குஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் 10 தனிப்படை டீம் அமைத்து விசாரணையை தொடங்கிய நாளிலிருந்து நாளுக்கு நாள் கைதாகும் குற்றவாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த சூழ்நிலையில், ஒவ்வொரு டீமும் வழக்கின் முக்கிய ஆதாரங்களை வைத்து அடுத்தகட்ட நகர்வுக்கான விசாரணையை தனித் தனியாகத் தொடங்கி யுள்ளன.

aa

இதில் ஒரு டீம் பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள், ராமு, ஹரிஹரன் ஆகியோரை காவலில் எடுத்து விசா ரணை நடத்திவருகின்றது. சதித் திட்டம் தீட்டியது எப்படி என்ற கோணத்தில் அவர்களை பெரம்பூர், புழல் போன்ற இடங் களுக்கு அழைத்துச்சென்று விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஹரிஹரனுக்கும், தலை மறைவாக இருந்துவரும் ரவுடி சம்பவ செந்திலுக்கும் நீண்டகாலமாக பழக்கம் இருந்து வந்துள்ளதாகவும், கூலிப்படை தொடர்பான வழக்குகளை ஹரிஹரன் எடுத்து நடத்தி வந்துள்ளான் என்றும் தெரிகிறது.

எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தவர் மலர்க்கொடி. மலர்க்கொடியின் மகன் அழகுராஜாவும், ஹரிஹரனும் ஒன்றாகப் படித்தவர்கள். வீட்டுக்கு வந்துசெல்கையில் அழகுராஜாவுக்கு பாம் சரவணன் ஸ்கெட்ச் போட்ட விவகாரத்தை பேசியுள்ளனர். “"சொன்ன மாதிரியே ஆற்காடுவை செஞ்சிட்டாங்க, அடுத்த என் மகனாக இருப்பானோ?'” என்ற அச்சத்தில் மலர்க்கொடி பேச, ஹரிகரன் ஏற்கனவே அந்த டீம்மேல் கோபத்தில் இருக்கும் சம்பவ செந்திலிடம் சொல்லவே, எதிரி களை ஒருங்கிணைத்து ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தார். அதனை எங்க டீம் செய்து முடித்தது என ஹரி ஹரன் வாக்குமூலம் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.

Advertisment

அதேவேளை யில் இன்னொரு டீம், நாகேந்திரனுக்கும் இந்த கொலைக்கும் என்ன சம்பந்தம் என்ற கோணத்தில் வேலூர் சிறைக்குச் சென்று நாகேந்திரனிடம் விசாரணை செய்துவருகின்றனர். ஹரிஹரன் சொல்வதும், ஆற்காடு கொலைக்காக கைகோர்த்ததாகச் சொல்லும் பொன்னைபாலு சொல்வதும், இவர்களுடன் அஞ்சலை இணைந்ததாகச் சொல்லப்படுவதும் உண்மையா என்பது சம்பவ செந்தில், சீசிங் ராஜா பிடிபட்ட பிறகே தெரியவரும்.

சம்பவ செந்தில் இறுதியாக போட்ட ஸ்கெட்ச்தான் மடிப்பாக்கம் செல்வம் கொலையாம். அதில் சம்பவ செந்தில் சமூகத்தைச் சார்ந்தவரும் அரசியல் பிரமுகருமான ஒருவர், அப்போதிருந்த கமிஷனரை வைத்து சிக்கல் வராமல் செந்திலைக் காப்பாற்றிவிட்டார். இதனால் தற்போது ஐந்தாவது சம்பவமாக ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்து கனகச்சிதமாக முடித்துள்ளார். சம்பவ செந்தில் தற்போது எப்படி இருப்பார் என்றே போலீஸுக்குத் தெரியாது. போலீஸிடம் இருக்கும் புகைப்படமோ, அவரது கல்லூரிப் பருவத்தில் எடுக்கப்பட்டது. அந்த புகைப்படத்தை கணினி துணையுடன் மேம்படுத்தித்தான் இப்படி இருப்பார் என்ற யூகத்தில் தேடிவருகிறது.

