இந்தியாவில் தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு பெரியது. தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள், 50 மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்த மருத்துவமனைகள், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 18 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 272 வட்டம் மற்றும் வட்டம்சாரா மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என நீள்வது அது.
அரசு மருத்துவமனைகளில் தினசரி சுமார் 1.75 லட்சம் பேர் உள் மற்றும் வெளிப்புற நோயாளி களாக சிகிச்சை பெறுகின்றனர். மருந்து, மாத்திரை வழங்கும் இடங்களில் மருத்துவர் எழுதித் தரும் மருந்துச் சீட்டுகளைத் தந்து மாத்திரை பெறுகின்றனர். அப்படி மாத்திரைகளைத் தரும் மருந்தாளுநர்கள், இந்த வெள்ளை மாத்திரையை காலையில ஒன்னு, நைட்ல ஒன்னு, இந்த சிவப்பு மாத்திரை மட்டும் மதியத்துல 2 சாப்பிடுங்க, இந்த மாத்திரை காலை, மதியம், ராத்திரி ஒன்னுன்னு போடுங்க, இந்த ஆரஞ்ச் கலர் மாத்திரை சாப்பிடறதுக்கு முன்னாடி ஒண்ணு போடுங்க என சொல்-த் தருவதை புரியாமலே மஞ்சள் பையில் எடுத்துப் போட்டுக்கொண்டு செல்கின்றனர். இதுதான் மருத்துவமனைக்கு வரும் ஏழை மக்களிடம் வேதனையை ஏற்படுத்தி யுள்ளது.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடி தங்க.கண்ணன் நம்மிடம், "அரசு மருத்துவமனைகளுக்கு வரும் 70% நோயாளிகள் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள், 90% பேர் தமிழைத் தவிர வேறு எதுவும் எழுதப்படிக்க தெரியாத ஏழை மக்கள், வயதானவர்கள். இவர்கள் மாதாமாதம் அரசு மருத்துவ மனைகளுக்கு நேரில்சென்று தங்களது உடலை பரிசோதனை செய்து கொண்டு, மருத்துவர்கள் எழுதித் தரும் மருந்து மாத்திரைகளை வாங்கிக்கிட்டு வர்றாங்க. மருந் தாளுநர்கள் மொத்தமாக அள்ளிக் கொடுத்து இது காலையில, இது மதியம், இது இரவு, இது சாப்பாட்டுக்கு முன்னால என்று சொல்-க்கொண்டே ஒரே கையில் மொத்தமாக கொட்டும்போது, இதில் எந்த மாத்திரை எந்த நேரம் சாப்பிடணும் என்பதை மறந்து தவிப்பதும், அடுத்த முறை கேட்டால் கோபப்படுவாங்களே என்றும், கேட்காமலேயே வீட்டுக்கு போய் கையில கிடைப்பதை எடுத்து விழுங்கிடுறாங்க.
கேப்சூல்கள், கவர் இல்லாத தனி மாத்திரை கள் வியர்வையில் நனைந்து நாசமாகிறது. மதியம் சாப்பிடவேண்டியதை இரவிலும், சாப் பிடுவதற்கு முன்பு உட்கொள்ளவேண்டிய மாத்திரை யை சாப்பிட்ட பின்பும் என மாற்றி, மாற்றி உட்கொள்கிறார்கள். இதனால் நோய்க்கு மாத்திரை சாப்பிட்டும் எந்தப் பலனும் இல்லாத நிலையே ஏற்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் அப்படி எழுதி, கவர்போட்டுத் தராததற்கு அங்குள்ள மருந்தாளுநர்கள் மீது தப்பு சொல்ல முடியாது, மருத்துவத்துறையின் பர்ச்சேஸ் கமிட்டி கவர் வாங்கித் தருவதில்லை. அதனால் அரசாங்கம் ஏழை, எளிய மக்களின் நிலையை கவனத்தில் கொண்டு மருந்து, மாத்திரைகளை கவர்போட்டு எழுதித் தந்தால் படிக்காத ஏழை நோயாளி கள் பயனடை வார்கள்''’ என்றார் கோரிக்கையாக.