காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த மானாமதி கிராமத்தில் உள்ளது, கங்கை அம்மன் கோவில். இந்தக் கோவிலுக்குப் பின்னாலுள்ள குளத்தை, கடந்த 25-ந் தேதி கிராமத்தினர் தூர்வாரினார்கள். அப்போது, கிடைத்த இரும்பினாலான மர்மப்பொருளை, கோயிலுக்கு அருகே வைத்துவிட்டு பணியைத் தொடர்ந்துள்ளனர்.

kovil

அன்றைய தினம், கூவத்தூரை அடுத்த குண்டுமணிச்சேரி பகுதியில் இருந்து சூர்யா, தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக நண்பர்கள் ஜெயராமன், திலீபன், யுவராஜ், திருமால், விஸ்வநாதன் ஆகியோருடன் கோயில்பக்கம் கூடினார். அப்போது, அங்கிருந்த மர்மப் பொருளை எடுத்துப் பார்த்து, உடைக்க முற்பட்டபோதுதான், அது பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில் சூர்யா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்ற ஐந்துபேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், திலீபனின் உயிர் மறுநாள் பிரிந்தது. மீதமுள்ளவர்களில் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

இந்த விபத்துக்கான காரணத்தை அறிய, காஞ்சிபுரம் எஸ்.பி.கண்ணன், டி.ஐ.ஜி.தேன்மொழி மற்றும் வடக்கு மண்டல ஐ.ஜி.நாகராஜ் ஆகியோர் விசாரணையில் இறங்கினர். முதற்கட்ட விசாரணையில் அதேபகுதியில் பழைய இரும்புக்கடை நடத்திவந்த ரஃபீக் கானிடம் இந்தப் பொருள் இருந்ததாக தெரியவந்தது. ரஃபீக் கானை பிடித்து விசாரித்தபோது, இரண்டு ஆண்டுக்கு முன்னர் யாரோ ஒருவர் தன்னிடம் அதனை விற்றதாக ஒப்புக்கொண்டவர், அது இளைஞர்களிடம் எப்படிப் போனது என்பது பற்றி தெரியாது என்று கூறிவிட்டார்.

சம்பவத்தின்போது அருகில் தூர்வாரிக் கொண்டிருந்தவர்கள், "கோவில் அருகில் வைத்திருந்த பொருளை இளைஞர்கள் எடுத்த போது வெடித்தது' என தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த இளைஞர்கள் இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீளாததால், வெடிகுண்டு எங்கிருந்து கிடைத்தது என்பது விளங்காமலேயே உள்ளது.

kovil

Advertisment

சம்பவம் நடந்த இடத்தில் மீட்கப்பட்ட மற்றொரு குண்டு, செங்கல்பட்டு மாஜிஸ்திரேட் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டு, சென்னை க்ரீன்வேஸ் சாலையிலுள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படைக்கான கமாண்டோ ஃபோர்ஸ் மருதம் ஆயுதக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான தகவல்களைக் கண்டறிய எக்ஸ்.ஆர்மி ஜெயராமன் தலைமையிலான குழு ஆய்வுசெய்து வருகிறது. உரிய தகவல்கள் கிடைத்ததுமே செயலிழக்கச் செய்வார்கள் என்று கூறுகின்றனர்.

இந்நிலையில், 29-ந் தேதி காலை மானாமதி அருகிலுள்ள அனுமந்தபுரத்தில் வெடிகுண்டுக் குவியல் இருப்பதாக செய்திகள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பின. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அப்பகுதிவாசியும், சமூக ஆர்வலருமான சம்மந்தன், “""இங்குள்ள அனுமந்தபுரம், காயாறு, நெல்லிக்குப்பம், கேளம்பாக்கம், ஊமனாஞ்சேரி, வேங்கடமங்கலம் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் ராணுவப்பயிற்சி மற்றும் காவல்துறை சிறப்புப்பயிற்சி முகாம்கள் அமைந்துள்ளன. ராணுவத்தின் ஸ்பெஷல் கமாண்டோ ஃபோர்ஸும் இங்கு அமைந்துள்ளது. குறிப்பாக, நீண்டதூரம் சுடும் ஸ்னைப்பர் வகை துப்பாக்கிச் சுடும் பயிற்சி, ஆர்.எல். எனப் படும் ராக்கெட் லான்சர் பயிற்சி போன்ற ஃபீல்டு ஃபயரிங் ரேஞ்ச் அனுமந்த புரத்தில்தான் உள்ளது.

kkk

ஒவ்வொரு ஆண்டும் இரண்டுமுறை சிறப்புப்பயிற்சியை ராணுவம் இங்கு நடத்துகிறது. அதுபோன்ற சமயங்களில் குண்டுகளின் இரும்பு உறைகள் மற்றும் வெடிக்காத துப்பாக்கி குண்டுகள் அருகில் உள்ள பகுதிகளில் தவறுதலாக விழுவதுண்டு. பயிற்சி வேகத்தில் அதனை ராணுவத்தினரும் கண்டுகொள்வதில்லை. பயிற்சிகள் ஓய்ந்தபிறகு, இந்தப்பகுதி மக்கள் சிதறிய பொருட்களை எடுத்து பழைய இரும்புக்கடைகளில் விற்பனை செய் வார்கள். அதுபோன்ற ஒரு குண்டுதான் வெடித்திருக்கிறதே தவிர, ஆயுதக்குவியல் எல்லாம் இங்கே கிடையாது. வதந்திகளைப் பரப்பி மக்களை பீதியடையச் செய்கிறார்கள். தற்போது இரண்டு உயிர்கள் பறிபோயிருக்கும் நிலையில், இனிமேலா வது இது தொடராமல் இருக்க முயற்சி எடுக்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுக்கிறார்.

காஞ்சிபுரம் எஸ்.பி.கண்ணனிடம் பேசிய போது, ""குண்டுவெடித்த சம்பவம் பற்றி விசாரித்து வருகிறோம். அனுமந்தபுரத்தில் ஆயுதக்குவியல் கிடந்ததாக வீண் வதந்திகளைப் பரப்புகிறார்கள். அங்கு பலஆண்டுகளாக ராணுவப் பயிற்சிகள் நடக்கின்றன. உரிய பாதுகாப்பை மேற்கொள்ளு மாறு ராணுவத்தினரிடம் பேசியிருக்கிறோம்'' என்றார்.

-அரவிந்த்