மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சிறையிலுள்ள காவலர்கள் ஜாமீன் வழங்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட வழக்கில், "ஒன்றுமே இல்லாத விசயத்திற்கு ஒருவரை அடித்து கொலை செய்துவிட்டனர். புகாரளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? அவர்தானே காரணம்? வேறு இதற்கு என்ன காரணம்? முன்விரோதம் ஏதும் இருந்ததா? யாராக இருந்தாலும் சிறையிலேயே இருக்கட்டும். மனசு பதறுகிறது. ஒன்றுமில்லா விசயத்திற்கு ஒருவரை இப்படி அடித்திருக்கிறீர்கள். காவல்துறையினருக்கு பாடம் புகட்டுவோம்'' என நீதிபதி ஸ்ரீமதியிடம் வெளிப்பட்ட வார்த்தை கள்தான் இவை.
கடந்த 2025 ஜூன் 27ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில், திருப்புவனம் மடப் புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்த அஜித் குமாரை விசாரித்தனர் மானாமதுரை துணைச்சரக தனிப்படையினர்.
தொடர் விசாரணையில், காவல் மரணத்தால் ஜூன் 28ஆம் தேதி அவர் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த கொலை வழக்கில் தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு சென்றது. காவல் விசாரணை கொலை வழக்கில் தனிப்படை காவலர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன், திருப்புவனம் ஆய்வாளர் ரமேஷ், மானாமதுரை துணை காவல் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 6 காவலர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், துணை கண்காணிப் பாளரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தங்களுக்கு ஜாமீன் வேண்டி காவலர்கள் தொடர்ந்த வழக்கில் நீதிபதி கொடுத்த சம்மட்டி அடிதான் முதல் பத்தி.
"நீதிபதியின் வார்த்தைகளால் நாங்கள் நிம்மதியடைகின்றோம். தாயாக இருந்து இந்த தீர்ப்பு வழங்கியுள்ளார் உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி''என செய்தியாளர்களை அழைத்து தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர் கொலையுண்ட அஜித்குமாரின் தாயார் மாலதி, தம்பி நவீன் மற்றும் வழக்கறிஞர் கணேஷ்குமார் ஆகியோர்.
"என் பையன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவன் திருடன் இல்லை என நீதிபதிகள் கூறியிருப்பது ஆறுதல் தருகிறது. நகைத் திருட்டை விசாரிக்க போலீஸார் எனது 2 மகன்களையும் அழைத்துச் சென்றனர். நகையை எடுத்திருந்தால் சிறையில் அடைப்பார்கள். இல்லையேல் விட்டுவிடுவார்கள் என்று கருதினேன். ஆனால், கொடூரமாக அடித்து எனது மகனைக் கொன்றனர். எனது மகன் பயங்கரவாதியா? அவரைத் தாக்கியவர்கள் அரக்கர்களாக செயல்பட்டுள்ளனர். அவருக்கு உணவுகூட கொடுக்காமல் கடுமையாகத் தாக்கியுள்ளனர். எனது மகனுக்கு தண்ணீர்கூட வழங்காமல் மிளகாய் பொடியை கரைத்து வழங்கியுள்ளனர். நிகிதா அளித்த பொய் புகாரில் யார் விசாரிக்கச் சொன்னது? அந்த மேலதிகாரி யார்?
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/10/ajithkumar1-2026-02-10-11-33-54.jpg)
பெரிய இடத்திலிருந்து உத்தரவு வந்ததாகச் சொன்னார்கள். யார் அந்த ‘பெரிய இடம்? நிகிதாவை கைது செய்ய வேண்டும். யாருடைய அழுத்தம் காரணமாக சம்பவம் நடைபெற்றது? தாயாக இருந்தே நீதிபதிகள் இந்த வழக்கை பார்த்துள்ளார்கள். முழுமையான விசாரணை யை முடித்து அனைவருக்கும் தண்டனை வழங்கவேண்டும். நகையை எனது மகன் எடுக்கவில்லை என்பது எங்களுக்கு தெரியும், ஆனால் இந்த உலகம் அதனை நம்ப வேண்டும் என்பதற்காகவே இந்த சட்டப் போராட்டம்'' என ஆவேசமாகக் கூறினார் கொலையுண்ட அஜித்குமாரின் தாயார் மாலதி.
வழக்கறிஞர் கணேஷ்குமாரோ, " வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அஜித்குமாரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை அடித்ததற்காக இழப்பீடு வழங்குகிறோம் எனச் சொன்னார்கள். 6 மாதமாகிறது இன்னும் எதுவும் வரவில்லை. இந்த வழக்கில் காவலர்களால் தாக்குதலுக்குள்ளான அஜித்தின் சகோதரர் நவீன்குமார், பிரவீன் குமார், அருண், வினோத் ஆகியோருக்கு உடனடியாக நிவாரணம் வழங்கவேண்டும். நகை வந்தால் அதைப் பிரித்துக் கொள்ள லாம் என ஒரு நபர் சொல்லியிருக்கிறார். அந்த நபர் குறித்தும் விசாரிக்க வேண்டும். அஜித்குமார் போன் எங்கே? காவலர்கள் வீடியோ எடுத்தனர் என்கின்ற தகவல் உண்டு. ஆகையால் அவர்களுடைய போன் குறித்து விசாரிக்க வேண்டும்'' என்கின்றார் அவர்.
இது இப்படியிருக்க, மடப்புரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சக்தீஸ்வரன் என்பவர்தான் தனிப்படை காவலர்கள் அஜித்குமாரை கம்பால் தாக்கும் வீடியோவை பதிவு செய்து உண்மையை வெளிக்கொணர்ந்தவர் என்பதால், சம்பந்தப்பட்ட இவருக்கு போலீஸ் தரப்பில் நெருக்கடி கொடுக் கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், வழக்கின் தொடர் விசாரணை வருகின்ற பிப்ரவரி 17ம் தேதியன்று மீண்டும் நீதிமன்றத்திற்கு வருவதால் அடுத்து என்ன நடக்குமோ.? என அச்சத்தில் இருக்கின்றது குற்றவாளிகள் தரப்பு.
-வேகா
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/media_files/2026/02/10/ajithkumar-2026-02-10-11-33-42.jpg)