இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசைக் கச்சேரி என்றாலே தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுவதும் வரவேற்பு அமோகமாக இருக்கும். அந்தவகையில் "மறக்குமா நெஞ்சம்!' என்ற பெயரில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல குளறுபடிகள் நடந்ததால் நெஞ்சம் மறக்க முடியாத நிகழ்ச்சியாகிவிட்டது.
கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெற இருந்த "மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி, கடும் மழை காரணமாக தடைபட்டது. இதையடுத்து பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த செப். 10ஆம் தேதி அந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஏ.சி.டி.சி. என்ற நிறுவனம் செய்திருந்தது. ஏற்கெனவே டிக்கெட்டுகளை வாங்கியிருந்தவர்கள், இந்த நிகழ்ச்சியில் அனுமதிக்கப்பட்டனர். ரஹ்மான் இசைநிகழ்ச்சியைக் காண பல்வேறு ஊர்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். இதில் மணிரத்னம், அஜித்தின் மனைவி ஷாலினி, அவரது மகள் உள்ளிட்ட பல திரைப்பிரபலங் கள் கலந்துகொண்டனர். நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக் கையைவிட அதிக எண்ணிக்கையில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாலும், அதற்கேற்ப ஏற்பாடுகள் செய்யப்படாததாலும், அந்நிகழ்ச்சி பலருக்கும் மறக்க முடியாத நிகழ்ச்சியாகிவிட்டது.
நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்தில் உரிய எண்ணிக்கையில் இருக்கைகள் போடப்படாததால், முன் வரிசையில் அமர்ந்து பார்ப்பதற்காகப் பல ஆயிரங்கள் செலவழித்து கோல்டன், பிளாட்டினம் என்றெல்லாம் டிக்கெட்டு களை வாங்கியவர்கள், இருக்கை கிடைக்காமல் பின் வரிசைகளுக்கும், நின்றுகொண்டே பார்க்கும் நிலைக்கும் தள்ளப்பட்டனர். இன்னும் சிலர் இருக்கை கிடைக்காததால் வீட்டுக்கே திரும்பியிருக்கின்றனர். நிகழ்ச்சி அரங்கிற்குள் இப்படியென்றால் வெளியே பார்க்கிங் வசதி சரியாக செய்யப்படாததால், பல கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆங்காங்கே சாலையிலேயே பலர் வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. அரங்கில் பாத்ரூம்கள் போதிய அளவில் உருவாக்கப்படாததும் அங்கு வந்திருந்த பார்வையாளர் களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது.
காவல்துறையும் சரியான திட்டமிடலுடன் செயல்படாததால், ஈ.சி.ஆர். சாலையே பல கிலோ மீட்டர்களுக்கு நெருக்கடியால் ஸ்தம்பித்துப்போனது. இதனால் இசை நிகழ்ச்சிக்கு வந்த சிலர், அரங்கிற்குள் செல்ல இயலாமல் யூ டர்ன் அடித்து வீட்டுக்கே திரும்பி விட்டனர். இதில் இன்னொரு அதிர்ச்சியான விஷயம், தமிழ்நாடு முதல்வரின் வாகனமே இந்த நெரிசலில் சிக்கிக்கொண்டது. கான்வாய் வீரர்களும், காவல் துறையும் மிகுந்த சிரமப்பட்டு அவரது வாகனத்தை நெரிசலிலிருந்து மீட்டு எதிர்த்திசை வழியாக அனுப்பிவைத்தனர்!
நெரிசலில் சிக்கிய பெண் களிடம் சிலர் பாலியல் அத்துமீற லில் ஈடுபட்டதாகவும், சிலர் மூச்சுத் திணறலால் மயக்கமடைந்ததாகவும் சமூக வலைத்தளங்களில் புகார்கள் குவிந்தன. இந்நிலையில், "கூட்ட நெரிசலால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாதவர்கள் எங்களை மன் னிக்கவும். அதற் கான பொறுப் பை நாங்கள் ஏற்றுக்கொள் கிறோம்' என்று நிகழ்ச்சியை நடத்திய நிறுவனம் சார்பில் மன்னிப்பு கேட்கப்பட்டது. அதேபோல் ஏ.ஆர்.ரஹ்மானும் இதுகுறித்து வெளியிட்ட பதிவில், "அன்புள்ள சென்னை மக்களே, டிக்கெட் வாங்கிவிட்டு துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை களால் மைதானத்திற்குள் நுழைய முடியாமல் போனவர்கள், தயவு செய்து உங்கள் டிக்கெட் நகலை பகிரவும்' என குறிப்பிட்டு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியைப் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த மின்னஞ்சலில் ரசிகர்களின் குறைகளை குறிப்பிடுமாறும், அது குறித்து அவர்கள் குழு விரைவில் பதிலளிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "என் எண்ணம் மழை வரவில்லை என்பதிலேயே இருந்தது. அதனால் சந்தோஷமாகப் பாடிக்கொண்டிருந்தேன். வெளியே என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்கவில்லை. அதற்கு கிடைத்த எதிர்வினை, எங்களின் எதிர் பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டு இருந்தது. இப்போதுநான் வேதனையில் இருக் கிறேன். குறிப்பாக பெண்கள், குழந்தை கள் இருந்ததால் பாதுகாப்பு முதன்மை யான பிரச்சினையாக இருந்தது. நான் இந்த சம்பவத்துக்கு யாரையும் கை காட்ட விரும்பவில்லை' என்றும், "சிலர் என்னை G.O.A.T (Greatest Of All Time) என அழைப்பார்கள். நாம் அனைவரும் விழித்துக் கொள்வதற்கு, இப்போது நானே பலி ஆடாக மாறு கிறேன். உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு, சுற்றுலா மேம்பாடு, திறமையான கூட்ட மேலாண்மை, போக்குவரத்து மேலாண்மை, பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழல் உள்ளிட்டவை களுடன் சென்னையில் ஒரு கலாச்சார மறுமலர்ச்சியை ஏற்படுத்தி, திறமைகளைக் கொண்டாடுவோம். இறைவன் நாடினால் நடக்கும்'' என்றும் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
தமிழக டி.ஜி.பி. சங்கர்ஜிவால், இந்த நிகழ்ச்சி குறித்து விசாரணை நடத்த தாம்பரம் காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தை தாம்பரம் காவல் ஆணையர் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வு அறிக்கையை டி.ஜி.பி.க்கு அனுப்பி வைத்தார். அதனையடுத்து பள்ளிக்கரணை துணை ஆணையர் தீபா சத்யன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏ.சி.டி.சி. நிறுவனம் சென்னை அண்ணா நகரில் இயங்கி வருகிறது. இதன் நிறுவனர் ஹேமந்த்ராவ் 15 வருடங்களாக திரையுலகில் பி.ஆர்.ஓ.வாக பணி புரிந்தவர். இவரது நிறுவனம் சார்பாக சிறிய நிகழ்ச்சிகளையே நடத்திவந்த நிலையில், தற்போதுதான் முதன்முறையாக பிரமாண்ட நிகழ்ச்சியை நடத்தி சொதப்பியுள்ளார். இவரிடமும் காவல்துறை ஒருமணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தியுள்ளது.