நெருக்கடி சூழலை சாதகமாக்குவதுதான் அரசியல். அதை ரஜினி மன்றத்தினர் கவனமாக கையாண்டு வருகிறார்கள். "யார் நீங்க?',’"நான்தான் ரஜினிகாந்த்'’-இந்தக் கேள்வியும் பதிலும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கின. சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டாக் போட்டு இந்திய அளவில் ட்ரெண்ட்டிங்கான நிலையில், அதனையே சாதகமாக்கி வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள். ரஜினியின் முதல் படமான "அபூர்வ ராகங்கள்' படத்தில் அவர் என்ட்ரி ஆகும் காட்சியில், ரஜினியிடம் கமல் கேட்கும் கேள்வி, “"யார் நீங்க?'’‘ என்பதுதான். திரையில் ரஜினி எப்படி சூப்பர் ஸ்டார் ஆனாரோ, அதே சென்ட்டிமெண்ட்டில் அரசியலிலும் பெரும் வெற்றி பெறுவார் என நம்பிக்கை தெரிவிக்கும் ரஜினி ரசிகர்கள், தூத்துக்குடியில் சமூக விரோதிகள் என ரஜினி சொன்னதை திட்டமிட்டே திசை திருப்புகிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.

நம்மிடம் பேசிய ரஜினி மக்கள் மன்றத்தின் தூத்துக்குடி மா.செ. ஸ்டாலின், பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு ரஜினி அளித்த நிவாரண விவரங்களைப் பட்டியலிட்டார்.

""குண்டு துளைத்து இறந்த 13 பேர் குடும்பத்தில், எந்த நிதியும் வேண்டாம் என்பதில் 3 குடும்பங்கள் உறுதியாக இருக்கின்றன. இறந்த ஒருவருடைய குடும்பத்தினர் விவரம் எதுவும் அரசிடம் இல்லை. மீதி 9 பேர் குடும்பத்தினரையும், எங்கள் மன்ற நிர்வாகிகள், அவரவர் வீட்டுக்கே போய் சந்தித்து, தலா ரூ.2 லட்சமும், காயமடைந்த 55 பேரிடம் ரூ.10000 வீதம் தந்திருக்கிறார்கள்’என்றவர், ""இதையெல்லாம் திசை திருப்பும் வகையில் சில அரசியல் தலைவர்கள் விமர்சிக்கிறார்கள். மீம்ஸ்களாகப் போட்டு வலைத்தளத்தில் கிண்டலடிக்கிறார்கள்''’என்று தனது ஆதங்கத்தைக் கொட்டினார்.

""ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை புனிதமான போராட்டம் என்றுதான் ரஜினி சொன்னார். ஸ்டெர்லைட் நிர்வாகம் மீண்டும் ஆலையைத் திறந்தால் அவர்கள் மனுஷ ஜென்மமே இல்லை'' என்று கடுமையான வார்த்தையைப் பயன்படுத்தினார். போராடிய பொதுமக்களை சமூக விரோதிகள், விஷக்கிருமிகள் என்று ஒருபோதும் சொல்லவில்லை. மக்கள் மேலே அவருக்கும் அவர் மேல மக்களுக்கும் அப்படி ஒரு பாசம் இருக்கு. முதல் நாள்தான் தூத்துக்குடி வர்றேன்னு சொன்னாரு. மறுநாள் தூத்துக்குடி ஏர்போர்ட்ல அப்படி ஒரு கூட்டம். நல்ல வரவேற்பு. ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி-மற்ற கட்சித் தலைவர்கள் யாருக்கும் இந்த வரவேற்பு கிடைக்கலை. பிரஸ்மீட்ல தொப்பலா வியர்வையில நனைஞ்ச பிறகும் அதே சட்டையிலதான் சென்னைக்குப் போனாரு. சாதாரண கவுன்சிலர்கூட, கார்ல வர்றப்பவே டிரஸ் மாத்துற காலத்துல இவர் ரொம்ப எளிமையா இருக்காரு. உள்ளபடியே, உயிர் பறிபோன 13 பேரோட குடும்பத்தை நினைச்சு, மனசுல வலியோடு, ஒரு வேகத்துல அன்னைக்கு பிரஸ் மீட்ல பேசிட்டாரு.

