ஜெ.வின் மரணம் நிகழ்ந்ததாக சொல்லப்படும் டிச.5-ம் தேதிக்கு முந்தைய நாட்களான 4-ம் தேதியும், 3-ம் தேதியும் என்ன நடந்தது என்பதுதான் ஜெ.வின் மரணத்தைப் பற்றி விசாரிக்கும் ஆறுமுகசாமி கமிஷனின் முக்கியமான தேடலாக மாறியிருக்கிறது.
ஜெ. இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் இருந்தவர். இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பில் இருப்பவர்களுக்கு ஏதாவது நிகழுமானால் அதற்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். அதனால்தான் அவர்களுக்கு சிறிய உடல்நலக்குறைவு ஏற்பட்டாலும் அவர்களை மத்திய அரசுக்கு சொந்தமான எய்ம்ஸ் எனப்படும் அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் வந்து பார்ப்பார்கள். அவர்களது ஆலோசனைப்படிதான் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் இருக்கும் வி.ஐ.பி.க்கள் மரணமடைந்தாலும் எய்ம்ஸ் மருத்துவர்கள்தான் முறைப்படி அறிவிப்பார்கள். ஜெ. எழுபத்தைந்து நாள் அப்பல்லோவில் சிகிச்சை பெற்றபோது எய்ம்ஸ் சார்பாக அஞ்சன் ட்ரிக்கா, நிதிஷ் நாயக், கில்னானி ஆகிய மருத்துவர்கள் வந்து மேற்பார்வையிட்டனர்.
2016 செப்டம்பர் 22-ம் தேதி அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட ஜெ.வை அக்டோபர் 5-ம் தேதியும், 6-ம் தேதியும் எய்ம்ஸ் மருத்துவர்களான மயக்க மருத்துவரும் அவசர நோய் சிகிச்சை நிபுணருமான அஞ்சன் ட்ரிக்காவும் நுரையீரல் நோய் மருத்துவரான டாக்டர் கில்னானியும், இதயநோய் மருத்துவரான நிதிஷ் நாயக்கும் வந்து பார்த்தார்கள். இவர்களுடன் ஜெ.வுக்கு சிகிச்சை அளித்து வந்த லண்டன் டாக்டரான ரிச்சர்ட் பேல் இணைந்து கொண்டார். இந்த நால்வரும் சேர்ந்துதான் ஜெ.வை ஆழ்ந்த மயக்க நிலைக்கு கொண்டு சென்று "அவரது நுரையீரலில் சேர்ந்திருக்கும் நோய் தொற்றுகளை அகற்றுவது இயலாத காரியம். அது வேறுவிதமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். ஜெ.வின் உடலுக்கு மயக்க மருந்துகளை தாங்கும் சக்தி இல்லை. மாரடைப்பை தவிர்க்க பேஸ்மேக்கர் கருவிகளுடன் வாய் வழியே செயற்கை சுவாச கருவிகளை பொருத்திய நிலையை மாற்ற பரிந்துரைத்தனர்.
அவர்கள் சொன்னபடி அக்டோபர் 7-ம் தேதி காலை தொண்டையில் ஓட்டை போட்டு அதில் ஒரு குழாயை நுழைத்து அத்துடன் நுரையீரலை இணைக்கும் (பழ்ஹஸ்ரீட்ண்ர்ள்ற்ஹம்ஹ்) ட்ராக்கியோஸ்டமி என்கிற ஆபரேஷன் செய்தார்கள் அப்பல்லோ மருத்துவர்கள்.
அதன்பிறகும் பலமுறை அப்பல்லோவிற்கு வந்த எய்ம்ஸ் மருத்துவர்கள் கடைசியாக ஜெ. மரணம் அடைவதற்கு இரண்டு நாள் முன்பு 3-ம் தேதி வந்து பார்த்தார்கள். கடைசியாக ஜெ.வுக்கு மரணம் நிகழ்ந்த 5-ம் தேதி வந்து ஜெ.வின் மரணத்தை உறுதி செய்தார்கள்.
ஜெ.வின் மரணம் மர்ம மரணம் என சர்ச்சை எழுந்தபோது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பேலை வைத்து நடத்தினார்கள். அப்பொழுது அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக இருந்த சசிகலாவிற்கு ஆதரவாக இதே எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்களிடமிருந்து ஒரு அறிக்கையும் பெற்று வெளியிட்டார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அதில் "3-ம் தேதி நாங்கள் வந்து ஜெ.வை பார்த்தபோது வீல்சேரில் அமர்ந்திருந்தார். நல்ல உடல்நிலையில் இருந்தார். 4-ம் தேதி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. 5-ம் தேதி மரணமடைந்தார். அதை நாங்கள் உறுதி செய்தோம்' என குறிப்பிட்டிருந்தார்கள்.
அதே நேரத்தில் ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷனில் அப்பல்லோ டாக்டர்கள் மாறி மாறி சாட்சியம் அளிக்க ஆரம்பித்தார்கள். "திருப்பரங்குன்றம் தேர்தல் வெற்றிக்காக ஸ்வீட் சாப்பிட்டார் ஜெ.' என ஒரு மருத்துவர் சாட்சியம் அளித்தார். "ஜெ.வுக்கு கிட்னி பிரச்சினை இருந்தது' என அதுவரை ஜெ.வைப் பற்றி அப்பல்லோ சொன்ன மருத்துவக் குறிப்புகளை தாண்டி அப்பல்லோ டாக்டர் சாட்சியம் அளித்தார். இறுதியாக ஜெ.வை முழுமையாக அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்த செந்தில்குமார் என்கிற டாக்டர் "ஜெ.வுக்கு பக்கவாத நோய் இருந்தது' என ஜெ.வுக்கான சிகிச்சையில் புதிய வெளிச்சம் பாய்ச்சினார்.
இந்நிலையில் ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள் மூன்றுபேரையும் சாட்சியம் அளிக்க வேண்டும் என சசிகலா தரப்பு அழைத்தது. அவர்கள் அளித்த சாட்சியத்தில், ""நாங்கள் சொன்ன பல யோசனைகளை அப்பல்லோ கேட்கவில்லை'' என சாட்சியமளித்துள்ளதாக விசாரணை ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது இன்னொரு புயலை ஜெ. மரண மர்மத்தில் உருவாக்கியுள்ளது.
-தாமோதரன் பிரகாஷ்