும்பூர் நீதிமன்ற வழக்கிற்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடையை அப்போது விதித்தது.
இந்த நிலையில் இந்த எந்திரன் தொடர்பான சிவில் வழக்கு கடந்த 10 வருடங்களாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அந்த வழக்கில் 6.6.2019 அன்று நீதியரசர் புகழேந்தி ஒரு அழுத்த மான தீர்ப்பை வழங்கினார். அதில், இயக்குனர் ஷங்கர் மீது காப்புரிமைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை நடத்த முகாந்திரம் உள்ளது என்று குறிப் பிட்டதோடு, தமிழ்நாடனின் ஜூகிபா கதையும் எந்திரன் திரைப்படக் கதையும் ஒரே மாதிரி இருப்பதாக கூறி, கதைக்கும் சினிமாவுக்கும் உள்ள 16 ஒற்றுமைகளை பட்டியலிட்டுக் காட்டி அதன் மூலம் காப்புரிமை மீறல் அப்பட்டமாக தெரிகிறது என்று தெரிவித்தார். மேலும் எழும்பூர் நீதிமன்றத்தில் தொடுக்கப் பட்ட ஷங்கருக்கு எதிரான வழக்கை காப்புரிமை சட்டப்படி தொடர்ந்து நடத்தலாம் என்றும், அதே சமயம் தயாரிப்பாளரான கலாநிதி மாறன் மீது இவ்வழக்கு தொடுக்கப்பட்டது செல்லாது என்றும் அந்தத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்க இருந்த நிலையில், கொரோனா பேரிடர் காரணமாக நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டி ருந்த நேரத்தில், இயக்குநர் ஷங்கர், சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்தார். கீழ் கோர்ட்டிலேயே வழக்கை எதிர்கொள் ளும்படி உச்சநீதிமன்றம் ஷங்கரின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து, கடந்த அக்டோபர் மாதம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து எழும்பூர் நீதிமன்றத்தில் எழுத்தாளர் தமிழ்நாடன் தாக்கல் செய்த கதை திருட்டு வழக்கின் விசாரணை 11 வருடங்களுக்கு பின் மீண்டும் நடக்கத் தொடங்கியது. அதில் தமிழ்நாடன் தொடர்ந்து ஆஜராகி யும், இயக்குநர் ஷங்கர் தரப்பு ஆஜராகவில்லை. அதேபோல், கடந்த 29-ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதும் புகார்தாரரான ஆரூர் தமிழ்நாடன் நேரில் ஆஜராகி வழக்கின் விசாரணைக்குத் தான் தயாராக இருப்பதாகத் தனது வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் இயக்குனர் ஷங்கர் எழும்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கில் வழக்கம் போல் ஆஜராகவில்லை. அவர் தரப்பில் எந்த மனுவும் தாக்கல் செய்யப் படவும் இல்லை. எனவே எழும்பூர் பெருநகர 2-வது மாஜிஸ்திரேட், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தொடர்ந்து அலட்சியப்படுத்திவரும் இயக்குநர் சங்கருக்கு, அதிரடியாக பிடிவாரண்ட் பிறப்பித்தார். அதோடு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி முதல் இந்த வழக்கின் விசாரணை தொடங்கும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் இயக்குநர் ஷங்கர் கடந்த 11 வருடங்களில் ஒரு முறைகூட ஆஜராகவில்லை. இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு தாக்கல் செய்யப்பட்டிருக்கும் சிவில் வழக்கில், உயர் நீதிமன்றம் சாட்சியம் அளிக்கு மாறு உத்தரவிட்ட பிறகும் ஷங்கர் ஆஜராகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
காப்புரிமைக்கான போராட்டம் சட்டத்தின் துணையுடன் தொடர்கிறது.
-நமது நிருபர்