Advertisment

மூளைச்சலவை செய்து, இளைஞர்களின் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு, அதை வைத்து அரசியல் பண்ணும் தலைவர்களை சுத்தமா அவருக்குப் பிடிக்காது. எந்த வேலையும் பார்க்காம, அந்த பில்ட்-அப்’ தலைவர்கள் பின்னால சுத்திக்கிட்டு, எங்கே போராட்டம் நடந்தாலும், அங்கே போய் அந்த மக்களைத் தூண்டிவிட்டு, அறவழிப் போராட்டத்தைக்கூட, கலவரம் நடக்கிற அளவுக்கு பெரிசாக்கிடறாங்க. அவங்களைத்தான் சமூக விரோதிகள்ன்னு சொல்லுறாரு. அதைப்போயி, போராடிய மக்களை அப்படிச் சொல்லிட்டாருன்னு திரித்துப் பேசுறது சரியில்ல.

காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு, சட்டத்திற்கு புறம்பான வரம்பு மீறிய மிருகத்தனமான செயல்ன்னு அப்பவே ரஜினி கண்டிச்சாரு. திரும்பத் திரும்ப அதையே அவர் சொல்லணும்னு எதிர்பார்க்க முடியுமா? 100-வது நாள் போராட்டத்துல கலெக்டர் ஆபீஸுக்குள்ள மொதல்ல கல்லெறிஞ்சவங்க, அப்புறம் போலீஸை அடிச்சவங்கன்னு திட்டமிட்டு வன்முறையை பரப்பியவர்களைத்தான் விஷக்கிருமிகள்ன்னு சொல்லுறாரு. நியாய உணர்வோடு, பத்தாயிரம் பேர் நடத்திய பேரணியில் நூறு சமூக விரோதிகள் ஊடுருவி, கலவரத்தை உண்டு பண்ணிட்டாங்கன்னு அவருக்கு கிடைச்ச கன்ஃபார்ம் தகவல் அடிப்படையில், இந்தமாதிரி வன்முறையாளர்களைத்தான் ஒடுக்கணும்னு சொல்லுறார்.

மகன் நல்லா இருக்கணும்னு நினைக்கிற தாய் மனசோடதான் "எதுக்கெடுத்தாலும் போராட்டம்னு கிளம்பிடாதீங்க. நல்லதுக்கு மட்டுமே போராடுங்க'ன்னு சொன்னாரு. அப்புறம் ஒண்ணு, சினிமாவுல "காலா' போராடுங்குறாரு. நிஜத்துல போராடவேண்டாம்கிறாருன்னு பேசுற ஒப்பீடு. சினிமாவுல உதட்டளவுல பேசுற வசனத்தையும் நிஜத்துல உள்ளுக்குள்ள இருந்து பீறிட்டு வர்ற உயிரோட்டமான வார்த்தையவும் முடிச்சுப் போட்டு பேசுறது கொஞ்சம்கூட சரியல்ல''’’ என்றார் குமுறலுடன்.

Advertisment

"யார் நீங்க' என்று மருத்துவமனையில் ரஜினியை கேட்ட அந்த சிகிச்சை பெற்ற இளைஞர், "நான் அந்த அர்த்தத்தில் கேட்கவில்லை' என்று சொல்லியிருப்பது, ரஜினி தரப்புக்கு கூடுதல் தெம்பைத் தந்துள்ளது. "மற்றவர்கள் நம்மை விமர்சித்துப் பேசட்டும், நாம் இன்னும் ஆக்கப்பூர்வமாக செயல்படுவோம்' என மன்றத்தினரை ஊக்கப்படுத்தியுள்ளாராம் ரஜினி.

-சி.என்.இராமகிருஷ்ணன்