பா.ஜ.க.வின் மாநில துணைத்தலைவரான அண்ணாமலையும் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மொஞ்சனூர் ராமசாமியின் மகன் இளங்கோவும் களம்காணும் அரவக்குறிச்சி தொகுதியில், ம.நீ.மய்யத்தில் முகமது ஷகீல், நாம் தமிழரில் பர்வீன், அ.ம.மு.க.வில் தங்கவேல் ஆகியோரும் களத்திலிருந்தாலும், போட்டி என்னவோ தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும்தான்.

arav

அண்ணாமலையின் சொந்தத் தொகுதியான அரவக்குறிச்சியில் அ.தி.மு.க. அளவுக்கு பா.ஜ.க.வுக்கு பலமான அமைப்பு கிடையாது. எனவே தொடக்கத்தில் மந்தமாக இருந்த அரவக்குறிச்சி தேர்தல் களத்தை அண்ணாமலைக்காக கர்நாடகாவிலிருந்து வந்த ஸ்பெஷல் டீம் சூடாக்கியுள்ளது. பா.ஜ.க. தமிழகப் பொறுப்பாளரான சி.டி.ரவி, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள், களப்பணிக்கென 100 பேர் என வந்திறங்கிய டீம், லோக்கல் அ.தி.மு.க.வினரோடு இணைந்து குக்கிராமங்கள் வரை இறங்கி வேலையை ஆரம்பித்தது. அந்த டீம் ஆலோசனைப்படியே அண்ணாமலையின் பிரச்சாரம் நடக்கிறது.

இந்த டீம், அ.தி.மு.க.வினருக்கு தாராள பண சப்ளையையும் செய்கிறது. இதற்காகவே கர்நாடக தொழிலதிபர் மூலமாக "50 சி' ஒதுக்கியுள்ளனராம்.

""அ.தி.மு.க. பேருராட்சி செயலாளருக்கு 2 லட்சம், வார்டு செயலாளருக்கு ஐம்பதாயிரம், ஊராட்சி செயலாளருக்கு 1 லட்சம், நகர, ஒன் றிய செயலாளருக்கு தலா 5 லட்சம்னு கரன்ஸி விளையாடுது. கோடிகளை வாரியிறைப்பதால் எங்க கட்சிக்காரங்களே காவி வேட்டிக்கு மாறிட்டாங்க. ஓட்டுக்கு இரண்டாயிரம் முதல் மூவாயிரம்வரை பட்டுவாடா நடக்கிறது. தலித் காலனிப் பெண்களின் காலில் விழுந்து வாக்கு கேட்பது, ஓட்டு கேட்டு வரக்கூடாது எனக்கூறிய பள்ளப்பட்டி பகுதி இஸ்லாமியர்களிடம், நீங்க சொன்னால் சட்டமாகிவிடுமா? உங்களுக்கு சவுதியிலிருப்பவர்கள் அனுப்பும் பணத்தை பறிமுதல் செய்வோமென அதிரடி காட்டுவது மான அண்ணாமலை, நிச்சயமா வெற்றி பெறுவேன்னு சொல்றது எங்களுக்கே ஆச்சரிய மாகத்தான் இருக்கு'' என்கிறார் அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர்.

தி.மு.க. வேட்பாளர் இளங்கோ, கூட்டணிக் கட்சியினரோடு வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுகிறார். அதிரடி இல்லாத பிரச்சாரம் என்பதால் எழுச்சி இல்லாததுபோல் தெரிகிறது. தி.மு.க. கூட்டணிக்கு இருக்கும் மக்கள் ஆதரவும், தி.மு.க.வின் கட்சி பலமும், இஸ்லாமிய, கிருஸ்தவ சிறுபான்மை யினர் ஆதரவும் தி.மு.க. வேட்பாளருக்கு கைகொடுக்கிறது. பா.ஜ.க. அண்ணாமலையிடம் கரன்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தி.மு.க. மாவட்டச் செயலாளர் செந்தில் பாலாஜி, கரூரில் போட்டியிடுவதால் தொடக் கத்தில் முழுக்கவனத்தையும் அங்கேயே வைத்திருந்தார். தற்போது அரவக்குறிச்சியிலும் தனிக்கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். தி.மு.க.வினர் போர்க்குணத்துடன் பணியாற்ற வேண்டிய தொகுதியாக உள்ளது அரவக்குறிச்சி.

Advertisment