சம்பவ செந்தில் யாரையும் எந்த நேரத்திலும் நம்புவது இல்லையாம். அதனால் எந்த வேலையாக இருந்தாலும் அதனை செல்போன் மூலமாகவே பேசுவது வழக்கம். அவ்வப்போது சென்னையிலும் மற்ற நேரங்களில் பர்மா, மலேசியா, சிங்கப்பூர் என்றும் பதுங்கி தன்னை காத்துக் கொள்வதே இவரது ஸ்டைல். இருந்தும் இவரைப் பிடிப்பதற்கான வியூகங்களில் தனிப்படை வேகம்காட்ட ஆரம்பித் துள்ளது.

Advertisment

ss

தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கத் தேர்தல்களில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் ஆளுமையாக ஆம்ஸ்ட்ராங் இருந்து வந்துள்ளார். ஒருவேளை கொலை இந்தப் பின்னணியில் இருக்குமோ என்று சந்தேகப்படும் போலீஸ், இதன் பின்னணியில் யார் இருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரணையை நகர்த்தி முக்கிய வழக்கறிஞர் ஒருவரை நெருங்கியுள்ளதாகவும் சொல்லப் படுகிறது.

சம்பவ செந்தில், ஹரிகரனுடனான அறிமுகத்துக்காக மட்டும் இந்த விவகாரத்தில் தலையிட்டதுபோல தெரியவில்லை. அப்படியென்றால் எந்த லேண்ட் விவகாரத்திற்காக?, அது யாருக்காக? என்கின்ற கேள்வியும் போலீசாரை நெருக்குகிறது.

வழக்கை ஆருத்ரா பக்கம் திருப்பிவிட்டு, இதன் பின்புலத்திலுள்ள பெரும் தலைகளைக் காப்பாற்றவே இந்த ஸ்கெட்சா? வேறுபக்கம் சந்தேகம் திரும்பாமலிருக்கவே கொலை செய்தவர்கள் தானாக முன்வந்து சரணடைந் துள்ளார்களா? என்ற பல கேள்விகளுக்கு சம்பவ செந்தில், சீசிங் ராஜா கைதுதான் பதிலளிக்கும்.

யார் இந்த சம்பவ செந்தில்?

தூத்துக்குடி மாவட்டம் தண்டுபத்து கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் குமரன். படிப்பிற்காக குடும்பத்தோடு சென்னைக்கு வந்த செந்தில் குமரன், சென்னை தண்டையார்பேட்டை எம்.எம். தியேட்டர் அருகே குடும்பத்தோடு வசித்துவந்தார். சென்னை தியாகராஜர் கல்லூரியில் படித்து பின்னர் சட்டமும் படித்தார். சட்டத்திலுள்ள நுணுக்கங்களை கரைத்துக் குடித்ததால் கிரிமினல் லாயர் ஆனார். பின்னர் ரவுடிகளின் வழக்குகளை எடுத்து நடத்திவந்தார். ரவுடிகளின் ஒவ்வொரு அசைவுகளையும் விரல் நுனியில் வைத்திருந்தார். இதனால் ரவுடிகள் வட்டத்தில் நெருக்கமாகியுள்ளார். அப்படி நெருக்கமானவர்தான் கல்வெட்டு ரவி என்கிற ரவுடி. அவர் மீதான வழக்குகளுக்கு ஆஜராகி பின்னர் அவருடன் நண்பராகி கல்வெட்டு ரவியின் கேங்கிலேயே சங்கமித்துள்ளார் செந்தில்குமரன்.

இதோடு, அலுமினிய தொழிற்சாலையில் பங்கு, பிரபல ஊட்டச்சத்து பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் வடசென்னை டீலர். மறுபுறம் வழக்கறிஞர், ரவுடிகளின் நண்பன் என்று பன்முகத்தன்மை கொண்டவராக செந்தில்குமரன் உருவெடுத்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. அதேபோல் சென்னை துறைமுகம் வழியாக கடத்தலிலும் ஈடுபட்டுவந்தார். வடசென்னை தாதா காக்காத்தோப்பு பாலாஜியை மீறி உள்ளே நுழைய முடியவில்லை. தென்சென்னையிலும் தாதா சி.டி.மணியைத் தாண்டி பெரிதாக சாதிக்க முடியவில்லை. கல்வெட்டு ரவி கேங்கிலேயே இருந்து பல வேலை களைச் செய்து பெரிய தாதாவாக உருவெடுக்க முயற்சி செய்தார்.

