திருவண்ணாமலை அருகேயுள்ளது ஊசாம்பாடி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த விவசாய கூலி வேலை செய்யும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த தம்பதிகளின் மகள், மனநலம் பாதிக்கப்பட்ட 23 வயதான சத்தியா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) அங்குள்ள பள்ளியில் எட்டாவது வரை படிக்க வைத்துள்ளனர் பெற்றோர். படிக்கும்போது பேச்சு சரியாக வரவில்லை. அடிக்கடி மாற்றி மாற்றிப் பேசியுள்ளார், படிப்பறிவும், வசதியும் இல்லாததால் மனநலம் பாதிக்கப்பட்டவர் என முடிவு செய்து முறையான சிகிச்சை பெற வாய்ப்பில்லாமல் விட்டவர்கள், பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தியுள்ளார்.
மனநலம் பாதிக்கப்பட்ட மகளை கண்ணும் கருத்துமாக கவனமாக பார்த்துக்கொண்ட தாயார் இறந்ததும்... சகோதரியும், சகோதரன்களும் பார்த்துக் கொண்டுள்ளனர். வீட்டில் உள்ள இரண்டு பசுமாட்டை தினமும் மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்லும் வேலையை செய்துள்ளார் அந்தப்பெண்.
சில தினங்களுக்கு முன்பு அவரது வயிறு வீங்கியிருப்பதைப் பார்த்த குடும்பத்தார், மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதித்தபோது, 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர் கூறியதைக்கேட்டு அதிர்ச்சியாகி யுள்ளனர். அந்தப் பெண்ணிடம் குடும்பத்தார், அக்கம்பக்கத் தார் நடந்தது என்ன என்று அவருக்கு புரியும்படி கேட்டுள்ளனர்.
மாடு மேய்த்துக்கொண்டுயிருந்தபோது, ஒருவர் என்னை முள்செடி மறைவுக்கு இழுத்துப்போனார் எனச்சொல்லி அதன்பின் சொல்லத் தெரியாமல் தவித்துள்ளார். யார் எனக் கேட்க, ஆடு மேய்க் கறவர் எனச்சொல்லியுள்ளார். இந்தப் பெண்ணுடன் ஆடு மேய்க்கும் உள்ளுர், வெளியூர் ஆட்கள் யார், யார் என விசாரித்தபோதுதான் 65 வயதான அதே ஊரில் அதே தெருவைச் சேர்ந்த, மனைவியை இழந்தவரும் பேரன்- பேத்தியெடுத்தவருமான பரசுராமன் மீது சந்தேகம் வந்துள்ளது.
ஊர் பஞ்சாயத்தில் அந்த கிழவனின் பெயர் சொல்ல தெரியாத அந்தப்பெண், அவர்தான் தன்னை கையைப்பிடித்து இழுத்து சென்றார் என அடையாளம் காட்டியுள்ளார். நான் ஆடு மேய்க்கப் போய் 6 மாதமாகிறது எனச் சொல்லி மறுத்துள்ளார் பரசுராமன். மனநலம் பாதிக்கப்பட்ட அந்தப்பெண், இவர்தான் தன்னை கையைப் பிடித்து இழுத்துச் சென்றார் என உறுதியாக கை காட்டியுள்ளார்.
இதன்பின் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மே 21-ஆம் தேதி சேகர் புகார் தந்துள்ளார். காவல்நிலையத்தில் நடந்தது குறித்து மனநலம் பாதிக்கப்பட்ட அந்தப்பெண் நம்மிடம், அந்த தாத்தாவை கல்யாணம் செய்துக்க றேன்னு சொல்லுன்னு என்னை 5 பேர் மிரட்டி னாங்க, என்னை அடிக்க வந்தாங்க என்றவருக்கு கோர்வையாகப் பேச வரவில்லை.
அங்கிருந்த அவரது உறவினர்களோ, "அந்த கிழவன் நான்தான் கற்பழித்தேன்னு சொல்லிய பிறகு, அவன் மேல நடவடிக்கை எடுத்தால் பொண்ணு வாழ்க்கைதான் கேள்விக்குறியாகும். "அந்தப் பொண்ணே அந்தாளை கட்டிக்க ஒத்துக்கிட்டாளே அப்பறம்மென்ன கட்டி வச்சிடுங்க'ன்னு சொல்லியிருக்காங்க.
அந்த கிழவனும் "நான் கல்யாணம் செய்துக்கறேன், எனக்கு வரும் முதியோர் பென்ஷன அதுங்கிட்டயே தந்துடறன், என்னோட ஓட்டு வீட்டை எழுதி வச்சிடறன்'னு சொல்ல பஞ்சாயத்துப் பேசி அதை எழுதி வாங்கிக்கிட்டு அனுப்பிட்டாங்க'' என்றார்கள்.
மே 23-ஆம் தேதி இந்த விவகாரம் சமூக ஆர்வலர்கள் மூலமாக காவல்துறை உயரதிகாரி களின் கவனத்துக்கு சென்றது. அதிகாரிகள் மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஷியாமளாவிடம் கேள்வி மேல் கேள்வி எழுப்ப, அதன்பின் அந்தப் பெண்ணின் தந்தையை அழைத்து வந்து மீண் டும் புகார் வாங்கி வன்புணர்வு சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரிடம் பெண் போலீஸார், அந்தாளு தான் கற்பழிச்சாங்கறதுக்கு என்ன ஆதாரம்? கண்ணால பார்த்த சாட்சியை அழைச்சிக்கிட்டு வாங்க, அப்போதான் அந்தாளுக்கு தண்டனை வாங்கித்தர முடியும் எனக் கூறியுள்ளனர். கற்பழிக்கிறவன் சாட்சி வச்சிக்கிட்டா செய்வான்? அந்தாளே நான்தான் செய்தேன்னு ஒத்துக்கிட்டான். வேணும்னா அறிவியல் ரீதியா டெஸ்ட் எடுத்து நிரூபிக்கறதை விட்டுட்டு இப்படி செய்தால் என்ன அர்த்தம் என கேள்வி எழுப்புகிறார்கள் அக்கிராமத்தினர்.
போலீஸ் மிரட்டியதாக கூறப்படுவது குறித்து டி.எஸ்.பி ரமேஷிடம் கேட்டபோது, "சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்திற்கு காவல்துறை அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது சில கேள்விகள் அவர்களை சங்கடப்படுத்துவதாக இருந் திருக்கும்.
அதை வைத்து மிரட்டுவதாக அவர்கள் கூறுவதாக நினைக்கிறேன். இது பாலியல் குற்றச்சாட்டு வழக்கு, கவனமாக வழக்கை நடத்தவேண்டும், இல்லையேல் குற்றவாளி தப்பிக்க வாய்ப்பு ஏற்படும். அதனால் அறிவியல் ரீதியாக இந்த வழக்கை கையாள்கிறோம். கைது செய்யப்பட்டுள்ள நபருக்கு கொரோனா பாசிட்டிவ்... அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறை சரியாகவே இந்த வழக்கை கையாள்கிறது'' என்றார்.