"காலா'’ ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு கடந்த 09-ஆம் தேதி வந்த ரஜினி மக்கள் மன்றத்தின் மா.செக்கள் அனைவரும் 10-ஆம் தேதி காலை 10 மணிக்குள் ராகவேந்திரா மண்டபத்துக்கு வருமாறு தலைமையிடமிருந்து தகவல் போனது. மா.செ.க்களில் பாதி பேர் தங்களது சொந்த வாகனங்களிலும் மீதி பேர் ஆட்டோக்களிலும் மண்டபத்திற்கு வந்திறங்கினர்.

Advertisment

rajini

எப்போதும் இல்லாத வகையில், தலைமையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மூன்று டெம்போ டிராவலர் வேன்களில் அனைத்து மா.செ.க்களும் ஏறுமாறு அறிவுறுத்தப்பட்டனர். அதற்கு முன்பாக அனைவரது செல்ஃபோன்களும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு, தனித்தனி கவர் போட்டு மண்டபத்திலேயே வைத்துக் கொண்டனர். மூன்று வேன்களும் நேராக போயஸ்கார்டனில் இருக்கும் ரஜினியின் வீட்டுக்குச் சென்றது. அனைத்து மா.செ.க்களும் ஹாலில் அமரவைக்கப்பட்ட பின், காலை 11.30-க்கு வெள்ளை வேஷ்டி சட்டையில் வந்தார் ரஜினி.

நல விசாரிப்புகளுக்குப் பின் பேசிய அனைத்து மா.செ.க்களும், ""தலைவர் அவர்கள் கட்சி ஆரம்பிக்கப் போறதா சொல்லி அஞ்சு மாசமாச்சு. எப்போது கட்சிப்பேரை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. அரசியல் களத்திலும் எதிர்மறை விமர்சனங்கள் வர ஆரம்பித்துவிட்டன''’-இப்படியான பல்வேறு கருத்துக்களை சொல்லி முடித்தனர்.

Advertisment

rajini

பொறுமையாகக் கேட்டுக்கொண்ட ரஜினி, ""மற்றவர்கள் விமர்சனம் பண்ணுகிறார்கள் என்பதற்காக கட்சி ஆரம்பிக்க முடியாது. ஃபவுண்டேஷன் ஸ்ட்ராங்கா இருந்தாத்தான், காலாகாலத்துக்கும் கட்டிடம் நிலைச்சு நிற்கும். அந்த ஸ்ட்ராங் ஃபவுண்டேஷன் என்பது பூத் கமிட்டியும் கிளை அமைப்புகளும்தான். "பூத் கமிட்டி அமைப்பதில் எந்த மாவட்டம் ஆக்டிவா இருக்கு'’என ரஜினி கேட்டதும், "மாவட்டத்தில் உள்ள 1,562 பூத்துகளுக்கும் நிர்வாகிகளை நியமித்து தூத்துக்குடி மா.செ. ஏ.ஜே.ஸ்டாலின் முதல் இடம், நீலகிரி மா.செ. குமார் இரண்டாம் இடம், விழுப்புரம் மா.செ. இப்ராஹிம் மூன்றாம் இடம், கிருஷ்ணகிரி மா.செ.மதியழகன் நான்காம் இடம், அதற்கடுத்தடுத்த இடங்களில் திருவண்ணாமலை மா.செ. சண்முகம், கடலூர் மா.செ. டாக்டர் இளவரசன், வேலூர் மா.செ. சோளிங்கர் ரவி ஆகியோர் இருப்பதாக ரஜினிக்கு தகவல் சொல்லப்பட்டது.

""அனைத்து கட்டமைப்பு வேலைகளையும் ஜூன் மாதத்திற்குள் நீங்கள் முடிக்க ரெடியாக இருந்தால், கட்சிப் பெயரை அறிவிக்க நான் ரெடி''’என உற்சாகமாக கூறிய ரஜினி, அனைத்து மா.செ.க்களுடனும் குரூப்பாகவும் தனித்தனியாகவும் போட்டோ எடுத்துக்கொண்டார்.

Advertisment

அடுத்தடுத்த நாட்களில், பல அணிகளின் தலைமை நிர்வாகிகள் பற்றிய அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

-ஈ.பா.பரமேஷ்வரன்