தென்சென்னை, வட சென்னையை ஒற்றுமையாக இருந்து ஆட்டிப் படைத்தார்கள் சி.டி. மணியும், காக்காத்தோப்பு பாலாஜியும். இதனால் இவர்கள் இருவரும் தங்களுக்குப் போட்டியாக வந்த கல்வெட்டு ரவியைப் போட்டுத்தள்ள முற்பட்டபோது, அவரைக் காப்பாற்ற களத்திலிறங்கி முழுநேர ரவுடியாக உருவானார் செந்தில்குமரன். பின்னர் அடுத்தடுத்து சம்பவங்களைச் செய்ததாலும், சம்பவங்களுக்கு துணையாக, தூண்டுகோலாக இருந்ததாலும் செந்தில்குமரன், சம்பவ செந்தில் ஆனார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் சூணாம்பேடு காவல் எல்லையில் வழக்கறிஞர் காமேஷ், ஈசா என்ற ஈஸ்வரனால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் சம்பவ செந்தில் வழக்கில் சேர்க்கப்பட்டு பின்னர் விடுவிக்கபட்டதாகச் சொல்லப்படுகிறது. அடுத்ததாக 2017 டிசம்பர் 1-ஆம் தேதி, திருப்போரூர் ரியல் எஸ்டேட் அதிபர் ரவீந்திரனை திருப்போரூர் ரவுண்டானா அருகில் வெட்டிய கொலை வழக்கிலும், முத்தியால் பேட்டையில், ரவுடி காக்காத்தோப்பு பாலாஜியின் கூட்டாளி என்று சொல்லப்பட்ட விஜயகுமார் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கிலும் சம்பவ செந்தில் மூளையாகச் செயல்பட்டதாக காவல்துறை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை எந்த வழக்கிலும் போலீசாரால் சம்பவ செந்திலை கைதுசெய்ய முடியவில்லை.

இந்த நிலையில் கல்வெட்டு ரவி ரவுடியிசத் திலிருந்து ஒதுங்கிவிட, காக்காத்தோப்பு பாலாஜி, சி.டி. மணி உள்ளிட்டோரை எதிர்ப்பவர்களுக்கு தலைவனாக வளர்ந்துள்ளார் சம்பவ செந்தில். 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சம்பவ செந்திலின் கூட்டாளிகளான ஈசா என்கிற ஈஸ்வரன்,. 'எலி' யுவராஜ் ஆகியோரின் ஏற்பாட்டில், அண்ணா சாலையில் சி.டி. மணி மற்றும் காக்காத்தோப்பு பாலாஜியின் கார்மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் 7 பேர் சரணடைந்தனர். ஆனால் முக்கிய குற்றவாளியான சம்பவ செந்திலை காவல்துறையினரால் பிடிக்கமுடியாததால் லுக்அவுட் நோட்டீஸ் அனுப் பப்பட்டது. சம்பவ செந்தில் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார்.

ஏற்கனவே, 4 கொலைகள் உட்பட 10-க்கும் அதிகமான குற்ற வழக்குகளில் சேர்க்கப்பட்ட சம்பவ செந்தில், தமிழகத்தின் நம்பர்ஒன் தாதா ஆனது இப்படித்தான்.

சென்னையில் பழைய பொருட்கள் வாங்கி விற்பனைசெய்யும் ஸ்க்ராப் தொழிலில் சம்பவ செந்தில் கேங்கும், ஆம்ஸ்ட்ராங்கும் ஈடுபட்டதாகவும், ஸ்கிராப் வர்த்தகத்தைக் கைப்பற்றுவதில் ஏற்பட்ட பல கோடி ரூபாய் போட்டியில் ஆம்ஸ்ட்ராங், சம்பவ செந்தில் கேங்கால் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

ஸ்கிராப் பிசினஸில் சம்பவ செந்திலுக்கு ஆம்ஸ்ட்ராங் இடையூறாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் உடன் மோதலிலுள்ள ரவுடிகளை ஒருங்கிணைத்து, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கு ஸ்கெட்ச் போட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

சொந்த ஊரான தூத்துக்குடி மற்றும் நேபாளத்தில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது.

