ஆட்சியின் அனைத்து அசைவுகளையும் அரசியல்வாதிகள் தீர்மானிப்ப தில்லை, அதிகாரிகள்தான் தீர்மானிக்கிறார்கள்.
முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்கள் கொள்ளை யடிப்பதற்கு முழுக்க முழுக்க அதிகாரிகள்தான் ஒத்துழைப்பாக இருந்தார்கள். அதில் முக்கியமானது முதல்வர் எடப்பாடியின் கீழ் இருந்த பொதுப்பணித்துறையும் நெடுஞ்சாலைத்துறையும். முதல்வர் அலுவலக அதிகாரிகளாக இருந்தவர்கள் தான் அனைத்தையும் நிர்வகித்தார்கள். விஜயகுமார், சாய்குமார், ஜெயஸ்ரீ மற்றும் பொதுத்துறைச் செயலாளராகவும் முதல்வர் எடப்பாடி அலுவலகத்தில் மூன்றாவது செயலாளராகவும் விளங்கிய செந்தில்குமார் ஆகியோர். இதில் விஜயகுமார், தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்ற உடனே ஸ்டாலினைப் போய்ப் பார்த்து வாழ்த்துச் சொன்னார். அது ஊடகங்களில் பெரிய விவாதமானது. எனினும் விஜயகுமார், சாய்குமார், ஜெயஸ்ரீ ஆகிய மூவரும் டம்மி பதவிகளுக்கு தூக்கியடிக்கப்பட்டார்கள். எடப்பாடி அரசில் அவரின் செயல்பாடுகளுக்கு ஒத்துவரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி களை மாற்றிப்போடும் வேலையை செவ்வனே செய்தவர் பொதுத்துறை பொறுப்பு வகித்த செந்தில்குமார். எடப்பாடி அரசின் தலைமைச் செயலாளராக இருந்த சண்முகமும், எடப்பாடியும், செந்தில்குமாரும் சேர்ந்து நியமித்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலர், எடப்பாடி சொன்னவாறு ஊழல் புரிவதில் சாதனை புரிந்தனர் என்கிறார்கள் கோட்டையில்.
சுகாதாரத்துறையின் செயலாளர்களில் ஒருவராக இருக்கும் செந்தில் குமார், ஸ்டா-னின் முதலைமைச்சர் அலுவலகத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள உதயசந்திரனின் நண்பர். எடப்பாடி ஆட்சியில் அகால மரணமடைந்த அமைச்சர் துரைக்கண்ணு பொறுப்பு வகித்த வேளாண்மைத்துறை, பெரிய விமர்சனத்துக்குள்ளானது. மத்திய அரசு, விவசாயிகளுக்கு நேரடியாகக் கொடுத்த கடன் தொகை திட்டத்தில் வேளாண்மைத்துறை அதிகாரிகள் போலி பயனாளிகளை உருவாக்கினார்கள் என்கிற செய்தியை பா.ஜ.க.வினர் அகில இந்திய அளவில் பெரிய செய்தியாகக் கொண்டுசென்றார்கள்.
துரைக்கண்ணு அகால மரணமடைந்தபோது, அவரிடம் எடப்பாடி கொடுத்து வைத்த தேர்தல் நிதி எங்கே என அப்பொழுது மத்திய மண்டல ஐ.ஜி.யான ஜெயராம் தலைமையில் ஒரு போலீஸ் டீம் துரைக்கண்ணுவின் மகனான ஐயப்பனை கடும் சோதனைக்குள்ளாக்கியது. துரைக்கண்ணு வேளாண்துறையில் ஊழல் செய்து பல்லாயிரக்கணக்கில் சொத்து சேர்த்துள் ளார். அதில் தேர்தல் நிதியாகக் கொடுத்த பணம் என தேடிப்போன போலீஸ் படை மலைத்து நின்றதாகச் செய்திகள் வெளியானது. நக்கீரன் இதுகுறித்து விரிவாகவே செய்திகளை வெளியிட்டது. அந்தத் துறையில் இருந்தவர் ககன்தீப்சிங் பேடி. அவர், அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த வேலுமணியின் வலதுகரமாக சென்னை மாநகராட்சியின் கமிஷனராகச் செயல்பட்டு குற்றச்சாட்டுக்குள்ளான பிரகாஷ் ஐ.ஏ.எஸ்ஸுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஸ்டா-ன் ஆட்சிக்கு வந்த பிறகு, புதிதாகப் பொறுப்பேற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப்சிங் பேடி மட்டும்தான் வட மாநிலத்தைச் சேர்ந்தவர். முதல்வரின் செயலாளர்களாகப் பொறுப்பேற்ற உதயசந்திரன், உமாநாத், அனுஜார்ஜ், சண்முகம் எல்லோரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட இறையன்புவும் தமிழகத்தைச் சேர்ந்தவர். இதனால் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் செல்வாக்கு உயர்ந்திருக்கிறது. இனி முக்கியமான துறைகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களே நியமிக்கப்படுவார்கள் என்கிற பேச்சு வடமாநில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் பீதியைக் கிளப்பியிருக்கிறது. அதனால் அவர்கள் கூட்டமாகச் சென்று ஸ்டாலினின் மருமகன் சபரீசனைப் பார்த்திருக்கிறார்கள், மரியாதை செலுத்தியிருக்கிறார்கள்.
அவர்களிடம், "முதலில் கொரோனாவிற்குத்தான் ஆட்சியில் முதலிடம், அதன்பிறகு பார்த்துக்கொள்ளலாம்'' என சபரீசன் கூறியதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வட மாநில அதிகாரிகளுக்கு மத்திய அரசில் நல்ல செல்வாக்கு உண்டு. அவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லையென்றால் ஆட்சிக்கு வேண்டுமென்றே கெட்ட பெயர் ஏற்படுத்துவார்கள் என வருத்தப்படுகிறார்கள் அதிகாரிகள் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.
கலைஞரின் இறுதிச் சடங்கை செவ்வனே செய்த அமுதா ஐ.ஏ.எஸ்., பிரதமர் அலுவலகத்தில் இணை செயலாளராக பணிபுரிகிறார். அவரது கணவர், வடநாட்டுக்காரரான சம்பு கல்லோலிக்கர் ஐ.ஏ.எஸ். அவருக்கு நல்ல துறை கிடைக்கும் என கோட்டை வட்டாரங்கள் சொல்கிறது. இதற்கிடையே லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியாக, அமித்ஷாவையே கைது செய்த கந்தசாமி ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டிருக்கிறார். இது அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு கிலியை உருவாக்கியுள்ளது.
அதே நேரத்தில், தற்போதுள்ள அமைச்சர்களுக்கு பி.ஏ.க்களை நியமிக்கும் பொறுப்பு. முந்தைய தி.மு.க. ஆட்சியில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராஜமாணிக்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. பழைய தி.மு.க. மந்திரிகளின் பி.ஏ.க்களாக இருந்தவர்கள், பலவித கணக்குகளுடன் அவரது வீட்டுக்கு படையெடுத்து மரியாதை செலுத்துகிறார்கள்.
வெளிப்படைத்தன்மை கொண்ட நிர்வாகத்தை வழங்க உறுதியேற்றிருக்கிறார் மு.க.ஸ்டாலின். முதல்வரின் இலக்குக்கு சாதகமும் சவாலும் கலந்தே அமைந்துள்ளது அதிகாரிகள் நியமனம்.