சேலத்தில் துப் பாக்கி, கத்தி, அரிவாள், முகமூடிகளுடன் பிடிபட்ட இளைஞர்கள், உள்ளூர் மற்றும் கியூ பிரிவு காவல்துறையினரைத் தொடர்ந்து, தேசிய புலனாய்வு முகமையின் விசாரணை வளையத்திலும் சிக்கியிருக்கின்றனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே புளியம்பட்டி பகுதியில், ஓமலூர் டி.எஸ்.பி. சங்கீதா தலைமையில் காவல்துறையினர், கடந்த மே 20-ஆம் தேதி வாகனத் தணிக்கை யில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக இரண்டு இளைஞர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த பையைச் சோதனை செய்தனர். அதில், ஒரு கைத்துப்பாக்கி, அரைகுறையாக செய்து முடித்திருந்த ஒரு பெரிய துப்பாக்கி, ஒரு லிட்டர் பெட்ரோல் ஆகியவை இருந் துள்ளன.
அதிர்ச்சியடைந்த காவல்துறை, அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்ததில் பல திடுக் கிடும் தகவல்கள் கிடைத் தன. அவர்கள், யூடியூப் சேனல்களைப் பார்த்து, துப்பாக்கி தயாரித்துள்ளனர். சேலம் செட்டிச்சாவடியில் தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கு துப்பாக்கிகளைத் தயாரித்துள்ளனர். பிடிபட்ட இளைஞர்களில் ஒருவர் சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி, இன்னொருவர், பெரமனூரைச் சேர்ந்த சஞ்சய் பிரகாஷ். இருவரும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள்.
அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து துப்பாக்கிகள், கத்திகள், டிரில்லர் மெஷின், வெல்டிங் மெஷின், முகமூடிகள், ரம்பம், வாக்கிடாக்கி, துப்பாக்கி செய்வதற்கான உதிரிபாகங்கள், தோட்டாக்கள், வீரப்பன், எல்.டி.டி.இ. தலைவர் பிரபாகரன் ஆகியோரைப் பற்றிய புத்தகங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றியிருக்கிறது காவல்துறை.
இந்த வழக்கில், அவர்களின் கூட்டாளியான கிச்சிப்பாளையம் கபிலன் என்பவரையும் கைது செய்தனர். மூவர் மீதும் ஆயுதத் தடைச் சட்டத் தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், இந்த வழக்கு கியூ பிரிவு காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக நமது கள விசாரணையில் மேலும் பல தகவல்கள் கிடைத்தன.
பிடிபட்ட மூவரில் நவீன் சக்கரவர்த்திதான் மூளையாகச் செயல்பட்டு வந்துள்ளார். அவருடைய தந்தை கார் டிங்கரிங் வேலைசெய்பவர் என்பதால், சிறு வயதிலிருந்தே ஒரு இரும்பு உருளையைக் கொடுத்தால் அதை பல்வேறு வடிவமாக மாற்றிவிடுவதில் கெட்டிக்கார ராக இருந்திருக்கிறார் நவீன்.
இந்த கும்பலைச் சேர்ந்த சஞ்சய் பிரகாஷ், சில மாதங்கள் சேலம் உயிரியல் பூங்காவிலுள்ள கேண்டீனில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது உள்ளூர் மக்களிடம் ஏற்பட்ட அறிமுகத்தில், செட்டிச்சாவடி யில் வாடகைக்கு வீடு எடுத்துள்ளார். துப்பாக்கி தயாரிக்கவும், திட்டங்களை வகுப்பதற்கான கள மாகவும் அந்த வீட்டைப் பயன்படுத்திவந்துள்ளனர்.
தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த கபிலன், அவ்வப்போது அவர்களுக்கு நிதியுதவி செய்திருக்கிறார். பி.சி.ஏ. படித்துள்ள நவீன் சக்கரவர்த்தி கூரியர், பார்சல் சர்வீஸ் நிறுவனம் ஆகிய இடங்களில் வேலை செய்துவந்துள்ளார். பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ள சஞ்சய் பிரகாஷ், உள்ளூர் ஐ.டி. நிறுவனம், உயிரியல் பூங்கா கேண்டீன் ஆகிய இடங்களில் சில மாதங்கள் வேலைபார்த்துள்ளார். அவற்றின் மூலம் கிடைத்த பணத்தை வைத்து, துப்பாக்கி தயாரிப்புக்கான உதிரிபாகங்கள், வெல்டிங் மெஷினை வாங்கியுள்ளனர்.
சந்தனக் கடத்தல் வீரப்பன், எல்.டி.டி.இ. தலைவர் பிரபாகரன் ஆகியோரை முன்மாதிரி யாகக் கொண்டு இயக்கத்தை கட்டமைக்கத் திட்டமிட்டிருந்தனர். இயற்கை வளங்களையும், பறவைகளையும் காப்பதுதான் தங்கள் இலக்கு என்று வாக்குமூலம் அளித்துள்ளனர்.
''கற்களுக்காக மலையை வெட்டக்கூடாது. மலையைச் சுரண்டினால் மழை பெய்யாது. இங்கே சாமானியர்கள் முதல் நீதிபதிகள் வரை எல்லோருமே தவறுசெய்கிறார்கள்,'' என்று நவீன் சக்கரவர்த்தி கூறியதாகச் சொல்கிறது காவல்துறை. 'தமிழர் நீதி புரட்சிகர இயக்கம்' என்பது உள்ளிட்ட சில பெயர்களை தங்கள் அமைப்புக்கு வைக்கத் திட்டமிட்டிருந்துள்ளனர். ஆனால் பிடிபட்ட நாளில் அவர்கள் எந்த ஒரு இயக்கத்தையும் கட்டமைக்கவில்லை.
தாங்கள் போராளிகள் என்று வெளியுலகுக்கு காட்டக்கூடாது என்பதிலும் உறுதியாக இருந்துள்ளனர். எந்த ஒரு திட்டத்தையும் முகமூடி அணிந்து கொண்டுதான் செய்யவேண்டும் என்பதற்காகவே ஆன்லை னில் முகமூடிகளை வாங்கியுள்ளனர்.
இது ஒருபுறமிருக்க, கடந்த ஜூலை 25-ஆம் தேதி, சேலம் கிச்சிப் பாளையத்தில் தங்கி யிருந்த, அல்கொய்தா பயங்கரவாத அமைப் புடன் தொடர்பில் இருந்த தாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அப்துல் அலீம் மண்டல் என்கிற ஜூபாவை பெங்களூரு காவல் துறையினர் கைதுசெய்தனர்.
ஜூலை 30-ஆம் தேதி, முஸ்லீம்கள் பெரும்பான்மை யாக வசிக்கும் சேலம் கோட்டையில் வாடகைக்கு வீடெடுத்து தங்கியிருந்த ஐ.எஸ்.ஐ.எஸ்.ஐ அமைப்புடன் தொடர்பிலிருந்த ஆஷிக் என்பவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைதுசெய்தனர்.
இந்த நிலையில், துப்பாக்கியுடன் பிடிபட்ட இளைஞர்களின் வழக்கு, கியூ பிரிவு வசமிருந்து என்.ஐ.ஏ. பிரிவுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் 5 போலீசார், ஆக. 5-ஆம் தேதி முதல், மீண்டும் முதலிலிருந்து இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக சின்னச் சின்ன சலசலப்புகள் நடந்தாலும், தமிழகம் இது வரை அமைதிப் பூங்காவாகத்தான் திகழ்கிறது. பூங்காவின் அமைதியை யாரும் சீர்குலைத்துவிடாமல் பார்த்துக்கொள்வது காவல்துறையின் கடமை.