பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் தமிழகத்தை விட்டே ஓடிப்போகிறார். லண்டனுக்கு அவர் செல்லும் பயணம் ஒரு படிப்புக்காக என்கிறார்கள். அந்த படிப்பை இங்கிருந்தபடியே ஆன் லைனில் இருபது நாட்களில் படித்து விடலாம். எதற்காக இவர் லண்டன் செல்கிறார் என பா.ஜ.க.வினரே கேள்வி கேட்கிறார்கள். ஆம்ஸ்ட்ராங் படு கொலைக்கு முக்கியக் காரணமான ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் மாநில தலைவரும், அமர்பிரசாத் ரெட்டியும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என வரும் தகவல்கள் அடிப்படையில் தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கும் என்கிற பயமும் மா.த.வை ஆட்டிப்படைக்கிறது. தலைமறைவாகி குஜராத்துக்குப் போன அமர் பிரசாத் ரெட்டியை மறுபடியும் அழைத்து, அவர் தலைமறை வாகவில்லை என மீடியாக்களில் பேட்டியளிக்க வைத்து காண்பித்துக் கொண்டிருக்கிறார்.

armstrong

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைது செய்யப்பட்ட அஞ்சலையை கட்சியை விட்டு நீக்கிய பா.ஜ.க. மா.த., ரவுடி சீர்காழி சத்யாவுக்கு துப்பாக்கி வாங்கிக் கொடுத்த தாக கைது செய்யப்பட்ட பா.ஜ.க. நிர்வாகி வழக்கறிஞர் அலெக்சிஸ் சுதாகர் மீது ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை என கேள்வி எழுந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் பா.ஜ.க.வைச் சேர்ந்த பல ரவுடிகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என தேடுதல் வேட்டையை போலீசார் முடுக்கி விட்டுள்ளதால் பா.ஜ.க.வில் இணைந்த ரவுடிகள் பலரும் தலைமறைவாகி உள்ளனர்.

மா.த.வால் தமிழகத்தில் கட்சியை நடத்த முடியவில்லை. கொஞ்சம் மீடியாவை வைத்து சமாளித்து கட்சியை நடத்தி வந்தார். பா.ஜ.க. தனியணி, 25 சதவீத வாக்குகள் என அவர் போட்ட வேஷமெல்லாம் கலைந்து விட்டது. பா.ஜ.க.வை கொங்கு பெல்ட்டில் கவுண்டரான மா.தலைவர் வளர்த்து விடுவார் என தேசியத் தலைமை கணக்குப் போட்டது.

அ.தி.மு.க.வின் வேலுமணியும் அதற்கு நான் ஒத்துழைப்பு கொடுப்பேன் என பா.ஜ.க. தலைமையிடம் உறுதியளித்திருந்தார். ஆனால், அந்த பரிசோதனை முயற்சி படுதோல்வி அடைந்தது. கவுண்டர் பெல்ட்டில் எடப்பாடி யை மிஞ்ச முடியாது என எடப்பாடி நிரூபித்து விட்டார். எடப்பாடி மா.த. மோதலில் எடப்பாடி ஜெயித்து விட்டார். இதைத் தெரிந்து கொண்ட பா.ஜ.க. தேசியத் தலைமை, மா.த.வின் நடவடிக்கைகளுக்கு தடை விதித்துவிட்டது. பா.ஜ.க. மா.த. ‘எடப்பாடி மோடியின் முதுகில் குத்திவிட்டார்’ என பேசிய பிறகு எடப்பாடி, மா.த.வை எதிர்த்து அறிக்கைவிட்டதால் அமித்ஷா எடப்பாடியிடம் பேசினார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இணைந் தால் எடப்பாடிதான் முதலமைச்சர் வேட்பாளர் என அமித்ஷா கூறி விட்டார். அ.தி.மு.க.வில் சசிகலா இணைப்பு, ஓ.பி.எஸ். சேர்ப்பு இவற்றைப்பற்றி எடப்பாடி முடிவு செய்து கொள்ளலாம் எனக் கூறினார். கவுண்டர் பெல்ட்டில் மா.த. தனக்கு எதிராக செயல்படுகிறார் என எடப்பாடி கூறிய புகாரை கவனிப்பதாக சொன்ன அமித்ஷா, மா.த.வை பேக்கப் செய்து லண்டனுக்கு அனுப்பும் முயற்சிகளில் தீவிரம் காட்டத் தொடங்கினார். நான் லண்டனுக்குப் போக மாட்டேன், லண்டனுக்குப் போவது என நான் எடுத்த முடிவு விரக்தியில் எடுத்த முடிவு என மா.த. டெல்லிக்கு கடிதம் எழுதினார். ஆனால், டெல்லி நீ போய்தான் தீரவேண்டும் என தீவிரமாக சொல்லிவிட்டது. நான் லண்டனுக்குப் போனால் மா.தலைவராக வானதியை நியமிக்க வேண்டும் என மா.த. தலைமைக்கு சிபாரிசு செய்தார். அதையும் தேசியத் தலைமை ஏற்க மறுத்து விட்டது. வானதி ஒரு கவுண்டர். மீண்டும் ஒரு கவுண்டர் தலைமைக்கு வரக் கூடாது. அது எடப்பாடிக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என தேசியத் தலைமை சொல்லிவிட்டது.

மா.த. லண்டன் போனால் யார் அடுத்த தலைவர் என்கிற கேள்வி எழுந்துள்ளது. நயினார் நாகேந்திரன் தி.மு.க.வுக்கு மிகவும் நெருக்கமானவர். அவர் மீதும் அவர் மகன் மீதும் தி.மு.க. அரசு நிறைய வழக்குகள் போட்டுள்ளது. அவர் மிகவும் நிதானமான தலைவர். அவரை அ.தி.மு.க.வினர் ஏற்க மாட்டார்கள் என அவருக்கு எதிரான கருத்துகள் முன்வைக்கப் படுகின்றன.

எச்.ராசாவை தலைவராக்கினால் அவர் வேகமாக இயங்க முடியாது. அவருக்கு சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தமிழிசை கவர்னராக இருந்துவிட்டார். அவருக்கு மாநிலத் தலைவர் என பதவியிறக்கம் தர முடியாது என மேலிடம் சொல்லி விட்டது. கடைசியாக கே.டி.ராகவன் பெயர் பரிசீலிக்கப்பட்டது. அவருக்கு மாநிலத் தலைவர் பதவி தற்போது தர வேண்டாம். மாநிலத்தின் முக்கிய நிர்வாகியாக அவரை நியமித்துக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. இறுதியாக பொன்னார் பெயர் மாநிலத் தலைவர் போட்டியில் முன்னணியில் வந்திருக்கிறது. இந்நிலையில் நானே மாநிலத் தலைவராக இருக்கிறேன் என தற்போது இருக்கும் மாநிலத் தலைவர் அடம் பிடித்துக்கொண்டு இருக்கிறார். லண்டனில் அவர் வீடு வாங்கி இருக்கிறார். மா.த.போலவே கடுமையான விமர்சனத்துக்கு உள்ளான கேசவ வினாயகத்தை நீக்கவும் தலைமை முடிவு செய்துள்ளது.

மா.த.வை டெல்லிக்கு அழைத்துள்ள தேசியத் தலைமை, மாநிலத் தலைவர் மாற்றம் தொடர்பாக முக்கிய முடிவை எடுக்கும் என்கிறது பா.ஜ.க. வட்டாரங்கள்.

Advertisment