சம்பவ செந்தில், வெங்கடேச பண்ணையார் ஆதரவாளராக இருந்துள்ளார். சம்பவ செந்திலின் பிறந்தநாள் நவம்பர் 22-ம் தேதி. அவருடைய பிறந்தநாளை அவர் சார்ந்த சமுதாய இளைஞர் கள், ராக்கெட் ராஜா ஆதரவாளர்கள் அவரது பழைய புகைப்படத்தை வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டாடிவருவதை காண முடிகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராக்கெட் ராஜா குழுவிலுள்ள ஒருவரிடம் பேசியபோது, “"சம்பவ செந்தில் யாரிடமும் அதிகமாகத் தொடர்பு வைத்துக்கொள்ளமாட்டார். சமுதாயரீதியாக எங்களிடம் பேசுவார். பேசி மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆன்லைன் மூலமாகத்தான் பேசுவார். அவர் பேசும் எண்ணில் நான்கு டிஜிட் நம்பர்தான் காண்பிக்கும். அவர் எங்கிருந்து பேசுவார் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. ஆனால் ராக்கெட் ராஜா அண்ணன் தொடர்பிலுள்ள ஒருவரிடம் மட்டும் அடிக்கடி பேசுவார்''’ என்றார்.

போலீஸ் தரப்பிலோ தீவிரவாதிகள் மட்டுமே பயன்படுத்தும் ஒரு செல்போன் செயலியைப் பதிவிறக்கம் செய்து அந்த செயலி மூலமாகத்தான் எல்லோரிடமும் சம்பவ செந்தில் பேசுவான் என்றும், கொலைக்கான ஸ்கெட்ச் போடுவதும் அந்த செயலி மூலமாகத்தான் என்றும் சொல் கின்றனர். அந்த செயலி மூலமாகப் பேசினால் உளவுத்துறையால்கூட கண்டுபிடிக்கமுடியாதாம். சம்பவ செந்தில் என்ற சம்பாவுக்கு அந்த வகையில் உதவி செய்துவருவது அவருடைய நண்பர்களான மாலிக், சதீஷ் எனத் தெரியவருகிறது. இந்த தகவல் மத்திய உளவுத்துறைக்கு நான்கு வருடங்களுக்கு முன்பே தெரிந்தும் சம்பாவை நெருங்கமுடியவில்லை. அவருக்கு உதவி செய்தவர்களையும் பிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் சம்பவ செந்திலுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. யாரையோ காப்பற்ற காவல்துறையினர் திசைதிருப்பும் நாடகம்தான் இது என்றும், இந்த கொலை வழக்கில் அமைச்சர் ஒருவரையும், அரசியல் கட்சித் தலைவர் ஒருவரையும் விசாரிக்கவேண்டும் என்றும் சிலர் குரலெழுப்புகின்றனர்.

இத்தனை வருடம் பிடிபடாத சம்பவ செந்திலையும் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய சீசிங் ராஜா வையும் பிடித்தே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தனிப்படைகள் பறந்து கொண்டி ருக்கின்றன.

இதற்கிடையில், ஆம் ஸ்ட்ராங்கின் வலதுகரமாக இருந்த பாம் சரவணன், காவல்துறையாலேயே பிடிக்க முடியாத சம்பவ செந்திலையும் அவன் கூட்டாளிகளையும் குறிவைத்து தலைமறை வாகியுள்ளார். இதனால் பாம் சரவணனையும் போலீசார் தேடத்தொடங்கியுள்ளனர்.

சென்னையில் நடக்கும் ரத்த சரித்திரம் முடிவுக்கு வருமா?

-துரை.மகேஷ், சே

ss